Tuesday, May 4, 2021

LIFE LESSON


 

உடல் உள்ள நலம்  -  2   --   நங்கநல்லூர் J K  SIVAN  

என் அருமை  என் போன்ற  வயதான  சகோதர சகோதரிகளே,

இது  ரெண்டாவது   பதிவு. முதல்  பதிவில் சில விஷயங்களைச்  சொல்லி நாம்  அப்படி செயது  வந்தோமானால்   நமது உடல் உள்ளம் ரெண்டுமே  சுகமாக,  சௌகர்யமாக,  நமக்கு கொஞ்சமும் தொந்தரவு கொடுக்காமல்  ஒத்துழைக்கும்  என்று  சொன்னேன்.   பதிவு   ரொம்ப நீளமாக போய் விடும் என்பதால் உடைத்து மீதி  பாதி இந்த பதிவி ல்  சமர்ப்பிக்கிறேன்.

வாயு பதார்த்தங்களான  சக்கரை வள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு, ரோஸ்ட்  அயிட் டங்கள்,  --   கொஞ்சம் போதும் என்று   குறைத்துக் கொள்வோம்.   ருசி  என்பது  ஒரு துரோகி, வாய்க்கு இனிக்கும், உடலை கூசாமல் கெடுக்கும்.   எட்டப்பன்.

எவரையும் பார்த்து பொறாமை,  ஒப்புமை வேண்டாம், உலகில் பகவானின் சிருஷ்டியில் ஒவ்வொருவரும் ஒரு தினுசு.   ஒன்றைப்   போல் ஒன்று இல்லாதபோது ஒப்புமை எதற்கு? அவரவர் வழி அவரவருக்கு.  திருப்தி வேண்டும் எதிலும்.   அது தான் ஆனந்தமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம். தெரியாமலா நமது முன்னோர்கள் சொன்னார்கள்  ''போது மென்ற மனமே, பொன்செய்யும் மருந்து'' என்று. ஆசை படப்பட  ஆய் வரும் துன்பங்கள் .       ''ஆசை விட  விட  ஆனந்தமாமே''- திருமூலர்.

பறவைகள்  மிருகங்கள், சிறு பிராணிகள் ஆகியவற்றுடன் நட்புடன் பழகி உதவுங்கள்  .  உண்மையான நண்பர்கள் அவர்கள்.  பொய்  பேசாதவர்கள்.  சத்தம் நாம் இருக்கும்  இடத்தில்   வேண்டாம்,  

அமைதியான சூழ்நிலை ஆனந்தம் அமைதி ரெண்டும் தரும்.  பழைய பாட்டு ஞாபகம் இருக்கிறதா?  ''தனிமையிலே இனிமை காண..       கண்டிப்பாக முடியும்''

முடிந்தால் நல்ல விஷயங்களை புத்தங்கள், கூகுள்  மூலம் அறியலாம். இந்த விஷயத்தில் போதும் என்ற எண்ணம் வரக்கூடாது. நிறைய தெரிந்து கொள்ள  வேண்டும் என்ற தாகம் இருந்தால் அது தனி சுகம்.

வெந்நீர்  குடிப்பது நல்லது. இப்போது கொரோனா வந்தாலும் வந்தது. அதன் அருமை பலருக்கு தெரிகிறது. டாக்டர் சொன்னால் கேட்கிறார்கள்.  ஞானிகள் சொன்னால் கேட்பதில்லை.

பேச்சில் இனிமை,  ம்ருது   தன்மை வேண்டும்.  அதில்  அன்பு தானே  சுரக்கும். மற்றவரை ஈர்க்கும். உனது நட்பு வட்டம் எவ்வளவு பெரியது, எவ்வளவு பேரைக் கொண்டது என்பதை உன் பேச்சும், பழகும் தன்மையும் தான் வெளிப்ப டுத்தும்.   அவன் கிட்டே யார் பேசறது எதுக்கெ டுத்தாலும் வள்ளென்று விழுகிறான்  என்ற பெயர்  நட்பு வட்டத்தை சுருங்கச்  செய்யும். .

