Wednesday, May 5, 2021

OLDEN DAYS WEDDINGS

 

பழைய நினைவுகள். நங்கநல்லூர் J K SIVAN

''நலங்கிட வாருங்கோ''

அந்த காலத்து ஆறுநாள் கல்யாணமானாலும் இந்த காலத்து அவசர ஒண்றரைநாள் கல்யாண மானாலும் கல்யாண முஹூர்த்தம் முடிந்ததும் சாப்பிட்டுவிட்டு அவசரமாக வெளியூர் செல்ப வர்கள் அவரவர்கள் வண்டியில் திரும்புவார்கள். மற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியா மைக்கு உண்மையாகவே வருந்துவார்கள். கிளம்புவர்களுக்கு கித்தான் பை , அல்லது சம்படம், அல்லது துணிப்பையில் தாம்பூலம், சீர் பக்ஷணத்தோடு கண்ணீர் சிந்தி கூட, மரியா தை பண்ணி விடை கொடுப்பார்கள். சாப்பாடு ஆனதும் எல்லோரும் அடுத்த நிகழ்ச்சிக்கு ஆயத்தமாவார்கள்.
அது நலங்கு. மாலை மூன்று மணிக்கு மேல் ராகு காலம், யமகண்டம் இல்லாத நேரமாக பார்த்து நலங்கு நடைபெறும் . அநேகமாக பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி இது. இதில் குழந்தைகளுக்கு ஏக உற்சாகமாக இருக்கும். மஞ்சளும், சுண்ணாம்பும் கலந்த கலவையில் சிறிது நீர் பிசைந்து கால்களில் இடுவதே நலங்கு எனப்படும்.
இது போல் பெண்ண்ணுக்கும் மாப்பிள்ளை க்கும் நலங்கு இட்டு விட்டு சில விளையாட் டுகளை விளையாட செய்வார்கள்.

மணமகளுக்கு அவளது நாத்தனார் தலை பின்னி பூ வைத்து, விளையாடல் புடவையை உடுத்த செய்து, மணமகள் மணமகனை நலங்கிற்கு வரும்படி அழைக்க வேண்டும். பெண் வீட்டினர் பிள்ளை வீட்டினரை இதில் கலந்து கொள்ள அழைக்க வேண்டும். இதற்கு கிழக்கு, மேற்காக மணமக்கள் உட்கார கோலம் போட்டு அதன் மீது பாயை முழுவதுமாக விரித்து மணமக்களை எதிரும், புதிருமாக உட்கார வைக்க வேண்டும்.
பாட்டு களைகட்டும் நிகழ்ச்சி இது. பெண் வீட்டுக் கார மாமியோ அத்தையோ மாப்பிள் ளையை நலங்கிட அழைப்பாள்:

நலங்கிட வாரும் ராஜா, நலங்கிட வாரும் ராஜா, நாணயம் உள்ள துரையே
முத்திழைத்த பந்தலிலே ரத்ன கோலம் போட்டிருக்கு
வந்த ஜனம் காத்திருக்க வாரும் அய்யா நலங்கிடவே

பட்டு ஜாம காளமெத்தை பந்தலிலே விரித்திருக்கு
நாலு விதவாத்யங்களும் நாகரிகமாய் ஒலிக்க

எந்த ஊரு எந்த தேசம் எங்கிருந்து இங்கு வந்தீர்
மோகன புரம் தனிலே மோகினியைக் காண வந்தீரா

என்ற பாட்டு பாடி கேட்டிருக்கிறேன்.

அருகில் ஒவ்வொரு கிண்ணத்திலும் கொஞ்சம் அரிசியும், பருப்பும்,உப்பு, சந்தனம், குங்குமம். மஞ்சள் பொடி, நலங்கு கலவை, குடுமி எடுத்த மஞ்சள் தடவிய தேங்காய், 12 சுட்ட அப்பளங்கள். வெற்றிலை, பாக்கு, பழம், புஷ்பம், முகம் பார்க்கும் கண்ணாடி;சீப்பு, ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

யாராவது ஒரு வயது முதிர்ந்து அனுபவமிகுந்த பாட்டியம்மா தான் அதிகாரி. அம்பயர். விவரம் தெரிந்த, பல நூறு நலங்குகளை நடத்தியவளாக இருப்பாள். ரெண்டு வீட்டுக்காரர்களையும் அதுக்கப்பறம் அது , இது இதை செய், அதை செய் என்று சொல்லி கொடுப்பார்கள்.

