Tuesday, May 11, 2021

ADHI SANKARAR

 


ஆதி சங்கரர்    ---   நங்கநல்லூர்  J K  SIVAN
           


சாதனா   /   உபதேச பஞ்சகம்  - 5


இந்த பதிவுடன் ஆதிசங்கரரின் உபதேச பஞ்சக 40 படிகளையும் கடந்து உயரே நிற்கிறோம். அவரது உபதேசங்கள் நம்மை அவ்வளவு உயர்த்திவிட்டன. இந்த அற்புத அனுபவத்துக்கு வாழ்நாள் பூரா ஆச்சார்யாருக்கு நன்றியுடன் நாம் செய்யும் கடன் அவர் உபதேசத்தை பின் பற்றி நம்மைப்போல் மற்றவர்களையும் உயர்த்தி விடுவது ஒன்றே.

நண்பர்களே,  ஆதி சங்கரரின்  சாதனா/உபதேச பஞ்சகம் எனும்  ஐந்து ஸ்லோகங்களை   ஐந்து படிக்கட்டுகளாக,  ஒவ்வொன்றிலும்  எட்டு  படிகளாக,  40 வழிமுறை எடுத்துச்சொல்ல  அந்த இறைவன் எனக்கு வழிகாட்டியதற்கு அவனுக்கும் உங்களுக்கும் நன்றி.  இதோடு  சாதனா/உபதேச பஞ்சகம் நிறைவு பெறுகிறது.  

एकान्ते सुखमास्यतां परतरे चेतः समाधीयतां
पूर्णात्मा सुसमीक्ष्यतां जगदिदं तद्बाधितं दृश्यताम्‌।
प्राक्कर्म प्रविलाप्यतां चितिबलान्नाप्युत्तरैः श्लिष्यतां
प्रारब्धं त्विह भुज्यतामथ परब्रह्मात्मना स्थीयताम्‌॥५॥

ஏகாந்தே சுகமாஸ்யதாம்  பரதரே சேத :  சமாதீயதாம்
பூர்ணாத்மா சுசமீக்ஷ்யதாம் ஜகதிதம் தத்வாதிதாம் திருஷ்யதாம்.
ப்ராகர்ம ப்ரவிலாப்யதாம் சிதி பலான்னாப்யுத்தரை  ஸில்ஸ்யதாம்
ப்ராரப்தம் த்விஹ  புஜ்யதாமதா  பரப்ரஹ்மாத்மணா  ஸ்தீயதாம்    

சங்கரர் சொன்ன இப்படிப்பட்ட வழியில் சென்ற வள்ளலார்  எவ்வளவு  அண்ணாந்து பார்க்கும் உயரத்துக்கு  போய்விட்டார்.  அவர் என்ன சொல்கிறார் ஞாபகம் இருக்கிறதா. ''தனித்திரு,  விழித்திரு. பசித்திரு'' தனிமையில் தான் மனம் ஒருமிக்கும். அந்த ஒருங்கிணைப்பு தான் மனத்தையும் மஹேஸ்வரனையும் ஒன்று சேர்ப்பது. ஆத்மாவின் எல்லையில்லா பரிணாமத்தை உணர வைக்கும். இதெல்லாம் அறிய வேண்டும் என்ற எண்ணம் தான் தீராத பசி. உலகத்தின் மாயா ஜால ஈர்ப்புகளில் இருந்து நம்மை விடுவிப்பது.   இந்த ஆத்ம உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக பூர்வ ஜென்ம கர்மாக்களின் வாசனையை அழிக்கும். எதிர்கால கர்மா சத் கர்மாவாக உருவெடுக்க உதவும்.

இனி கடைசி   எட்டு படிக்கட்டுகளில்  ஏறுவோம்:

33 தனியாக சௌகர்யமாக தொந்தரவுகள் எதுவுமில்லாமல் ஒரு இடத்தில் உட்கார் .

34. ஆத்மா என்று ஒன்று எங்கே உள்ளே இருக்கிறது என்று மனதை தேடலில் செலுத்து.

35. அந்த ஆத்மா எனும் சத்தியத்தை, உண்மையை உணர்ந்து அனுபவி.

36. இந்த உலகத்தில் அந்த பேருண்மையான ஆத்மாவை மட்டுமே காண். அது எதிலும் நிறைந்திருப்பதை காண்பாய்.

37. முன் வினைப்  பயன்களை அழிக்க முயன்றால் அப்போது தான் முடியும்.

38. புதுசு புதுசாக கர்மாக்கள் மூட்டையில் இடம்பிடிக்காமல் பார்த்துக் கொள் .

39. இந்த நிலையில் தான் விதியின் செயலை கட்டுப்பாட்டை குறைக்கமுடியும்.

40. எல்லாம் அந்த பேருண்மை, சத்தியமே என்று அறிந்தபின், தெரிந்த பின், அதே ஆனபின் விதி எங்கே ?? அதன் செயலுக்கு இடமெங்கே?

இந்த 40 அறிவுரைகளை, உபதேசத்தை, ஒரு சாதகன் தினமும் சிரத்தையோடு கற்று உணர்ந்து அதை விடாமல் பின் பற்றுவானானால் அவனே நம் குருவின் வாரிசு. நிதானம், வைராக்கியம் அனைத்தும் அவனை வந்தடையும். வாழ்க்கையின் துன்பம் அவனை நெருங்காது.  அவனது தவம் அதை சுட்டெரிக்கும்.  

இதை உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு எல்லாம் அனுப்புங்கள்.  படிப்பவர்களுக்கு பிடித்திருந்தால் ஒருவரை நல்வழிக்கு திருப்பிய  புண்யம் உங்களுக்கு சேரட்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...