Wednesday, May 26, 2021

PESUM DEIVAM






 பேசும் தெய்வம் --    நங்கநல்லூர்  J  K  SIVAN  


   
11.    கும்பகோணம் மடத்தில்  நவராத்ரி வைபவம் 2

எங்கும்  கல்யாண  கோலங்கள்,  புத்தாடை அணிந்த  ஆண்களும் பெண்களும்  கல்யாண வீடுபோல  காட்சி அளித்த  கும்பகோணம் சங்கர மடத்தில்  காணப்பட்டார்கள்.  இதுவரை  காணாத கோலாகல  உற்சவம் .

''என்ன இது, இவ்வளவு ஆனந்தமாக  நவராத்ரி பண்டிகை  கொண்டாடியதே இல்லை.  ""

''இது என்ன உங்க வீட்டு  எங்கவீட்டு  பண்டிகையா, நமது எல்லோரின் ஒட்டு மொத்த பண்டிகை அல்லவா.?

'' யார் நடத்துகிறா தெரியுமில்லையா?

''நமது இளம் புதிய ஜகத் குரு  முன்னின்று ஒவ்வொண்ணையும்  கவனித்து  செய்கிற ஏற்பாடு ஆயிற்றே''

''அடேயப்பா  எங்கிருந்தோ  எல்லாம்  வந்து வாரிக் கொடுக்கிறார்களே ,  பத்துநாளும்  வரவா  போறவா அத்தனைபேருக்கும்  அன்னதானம்  என்கிறது சாதாரண  விஷயமா?''

இதுபோல் எண்ணற்ற  சம்பாஷணைகள் எங்கும் கேட்டது.  முக்யமாக பெண்கள்  அனைவரும் வயது வித்தியாசமின்றி இந்த நவராத்ரி வைபவத்தை அவரவர் வீட்டுக்கு செய்வது போல அல்லவோ  அலங்கரிக்கிறார்கள்.

 வெகு பிரம்மாண்டமான ஒரு பந்தல் மடத்தின் முகப்பில் சுற்றி போடப்பட்டது.  12000  விளக்குகள், லிங்கம்  ரிஷபம்,  யானை, துவாரபாலகர் போன்ற உருவில் ஒளி வீசின. பத்து நாள் இரவிலும் இந்த தீபங்கள் விலை உயர்ந்த நெய்யால்  தீபங்களாக ஏற்றப்பட்டு எரிந்தன.  ஸ்ரீ வித்யா ஹோமம்  ஒருபக்கம், சண்டி ஹோமம் ஒரு பக்கம்,   வேதவித்துக்களால் நடத்தப்படுகிறது.  

நூற்றுக்கணக்கான  பண்டிதர்கள்  ராமாயணம்,  மஹா பாரதம், சௌந்தர்ய லஹரி, பாகவதம், தேவி மஹாத்மியம் ,  கீதை பாராயணம் செய்தார்கள்.  ஹிந்தி, சமஸ்க்ரிதம், தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று பல மொழிகளில் வல்லுநர்கள் பங்கேற்று நிகழ்த்துகிறார்கள். 

ஒருபக்கம் வேத சாஸ்திரிகள்  ஒன்று சேர்ந்து செவிக்கினிமையாக  வேத  மந்திரங்களை ஓதிக் கொண்டி 
ருந்தார்கள்.  அர்த்தம் புரிகிறதோ இல்லையோ, நமக்கு தெரியுமோ தெரியாதோ,  மொத்தத்தில்  கேட்பதற்கு ரொம்ப சுகமாக இருக்கிறது. உள்ளே போய் மனதில் என்னவோ செய்கிறது. ஒரு வித புது சந்தோஷம், அமைதி, ஆனந்தம்.

கவிஞர்கள், பிரசங்கங்கள் ஒருபக்கம்  ஜனரஞ்சகமாக நடந்தது. விடாது  அம்பாளுக்கு பிடித்த வீணை  ஒலி  கேட்டுக்கொண்டே இருந்தது.குழந்தைகள் கோலாட்டம், கும்மி,  நாட்டுப்பாடல்கள்,  

சரஸ்வதி பூஜை வந்துவிட்டது. அன்று என்ன விசேஷம்?

ஆஹா  அதோ    ராமநாதபுரம் பூச்சி  ஐயங்காரின் அற்புதமான  கர்நாடக சங்கீத கச்சேரி ஒலிக்கிறதே. ஓஹோ  இவர் தானே  அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் குரு.   மதுரை  புஷ்பவனம் அய்யர்  சுகமாக  கச்சேரி நிகழ்த்தினார்.  அவர் தானே  மதுரை மணி அய்யரின் குரு. 

