Tuesday, November 17, 2020

VALLALAR POEM


 

வள்ளல் தந்த விருந்து J K SIVAN
சென்னையில் இப்போது அடிக்கடி மழை. தீபாவளி சத்தம் ஓய்ந்து விட்டது. குளிர்கிறது. மனத்திலும் கொரோனா பற்றிய பயம். இன்னும் குளிர் விட்டு போகவில்லை .
இதே சென்னை கோடைகாலத்தில் எப்படி கொளுத்தும் என்று நினைத்துப் பார்த்தாலே இப்போதும் மனமும் உடம்பும் சுடுகிறது. சென்னையில் கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சம் ஒருபக்கம் அடிக்கடி மின்சார வெட்டு என்று நம்மை அல்லல் பட வைத்த காலம் எல்லாம் இன்னும் மறக்க முடியவில்லை. அப்படி வாட்டும் வெயிலின் போது ஒரு சுகானுபவம் கிடைத்தால் ? எங்கும் வெளியே நெருப்பு மாதிரி தகிக்கும் சூரிய வெப்பம், தெருவில் காலை வைக்க முடியாது. அனல். த்ரோபதி அம்மன் கோவில் தீ மிதி பண்டிகை தான் ஒவ்வொருநாளும். சென்னை வாசிகளுக்கு பழக்கமான அனுபவம்.. இருந்தாலும்? சிலரை நினைப்போம்.
நெருப்புக்கு அருகே வேலை செய்யும் சிறுவர்களை, பெண்களை நினைத்துப் பாருங்கள். ரொட்டி கடைகள், பேக்கரிகள், தெருவில் ரோடில் தார் காய்ச்சுபவர்கள். அதை தரையில் சரி சமமாக பரத்திவிடுபவர்கள். காலில் வெளி நாட்டுக்காரர்களைப் போல் தோல் காலணிகள் கிடையாது. பழைய டயர்களையும் , கந்தல் துணியையும் சுற்றிக் கட்டிக்கொண்டு வேலை செய்பவர்கள். இந்த காலத்திலும் இன்னும் பழைய கட்டைவண்டிகள் இழுக்கும் பெண்கள், ஆண்கள். மேடு ஏறும்போது பார வண்டியை இழுப்பது. அடடா, பல ஜென்மங்கள் நரகத்தில் இருப்பதற்கு சமம். இப்படிப்பட்ட வெயிலின் போது தான் நிழலின் அருமை புரியும். அப்படி குளிர்ச்சி தரும் ஒரு அருமையான பாடலைத் தான் மிக அருமையாக வள்ளலார் பாடி இருக்கிறார். அது தான் இன்றைய வள்ளல் தந்த விருந்து. கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
வள்ளலார் சென்னை வெயிலில் தங்க சாலையில் நடந்தவர். சம்மர் வெயில் எப்படி சுட்டெரிக்கும் என்று தெரிந்தவர். நல்லவேளை அவர் காலத்தில் சாலையில் மரங்கள் இருந்தது. ஒதுங்க நிழல் கிடைக்க வழி இருந்தது. நிழல் மட்டும் போதுமா? வயிற்றில் பசி கொழுந்து விட்டு எரிகிறதே. மனம் இப்படி ஏங்கிய போது கண்ணில் ஒரு மரம் பட்டு, இலைகளோடு குளிர்ந்த நிழல் தந்து, கைக்கு எட்டும் உயரத்தில் நிழலோடு சேர்த்து உண்ண இனிப்பான பழங்களையும் தந்தால் எவ்வளவு சுகமாக இருக்கும்?
அந்த மரத்தின் நிழலில் வெறுமனே உட்கார்ந்து பழத்தை தின்று வயிறு நிறைந்தவுடன் அது குடிக்க தண்ணீர் கேட்கிறதே? அந்த மரத்தின் அருகேயே அழகாக ஒரு இனிமையான ஜிலு ஜிலு பளிங்கு ஓடை, அதில் ஊரும் ஜில்லென்ற கரும்புச்சாறு போன்ற தண்ணீர் வேறு கிடைத்தால்? ரெண்டு கை நிரம்ப வாரி குடித்தவுடன் அவ்வளவு திருப்தி. தாகம் பசி இரண்டும் தீர்ந்தபின் உடம்பு சும்மா இருக்குமா? படுக்க பாய், AC தேடுமே . சுற்றிலும் கண் பார்க்கிறது. இயற்கையை ரசிக்கிறது. உடம்பில் வீசும் மலர்களின் நறுமணம் கலந்த இளம் தென்றல் காற்று .