Thursday, October 14, 2021

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ  லலிதா ஸஹஸ்ரநாமம்   -  நங்கநல்லூர்  J K SIVAN


நாமங்கள்:  10- 20

मनोरूपेक्षु-कोदण्डा पञ्चतन्मात्र-सायका ।
निजारुण-प्रभापूर-मज्जद्ब्रह्माण्ड-मण्डला ॥ ३॥

Mano Rupeshu Kodanda Pancha than mathra sayaka  
Nijaruna prabha poora majjath brahmanda mandala

மநோரூபேக்ஷு கோதண்டா  பஞ்சதந்மாத்ரஸாயகா |
 நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா || 3

चम्पकाशोक-पुन्नाग-सौगन्धिक-लसत्कचा ।  
कुरुविन्दमणि-श्रेणी-कनत्कोटीर-मण्डिता ॥ ४॥

Champakasoka – punnaga-sowgandhika-lasath kacha
 Kuru vinda mani – sreni-kanath kotira manditha

சம்பகாசோகபுந்நாக ஸௌகந்திகலஸத்கசா | 
குருவிந்தமணி ச்ரேணீகநத்  கோடீரமண்டிதா || 4

अष्टमीचन्द्र-विभ्राज-दलिकस्थल-शोभिता ।
मुखचन्द्र-कलङ्काभ-मृगनाभि-विशेषका ॥ ५॥

Ashtami Chandra vibhraja – dhalika sthala shobhitha
Muka Chandra kalankabha mriganabhi viseshaka

அஷ்டமீசந்த்ர விப்ராஜ  தளிகஸ்தல சோபிதா |
முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா || 5

वदनस्मर-माङ्गल्य-गृहतोरण-चिल्लिका ।
वक्त्रलक्ष्मी-परीवाह-चलन्मीनाभ-लोचना ॥ ६॥

Vadana smara mangalya griha thorana chillaka
Vakthra lakshmi –parivaha-chalan meenabha lochana

வதநஸ்மரமாங்கல்யக்ருஹதோரணசில்லிகா |
வக்த்ரலக்ஷ்மீபரீவாஹசலந்மீநாப லோசநா || 6

नवचम्पक-पुष्पाभ-नासादण्ड-विराजिता ।
ताराकान्ति-तिरस्कारि-नासाभरण-भासुरा ॥ ७॥

Nava champaka –pushpabha-nasa dhanda virajitha
Thara kanthi thiraskari nasabharana bhasura

நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா |
தாராகாந்திதிரஸ்காரிநாஸாபரண பாஸுரா || 7


 ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள்  அர்த்தம்:  10-20

* 10 *  मनोरूपेक्षुकोदण्डा -  மநோரூபேக்ஷு கோதண்டா  -
அவள் கையில் இருக்கும்  கரும்பு வில் என்ன உணர்த்துகிறது?  . அவள் இனிய மனத்தை தான்  குறிப்பிடுகிறது. பக்தர்களை அன்போடு ரட்சிக்கும் தாயல்லவா?   அதனால் ஒரு இடது கையில் கரும்பு வில். நல்லவர்க்கு கரும்பு.  அதுவே  தீயோர்க்கு  இரும்பு !

* 11 * 
 पञ्चतन्मात्रसायका -பஞ்சதந்மாத்ரஸாயகா -
தன்மாத்திரைகள் ஐந்து என்ன தெரியுமா? ஐம்புலன்களினால் நான்  அனுபவிப்பது.
 தொடுவது, நுகர்வது, கேட்பது, ருசிப்பது,  காண்பது. இவற்றை அவள் அளித்த, மெய், வாய் கண் மூக்கு செவி எனும் இந்திரியங்களால் உணர்கிறோம். இவை ஐந்தும் ஐந்து வில்லாக  ஏந்தியவள் . அவளின்றி நாம் ஏதும் செய்ய இயலாதவர்கள் என்று பொருள் தருகிறது அல்லவா?

 12 *
 निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला - நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்  ப்ரஹ்மாண்ட மண்டலா -  
 உதய சூரியனை கண்டு ஆனந்தித்ததுண்டா? செக்கச்செவேலென கிழக்கே, பெரிய  உருண்டை யாக, இன்னொரு  உலகமோ என்று வியக்க வைக்கும் செந்நிறம் அம்பாளுடையது. அதில் இந்த புவனமே அடக்கம்., எல்லா மண்டலங்களுமே  என்கிறார் ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு.

