Saturday, May 8, 2021

OLD PROVERBS


 


தெரிந்த பழமொழி, தெரியாத  அர்த்தம்  - 3   --  நங்கநல்லூர் J K  SIVAN ---

இன்றும்  உங்களோடு  நமக்கு எல்லோருக்கும்   தெரிந்த  சில  பழ மொழிகளுக்கு  உண்மையான,  நமக்கு தெரியாத,  அர்த்தம் என்ன என்று  அறிவோமா ?

திருட்டிலேயே  ஆரம்பிப்போம்.  ''களவும் கற்று மற''    

நமக்கு இந்த பழமொழி என்ன சொல்கிறது.  திருடக்கூட  நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எப்படி  வீட்டுக்குள்   சுவர்,  வேலி  தாண்டிக் குதித்து,  பூட்டை  உடைத்து,   ஜன்னல் கண்ணாடி நொறுக்கி உள்ளே புகுந்து பெட்டியை வேறு சாவியால் திறந்து  காசு துணி நகைகள்,  கண்ணில் படும் எல்லாம் எப்படி திருடுவது என்று கற்றுக்கொண்டு அப்புறம்  அதை மறந்துவிடவேண்டும்.  அப்படித்தானே?.

ஐயோ, அதுவல்ல இந்த பழமொழி அர்த்தம்  என்கிறார்களே.   நமக்கு தெரியாமல் போய்விட்டதே.   திருடு, அப்புறம்  ''கத்து''  அப்படி  யென்றால் பொய் சொல்லுதல்  .  களவு  எனும் திருட்டு,  பொய்  சொல்வது  போன்ற   கெட்ட  பழக்கங்களை நமது வாழ்நாளில் எப்போதும்  கிட்டேயே  வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அது தான்   ''களவும் கத்தும்''  

அடுத்தது  நமது சகோதரிகளுக்கு  சந்தோஷம்  அளிக்கும்  பழமொழி.  பழமொழியை அப்படியே  நாம் அறிந்தபடி  பார்த்தால்  எல்லா பெண்களுக்குமே  கோபம் வரும். 
 ''சேலை கட்டிய  பெண்ணை நம்பாதே!''  
இது நாம் தப்பாக புரிந்து கொண்டது.   இதன்  உண்மையான அர்த்தம்.    ''சேலை அகட்டிய பெண்ணை நம்பாதே!''   அதாவது   சேல்  விழி என்று வார்த்தை தெரியுமல்லவா?.   கண்ணைப் பற்றி சொல்கிற வார்த்தை   ''சேல்'' .  கணவன்   பக்கத்தில் இருக்கும்போது   கண்ணை அகட்டி வேறொருவனை பார்க்கும் பெண்ணை நம்பக்  கூடாது  என்று அர்த்தமாம்.  அதாவது  பிற புருஷர்களை   முகம்   பார்த்து பேசக்கூடாது ஏற்பது அந்த கால வழக்கம். 


அடுத்தது  வேடிக்கையான  ஒரு பழமொழி.    ''அரசனை சனை நம்பி புருசனைக் கைவிட்டது போல''  மேலெழுந்த வாரியாக  நாம் புரிந்து கொள்ளும் அர்த்தம்  தப்பு.     உண்மை அர்த்தம்  இது தான்:   ''அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல;;  அதாவது   அரச மரத்தை சுற்றினால் போதும்  பிள்ளை பிறக்கும்  என்று திருமணமான பெண்கள்  அரச மரத்தை சுற்றி க்கொண்டே  கட்டிய கணவனை கவனிக்காமல்  விட வேண்டாம்''.   வெறும் அரச மரத்தை சுற்றுவது பயன் தராது  என்று  பொருள்.

இன்னும் ரெண்டு சொல்லி நிறுத்துகிறேன்.

'' மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?''  --  இதற்கும் நமது புரிதல் தப்பு.  உன்மையான அர்த்தம் வேடிக்கையாக இருக்கிறது.   ''  மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா? என்பதில் குதிர்  மண்  குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு.   

ஆற்றில் இறங்கி குளிக்கும்போது   கண் எதிரே  ஒரு மணல் திட்டு தெரிகிறது.   ஆஹா  அதில் ஏறிக்கொண்டு  ஆற்றில் வெள்ளம் வடிந்த பின்  கரையேறலாம் என்று எண்ணுவது தப்பு.    அந்த  மண் குதிர், ஆற்று வெள்ளத்தில்  கரைந்து வெள்ளத்தோடு போய்விடும். நம்மையும் தூக்கிக்கொண்டு செல்லும்.  ஆகவே    ஆற்றில்  தெரியும் மண் குதிரை  நம்பாதீர்கள்  என்று  ஒரு  எச்சரிக்கை.

கடைசியாக  மாமியாரோடு முடிக்கிறேன்.  
 '' வர வர மாமியார், கழுதை போல ஆனாளாம்''   
அம்மாமிகளே,  என் மீது  கோபம் வேண்டாம்.    இந்த பழமொழி தப்பாக  வழக்கத்தில் இருக்கிறது.  இதன் அர்த்தம்  தெரிந்தால்  சந்தோஷப்படுவீர்கள். 
''கழுதை அல்ல,  கயிதை '' என்பது ஊமத்தங்காயை குறிக்கும். ஆரம்பத்தில் ஊமத்தம் பூவாக இருக்கும் போது பார்க்க அழகாக இருக்கும். பின்னர் நாளாக நாளாக அது காயாக மாறி, சுற்றிலும் முள் போல இருக்கும். கொடிய விஷம் கொண்டது. ஆரம்பத்தில்  அன்பாக  பாசமாக  நடத்திய  மாமியார்  பின்னர்  ஊமத்தங்காயாக மாறிவிட்டாள்  என்று வேண்டுமானால் சொல்லி விட்டு போகட்டும்.  கழுதை நிச்சயம் அல்ல. 

மற்றதை அடுத்த பதிவில்  கலந்தாலோசிப்போம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...