Thursday, May 13, 2021

viveka chinthamani

 


யாரிந்த கவிஞர்?  4   --- நங்கநல்லூர்   J K SIVAN   --
விவேக சிந்தாமணி

இது தான் உலகமடா

ஒருவர் வீட்டுக்கு விருந்தாளியாக வந்தால் அவரை முகமலர்ச்சியோடு வரவேற்று, வீட்டில் இருக்கும் கஞ்சியோ கூழோ மனமுவந்து அளித்தால் அது அமிர்தமாகும். ''ராமநாதன், நீங்கள் இட்லி சாப்பிடுவீர்களோ, ரெண்டு போறுமா? நிறைய சாப்பிட்டா உடம்பிற்கு ஏதாவது வந்துடப்போறது '' என்று உபசரிக்கும் வீடுகளும் உண்டு. 

''ராமநாதன்,  எங்கள் வீட்டில் நானும் என் மனைவியும் 3க்கு மேல் இட்லி சாப்பிடுவ தில்லை . எங்க  மாமா  பையன்  வாஞ்சி வந்தபோது   6  இட்லி சாப்பிடறான். வண்டிக்காரன் மாதிரி  என்று கேலியாக சிரித்துக்
கொண்டே   ''ராமநாதன்  சங்கோஜப்படாதீர்கள்,  இன்னொரு ஒரு   இட்லி    போட்டுக்கிறீர்களா என்று கேட்டால்  சாப்பிட  பிடிக்குமா?

 நல்ல  பசியாக இருந்தாலும்  ''  இல்லை  ஸார் . ரெண்டு இட்டிலிக்கு மேலே  சாப்பிட  எப்போதும் வயிற்றில் இடம் இல்லை''    என்று  ராமநாதன்   அரைப் பட்டினி, கொலைப்பட்டினியோடு   கிளம்பி  எங்காவது ஒட்டலைத் தேடி  போகமாட்டாரா?.    இந்த  மாதிரி உபசரிக்கிறவர்களை தான் இந்த  விவேகசிந்தாமணி எழுதிய புலவர்  பார்த்துவிட்டு  அற்புதமாக   பாடுகிறார் .

''ஒப்புடன் முகம லர்ந்தே உபசரித் துண்மை பேசி
உப்பிலாக் கூழிட்டாலு முண்பதே யமிர் தமாகும்
முப்பழ மொடுபா லன்னம் முகங்கடுத் திடுவராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி யாகுந்தானே. (5)''

மனமுவந்து   முகம்   மலர்ந்து உபசரித்து உண்மையாகவே   பாசமுள்ள  நெஞ்சோடு   நடிக்காமல், 
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர் வீட்டில் உப்பு போட மறந்து விட்டாலும் கூழோ கஞ்சியோ சாப்பிட்டால் அது அமிர்தத்தை விட இனிப்பாக இருக்கும். 

மா பலா வாழை என்று முக்கனியோடு, பால், தயிர், பருப்பு பாயசம் எல்லாமே தட்டில் ''லொட்டு '' என்று கரண்டி இடி பட கடு கடு முகத்துடன் ''போதுமா?'' என்று கேட்டுக் கொண்டே பரிமாறினால் ஏற்கனவே இருந்த பசியோடு இன்னும் கொலைவெறி பசி சேர்ந்துவிடும்.

வயலில் கதிர் முற்றிய செந்நெல் நிலம் பாளம் விட்டு நீருக்கு வாடுகிறது.  பயிர்  உயிர் ஊசலாடுகிறது. மேலே வானில் கருமேகக் கூட்டம் போவதைப்  பார்க்கிறது.  அடடா இங்கே மழை பெய்தால் நமக்கு நீர் கிடைக்குமே என்று ஏங்குகிறது. ஆனால் கருமேகமோ அதைப்  பார்த்தும் கொஞ்சமும் இரக்கமில்லாமல், நேரே மேலே நகர்ந்து தூரத்தில் கடல் மேல் போய் வெகுநேரம் பெய்யும். உப்பு தண்ணீ ரோடு ஜோடி சேர்ந்து மழை நீர் பயனில்லாமல் போகும். 

நமது  உலகத்தில் வாழும் சில தனவந் தர்கள் வாடிய முகத்தோடு கெஞ்சும் ஏழைகள் வறியவர்கள் வந்து கேட்டாலும் எந்த பண உதவியும் செய்யாமல், ஏற்கனவே பணம் படைத்தவனை அடிவருடி, அல்லது தனது செல்வச் செருக்கை காட்டிக் கொள்ள பணம் தேவையில்லாதவனுக்கு கொண்டு போய் கொட்டுவார்கள்
என்கிறார் புலவர்..