இந்த நேரத்தில் பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என மாறி மாறி நலங்கு பாட்டு பாடுவார்கள்.
பெண் நலங்கிடும்போது மாப்பிள்ளை வீட்டுக் கார மாமி ஒருத்தி பாட்டை எடுத்து வீசுவாள் :

நலங்கிடுகிறாள் மீன லோசனி நலங்கிடுகிறாள் மீனலோசனி
நாரதருடன் கூடிநலங்கிடுகிறாள் மீனலோசனி
நாரதரும் வந்து கானங்களை பாட நானாவித தாளங்கள் போட
சொர்ண தாம்பாளத்தை ஜோதியால் எடுத்து
சுந்தரேசர் கையில் கொடுத்து பூபதி பாதத்தில் விழுந்து
புஷ்ப மாலைகளை அன்புடன் சார்த்தினாள்.

சொர்ண பன்னீர் சொம்பை ஜோதியால் எடுத்தாள் சுந்தரேசர் மேலே தெளித்தாள்
வாசனை கந்தம் பரிமளம் பூசினாள் வணங்கி சாமரம் வீசினாள்,என்ற நலங்கு பாட்டும் ரொம்ப பிரபலம் அப்போதெல்லாம்.

பெண் தனது கணவனுக்கு தாம்பூலம் கொடுக்கும் போது பெண் பாட்டு பாடியே ஆக வேண்டும். இது போல் பிள்ளயும் பாடுவான். அவனைப் பாடாமல் விடமாட்டார்கள். அவன் ஏற்கனவே வார்னிங் பெற்றவன் என்பதால் இந்த கட்டத்துக்கு தயாராகவே ஒரு பாட்டை தயார் பண்ணிக்கொண்டு வந்திருப்பான்.

மணபெண் நின்ற படியும், மணமகன் அமர்ந்த படியும் இருக்க , முதலில் மணப்பெண் தனது கணவனது கழுத்திலும், இரு கைகளிலும், நெற்றி யிலும், சந்தனமிட்டு, நெற்றியில் குங்குமம் இட்டு பின்னர் அவனது வலது காலை நீட்டும் படி சொல்லி, அவன் மறுக்க அவளே காலை பிடித்து இழுத்து நலங்கிட வேண்டும் .இவை எல்லாம் அந்த காலத்தில் எட்டு வயது சிறுமிக்கும், பத்து வயது சிறுவனுக்கும் கற்று கொடுக்கும் பாடம்.
தற்காலத்திற்கு இவை தேவை இல்லை. மணமக்கள் இருவரும் பேசி பழக வாய்ப்புகள் உள்ளவையாக அமைந்தவை.

இதன் பின்னர் பெண் மணமகனுக்கு தலையை சீப்பினால் வாரி விட்டு, கண்ணாடியை முதலில் திருப்பி காண்பித்து பிறகு சரியாக காண்பிக்க செய்யும் வேடிக்கைகள் அதிகம் இருக்கும்.

இப்போது பெண்ணிடம் சிறிது அரிசியும், பிள்ளையிடம் சிறிது பருப்பும் கொடுத்து பெண்ணை நான் அரிசி தருகிறேன் பருப்பு தாருங்கள் என்று பிள்ளையிடம் கேட்க சொல்வார்கள்.

அவ்வாறே பெண் கேட்டு, தனது கையிலுள்ள அரிசியில் பாதியை இடது கையில் வைத்து கொண்டு, மீதியை அவனிடம் கொடுத்து பருப்பு வாங்கி இரண்டையும் கலந்து கொண்டு,

வலது கையிலும், இடது கையிலும் பாதி பாதி வைத்து கொன்டு, கைகளை மூடிய வண்ணமாக வலது கையால் இடது பக்கத்திலிருந்து வலமாகவும்,,

இடது கையால் வலப்பக்கமிருந்து இடமாகவும், மூன்று முறை மணமகனின் தலையை சுற்றி, அவனது பின் பக்கத்தில் போட்டு விட வேண்டும்.

இப்போது இரண்டாவது முறையாக பெண் பருப்பை அவனிடம் கொடுத்து பருப்பு தருகிறேன் அரிசி தாருங்கள் என கேட்டு வாங்கி முன் மாதிரியே தலை சுற்றி போட வேண்டும்.

மணமகளிடம் உப்பை கொடுத்து உப்பை தருகிறேன் பருப்பு கொடுங்கள் என்று வாயால் மட்டும் கேட்க சொல்வார்கள். ஆனால் கொடுக்க மாட்டார்கள்.

