Wednesday, November 18, 2020

NELLAIYAPPAR TEMPLE

                                        தாமிர சபேசன்   J K  SIVAN  



நான்  கண்டு பிரமித்து  இங்கேயே  இருந்து விடலாமா  என்று நினைக்க வைத்த  சில  அற்புத  கோவில்களில்  ஒன்று  திருநெல்வேலி  நெல்லையப்பர் புராதன சிவாலயம்.  சிவனுக்கு  இங்கே  வேணுவன நாதர் என்றும் பெயர். அம்பாள்  காந்திமதி. நிறையபேர்  gandhiமதி  சொல்லும்போது நெளிவேன்.   தாமிரபரணி வடகரை கோவில்களில் ஒன்று.  7ம்  நூற்றாண்டு   தேவாரங்களில் பாடல்  பெற்ற  ஸ்தலம்.  பதினாலரை  ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது.   பாண்டிய ராஜாக்கள்  சோழர்கள் பல்லவர்கள், சேரன், மதுரை நாயக்கர்கள் இந்த  ஆலயத்தை அவ்வப்போது சீரமைத்து இருக்கிறார்கள்.    நாலு பக்கம் சுவர்கள்  கட்டியதால் ஆக்கிரமிப்பு இல்லை.  இப்போது அரசு அறநெறித்துறை  கண் பார்வையில்!!  நெல்லையப்பர்  காந்திமதி ஆலய   கோபுரங்கள், கர்பகிரஹம் எல்லாம் நின்றசீர் நெடுமாற  பாண்டியன் 7ம் நூற்றாண்டிலேயே  கட்டிவிட்டான்.
                                 
அம்பாள் சிவன்  இரு கோவில்களையும்  சங்கிலிமண்டபம் என்று ஒரு மண்டபம் கட்டி இணைத்தவர்   1647ல்  வடமலையப்ப பிள்ளையன் என்ற சிவபக்தர்.

வடமலையப்பன்    திருவிடை மருதூருக்கு அருகில் உள்ள சோழபுர த்தில் பிறந்தவர். சிறிய தகப்பனாரின் பராமரிப்பில் வளர்ந்து வந்து  கருத்து வேற்றுமையினால் கோபித்து, வீட்டை விட்டுச் சென்றவர்.  கல்வி, கேள்விகளில்  தேர்ந்த  வடமலையப்பனை   ஸ்ரீரெங்கத்தில்   கர்த்தாக்களின் ஆச்சாரியரான, தாத்தாச்சாரியார்  “பிள்ளை” போல் வளர்த்து,  நாயக்க மன்னரான, சொக்கநாத நாயக்கரிடம் நான் இவனை  என் “பிள்ளை” போல் வளர்த்து தங்களிடம் அனுப்புகிறேன் என்று கூறியமையால், இவர் வடமலையப்ப பிள்ளை என்றும், தாத்தாச்சாரி என்ற ஐயனிடம் இருந்து வந்த பிள்ளை என்பதைக் குறிக்க ”பிள்ளையன்” என்றும்  பேர் வந்ததாம்.   “பிள்ளை” மார்கள்  சமூகப்பெயர்களில்   பிள்ளையன்  என்ற  பெயரும் உண்டு\/  .  பு லவராற்றுப்படையில் சான்றுகள் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன்.   நாயக்க மன்னன்  வடமலையப்ப பிள்ளையை   திரு நெல்வேலிச் சீமை தளபதியாக  நியமித்தான்.  அந்த சிவபக்தர்  மண்டபம் கட்டியதை  மேலே  சொல்லி இருக்கிறேன்.

1648ல்  டச்சுக்காரர்கள்  திருச்செந்தூரில் புகுந்து    சுப்ரமண்யனையும், நடராஜனையும்  தங்கச் சிலை  என்று தூக்கிச் சென்றுவிட்டனர். கடல் கொந்தளித்து அவர்கள் கப்பல் கவிழும் நிலையில்  அந்த விகிரஹங்களை கடலில் போட்ட பிறகு உயிர் தப்பினர்.   

