Tuesday, May 25, 2021

NARASIMMA

 



எல்லாம் நீயே நரசிம்மா...     நங்கநல்லூர்    J.K. SIVAN

மஹா விஷ்ணுவின் நான்காவது  அவதாரம் நரசிம்மன். ஹிரண்யகசிபுவை  வதம்  செய்ய  ப்ரஹ்லாதனை காப்பாற்ற அவதரித்த  நாள் நரசிம்ம ஜெயந்தியாக .அது இன்று. 


மார்கழி  23ம் நாள்  திருப்பாவை பாசுரத்தில் ஆண்டாள் கண்ணனை நேரில் காண்கிறாள். அவள் மனதில் அந்த கம்பீரன் ஒரு பெரிய சிம்மமாக எழுந்து  வருவதை நினைவூட்டுகிறது.    கண்ணன் சிங்கம் தானே. அவனல்லவோ நரனாகவும் சிம்மமாகவும் கலந்து சேர்ந்து அவதரித்தவன் . ப்ரஹ்லாதனுக்கு அருள் புரிந்து அவன் தந்தையை, கொடியவன் ஹிரண்யனை,  வதம்  செய்தவன்.  நரசிம்மனை ஆண்டாள் மட்டுமா நேரில் கண்டாள் . ஒரு  சாதாரண மனிதரும்  பாசுரங்கள் பாடாமலேயே   நரசிம்ம தரிசனம் பெற்ற விஷயம் இது: 

ஆந்திராவில் மட்டப்பள்ளியில் ஒரு  லக்ஷ்மிநரசிம்மர் கோயில், ஒரு ஜன நடமாட்டம் இல்லாத வனப் பகுதியில் இருந்தது.  அங்கே வாழ்ந்த ஒரு காட்டுவாசிக்கு மட்டப்பள்ளி  நரசிம்மன் மீது  எல்லையற்ற பக்தி.   அவன் வசித்த இடத்திலிருந்து  கோவில்  ரொம்ப தூரம்.  ஆபத்தான காட்டுப்பகுதியில் நடந்தால் தான் கோவிலை அடைய முடியும்.

 ஒருநாள் நரசிம்ம ஸ்வாமியை தரிசிக்க அரிசி, பருப்பு, காய், கனிகள் ஆகியவற்றை மூட்டைகட்டி தலையில் வைத்துக்கொண்டு அந்த கிராமவாசி நடந்தான் . காட்டில் இரண்டு நாட்கள் ரெண்டு இரவு  நடப்பது எவ்வளவு சிரமம் என்பது நடந்தால் தான் தெரியும்.    ஒருவழியாக  நடந்து மட்டபள்ளி  அடைந்தபோது அவனது துரதிருஷ்டம் பூஜை நேரம் எல்லாம்  முடிந்து  நரசிம்மனின்  ஆலய வாசல் மூடி இருந்தது. இரவு நேரம்.   இருள்  இன்னும் முழுதாக ஆகிராமிக்கவில்லை.  நக்ஷத்ரங்களின் ஒளி  முணுக் முணுக்  மட்டும்.  ரொம்ப களைத்துப் போய்   அந்த வயதான காட்டுவாசி என்ன செய்யலாம் என்று யோசித்தபோது கோயில் வாசலை ஒட்டி ஒரு சிறு கூரை வேய்ந்த ஒட்டு மண்டபம் கண்ணில் பட்டது. சரி இந்த இரவு இங்கே கட்டையை போடுவோம். பொழுது விடிந்தவுடன் நரசிம்ம தரிசனம் பெறலாம் என்று அந்த சிறிய திண்ணை போன்ற இடத்தில் துண்டை விரித்து படுத்தான் . அடுத்த  கணமே  நடந்துவந்த களைப்பில் அசந்து உறங்கிவிட்டான் . 

யாரோ எழுப்பினார்கள்?  எழுந்து பார்த்தன்.   நரசிம்மன் கோவில் பட்டாச்சார்யார்.   அரைத்தூக்கம் கிராமவாசிக்கு.  ஏன் எதற்கு எழுப்பினார்,  யார் இவர்?  தூக்கக்  கலக்கத்தில் ஒன்றும்  தெரிய வில்லை புரியவில்லை. 

''கும்பிடறேன் சாமி''
“யாரப்பா நீ? எழுந்திரு. ஏன் இங்கே வந்து படுத்தாய், எங்கிருந்து வந்தவன் நீ ?”
'' சாமி, நான் அந்தால இருக்கிற காட்டு பக்கம் தாண்டி ஒரு கிராமத்திலே இருக்கேனுங்கோ. நரசிம்ம சாமி பாக்க வந்தேனுங்கோ. உள்ளே போவ முடியல்லீங்கோ. கதவு சாத்திட்டாங்கோ.  இப்போ திறந்தா  உள்ளே உடுவீங்களா? இல்லாட்டி இங்கிருந்தே கதவு திறந்ததும் பாக்கிறேனுங்கோ ''

“அதெல்லாம் வேண்டாம் நீ உள்ளே வா. இங்கே  காட்டு மிருகங்கள்  ரா வேளையில்  உலாவும். ஆபத்து. பாவம் நீ ரொம்ப தூரத்தில் வந்திருக்கிறாய். வயதானவன் உன் பக்தியை நான் மெச்சுகிறேன்'' என்கிறார் அந்த நல்ல பட்டர்.

கதவை திறந்து உள்ளே அழைத்துச் சென்று காட்டுவாசி கொண்டு வந்தவற்றை எல்லாம் நரசிம்மனுக்கு நைவேத்தியம் செய்து, சடாரி வைத்து தீர்த்தம் கொடுத்தார்.