இவற்றை கொண்டு நான் சமைத்து போடு கிறேன். என்று மணமகள் கூறுவதாக அமைகிறது. இதன் பிறகு அப்பளத்தை சுற்றுவாள். உளுந்தினால் செய்ய பட்ட இரு சுட்ட அப்பளங்களை இரு கைகளிலும் வைத்து கொண்டு,பிரதக்ஷிணமாக வலது கையாலும், அப்பிரதக்ஷிணமாக இடது கையாலும் சுற்றி இரு அப்பளங்களையும் நொறுக்கி உடைத்து மணமகனின் பின் பக்கம் போட வேண்டும்.

இம்மாதிரி மூன்று முறை செய்ய வேண்டும். உடல் பலத்திற்கு அவசியமானது உளுந்து. இதனால் செய்ய பட்ட அப்பளங்களை சுடுவது போல் வாழ்வில் பல இன்னல்கள் ஏற்பட்டாலும்,இந்த அப்பளங்களை நொறுக்கு வது போல் தகர்த்து உடல் பலத்துடனும் ,மன பலத்துடனும் நாம் இருப்போம்.என்பதை எடுத்து காட்டுகிறது.

மணமகள் தன் இடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். தற்பொது மணமகனின் முறையாகும். மணமகள் செய்த மாதிரியே செய்ய வேன்டியது. உட்கார்ந்த படியே.

இதன் பின்னர் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் போட்டி வைப்பார்கள். குடுமி எடுத்து மஞ்சள் தடவி வைத்த தேங்காயை மணமக்கள் அதை உருட்டி விட்டு விளையாட வேண்டும்.

உறவினர் ஒருவர் ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்லும் போது யார் முதலில் தேங்காயை பிடிக்கிறார்களோ, அவரே முதலில் விளையா ட்டை துவக்க வேண்டும்.

பெண் தேங்காயை இரு கைகளாலும் பிடித்து கொள்ளலாம். ஆனால் ஆண் ஒரு கையை மட்டுமே உபயோகபடுத்தலாம்.யார் முதலில் தேங்காயை பிடிக்கிறார்களோ, அவர் அந்த தேங்காயை இருவருக்கும் நடுவில் பாயில் அழுத்தி பிடித்திருக்க மற்றவர் அதை விடுவித்து எடுக்க வேண்டும். இவ்வாறு எடுப்பவர் பெண்ணானால் இரு கைகளால் எடுக்கலாம். ஆண் ஆனால் ஒரு கையை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.

இவ்வாறாக ஒவ்வொருவரும் ஒரு முறை செய்வார் கள்.

இதன் பின்னர் இரண்டு வெற்றிலையை நான்காக மடித்து, அதில் ஒருவர் கையில் கெட்டியாக பிடித்து கொண்டு பாயின் மேல் நடுவில் வைத்திருக்க மற்றவர் விள்ளாமல் முழுவதுமாக கை பற்ற வேண்டும். இம்மாதிரி ஆளுக்கு ஒரு முறை செய்வது வழக்கம் .
மண மக்கள் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கவும், பழகவும், குணங்களை தெரிந்து கொள்ளவும் உதவும்.

பிறகு மணப்பெண் ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு பழம் வைத்து கொன்டு பத்தியம் என்ற பாடலை பாடி தனது கணவனிடம் கொடுக்க வேண்டும்.

இந்த பாடல் தனது கணவனை புகழ்ந்து பாடுவ தாகவும் தன்னை காத்து ரக்ஷிக்கும்படி கேட்பதாக இருக்கும்.

மணபெண்ணுக்கு இந்த பாடல் தெரியாவிட்டால் ஏதோ ஒரு பாட்டு பாட வேண்டும். பாட்டு பாடிய பிறகு தான் தாம்பூல தட்டை மணமகன் வாங்கு வான். பிறகு மணமகன் முறை பத்தியம் பாட வேண்டும்.

தாம்பூலத்தை கணவனிடம் கொடுத்த பின் மனைவியானவள் கணவனுக்கு நமஸ்காரம் செய்து விட்டு அவனது வலது பக்கத்தில் அமர வேண்டும்.

பிள்ளை வீட்டிலிருந்து ஒருவரும், பெண் வீட்டிலிருந்து ஒருவரும் மணமக்களுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும்.