* 13 * 
 चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா   - 
அம்பாள் தனது சிரசில் என்னென்ன மலர்களை சூடிக்கொண்டிருக்கிறாள் என்று ஹயக்ரீவர் அறிவார் அல்லவா?.  சொல்கிறார் அகஸ்தியருக்கும்  நமக்கும். "செண்பகம், புன்னாகம், சௌகந்திகா, (இந்த நறுமண மலரைத் தேடிக்கொண்டு தான் பீமன் விண்ணுலகு சென்று வழியில் ஹனுமான் வாலை நகர்த்தமுடியாமல் தவித்தான்)

* 14 * 
कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता -குருவிந்தமணி  ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -  
ஆஹா,   வரிசை வரிசையாக பல வித வர்ணங்களில் கண்ணைப்பறிக்கும் நவரத்ன ஈடற்ற மணிகள் பதித்த பத்ம ராக, வைர வைடூர்ய, கோமேதக, மாணிக்கம் , முத்து, பவழ  மணி மகுடம் தரித்திருக்
கிறாள் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை.  குருவிந்தமணியைத்தான்  குந்துமணி என்று பிள்ளையாருக்கு கண்ணாக  வைத்து விநாயக சதுர்த்தியில்  களிமண் பிள்ளையார் வாங்குகிறோம். சிவப்பில் கருப்பு புள்ளி  அழகோ அழகு.

 * 15 * 
अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -   
அஷ்டமி அன்று ராத்திரி  சந்திரன் கண்டு களித்ததுண்டா?ஒருநாள்  மொட்டைமாடியில் நின்று ரசித்தால்  தெரியும்.  அந்தமாதிரி  ஒளியுள்ள, பூரண காந்தியான நெற்றிஅவள் முக லாவண்யத் திற்கு எடுப்பாக, பொருத்தமாக இருப்பவள்.

* 16 *
मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --  
எவ்வளவு விசாலமான அழகிய சந்திரன் போன்ற நெற்றி. அதில் அழகு சேர்க்கும்  கஸ்தூரி திலகம்,  ஹயக்ரீவர் அது எப்படி இருக்கிறது என்று ஒரு உதாரணம் தருகிறார். நான்  மேலே சொன்ன சந்திரனில் ஒரு கருப்பு நிழல் தெரியுமே அது போல , என்கிறார்.  சிலர்  அதை பாட்டி உட்கார்ந்து தோசைக்கு  மாவு அரைக்கிறாள் என்பார்கள், சிலர் முயல் என்பார்கள், சந்தாமா, அம்புலிமா,  பத்ரிகை இந்த முயல்சின்னத்தை பிரபலமாக்கியது. 
 
* 17 * 
वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --  
இதோ அழகாக இருக்கிறதே  இது தான் மன்மதன் வசிக்கும் இடமா  என்று சந்தேகம் வருகிறதா?   இல்லை, அதை விட அழகான இது என்ன தெரியுமா, லலிதாம்பிகையின்  அழகிய  கண் இமைகள்,  அவள் திருமுகத்துக்கே தனி அழகை தருபவை.
 
* 18 *
 वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ  சலந்மீநாப லோசநா --  
அழகிய  தடாகத்தில் கண்ணைப் பறிக்கும் வண்ண மீன்கள் துறுதுறுவென்று அசையுமே  அது போன்ற  அழகிய  கயல் விழிகள் கொண்டவள் அம்பாள்.
 
* 19 * 
 नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா -- 
கொஞ்சம் இருங்கள்,  யோசிக்கிறார் ஹயக்ரீவர். ஆம்.  கிடைத்து  விட்டது பொருத்தமான  சரியான உதாரணம். லலிதாம்பிகையின் நாசி எது போல தெரியுமா இருக்குமாம்?, சண்பக மலர் மொட்டவிழ்ந்து புதிதாக உலகை முதலில்  பார்க்கும்போது எப்படி இருக்குமோ  அப்படியாம்.  

* 20 * 
ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा - தாராகாந்திதிரஸ்காரி  நாஸாபரண பாஸுரா --  
அம்பாள் அணிந்திருக்கும்  மூக்குத்தியின் அழகே ஒரு  ஒரு தனி அழகு.    அப்பப்பா  கண்ணைக்  குருடாக்கும் ஒளி மிக்க நக்ஷத்ரம் அது. 

 அம்பாளின் திவ்ய சௌந்தர்ய ரூபத்தை, சக்தியை  மேலே  3லிருந்து 7 வரையான ஸ்லோகங்களில் பார்த்தோம்.  அதில் இதுவரை நாம் தெரிந்துகொண்டது 10 முதல் 20 வரையான  நாமங்கள்.  மேலும் அவளது ஆயிர நாமங்களில் மீதியையும் கொஞ்சம் கொஞ்சமாக  அறிவோமா?

