Monday, May 24, 2021

pesum deivam


பேசும் தெய்வம் --    நங்கநல்லூர்  J  K  SIVAN  


             
    7.  பரம  ஞானிக்குப்   பாடமா?

நமது மஹா பெரியவா இளம் வயதில் முதல் முதலாக ஜகத்குருவாக  திக்விஜயம் செய்தது  திருவானைக் காவலுக்கு என அறிந்தோம் அல்லவா?  அவர்  திருவானைக்காவல் செல்லும் முன்பே  மனதில்  இளையாத் தங்குடி  சென்று 65 வது  பீடாதிபதிகள்  அதிஷ்டானத்தில்  நமஸ்கரிக்க வேண்டும்  என்ற எண்ணம் இருந்தது.  

ஆகவே  புதுக்கோட்டையை அடைந்த பிறகு  அங்கிருந்து  இளையாத்தங்குடி  சென்றார்,  அதிஷ்டானத்தில் பெரியவாளை  நமஸ்கரித்துவிட்டு  திருவானைக்காவல் திரும்பினார்.  அங்கு தான் அவருடைய முதல் சாதுர்மாஸ்ய விரதம் துவங்கியது.    பிறகு தஞ்சாவூர் வழியாக கும்பகோணம் வந்தடைந்தார். 

தஞ்சாவூரில் சிவாஜி  ராஜா அரண்மனையில்  மஹா  பெரியவாளுக்கு ராஜமரியாதைகளோடு  வரவேற்பு கொடுக்கப் பட்டது. தஞ்சாவூர் சிவாஜிராஜா சாஹேப்,  அவரது ராணிகள்  ஜீஜாம்பா  பாய், ரமாம்பா பாய்,  இளவரசன்  பிரதாபசிம்மராஜா சாஹேப்  ஆகியோர் மஹா பெரியவாளை  வரவேற்றனர்.  மஹா பெரியவாளுக்கு  பாத பூஜை,  பிக்ஷா வந்தனம் செய்தார்கள். ஏராளமான  பொது மக்கள், பக்தர்கள் கலந்து கொண்ட  இந்த   வைபவம்  இரவு 7 மணிமுதல்   மறுநாள் விடிகாலை  2  மணி வரை தொடர்ந்தது. 

பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு முறை கும்பகோணத்தில் மஹாமஹம் என்ற விழா நடைபெறும்.  மாசி  மகம் அன்று கும்பகோணத்தில் ஊசி குத்த இடம் இருக்காது.  

மஹா பெரியவா  கும்பகோணத்துக்கு  1909ம் வருஷம் மார்ச்  மாதம்  திரும்பினார் .   அந்த வருஷம்  மஹா மஹம்   ஸ்னானத்திற்கு வருகிறவர்களுக்கு அரசாங்கமும்    காஞ்சி மடமும்  முடிந்தவரை  தங்க இடவசதியும், இலவச உணவும்  ஏற்பாடு செய்தது.   அந்த வருஷ முக்கிய விசேஷம்  ராஜ பரம்பரையும்  மஹா பெரியவாளும் யானை மீது  பவனி ஊர்வலம் வந்து  மஹாமஹ குளத்தில் ஸ்னானம் செய்த காட்சி. புகைப்படங்கள் கிடைக்க வில்லை. 

1909 -1910  வருஷங்களில்  காஞ்சிமட  ஆஸ்தான  பண்டிதர்கள்,  வித்வான்கள்  கும்பகோணம் வரவழைக்கப் பட்டார்கள்.   மஹா பெரியவா திடீரென்று 13 வயதில்  சன்யாசம்  தரித்து மடாதிபதியாகி  விட்டதால் அவரது கல்வி  தொடரவேண்டுமே .  ஜகத் குருவுக்கு  சர்வ சாஸ்திரங்களும்  வேதங்களும், புராணங்களும் கற்பிக்க  தகுந்த  பண்டிதர்கள் வித்வான்கள்  தேர்வு செய்யப்பட்டனர்.  

கும்பகோணத்தில்  காஞ்சி  காமகோடி மடத்தில்  தினமும் எண்ணற்றோர் காலை மாலை இரவு என்று விடாமல் மஹா பெரியவா தரிசனத்துக்கு வந்துகொண்டே இருந்ததால்  அமைதியான  சூழ்நிலை ஒன்று அவருக்கு  கல்வி கற்க  தேவைப்பட்டது.  

