Tuesday, May 11, 2021

PESUM DEIVAM

 



பேசும் தெய்வம்   -   நங்கநல்லூர்  J K  SIVAN 


பொன்காப்பும்  பொன்னுசாமியும்....


குழந்தைகளை  தூக்கிக்கொண்டு போவது, குழந்தைகளின்  கழுத்தில் கையில், காலில் உள்ள ஆபரணங்களை திருடுவது  ரொம்ப சுலபம் ஏனென்றால் சிறு குழந்தைகளுக்கு எதிர்க்க தெரியாது. நகையோ அதன் மதிப்போ தெரியாது. சிரிப்பு காட்டினால்  மகிழ்ச்சியோடு  தனது நகைகளை  பறிகொடுக்கும்.  தன்னையே தூக்கிக்கொண்டு போகவும் அனுமதிக்கும். கத்தாது..  இது நமது வாழ்வில் நமது காலத்தில் சாதாரணமாக நாம்  அறிவது.  

மஹா பெரியவா வாழ்க்கையில், இளம் பிராயத்தில் நடந்த  ஒரு சம்பவம்  நீங்கள் அறிவீர்களா?. நான் படித்து அறிந்த  விஷயம்  இது. 

நூறு வருஷங்களுக்கு முன்பு  விழுப்புரத்தில்   ஒரு க்ராம  அக்ராஹார  வீட்டில்   பெண்மணிகள் வேலையில் ஈடுபட்டபடியே ஊர் விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.  பெரிய  மூன்று  கட்டு வீடு.  வாசல் திண்ணையில் கால்களை ஆட்டியபடியே உட்கார்ந்திருந்தான்  சிறுவன்  சுவாமிநாதன். பிஞ்சுக் கால்களில் தங்கக் காப்புகள்.    அந்த தங்கக்காப்புகள்  கண்ணை பறித்தது மட்டும் அல்ல,  தெருவோடு போய்க்  கொண்டிருந்த  ஒரு  ஆசாமியின் கண்ணையும்  உறுத்தியது.   மெதுவாக  வீட்டுக்கு அருகே வருகிறான்.

அந்த ஆசாமியை  இந்த  குழந்தையின் தங்க காப்புகள்  காந்தம் போல்  இழுத்தன.  அருகில் நெருங்கி வருகிறான் அந்த ஆசாமி.  சற்று கவனிக்கிறான்.   பெரியவர்கள்  யாரும்   கண்ணில் தென் படவில்லை,  குழந்தை மட்டும் திண்ணையில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறது.

“என்ன பாப்பா... இங்க உட்கார்ந்துட்டு என்ன பண்றே...?” என்ற படியே   நைசாக   சுவாமிநாதனின் கால்களில் தங்கக்  காப்புகளைத் தொட்டுப்  பார்க்கிறான்.   அவனுக்கு யாரும் கவனிக்கவில்லை என்கிற தைரியம் வந்து மெதுவாக  குழந்தையின்  கால்களில் உள்ள  காப்புகளின்   கொக்கிகளை  அகட்டுகிறான் .  காப்பு   காலில் தொளதொள வென  தொங்குகிறதை பேசத்தெரிந்த அந்த குழந்தை கவனிக்கிறது.  பேசும் தெய்வத்துக்கு பேசவா தெரியாது?MEDHU கொக்கிகள் தளர்ந்திருப்பது இளம் சுவாமிநாதனுக்குப் புரிகிறது.

“மாமா... இதை எடுத்துண்டு போய் சரி செய்துண்டு வாங்கோ... ரொம்ப தொளதொளன்னு இருக்கு...” 


ஸ்வாமிநாதன்  மழலையில் சொல்லி காப்புகளைக் கழற்றி அந்த ஆசாமியிடம் கொடுக்க, அவனும் அதைப் பெற்றுக் கொண்டு, ‘கவலை விட்டதடா சாமி’ அதிர்ஷ்ட தேவதை நம்ம பக்கம்  ''    என்று வேகமாக நடந்தான்!

சுவாமிநாதனுக்கு குஷி தாங்கவில்லை. ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குள் சென்று, அம்மாவிடம் சொல்கிறான்.

 ‘‘அம்மா... வாசல்லே ஒரு மாமா வந்தா.   தொள  தொள  காப்புகளைக் கழற்றி அந்த மாமா  கிட்டே தந்துட்டேன். நாளைக்குச்   சரி   பண்ணி எடுத்துண்டு வரதா சொல்லிட்டுப் போனா. பாவம், அந்த மாமா ரொம்ப நல்லவா” என்று சொல்ல,

பகீரென்றது மஹாலக்ஷ்மி மாமிக்கு.   ‘‘அடக் கடவுளே! யாரோ பாதகன் இப்படிக் குழந்தையை ஏமாத்திட்டானே...” என்று பெற்றவர்கள் பதறினார்கள். தெருத் தெருவாக ஓடித் தேடினார்கள். பொன்னுடன் மறைந்து விட்டான்  பொன்னுசாமி !

“யாரோ ஒருவன் தெய்வக் குழந்தையிடமிருந்து தங்கக் காப்புகளைப் பறித்துச் சென்றான்... அந்த அபசாரத்துக்குப் பிராயச்  சித்தமாகவோ என்னவோ, இன்று பாரெங்கும் உள்ள பக்தர்கள் ஸ்ரீஆசார்ய சுவாமிகளின் திருப்பாதங்களில் பொன்னாகக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள், சிரசில் கனகாபிஷேகம் செய்து மகிழ்கிறார்கள்...” என்று இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு  தனது  கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் பரணீதரன்.

மகா பெரியவா  இன்னொரு சந்தர்ப்பத்தில்   தஞ்சை மாவட்டத்தில் முகாமிட் டிருந்த தருணம் ஒரு பெண்மணியிடம், 

‘‘எனக்கு நூறு பவுன் வேண்டும்... சேர்த்துத் தருகிறாயா?” என்று கேட்க, மறுகணமே கழுத்திலிருந்த சங்கிலியை கழற்றிக் கொடுத்ததுடன், ஒரே வாரத்தில் அந்தப் பெண்மணி நூறு பவுன் வசூலித்துத் தந்ததும், சில நாள்களில் அத்தனையும் வேத  பண்டிதர்களின் கைகளை அலங்கரிக் கும் தோடாக்களாக மாறியதும் நிஜ வரலாறு.

அது மட்டுமா?

காளஹஸ்தி முகாமுக்கு வந்திருந்த பக்தர்களிடம் ஆளுக்கொரு பவுன் தருமாறு மகா பெரியவா கேட்டிருக் கிறார். நான்கு மாதங்களில் ஆயிரம் பவுன்கள் வந்து குவிந்தன. அவை அத்தனையும் சகஸ்ரநாம மாலையாகக் காஞ்சி காமாட்சி அம்மனை அலங்கரித்தன!

சுவாமிநாதனுக்குப் பிறகு சுப்பிரமணிய ஐயர்-மகாலட்சுமி தம்பதிக்கு அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் பிறந்தன. சுவாமிநாதனை அடுத்து ஒரு பெண் குழந்தை லலிதாம்பா. பின்னர் சாம்பமூர்த்தி, சதாசிவம், கிருஷ்ண மூர்த்தி என்று மூன்று தம்பிகள்.   சதாசிவம் எனும்  சாச்சு தான்  சிவன் சார்  எனும் மஹான். சமீபத்தில்  மஹா சமாதி அடைந்தவர் .  அற்புதமான  ''ஏணிப்படிகளில் மாந்தர்கள்''  எனும் புத்தகத்தை நமக்கு அருளியவர்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...