                                  ஸ்ரீ வித்யா ராஜ ராஜேஸ்வரி  ஆலயம்  நங்கநல்லூர் 

ஸ்ரீ லலிதாம்பிகை சிவந்தவள்.  உதய சூரியனுடனும்  குங்குமம் எனும் சிந்தூரத்தின் வண்ணத் துடனும் ஒப்பிடப்படுகிறாள். மாணிக்க சிவப்பு கற்களை  ஆபரணமாக அணிந்தவள். பிறைச் சந்திரனை சைகையில் சூடியவள் பிரசன்ன வதனம் கொண்டவள். 

மஹா பெரியவா  பாலா த்ரிபுரசுந்தரியை எங்கள் நங்கநல்லூரில் தரிசித்ததை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். மீண்டும் ஒருமுறை சொல்லட்டுமா?  ஆனந்தமான விஷயங்களை அடிக்கடி சொல்வதோ கேட்பதோ மகிழ்ச்சி தானே.   

ங்கநல்லூரில் இருப்பவர்களுக்கே  இங்கே   ஒரு புராதன 500  வருஷ  ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி கோவில் இருப்பது  தெரியாது போல இருக்கிறது. தெரிந்தால் சந்தோஷம்.  தெரியாவிட்டால் இதோ கொஞ்சம் விஷயம். உடனே சென்று தரிசியுங்கள்.  இந்த கோவிலுக்கு ஒரு தனி விசேஷம் உண்டே  அதைச் சொல்கிறேன்.

மஹா பெரியவா  நடந்தே  எல்லா  சிவஸ்தலங்களும் செல்பவர்.  ஒருதடவை ஒரு பெரிய  சுற்றுலா மாதிரி  ஒரு ஆலய தர்சனம்.  

திரிசூலம் மலைகள் அடியில்  உள்ள  அருமையான  அமைதியான  திரிசூலநாதர் கோவிலை  விஜயம் செய்துவிட்டு  திருசூலநாதர்  திரிபுர சுந்தரி  தரிசனத்துக்குப் பிறகு  மெதுவாக வடக்கு நோக்கி நடந்து  வந்தார். அப்போது மீனம்பாக்கத்துக்கும்  பரங்கிமலைக்கும் இடையே  இப்போது இருக்கும்  பழவந் தாங்கல் ரயில் நிலையம் கிடையாது.   பரங்கிமலை ரயில் நிலையம் அருகே ஒரு அற்புதமான தொன்றுதொட்ட  சிவாலயம்  இருக்கிறது.  நந்தீஸ்வரர்  பிருங்கி மகரிஷிக்கு தரிசனம் கொடுத்த இடம். பிருங்கி மலை தான் பறங்கி மலை ஆகிவிட்டது.  அம்பாள் ரொம்பவே அழகாக இருப்பாள். ஆவுடை நாயகி என்று பெயர்.  அவர்களை தரிசிக்க  மஹா பெரியவா நங்கநல்லூர்  வழியாக  நடந்து வந்தார்.  
நங்கநல்லூர் அப்போது உருவாக வில்லை.  பழவந்தாங்கல் என்கிற கிராம பெயர். அதன் வழியாக நடந்துவந்தார். வெயில் நேரம்.  இப்போது நேரு உயர்நிலைப்பள்ளி இருக்கிறதே  நேரு காலனி,  நங்கநல்லூரில் அந்த பக்கமாக வந்தார்.  பள்ளி மைதானத்துக்கு பின் புறம் ஒரு அரசமரம்.  அதன் அடியில் சற்று இளைப்பாறலாம் என்று அமர்ந்தார். 

கூட வந்தவர்கள்  சற்று தள்ளி வெவ்வேறு  இடங்களில் அமர்ந்து சிரம பரிகாரம் செய்தார்கள்.  மஹா
பெரியவாளுக்கு தாகம்,  தொண்டை வறண்டது.  மெல்லிய குரலில்  சற்று தள்ளி அமர்ந்திருந்த மடத்து தொண்டர்களில் ஒருவரைக் கூப்பிட்டு   ''கொஞ்சம்  குடிக்க ஜலம்  கொண்டுவாடா ''  என்றபோது  அந்த தொண்டர்  எழுந்து எங்கோ சென்றார்.   உண்மையில் பெரியவா ஜலம்  கேட்டது தொண்டர் காதில் விழவில்லை. அவர் எதற்கோ எழுந்து போய் இருக்கிறார். 

''சரி  அவன்  வரட்டும்,  காத்திருப்போம்'' என்று மஹா பெரியவா  தாகத்தை லக்ஷியம் பண்ணாமல்
 கண்ணை மூடி  ஜெபத்தில் ஆழ்ந்துவிட்டார். 