ஒரு சிலர் பச்சை வழிப்பது என்று கண் த்ருஷ்டி படாமல் இருப்பதற்காக செய்கிறார்கள்.ஒரு கிண்ணத்தில் நல்ல எண்ணெய் விட்டு குங்குமத் தை போட்டு நன்றாக கலந்து, இந்த கலவையை தம்பதிகளது முதுகு, இரு தோள்பட்டைகள், கழுத்து, கன்னங்களில் லேசாக தடவுவது வழக்கம். குறைந்தது ஐந்து பேர். ஒற்றை படையில் இருக்க வேண்டும்.இதை முதலில் மணமக்களின் தாய், அத்தை, மாமி, சகோதரி, மன்னி என ஐவர் தடவுவர்.

பூ ஊஞ்சல் என்ற ஒரு நிகழ்ச்சியும் அந்தக் காலத்தில் உண்டு. ஊஞ்சல் முழுவதும் பூ சுற்றி அலங்காரம் செய்து, மணமக்களை அதில் உட்காரவைத்து எல்லோரும் பாடி மகிழ்வார்கள். தொடுத்த பூ பந்தை சுருட்டி கட்டி அதை ஒருவர் வீச மற்றவர் பிடிக்க என செய்து களிப்பார்கள்.

மொத்தத்தில் நலங்கு கலாட்டா அமர்க்களமா இருக்கும். இதற்கென்றே பல நாட்கள் ரிஹெர் சல் பண்ணிக்கொண்டு வருபவர்கள் உண்டு. பெண் வீட்டுக்காரர்கள், பிள்ளை வீட்டு பக்கத்து மனுஷாளும் பாட்டு பாடியே சண்டை போட்டுக் கொள்வார்கள். விளையாட்டுக்கு தான். விபரீதமா னது. காரசாரமாக இருக்கும் ஆக்கிரோஷ போட்டிகள்.

''பிள்ளையோட அத்தை யோ மாமியோ ஒருத்தி '' கருநாகப் பழம் போல கருத்த உங்காத்து பெண்ணுக்கு எலுமிச்சம் பழம் போல எங்காத்து பிள்ளைனு'' பாடுவா. அவ்வளவு தான் பெண் வீட்டு சிங்கங்கள் பதுங்கி இருந்தவை பாய ஆரம்பிக்கும்.

''எங்கள் சம்பந்தி சாப்பிடவே மாட்டாள் , வெகு சங்கோஜ காரி இட்டிலியில் இருநூறும், ஜாங்கிரியில் முன்னூறும், மைசூர்பாகில் நானூறும், தயிர் வடையில் ஐநூறும் சாப்பிட என்று பதிலடி கொடுக்க சபையே அதிரும்.'' இந்த பாட்டை இப்போதும் கச்சேரிகளில் பாடுகிறார்கள். மாம்பலம் சகோதரிகள் பாடி ரொம்பநாள் முன்பு கேட்டேன்.

இன்னொரு எல்லோரும் அறிந்த, இன்றும் அருணா சாய்ராம், பாம்பே சகோதரிகள் கச்சேரிகளில் பாடும்

''போஜனம் செய்ய வாருங்கோ போஜனம் செய்ய வாருங்கோ என்கிற பாட்டு. இதில் பல வித பக்ஷணங்கள் பெயர்கள், வரும். நாக்கில் ஜலம் கேட்கும்போதே சொட்டும்.

மீனாக்ஷி சுந்த்ரேச கல்யாண மண்டபத்தில் போஜனம் செய்ய வாருங்கோ
சித்ரமான நவ சித்ரமான் கல்யாண மண்டபத்தில் வித விதமாகவே வாழைகள் கட்டி
வெட்டி வேர் கொழுந்து தோரணங்களும் மாட்டிய கூடமும் பவள ஸ்தம்பமும்
பச்சை மரகதங்கள் தளகதி செய்களும் முத்து முத்தாகவே நுனி வாழைகளும்
பசும்பொன்னால் செய்த பஞ்ச பாத்ரங்களும் பன்னீர் ஜலத்துடன் உத்திரணியுமே
முத்து முத்தாகவே முன்னே தெளிக்க போஜனம் செய்ய வாருங்கோ ராஜ
போஜனம் செய்ய வாருங்கோ மீனாக்ஷி சுந்த்ரேச கல்யாண மண்டபத்தில் போஜனம் செய்ய வாருங்க

