Saturday, May 8, 2021

ORU ARPUDHA GNANI


 ஒரு அற்புத ஞானி   -  நங்கநல்லூர்   J.K. SIVAN



''பார்வதி ஸ்வரூப ஸ்வாமிகள்''

இன்று  என்னவோ  சேஷாத்திரி ஸ்வாமிகள் பற்றி ஏதாவது எழுத வேண்டும் என்று ஒரு தாக்கம்  என் மனதில்  காலையில் எழுந்ததிலிருந்து இருந்தது.  ஏதோ நாம் செய்யவேண்டிய  ஒரு காரியம்  தாமதமானால் ஒரு  வித  அவஸ்தை மனதில் உறுத்திக்கொண்டே  இருக்குமே  அதே தான்  எனக்கும். .

 ஸ்வாமிகள் வம்சத்தில்  எல்லோரும்  காமகோடி என்ற பட்டம் உடையவர்கள். காமாக்ஷியை வழிபட்டவர்கள்.தேவி உபாசகர்கள். சேஷாத்திரி ஸ்வாமிகள் ஒரு சிறந்த அம்பாள் பக்தர் , ஸ்ரீ வித்யா உபாசகர். எப்போதும் மனமோ வாயோ காமாட்சியை ஸ்தோத்ரம் செய்து கொண்டே இருக்கும். சக்தி ஸ்வரூபம் அவர். ஒரு நிகழ்ச்சி சொல்கிறேன். அதிசயித்து போவீர்கள்.

பிரம்மஸ்ரீ என். சுப்ரமணிய அய்யர்  என்பவர்   ஒரு சிறந்த ஸ்ரீ வித்யா உபாசகர். சம தமாதி குணங்களுக்கு உறைவிடம். பராசக்தி உபாசனை ரஹஸ்யங்கள் கை வரப் பெற்றவர். பல வருஷங்கள்  சக்தி உபாசனை செய்தவர்.  தென்னாடு முழுதுமே அவரை மந்த்ர தந்த்ர சாஸ்த்ர மார்க்க தரிசி என்று கொண்டாடும் படியான  புகழ் பெற்றவர்.  

 நித்ய கர்மாநுஷ்டானம், சிஷ்டாசாரம் விடாதவர். ரொம்ப பேசமாட்டார். சாந்த ஸ்வரூபி. அவரைப் பார்த்தாலே கோப தாபங்கள் அடங்கிவிடும். முகத்தில் பராசக்தி தேஜஸ் பளிச்சென்று   ஜொலிக்கும். ஸ்ரீ நகர விமர்சம், குருதத்வ விமர்சம் எனும் நூல்கள் இயற்றியவர்.

சுப்ரமணிய அய்யரைப் பற்றி  ஏன்  நிறைய   சொல்கிறேன் என்பதற்கு   காரணம் அவரது அனைத்து சக்திகளுக்கும்   மூல காரணமாக  இருந்தவர்   நமது  சேஷாத்திரி சுவாமிகளே. ஸ்வாமிகளின் தாசர்  சுப்ரமணிய அய்யர். அடிக்கடி ஸ்வாமிகளை தரிசிக்க மெட்ராஸிலி ருந்து திருவண்ணாமலைக்கு  ரயிலில்  வருவார். 
ஸ்வாமிகளிடமிருந்து சக்தி உபாசனை   உபதே சம்  ஆசீர்வாதம் வாங்கவேண்டும் என்று  ஐயருக் கு ஆசை.  ஆனால்  அதை ஸ்வாமிகளிடம்  வெளிப் படுத்த   தயக்கம்,   பயம்.   ஸ்வாமிகளை அருணாசலத்தில் கண்டு வணங்கினார். தரிசனம் உபதேசம் பெற வந்தேன் என இன்னும் கேட்க வில்லை. அதற்குள்,.

ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே ' நாளைக்கு. விடி காலம்பர இளையனார் கோவிலுக்கு வா'' என்கிறார்.  ஐயர்  மறுநாள் காலை அனுஷ்டானங் களை முடித்துக் கொண்டு, ப்ரம்ம முகூர்த்தத்தில் இளையனார் கோவில் மண்டபத்தில் ஸ்வாமிக ளைக் காண காத்திருக்கிறார். தூரத்தில் ஸ்வாமிகள் நிற்பது போல் தெரிந்தது. சற்று அருகே சென்றார். ஸ்வாமிகளைக் காணோம். அவர் தோன்றிய இடத்தில் திவ்ய ஸ்வரூப சர்வ லக்ஷண அம்பாள் பராசக்தி தேவி அல்லவோ  ''வா''   என்று கையாட்டி அழைக்கிறாள். சிலையாக ஒரு கணம் நின்றார்  சுப்ரமணிய ஐயர் .  ஓடினார். க்ஷண நேரத்தில் மீண்டும் அங்கே ஸ்வாமிகள் நின்றார். அவர் காலடியில் சிரம் வைத்து நமஸ்கரித்தார். உபதேசம் பெற்றார். 