காவேரி நதி வடகரையில் மஹேந்திர மங்கலம்  எனும் அமைதியான இயற்கை வளம் மிகுந்த கிராமம் தேர்வு செய்யப்பட்டது.  இந்த கிராமம்  முசிறியிலிருந்து  மேற்கே   ஐந்து மைல்  தூரம்.  

மதுரையை  ஆண்ட  நாயக்கமன்னர்களில் கடைசி அரசர்  விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில்   சாலிவாகன சகாப்தம் 1708ல்  இந்த கிராமத்தில் சில நிலங்கள் மடத்துக்கு  தானமாக  அளிக்கப்பட்டன.  மஹேந்திரமங்கலம் திருச்சி -நாமக்கல்  மார்கத்தில்  தொட்டியம்  தாண்டி உள்ளது.  ரயிலில் வருபவர்கள்  லாலாபேட்டை நிலையத்தில் இறங்குவார்கள். காவேரியில் படகில் அக்கரைக்கு செல்வார்கள். இந்த அமைதியான கிராமம்  மஹா பெரியவாளின்  வித்யாப்யாஸத்துக்கு ஏற்றதாக  மட நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.  

மஹா பெரியவாளுக்கு  நிர்வாக அலுவலகம் பூஜை செய்ய  வசதிகள் அங்கே  ஏற்படுத்தப் பட்டது. 
சிங்க ஐயங்கார்  வீடு இதற்கு தகுந்ததாக அமைந்தது.      காவிரிக்கரையில் ஒரு சிறிய பர்ணசாலை உருவானது.

1911ல்  மஹா பெரியவா கும்பகோணத்தை விட்டு மகேந்திர மங்கலம் புறப்பட்டார்.  வழியே    லால்குடியில்  ஒரு சங்கராலயம் மற்றும் அதைச் சேர்ந்த குருகுலம்  ஸ்தாபித்தார்.  இந்த குருகுலத்திலிருந்து எத்தனையோ ஜாம்பவான்  பண்டிகள், சாஸ்திரிகள்,  நமது  ஹிந்து சனாதன தர்ம சேவைக்கு கிடைத்தது ஆச்சர்யம்.

இங்கே ஒரு முக்கியமான விஷயம் புரிந்து கொள்ளவேண்டும்.  சாதாரணமான குரு சிஷ்யன் உறவு இங்கே இல்லை. இங்கே சிஷ்யன்  குரு, சாதாரண குரு இல்லை ஜகதகுரு.  குரு  சாதாரண மனிதன்.  ஆகவே  இப்படிப் பட்ட குரு  இப்படிப்பட்ட சிஷ்யனுக்கு கல்வி கற்பிப்பது மற்றவர்களுக்கு போதிப்பது போல் இல்லை.  கண்டிப்பு, கட்டாயம், அதிகாரம் இங்கே கிடையாது.  பவ்யமாக, பணிவோடு நமஸ்கரித்து பிறகு மாணாக்கருக்கு பாடம் கற்பிக்கவேண்டும்.  சிஷ்யனை விட தனக்கு அதிகம் தெரிந்ததாக துளியும் காட்டிக் கொள்ளக்கூடாது. சந்தேகங்களை மரியாதையோடு நிவர்த்திக்க வேண்டும். சிஷ்யரை நமஸ்கரித்து விடைபெறவேண்டும்.

மஹா பெரியவா மேலே சொன்ன  நிலையை  தவறாக உபயோகிக்க வில்லை. மிக்க வினயமாக, அன்போடு  ஆசிரியர்களை மரியாதையோடு வரவேற்றார்,  அவர்கள் கற்பித்ததை ஆர்வமாக கேட்டார். கற்றுக் கொண்டார்.  என்னென்ன வெல்லாம் அவருக்கு கற்பிக்கப்பட்டது தெரியுமா?  சாஸ்திரங்கள், வியாகரணம், தர்க்க சாஸ்திரம், வேதாந்தம்,  மீமாம்சம்  முதலியவை.