மும்மூர்த்தி சகல தேவர்களும் கூட அன்னம்பார்வதி ஆதிபராசக்தி
அருந்ததி இந்த்ராணி அகல்யா கெளசல்யா த்ரெளபதி சீதா தாரா மண்டோதரி
இந்திரதேவி ரம்பை திலோத்தமை கந்தர்வ பத்தினி கின்னர தேவி
அஷ்டதிக் பாலர்கள் பார்யாளுடனே சத்வ மஹாமுனி ரிஷிபத்னிகளும்
பந்தடித்தாற் போல் பட்டுகள் கட்டி கெஜ்ஜை மெட்டுகள் கல்லு கல்லுவென
பசும்பொன் தட்டிலே பாயசங்கள் எடுத்து பரிந்து பரிந்து பரிமாரிட வந்தார்

போஜனம் செய்ய வாருங்கோ ராஜ போஜனம் செய்ய வாருங்கோ மீனாக்ஷி சுந்த்ரேச கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கோ

இதற்கு எதிர் பாட்டு அந்த பக்கத்தில் இருந்து வரும்.

“ஆகா சம்பந்தி இந்த கல்யாண விமரிசை தனை
எந்த ஜில்லாவிலும் நான் கண்டதே இல்லை
மாப்பிள்ளை அழைக்க வந்தார் மந்தையாக மூன்று பேர்கள்
அச்சில்லாத வண்டியும் அதற்கேற்ற குதிரையும்
பாதி வழி வருகும் போது விழுந்ததே மண்டை உடைந்ததே
இந்த மாயப் பேச்சுகள் பேசியே என்னை மர்மமாகவே அழைத்து வந்தாய்” (ஆகா)

“சாப்பிட அழைத்தாய் சம்பந்தி – இப்போ கூப்பிடாமலே நீ நின்றாயே பிந்தி
சர்க்கரை இல்லாத பாயசம் – வெகு அக்கறையாக நீ பரிமாறினாய்
வெற்றிலை வேலியில் என்றாய் – பாக்கு கண்ணாயிரம் கடையில் இருப்பதாய்ச் சொன்னாய்
இந்த சம்பந்தம் அதிசயம் – எனக்கு வந்த சம்பந்தம் அதிலும் அதிசயம்”

இவ்வாறு தொடர்கிற சம்பந்தி ஏசல் பாடல்கள் அவ்வப்போதைய சூழலுக்கு ஏற்பப் புதியனவாகப் புனைந்து சேர்க்கப்படுவதும் இயல்பே.

இதில் என்ன விசேஷம் என்றால் அக்கணத்தி லேயே இட்டுக்கட்டி பாடும் சாமர்த்தியசாலி மாமிகள் அக்காலத்தில் இருந்தார்கள். இதோ ஒரு மாடல் பாட்டு:

வண்டி மெட்டு ஓசைக்காரி – இவள் வாய்ப் பேச்சில் கணைக்காரி
மாட்டு வண்டியில் வரும் ராங்கிக்காரி – எனக்கு வாய்த்தாள் வெகு வம்புக்காரி
பட்டுப் புடவைக் காரி – வெல் வெட்டு ரவிக்கைக் காரி
காப்பு கொலுசுக்காரி இவள் சோப்பு பவுடர் ஷோக்குக் காரி
அக்கரையில் நிற்கும் பெண்ணே ஆற்றினிலே வெள்ளம் வந்தால்
இக்கரைக்கு எப்படி நீ வந்து சேரப் போறாயோ ?

இப்போதெல்லாம் சினிமா பாட்டுகள் பாடுகி றார் கள். இல்லையென்றால் நலங்கு ஏதோ காமா சோமாவென்று ஒரு சில அயிட்டங்களோடு முடிந்து போகிறது.

கல்யாணத்தில் பிள்ளை வீட்டார் இந்த நலங்கு சமாச்சாரத்துக்காகவே விளையாடல் சாமான் களையும் வாங்கி வைத்திருப்பார்கள். விளையாடல் சாமான் என்பதில் பெண்ணுக்கு வேண்டிய அலங்கார பொருட்கள் இருக்கும். இதை பிள்ளை வீட்டார் வாங்கி வைத்திருக்க வேண்டும்.


இவ்வாறாக மூன்று மணிக்கு ஆரம்பித்த நலங்கு விழா ஐந்தரை ஆறுமணி வரை கூட தொடர்ந்து முடியும். அப்புறம் சூடாக எல்லோருக்கும் போண்டா, கிச்சடி, காபி, தோசை அயிட்டங்கள் பரிமாறி கவனம் அடுத்த நிகழ்ச்சிக்கு மாறி விடும்...

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...