உண்ணாமுலை அம்மனாக, பார்வதி தேவியா கவே ஸ்வாமிகள்  காட்சி அளித்தி ருக்கிறாரே.   பராசக்தி அம்சமாக இருந்ததால்   ஸ்வாமிகள்  சர்வ சக்தி பெற்றிருந்தார் என்று எல்லோரும் சொல்வது இதனால் தான்.

இதைவிட வெகு ஆச்சர்யமான  இன்னும்   ஒரு நிகழ்ச்சியும் நடந்திருக்கிறது.

நடேச அய்யர்  என்பவர்   சேஷாத்ரி ஸ்வாமிக ளின் உறவினர். அவர் பிள்ளைக்கு ஐந்து வயதில் அம்மை வார்த்து பெரிய விஷ ஜுரம் தாக்கி, பெரிய அம்மையில் இரு கண்களும் கருவிழிகள் இழந்து குருடாயின. அம்மை  குளிர்ந்து இறங்கி, தலைக்கு ஜலம் விட்டு கண் சிகிச்சை பார்த்ததில் ஒரு பிரயோஜனமும் இல்லை. வைத்தியர்கள் இனி கண் பார்வை கிடையாது என்று கை விரித்து விட்டார்கள். நடேசய்யர் துடித்தார். என்ன செய்வது என்று தெரியாத போது தானே பகவான் ஞாபகம், ஸ்வாமிகள் ஞாபகங்கள் எல்லாம் வரும். திருவண்ணாமலைக்கு ஓடினார்.

எப்படியோ தேடிக்கண்டு பிடித்து ஸ்வாமிகள் காலில் விழுந்தார்.'' என்னைத் தெரியறதா அம்மாஞ்சி. நடேசன்.  என் குழந்தைக்கு ரெண்டு கண்ணும் போயிடுத்து. நீங்க தான் அனுக்கிர ஹம் பண்ணி அவனுக்கு கண் பிச்சை போடணும்'' கதறினார் ஐயர்.

 ''போ இங்கேருந்து. ராத்திரி என்கிட்டே கொண்டு வந்து விடு அவனை. ''

நடேச ஐயர்  வயிற்றில் பாலை வார்த்தது போல் இருந்தது. சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிவிட்டு நகர்ந்தார். சற்று தூரம் போன அவரை ஸ்வாமிகள் கூப்பிட்டார்.  

''டேய்   நடேசா , இங்கே வா. என் கிட்டே என்று நான் சொன்னா இங்கே கொண்டு வந்து விடுன்னு  அர்த்தமில்லை. நீ இருக்கிற இடத்திலேயே அம்பாள் சந்நிதி இருக்கே அங்கேயே கொண்டு விடு''

ஐயர்  உடனே அடி அண்ணாமலை கோவிலுக்கு ஓடினார். அங்குள்ள சிவாச்சார்யரிடம் நடந்ததை சொல்லி சேஷாத்திரி ஸ்வாமிகளின் கட்டளை யை தெரிவித்தார். அர்ச்சகர்களுக்கு   தான் ஸ்வாமிகளை பற்றி நன்றாக தெரியுமே.

அன்றிரவு அர்த்த ஜாம பூஜைக்கு பிறகு நடை சாத்துவதற்கு முன்பு அம்பாளின் கர்பக்ரஹத்தில் பையனை விட்டு விட்டு கதவைச் சாத்தி பூட்டினார்கள்.

வழக்கம் போல் மறுநாள் காலை 6.30 மணிக்கு தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி பிரார்த் தனை பண்ணிவிட்டு அம்பாள் சந்நிதியின் கதவை திறந்தார்கள். எப்போது கதவை திறப்பார்கள் என்று காத்திருந்த பையன் இரு கண்களும் பழையபடி குணமாகி ஒரே ஓட்டமாக வெளியே ஓடிவந்து விட்டான்.

 நடேசய்யர் ஆனந்த பரவசமாகி, தாரை தாரையாக நன்றிப் பெருக்கில் அவனை வாரி அணைத்துக் கொண்டார். ஊர் முழுதும் காட்டுத்தீயாக  பையனுக்கு கண் கிடைத் த செய்தி பரவியது. ஆனால் ஸ்வாமிகளோ இது பற்றி ஒன்றுமே அறியாதவராக வேறு யாருக்கோ எங்கோ உதவி செயது கொண்டிருந்தார். 

இதில் என்ன விசேஷம் என்றால்   ''என்னிடம் கொண்டு விடு என்றால் என்னிடம் இல்லை. அம்பாளிடம் ''என்று கூறியது தான் ரஹஸ்யம்.  ''ஸ்வாமிகள் தான் அம்பாள்''  . எத்தனை பேருக்கு இது தெரியும். தாயன்புக்கு ஸ்வாமிகளை போல் ஒருவரை இணையாக காட்டவோ சொல்லவோ முடியாதே. 

ஊர் நாட்டுக்கோட்டை செட்டியார் சந்தோ ஷத்தோடு இந்த அதிசயத்தில் மகிழ்ந்து ஐயரின்  பெண் கல்யாணத்தை தனது செலவில் ஜாம் ஜாம் என்று நடத்தினார் என்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...