இறைவன் எவ்வளவு பெரிய ரசிகன். எதை எப்படி ரசிக்க வேண்டும் என்று தெரிந்து அதை அளிப்பவன் அல்லவா? மலர் போல் கண்ணுக்கு அழகான வஸ்துவை ஆடவிட்டு அதோடு இசைக்கு பின்னணியாக காற்றையும் கலந்து அல்லவோ வீசி மனதை மகிழ்ச்சி அடைய செய்கிறான். மரத்தடியில் ஒரு மண் மேடை. வழவழவென்று பலநாள் பலர் உட்கார்ந்து தேய்த்தது . அதில் ஏறி ஜம்மென்று உட்கார்ந்தாகிவிட்டது. நறுமணம் மலரோடு எங்கோ மரத்தில் செடியில் இருந்து என்ன பயன்? அதை தூக்கிக்கொண்டு நமது மூக்குக்கு அருகே விடுவதற்கு காற்று தேவையாச்சே. வேகமாக புயலாய் வீசினால் என்ன பிரயோஜனம்? மென் காற்று. மெல்லிதாக உடலை வருடுவது அல்லவோ சுகம். மெத்து மெத்தென்று சௌகர்யமாக மேடையில் சாய்ந்து காலை தொங்கப்போட்டு ஆட்டிக்கொண்டு காற்றை அரைக்கண் மூடி அனுபவித்து தலையை ஆட்டி ரசிக்கவேண்டாமா. சந்தோஷமாக இருந்தால் என்ன நடக்கும். ஆடவும் பாடவும் தோன்றும். பாட ஆரம்பிக்கிறோம். பாத்ரூம் பாடல் குளிக்கும் சந்தோஷத்தில் கிடைக்கிறது தெரியுமே. நமக்கு தான் பாட வராதே, தெரியாதே? அதற்கு என்றே சிலரை படைத்திருக்
கிறான் இறைவன். பரம ரசிகன். அவனே ஆடுகிறான். ஆடலரசன் ஆடவல்லான் இல்லையா. காலைத்தூக்கி நின்றாடும் அழகை காலமெல்லாம் வர்ணிக்கலாமே .
காட்சியை இன்னொரு தடவை பார்ப்போம்.
கொளுத்தும் அக்னி. கோடை வெயில். அப்போது இளைப்பாற ஒரு அடர்ந்த இலைகள் கொண்ட மரம். நிழலோடு இனிய கனியும் கை மேல் விழுகிறது. அருகே அருமையான ஜிலு ஜிலு ஓடை. அதில் இருந்து குளிர் காற்று மென்மையாக உடலை வருடுகிறது. அந்த காற்று வெறுமே வரவில்லை. பூக்களின் நறுமணத்தை சுமந்து வந்ததே. அதை தரையில் உட்கார்ந்தா அனுபவிப்பது? காலை நீட்டியோ அல்லது ஆட்டிக்கொண்டோ ஒரு வழ வழ திண்ணை போல் மேடை வேண்டாமா? ஒரு மேடை இருந்து அதன் மீது அமர்ந்து ''காற்று வாங்குவது அல்லவோ படு சுகம்.. அப்படி காசு கொடுக்காமல் வாங்கிய காற்றின் சுகம் உடலை குளிர்விக்கும் போது உள்ளம் குளிர அந்த பரமனை வேண்டவேண்டாமா? அழகான இந்த பாடல்
ராமலிங்க வள்ளலார் கற்பனையில் எழுந்தது எதற்கு? வெறுமே உடல் சுகத்துக்காக அல்ல. இதெல்லாம் அளித்து என் தாய் தந்தையைபோல் என்னை காக்கும் இறைவா உனக்கு நன்றி சொல்ல என்று வேண்டுகிறார். எப்போதும் நிறைந்த மனதுடன் தான் வாழ்த்த வேண்டும், வணங்க வேண்டும். இவ்வளவு சுகம் கொடுத்த இறைவா உனக்கு தேங்க்ஸ் என்று வெள்ளைக்காரன் போல் டப்பென்று சொல்லி நிறுத்தவில்லை. என்னை மணந்த மணவாளா இதை பாட இறைவன் உண்டாக்கியது SG கிட்டப்பா என்ற சிறந்த குரல் வளம் படைத்த வித்தகனை. ஒரு மலரின் அழகு போதாது, ஒரு மலரின் மணம் சுவை போதாது. அவியல் வேண்டும் பல காய்கறிகளின் சுவை அதில் நிரம்ப இருக்கும். அது தான் இசையில் ராகமாலிகை . . ராகங்களை மாலையாகத் தொடுத்து அளிக்கும் அற்புதம். அதையே செலக்ட் பண்ணி பாடுகிறார் கிட்டப்பா.
ஆஹா அந்தக்கால மூன்று நிமிஷ மெழுகு இசைத்தட்டுகள் சாவி கொடுத்து ஊசியில் அசைந்து வெல்வெட் தட்டில் ஆடும்போது கிடைக்கும் பாட்டின் சுகம் ஒரு தனி ரகம் . மேலே சொன்ன சுகங்களுக்கு கிரீடமாக
சேர்ந்து விடுகிறது. கிட்டப்பா வின் இந்த அற்புத பாடல் யு ட்யூபில் கிடைக்கவில்லை. ஆடியோ வை பதிவிட வழியில்லை. இருந்தாலும் எனக்கு பதிவிட தெரியாது.
நேற்று கிட்டப்பாவின் இந்த பாடலை அவரது டூப்ளிகேட் போல் ஸ்ரீ டீ. ஆர். மஹாலிங்கம் பாடி கேட்டேன். யு ட்யூபில் நிறைய புதையல் இருக்கிறது. டி ஆர் எம். பாதி கிட்டப்பா. இதற்கு காரணம் இருவருமே செங்கோட்டை காரர்கள். https://youtu.be/M9zV5m66eCM -- கிளிக் செய்து டீ.ஆர். மஹாலிங்கத்தோடு இந்த கோடையில் குளிர் நிழலில் இளைப்பாருங்கள்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...