சிலைகளை  திருச்செந்தூர் கோயிலில் காணோம் என்ற  விஷயம்  திருநெல்வேலியில்  வடமலையப்ப பிள்ளைக்கு சென்றதும் அவர்  உடனே  பஞ்சலோக சிலைகளை வார்ப்படம்  செய்யச்சொல்லிவிட்டார்.   அன்றே ஒரு கனவு.    எங்கே  கடலில் சிலைகள் இருக்கிறது என்று இடம் அடையாளம் காட்டப்பட்டது . எங்கே ஒரு கழுகு வட்டமிடுகிறதோ அங்கே  கடலில்  ஒரு எலுமிச்சம்பழம் மிதக்கும். அங்கே  அடியில் விக்ரஹங்கள் 
இருப்பதை  சொல்லியது. 

பிள்ளை  உடனே  படகில்   நீர் மூழ்குபவர்களை அனுப்பி  அந்த இடம் அப்படியே  கனவில் வந்தது போல் கடலில் தோன்ற  விக்ரஹங்கள் மீட்கப்பட்டன.  1653ல்  புனருத்தாரணம்.  வடமலைப் பிள்ளை  ஆர்டர் கொடுத்து செய்யப்பட்ட  சிலைகள் முருகன் குறிச்சி  என்கிற ஊரில், பாளையம் கோட்டையில்    திருப்பிரந்தீஸ்வரர் கோவில்,   (வெங்கு பச்சா கோவில் என்றும் சொல்வதுண்டாம் ). அங்கே  ஸ்தாபிதமாகியது  .  யாராவது  பாளையம் கோட்டைக்கார  பக்தர்கள் இந்த கோவில் பற்றி தெரிந்தால் படங்களும் விவரங்களும் எனக்கு அனுப்பலாம்.  ஜே.கே.சிவன்  9840279080   வாட்சாப் நம்பர். வடமலையப்பர்  அளித்த முருகன் நடராஜர்  அங்கே ஸ்தாபிதமாகி இருக்கிறதாம்.  

நெல்லையப்பர்  கோவிலில்   கல்வெட்டுகள் வீரபாண்டியன்,  மாரவர்ம சுந்தர பாண்டியன்,  ராஜேந்திர சோழன் காலத்தவை  நிறைய இருக்கிறது.   நெல்லையப்பரை  உடையார்,  உடையநாயனார் என்று சொல்கிறது.  அம்பாள் நாச்சியார் எனப்படுகிறாள்.

சிவபெருமானின்  சிறப்பை போற்றும் ஐந்து   நடராஜர்  சபைகளில்   நெல்லையப்பர்  ஆலயம்  தாமிர சபை  விசேஷமானது. தாமிர சபைக்கு பின்னால்  சந்தன சபாபதி சந்நிதி உள்ளது. தாமிரசபையிலிருந்து பார்க்கும்படியாக அமைந்துள்ளது.   இங்கே  பெரிய சபாபதியும் உள்ளார்.  

நெல்லையப்பர்  ஆலயம்  கொள்ளை கொள்ளையாக  அற்புத சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த ஆலயம்.  சப்த ஸ்வரங்கள்   த்வனிக்கும்  கற்தூண்கள் இங்கே அற்புதமாக இருக்கிறது.  எப்படித்தான் சிற்பி இதை உருவாக்கினானோ? இந்த கோவிலை பற்றி நிறையவே சொல்லவும் எழுதவும் விஷயம் இருந்தாலும்  ஒருதடவை நேரில் சென்று பார்த்து அனுபவிப்பது போல் அது ஆகாது.  பேப்பரிலும் , கம்ப்யூட்டரில் படம் போட்டும்  பக்கம் பக்கமாக  ஹல்வா  பற்றி   எழுதியோ   ஹல்வா என்று சொல்லியோ இனிப்பை அனுபவிக்க முடியுமா, நெல்லையப்பர் கோயில் சென்று வாசலில்  இருக்கும்   இருட்டுக்கடை அல்வாவை  வாங்கி விழுங்கினால்  தானே ருசி புரியும்.  நான்  இந்த   உலகப் பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வாவை  நேரில் சென்று வாங்கி விழுங்கியது பலமுறை.








No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...