அடுத்த  ஒரு சில  நிமிஷங்களில்  ஒரு சிறு பெண் குழந்தை குரல் கேட்டது.  கண்ணைத் திறந்து பார்த்த மஹா பெரியவா முன் லக்ஷணமாக  ஒரு சிறு பெண் கையில்  ஒரு சுத்தமான   சொம்பு  நிறைய ஜலத்தோடு பெரியவர்  எதிரில் நின்றாள் . 

'இந்தாருங்கள்  குடிக்க  நீர்  கேட்டீர்களே'' என்று சொம்பை நீட்டினாள். 
மிக சந்தோஷத்தோடு    சொம்பு ஜலத்தைபருகி விட்டு  அந்த பெண்ணிடம் சொம்பை திருப்பிக் கொடுத்தார். முகத்தில் புன்னகையோடு அந்த பெண்  சொம்பை வாங்கிக் கொண்டு, அவரைப்  பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள். அப்போது தான் தொண்டரும் அருகே வந்து நின்றார்.  

'யாரடா அந்த குழந்தை, அது கிட்டே   ஜலத்தோடு சொம்பை கொடுத்து அனுப்பினே?''

''பெரியவா  க்ஷமிக்கணும். நீங்க  ஜலம் கேட்டதே எனக்கு தெரியாது. நான் எந்த குழந்தையும்  இங்கே பாக்கலியே . யார் கிட்டேயும்  தீர்த்த  சொம்பு  கொடுத்து அனுப்பலையே ''

சுற்று முற்றும் ஜன நடமாட்டம் இல்லாத இடம்.  மஹா பெரியவா மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்தார்.
 
அந்த குழந்தையின் முகம், அவள் உடை  ஆபரணம் எல்லாமே  அவர் மனதில்  அந்த குழந்தை ஸ்ரீ பாலா என்று புரிந்துவிட்டது.  அடடா  அம்பிகையே அல்லவோ வந்து எனக்கு ஜலம்  கொடுத்திருக் கிறாள்''

ஊர்  கிராம பெரியவர்களை எல்லாம் அழைத்துவரச் சொன்னார்.  பெரியவா வந்திருக்கும் செய் தி
அதற்குள் பரவிவிட்டதால்  ஊர்மக்கள் தரிசனத்துக்கு வந்துவிட்டார்கள். 

"இந்த இடத்தில்  ஸ்ரீ  வித்யா  ராஜராஜேஸ்வரி எங்கோ  பூமிக்கடியில் இருக்கிறாள்.  உடனே  ஊர்க்காரர்கள் ஒன்றுகூடிப்பேசி   தோண்டி  கண்டுபிடியுங்கள்''  என்று சொன்னார் மஹா பெரியவா.

மஹா பெரியவா பரங்கிமலை நோக்கி நந்தீஸ்வரர்  ஆலயத்துக்கு பிரயாணம் தொடங்கிவிட்டார்.  ஊர்க்காரர்கள் சும்மா இருப்பார்களா?.   மஹா பெரியவா சொன்ன இடத்தில், தோண்டிப் பார்த்தார்கள்.   குழந்தை வடிவான அம்பிகை கிடைத்தாள் , தொடர்ந்து ஸ்ரீ சண்டிகேஸ் வரி  விக்ரஹமும்  கிடைத்தது.    காஞ்சிபுரத்திற்கு சென்று மஹா பெரியவாளுக்கு விஷயம் சொன்னார்கள்.  அம்பாள் பெயர்    '' ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி '' ஒரு ஆலயம் எழுப்பி  அம்பாளை பிரதிஷ்டை பண்ணி   நித்ய பூஜை விடாமல் செய்ய  ஏற்பாடு பண்ணுங்கள்''

இந்த  விஷயம் தெரிந்தவர்கள் அந்த ஆலயத்துக்கு தரிசனம் செய்ய தவறவில்லை.  நான் பலமுறை சென்றிருக்கிறேன். அமைதியான ஆலயம்.   பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து  நேரு காலனி   2வது தெருவில் இந்த ஆலயத்துக்கு  நடந்தோ, ஆட்டோ ரிக்ஷாவிலோ கூட வரலாம்.    

இந்த  விஷயம் தெரிந்தவர்கள் அந்த ஆலயத்துக்கு தரிசனம் செய்ய தவறவில்லை.  நான் பலமுறை சென்றிருக்கிறேன். அமைதியான ஆலயம்.   பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து  நேரு காலனி   2வது தெருவில் இந்த ஆலயத்துக்கு  நடந்தோ, ஆட்டோ ரிக்ஷாவிலோ கூட வரலாம்.  டெலிபோன்:  +91 93821 20248


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...