தஞ்சாவூர்  ஜில்லாவில் ஒருவர் பாக்கியில்லை. எல்லோரும் சங்கீதப்ரியர்கள்.  இங்கே கும்பகோணம் தஞ்சாவூர் ஜில்லாவாகி விட்டதே.  நிற்க இடமே இல்லையே.

இருக்காதா பின்னே?   இவ்வளவு  சிறப்பு நிகழ்ச்சிகளை காசு கொடுக்காமல் மணிக்கணக்காக  சாப்பாடோடு எங்கு கண்டு கேட்டு மகிழ முடியும்?

இதில் என்ன ஆச்சர்யம் என்றால்,  ஒவ்வொரு  நிகழ்ச்சியையும்  புறக்கணிக்காமல்  மனது மஹா  பெரியவா பம்பரம்  போல் சுழன்று சுழன்று  சென்று ரசித்து  அந்தந்த  நிகழ்ச்சி நடத்தியவர்களை நேரில் கண்டு வாழ்த்தி  உற்சாகப்படுத்தியது தான். 

இதில் இன்னொரு விசேஷம்  தேப்பெருமாநல்லூர் அன்னதான சிவன் கைங்கர்யம்.  ஆஹா, என்ன ருசிகர  சமையல், கும்பகோணம்  பூராவும்  கமகம என்று  கொத்தமல்லி, காய்கறிகள் போட்ட  சாம்பார், ரசம்  மணம்   மூக்கைத் துளைக்கிறதே.  சுடச்  சுட  சாம்பார், ரசம், என்று  ஆயிரக்கணக்கானவர்களுக்கு  தலை வாழை இலையில்  இது வரை காணாத ருசியோடு உணவளித்தவர்.  அவரது  திறமையைக் கண்டு,  தாராள மனதை புரிந்து,  மஹா பெரியவா வைத்த பெயர்  ''அன்னதான'' சிவன்.

உள்ளூர் கடைக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு   எண்ணெய் , பருப்பு  வகைகள், சமையல் சாமான்கள் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து இறக்கினார்கள்.  பால்  தயிர் வெண்ணை, நெய்  அளவில்லாமல் வந்தது.

சமையல்காரர்கள் நிறையபேர்  தாமே   சம்பளம் இன்றி முன்வந்து சமைத்துக் கொடுக்க  அன்ன தான சிவன் கலியுக நளனாக, பீமனாக  அனைவருக்கும்  நல்ல  உணவு பரிமாறினார்.    நான் அப்போது அங்கே இல்லாமல் போய்விட்டேனே  என்கிற வருத்தம் எனக்கு இப்போது உண்டாகிறது.  

ஒரு மாதம்   முன்னதாகவே  ஏற்பாடுகள் கன  கச்சிதமாக திட்டமிட்டு  நடந்ததால், எந்த குறைபாடும் இல்லை எல்லாவற்றுற்கும் ஒரே ஒரு மூல காரணம்.  68வது காஞ்சி  காமகோடி  ஜகதகுரு நமது மஹா பெரியவா. 21வயது இளைஞர். 

விஜய தசமி  அன்று மஹா பெரியவா கும்பகோணத்தில் அனைத்து கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்தார் . மஹாபெரியவா யானை மீது பவனி வருவது ஒரு கண்கொள்ளாக் காட்சி அன்று.  மிக நீளமான  ஒரு மைல்  தூரத்துக்கு  ஊர்வலம். இதை அற்புதமாக  அலங்கார விளக்குகளோடு   வாண வேடிக்கைகளோடு,  ஆறு  நாதஸ்வர வித்வான்கள் குழுக்கள்,  மூன்று வித  இங்கிலிஷ் BAND  குழுக்கள்,   வேதபாராயண கோஷ்டி,  தேவாரம் தீவுச்சாக்கம், பஜனை கோஷ்டிகள்,  நான்கு அலங்கரித்த யானைகள்  நாட்டிய குதிரைகள், மஹாராஜா மாதிரி  அலங்கரித்த யானைமீது மஹா பெரியவா. இதை எல்லாம்   ஏற்பாடு செய்தவர்கள்  பெத்தாச்சி செட்டியார், ஸ்ரீ சொக்கலிங்க தம்பிரான்.   

மஹா பெரியவாவை   அன்று தரிசித்த நமது முன்னோர்கள்  ரொம்பவே பாக்கியசாலிகள்.

இன்னும் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...