எல்லா பண்டிதர்களும்,  வித்வான்களும், குருமார்கள்,  ஆச்சார்யர்களும்  மஹா பெரியவாளுக்கு கற்பிப்பது ரொம்ப  எளிதாக இருக்கிறது, சுலபமாக இருக்கிறது என்று ஏக  மனதாக அறிவித்தார்கள். மஹாபெரியவா பரம சூட்டிகை, ரொம்ப கெட்டிக்காரர் ஆயிற்றே.  1911-1913  கால கட்டத்தில் மகேந்திரமங்கலம் கிராமம் அநேக  பெரிய  புகழ் பெற்ற  பண்டிதர்களை, சாஸ்திரிகளை எல்லாம்  அடிக்கடி  சந்தித்தது.  

மஹா பெரியவாளுக்கு சாஸ்திரஞான கல்வி கற்க   ஏற்பாடு செய்யப்பட உபாத்யாயர்களில்  முக்கியமா னவர்கள்  சிலர் பெயர்கள் சொல்கிறேன். அவர்களை பற்றி எழுதியும் இருக்கிறேன்.  

பைங்கானாடு  பஞ்சாபகேச சாஸ்திரிகள், மஹாமஹோபாத்யாய சாஸ்த்ர ரத்னாகர  ஸ்ரீ D . வேங்கடசுப்பா சாஸ்திரிகள், சாஸ்த்ர ரத்னாகர  விஷ்ணுபுரம்  சுவாமி சாஸ்திரிகள், திருவிசநல்லூர்  V  வெங்கட்ராம சாஸ்திரிகள்,    மடத்திலேயே  தங்கியிருந்தும்   சிலர்  அவ்வப்போது  மஹா பெரியவாளுக்கு பாடங்கள் கற்பித்தார்கள்.  அவர்களில் சிலர்   மஹா  மஹோபாத்யாய  பைங்காநாடு கணபதி சாஸ்திரிகள்,  மஹா  மஹோபாத்யாய கருங்குளம் கிருஷ்ண  சாஸ்திரிகள், கோடி கன்னிகாதானம் உபய  வேதாந்த ராஜகோபால தாதாச்சார்யார்  ஆகியோர்கள் அவர்களில் சிலர்.

வேதாந்த சாஸ்திரங்களைத் தவிர  மஹா பெரியவா  ப்ரென்ச்   FRENCH  பாஷையையும் கற்றுக்  கொண்டார்.
அவ்வப்போது  கீர்த்தனாச்சார்ய  ஸ்ரீ   C R   ஸ்ரீனிவாச ஐயங்கார் வந்து   மடத்தில்  தங்கி   மஹா பெரியவாளை சந்திப்பார்.   

மராத்தி மொழி,   அதிலுள்ள  இலக்கியங்களைக் கூட மஹா பெரியவா  கற்றுக்கொண்டார். ஒரு மராத்திய அறிஞர் இதற்காக  மடத்துக்கு வரவழைக்கப்பட்டு  மூன்று வருஷங்கள் தங்கி இருந்தார்.

அவர் மூலம் மஹா பெரியவா  நிறைய மராத்தி பாஷையிலுள்ள பொக்கிஷங்களை  அறிந்து கொண்டார்.

தமிழில் வெகுவாக மஹா பெரியவாளுக்கு விருப்பமுண்டு.   ஒழிந்த நேரங்களில்  தமிழ் வித்வான்களை  பண்டிதர்களை அழைத்து  தமிழ் இலக்கண  இலக்கியங்களை  கற்றுக் கொண்டார்.  தானே  தேவாரம், திருவாசகம், பெரிய புராணம்,திருவிளையாடல் புராணம் திருக்குறள்  போன்ற நூல்களை படித்து ஆராய்ச்சி செய்வார்.

இசை நாடக துறைகளுக்கு  தனியாக  நேரம் ஒதுக்கவில்லை.  கலைஞர்களை அழைத்து அவர்களோடு உரையாடி,    இயல் இசை நாடக  துறையில் நுணுக்கமான, நுட்பமான  நிறைய விஷயங்களை  அறிந்து ண்டார்.சங்கீத  ஞானம்  இதனால்  பெருகியது.   கர்நாடக இசையில் பெரிதும் ஆர்வம் உண்டு.

காவேரி நதி மணல் திட்டுகளில் நடந்து  இயற்கையை ரசிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு . அங்கேயே அமர்ந்து தனிமையை ரசித்து, பல மணி நேரங்கள் தியானம் செய்வார். 

தொடரும் 








No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...