''கதிர்பெறு செந்நெல் வாடக் கார்குலங் கண்டு சென்று
கொதிதிரைக் கடலிற் பெய்யும் கொள்கைபோல் குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள் வாடினோர் முகத்தைப் பாரார்
நிதிமிகப் படைத்தோர்க் கீவார் நிலையிலார்க் கீயமாட்டார்.'' (6)


அதோ தெரிகிறதே பெரிய ஆலமரம் அடேயப்பா, எத்தனை கிளைகள், அவற்றில் சிவப்பாக இனிப்பான பழங்கள், பூக்கள், காய்கள், இருப்பதால் தான் பக்ஷிகள் நிறைய வட்டமிடுகிறது. கீச் கீச் என்று சப்தித்து ஆனந்தமாக வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு பறந்து போகிறது. வெறும் பட்ட மரமாக காய், கனி பூ இல்லாமலிருந்தால் ஒரு பறவை, குருவி கூட, சீண்டாதே. அது போல் தான் ஸார் , மக்களும். நம்மிடம் ஐவேஜி இருந்தால் சுற்று வார்கள். நாம் ஏகாதசி என்று தெரிந்தால் ஒரு பயல் கிட்டே வரமாட்டான்.'' என்கிறார் விவேக சிந்தாமணி ஆசிரியர். யாரோ? பெயர் அட்ரஸ் இல்லை.  

ஆலவிருட்சத்தினிடம் இலை, பூ, காய், இனிமை தரும் பழம் முயலியவையிருந்தால், மிகுதியாகப் பல பட்சிகளும் அந்த  மரத்தில்  அடைக்கலம் புகும்.   பல  பறவைக்  குடும்பங்கள்  சந்தோஷத்தோடு   வாழும்.   இலை கிளை  எல்லாம்  இல்லாமல்  மொட்டை   மரம் பட்டுப் போய்   நின்றால் ஒரு பட்சிக்கும்  தங்க  இடம் இருக்காதே.  

அதுபோல மிகுந்த செல்வமிருந்தால் அளவிறந்தவர்கள் வந்து கூடி வந்தனம் செய்வார்கள். ஒருவனுடைய  பணம்  செல்வம்  அவனை விட்டு பிரிந்தால்  அவ்வளவு  தான்   ஒரு பயலும்  எட்டிக்  கூட  பார்க்கமாட்டான்.  செத்தவன் தலையிலிருந்து  பேன்  ஓடுவது போல்  பணம் இல்லை என்று தெரிந்தால்  நகர்வார்கள். 

''ஆலிலை பூவுங் காயு மினிதரு பழமு முண்டேல்
சாலவே பட்சி யெல்லாந் தன்குடி யென்றே வாழும்
வாலிபர் வந்து தேடி வந்திருப்பர் கோடா கோடி
ஆலிலையாதி போனா லங்குவந் திருப்பா ருண்டோ.'' (7)


தவளையும்   தாமரையும்   குளத்தில்  வெகுகாலம் சேர்ந்து  இருந்து வளர்ந்தாலும்   அந்த  குளிர்ந்த தாமரையிலுள்ள தேனை  தவளைக்கு  உண்டு   சுவைத்து அனுபவிக்க தெரியாது.    எங்கோ  தேடி பூச்சி புழுவை விழுங்கும்.    எங்கோ  காட்டில்  செடிகளில் வாழும்   வண்டுகளோ  பார்த்துக்கொண்டே  வட்டமிடும்.  தாமரை மலர்களில்  மது சேர்ந்திருப்பதை அறிந்து  அந்த   மலர்களில் நுழைந்து அமர்ந்து  மதுவை யுண்டு  ஆனந்தமாக  பறக்கும்.  

நெடுநாள் பழக்கம்  இருந்தபோதிலும்  சிறந்த கல்வி அறிவு கொண்ட  பண்டிதர்களின் அருமையை  சிறப்பை, கல்லாத மூடர்கள் கூடவே இருந்து  பலகாலம் பழகினாலும் அறியமாட்டார்கள்.  

''தண்டாமரையினுடன் பிறந்தே தண்டேனுகரா மண்டூகம்
வண்டேகானத் திடையிருந்து வந்தேகமல மதுவுண்ணும்
பண்டே பழகியிருந்தாலு மறியார் புலலோர் நல்லோரைக்
கண்டே களித்தங்குறவாடித் தம்மிற் கலப்பர் கற்றாரே''.8,

இன்னும்  சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...