இன்னொரு  ரஹஸ்யம். எப்போதும் உன்னைப்  பற்றி நீயே தம்பட்டம் அடித்துக் கொள்ளாதே. அதை மற்றவர் உன்னைப் பற்றி நல்ல  விஷய மாக சொல்லி உன் காதில் விழுந்தால் நீ மகிழ்வாய். நீயே உன்னை பற்றி சொல்லி,   கை தட்டிக்கொண்டால் ஊரே உன்னைப் பார்த்து சிரிக்கும்.  ''நான், எனது, ...எங்களுடைய.   என்பதெல்லாம்   எவரோடு  பேசும்போதும்  வேண்டவே வேண்டாம்''

அறையில் ஒரு  நல்ல அதிக  மூச்சு  திணறாத ,    மென்மை கலந்த  சுகந்த  ஊதுபத்தி, மெலிதாக  ஒரு  ''ஓம்'' சப்தம்,  ஒரு  அகல் தீபமாக   இருந்தால் ஆஹா உங்கள்  அறை தான்  தேவலோகம்.

யாருடனும்  விவாதம் வேண்டாம்.  நாம் யார் செயலையும்  சொல்லையும்   நிர்ணயிக்கும் அதிகாரம் நமக்கு கிடையாது.   உரிமையும்  இல்லை. .

தன்னபிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டும். அதுவே   அகம்பாவமாக  மாறிவிட அனுமதிக்க கூடாது.

தினமும் தியானம், பூஜை, பிரார்த்தனை, அனுஷ்டானங்கள் செய்துகொண்டேவந்தால் அது வழக்கமான ஒரு  பழக்கமாகிவிடும்.  அந்த  பழக்கம்    நமது  குணமாகிவிடும்.   அந்த குணம்  தான்   உங்கள்  சமூக  நிலையை  அந்தஸ்தை   நிர்ணயிக்கும்.  ஒரு  மனிதனின் குணம், தான் அவனைப்  பற்றி  மற்றவர்  நினைக்க வைக்கிறது. பணம் அல்ல.

உண்மையே பேசுவோம்.  முடியாவிட்டால் பேசாமல் இருப்போம்.  பொய்  பேசாமல் இருப்பதே மேன்மை. வள்ளலாரின் இந்த அடிகள் மனதில் எப்போதும் இருக்கட்டும்: 

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை  மறக்க வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும்      
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்;;  


மேலே சொன்ன  வள்ளலார் அருட்பா   அடிகளுக்கு அர்த்தம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை.  

கோபம் தான் நமது சத்ரு.  அது முதலில் நம்மை அழித்து விட்டு அப்புறம் தான்  யார் மீது கோபப்படு கிறோமோ அவர்களை நோக்கி  பிரயாணம் செய்யும்.     நமது எண்ணங்களும் செயல்களும்  சரியானதாக இருந்தால்  கோபமே வரத்  தேவையில்லை.   அப்படியில்லாமல், நாம் தவறு செய்தவர்களாக, எண்ணியவர் களாக,   இருந்தால் நமக்கு மற்றவர் மேல் கோபப்பட எந்த உரிமையுமில்லையே.  

குடும்பத்தில் பொறுமை தான் பூர்ண  அன்பு.  மற்றவர்களிடம் காட்டும் பொறுமை  மரியாதை.  நம்  மீது  நாமே  கொள்ளும் பொறுமை தான்  நம்பிக்கை.  ஆஹா  கடவுள் மீது காட்டும் பொறுமை தான்  பக்தி.

கடந்த  காலத்தை நினைத்தால் கண்ணீர் பெருகுகிறது.  எதிர்காலத்தை நினைத்தால் ஏதோ இனம் புரியாத பயம் தோன்றுகிறது  ஆகவே  நாம்  இப்போது  கிடைத்த ஒவ்வொரு கணமும் வாழ்வோம், அது  ஆனந்தமான  புன்னகையை வரவழைக்கிறது.  ஆஹா,   கிருஷ்ணா இந்த ஆனந்தமான கணத்தை  தந்தாயே,  உனக்கு நன்றி  

வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் வரும் சோதனை  கசப்பாக இருந்தாலும் நம்மை  உயர்த்துகிறது.  ஒவ்வொரு பிரச்னையும் நம்மை  துவண்டு  போக  வைக்கிறது  அல்லது   பலப்படுத்துகிறது .  நாம்  என்ன செய்யப் போகிறோம், ஐயா,  துவண்டு போக  விருப்பமா, மார்பை நிமிர்த்தி வருவது வரட்டும், என்னதான்  நடக்கும் நடக்கட்டுமே  யா?    ஒன்று நாம்  அடிமையாக  சுருண்டு போகவேண்டும், அல்லது  வெற்றிகரமாக  முன்னேறவேண்டும்...  இந்த முடிவு நம் கையில் தான் இருக்கிறது. 


இன்னும் சொல்கிறேன். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...