சுவாமியை தனிமையில் மிக அருமையாக தரிசித்த காட்டுவாசிக்கு பரிபூர்ணானந்தம். அவன் இதுவரை நரசிம்மனைத்  தரிசித்ததில்லை. கேள்விப்பட்டு மனதில் போற்றியதுண்டு.

''ஏம்பா,   இருட்டிப்போயிடுத்தே. நீ எப்படி போவே இங்கிருந்து?'' என்கிறார் பட்டர்.
''ரொம்ப சந்தோசமுங்கோ. மெதுவா சாமி பேர் சொல்லிக்கிட்டே நடப்பேனுங்கோ.'
''இந்த அகால இருட்டில் போகாதே. கொடிய விலங்குகள் ஜாஸ்தி இந்தப்பக்கம். இதோ இங்கேயே ராத்திரி கோவில் உள் மண்டபத்தில் தங்கி நான் காலையில் வந்து நடை திறந்த பிறகு வெளிச்சத்தில் போவது நல்லது.''
'சாமி ரொம்ப பெரிய மனசுங்கோ உங்களுக்கு. நல்லா யிருப்பீங்க.''

அன்று இரவு கழிந்து மறுநாள் காலை பட்டாச்சார்யார் கதவை திறந்தார்.  கோவிலுக்குள் உள்ளே  யார் இந்த  ஆள் அழுக்காக்க   கந்தல் ஆடையுடன் குளிக்காமல் படுத்திருக்கிறான்?   ரொம்ப  ஆத்திரமடைந்து பட்டர்  கிராமவாசியை  கடுங்கோபத்துடன் திட்டினார்.

“யாரடா நீ எப்படி கோயிலுக்குள்நுழைந்தாய்?” என்று ஆத்திரத்தோடு கத்தினார்.
காட்டு வாசி அதிர்ந்து போனான். ராத்திரி உள்ளே விட்ட அதே பட்டாச்சாரி இப்போது ஏன் இவ்வளவு கோபமாக பேசுகிறார்.
“சாமி,  நீங்க தானே என்னை எழுப்பி உள்ளார கூட்டி வந்து சாமி காட்டி நான் கொண்டாந்ததை பிரசாதம் நைவேத்தியம் பண்ணி என்னை உள்ளாற வந்து இங்கே படுக்க சொன்னீங்கோ. அதுக்குள்ள மறந்துட்டீயளா?''

பட்டாச்சாரியாருக்கு தலை சுற்றியது. யார் இவன்? எப்படி கோவில் உள்ளே வந்தான்? நான் தானே கதவை சார்த்தி பூட்டிவிட்டு சாவியை இடுப்பில் செருகிக்கொண்டு வீட்டுக்குப் போனேன். நீங்கதானே உள்ளே கூட்டிப்போய், படுக்க சொன்னேன் என்கிறான். உள்ளே அவன் கொண்டுவந்த எதையோ நைவேத்தியம் பண்ணியதாக சொல்கிறான். '

எதிரே நரசிம்மன் சந்நிதி.  கர்ப்பகிரகம்  இழுத்துப் பூட்டிய சாவி அவர் இடுப்பில்  இருக்கிறது. அவசரமாக பூட்டியிருந்த சன்னதிக்கு சென்றார். பூட்டை இழுத்துப்  பார்த்து சாவியால் திறந்தார்.  என்ன ஆச்சர்யம். அந்த அழுக்கு ஆள் சொன்னது போலவே நரசிம்மனுக்கு காய் வேர், பழங்கள் எல்லாம் நைவேத்தியம் செய்யப் பட்டிருந்தது.

பட்டாச்சாரியார் கிழவர். பரம்பரையாக நரசிம்மனுக்கு சேவை செய்பவர். பரம பக்தர். அவருக்கு விஷயம் சட்டென்று பொட்டில் அடித்தது போல் புரிந்து விட்டது .  நரசிம்மனே தன்னைப் போல் நேரில் வந்து அந்த காட்டுவாசிக்கு அருளியிருக்கிறான்.   சன்னதிக்குள் நைவேத்தியம் தவிர அனைத்தும் அவர் வைத்துவிட்டு போனது போலவே இருந்தது. இது வேறு யார் வேலையும் இல்லை. நிரபராதியாக அந்த காட்டு வாசி நிற்கிறான்.அவனை உள்ளே விட்டது, படுக்க வைத்தது எல்லாம்  நரசிம்மன், நரசிம்மனே  தான்.

''நரசிம்மா,  இத்தனை காலமும் பூஜை செய்த எனக்கு காட்சி தராமல், எவ்வித ஆசாரமும் இல்லாமல், பக்திக்கு முதலிடம் தந்து வந்த அந்த காட்டுவாசிக்கு அருள் தந்தாயே, என்ன பாக்கியவான் அவன். ''

பட்டர் மேலே பேசமுடியாமல் நரசிம்மனின் கருணையில் உருக அவர் கண்களில் நீர் பிரவாகம் பெருகி தரையில் சொட்டியது.

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
.ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:

நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை
சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே;
அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே;
எஜமானும் நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே

நரசிம்ம ஜெயந்தி (Narasimha Jayanthi), திருமாலின் நான்காவதான நரசிம்மரின் அவதாரத் திருநாளாகும். 2021ல் இன்று  அமைதியாக வீட்டுக்குள்ளே இருந்தே  கொண்டாடப்படுகிறது.  



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...