Sunday, November 15, 2020

 


                   ராமாயண  மஹிமை  J K

  SIVAN 

நடந்தததை  சொல்வது தான்  ராமாயணமும்  மஹா பாரதமும். கற்பனைக் கதையல்ல. ராமாயண பாரத சம்பவங்கள் நடந்த இடங்கள், அடையாளங்கள், இந்தியாவிலும் மற்ற தேசங்களிலும் கூட  இன்னும் இருக்கிறது. ஒன்றல்ல  ரெண்டல்ல,  ஏழாயிரம் ஆண்டுகளை கடந்தவை இன்றும் நிரூபணமாக உள்ளது  என்றால் இதை வெறும் மூட நம்பிக்கை, கற்பனை என்றா சொல்வது?  சொல்பவன் தான் மூடன்.

ராமன்  இனியவன். ரம்யமானவன். '' ரம்யதே இதி ராமா " . இங்கே  என்ன  ராமராஜ்யமா நடக்கிறது?  என்கிறோமே.  எல்லாமே  நன்றாக சிறப்பாக நடந்தால் அது தான் ராமராஜ்யம்.  அதை நோக்கி தான் நாம் மெதுவாக  நத்தை, ஆமை நடை  போட்டு  வாழ்க்கையை செப்பனிட்டுக் கொள்ளவேண்டும்.   நடை போட்டுக்கொண்டிருக்கிறோம், வழியில் உள்ள  இடைஞ்சல்கள், கல், முள் அகற்றப்பட்டால் பயணம் சீக்கிரம் முடியும். பாதை ராஜபாட்டை தான் அப்புறம்.  ஸ்ரீ ராமா என்று மூன்று தரம் சொன்னாலே போதும். ஸ்ரீ மஹாவிஷ்ணுவின்  ஆயிர நாமங்களை சொன்ன பலன் என்று  விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பரமேஸ்வரன் பார்வதிக்கு சொல்வதாக வரும். 

அயணம்  என்றால்  பயணம்.  சூரியன் தெற்கு நோக்கி சென்றால் தட்சிணாயனம், வடக்கு நோக்கி நகர்ந்தால்  உத்தராயணம்.  ராமன் நடந்த வழி  ராமாயணம்.   ராமன் பயணம் தர்மத்தின் வழியில். எவ்வளவோ  இடையூறுகள் அவனுக்கே இருந்தது.  தர்மத்தை ஸ்தாபிக்க  அவன் எடுத்த பயணத்தில்  '' பரித்ராணாய சாதூனாம், விநாசாய  சா துஷ்க்ரிதாம்''   .  சாதுக்களை பாதுகாத்து துஷ்டர்கள், தீங்கு செய்பவர்களை ஒடுக்குவது   எனும் தர்ம ஸ்தாபன வேலையைத் தான் ராமன் செய்தான்.  

ராமாயணத்தில்  ஒன்பது வித   பக்தி   வழிபாடுகளை  காண முடிகிறது. அது என்ன என்று விளக்கி  அதற்கு தக்க உதாரணமாக யார் யார் இருந்தார்கள்  என்றும் அறியலாம். 

 श्रवणं  कीर्थनं  स्मरणं  पादसेवनम्  अर्चनं  वन्दंनं  दास्यं  साक्यं  आत्मनिवेदनम्  !
1. ஸ்ரவணம் : கேட்பது.  2.  கீர்த்தனம்:  நாம சங்கீர்த்தனம்,  3.  ஸ்மரணம் :  மனதில் துதிப்பது,  4.  பாதசேவனம்:  இறைவனின் பாதத்தை வணங்குவது,  5.  அர்ச்சனம்,:  புஷ்பங்களால், நீரால், மந்திரங்களால், உபசரித்து அர்ச்சிப்பது,  6. வந்தனம்:  இரு கரங்களாலும் கூப்பி வணங்குவது,  7.  தாஸ்யம்:  பகவானுக்கு சேவை செய்வது,  8.  சாக்யம் :  தோழமையோடு  உறவாடுவது,  9.  ஆத்ம நிவேதனம்:  தன்னையே அர்பணிப்பது, உடலும் உள்ளமும் சேர்த்து, 


1.  ஸ்ரவணம்   :  சிறந்த உதாரணம்  ஹனுமான் தான்.  எங்கெல்லாம் ரகுநாதனின் மஹிமையை பாடுகிறார்களோ, அங்கெல்லாம், ஆனந்தமாக கண்களில் நீர் வழிய இரு கைகளை கூப்பி வணங்கி தன்னை இழந்தவனாக  ஒன்றிடுபவன்.   ராமாயண பிரசங்கங்கள், பாராயணங்கள் நடக்கும் இடத்தில்  ஹனுமான் வந்து அமர  ஒரு பலகை, மணை , ஆசனம் போட்டு வைப்பது இன்றும் வழக்கம்.

''यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकांजलिम् वाष्पवारिपरिपूर्णालोचनं मारुतिं नमत राक्षसान्तकम् ॥ ( Yatra Yatra Raghunatha kirtanam, tatra tatra kritha mastha kanchanam,  Bhashpavari paripurna lochanam Maruthim Namatha  rakshasa  anthakam)''

2. கீர்த்தனம்:  வாலமீகி ஒருவரே போதும்.  கடகடவென்று  மனதிலிருந்து கடல்மடை போல்  24000  பாடல்கள் கீர்த்தனையாக வந்ததற்கு.    

3. ஸ்மரணம் :  சீதா ஒருவளே  கண்கண்ட உதாரணம்.   சதா சர்வ காலமும் ராமனையே நினைந்து  தியானித்து உருகி  வாடியவள். 

4. பாத சேவனம்:   பரதன்.  பாதுகையை ராமனாக பாவித்து வணங்கி அதன் சேவகனாக பதினான்கு ஆண்டுகள் ராஜ்யத்தை  துறவியாக ஆண்டவன். அதனால் தான் பரதனை பரதாழ்வார் என்கிறோம். 

5.  அர்ச்சனம்:   பக்தியில்  திளைத்து  ராமனை உபசரித்து மோக்ஷம் எய்தியவள்  சபரி  எனும் முதியவள்.  தூய பக்திக்கு முன்  இனம், குலம் , பிரிவு,  ஆண்  பெண் பால் வித்யாஸம்  எதுவுமில்லை. அவள் குடிசையில் ராமன் கால் வைத்து  நுழைந்து அமர்ந்ததும் அவள் கண்கள் ஆனந்தத்தில் குளமாகி , அவள் பெற்ற இன்பத்தை வார்த்தையில் வடிக்க முடியாது.  தான் முதலில் கடித்து சுவை பார்த்து நல்ல பழங்களாக ராமனுக்கு கொடுத்தாள்  என்று சில இடங்களில் சொல்வதில்லை. நல்லதாக தேர்ந்தெடுத்து  தந்ததாக  படித்தேன்.     குரு மதங்கர்  தேக வியோகம் அடையும்போது    ''நானும் உங்களோடு வருகிறேன்'' என்றவளை   ''சபரி, இங்கேயே இந்த ஆஸ்ரமத்தில் இரு. ராமன் ஒருநாள் வருவான், அவனை வரவேற்று உபசரித்துவிட்டு வா'' என்று முனிவர் சொன்னார். 

6. வந்தனம்:  விபீஷணன் போதும்  இந்த  வழிபாட்டுக்கு உதாரணமாக.  இரு  கைகளை  சிரம் மேல்  உயர்த்தி  விழுந்து வணங்கி  சரணாகதி அடைந்த  பக்தன்.   அதனால் தான் இன்றும் அவன்  ஒரு சிரஞ்சீவியாக இருக்கிறான்.

7. தாஸ்யம்:  ஆஹா !  லக்ஷ்மணனை  நினைக்காமல் இருக்க முடியுமா?.  ராமனுக்கு சேவை செய்ததில் அவனுக்கு நிகர் அவன் தான்.  ஒரு  விஷயம்  நான் அறிந்து மகிழ்ந்தேன்.   அதைச்  சொல்கிறேன்.  ராமர் லட்சுமணனின் சேவைக்கு மெச்சி கைம்மாறாக நான் எப்போது    லட்சுமணனுக்கு   இதற்கீடாக   சேவை செய்வேன் என்று கருதி  ஆதிசேஷன் அம்சமான  லக்ஷ்மணன் பூமியில்  ராமானுஜராக பிறந்தபோது (ராமனுக்கு இளையவன், அனுஜன்,_ இளையாழ்வார் என்று அவருக்கு பெயர் அதனால் தான்)  ராமர்  கூரத்தாழ்வானாக அவதரித்து  சிறந்த சிஷ்யனாக தனது கண்ணையே  ராமானுஜருக்காக பறிகொடுத்தார் என்று சொல்வது உண்டு.   வைணவர்கள்  தங்களை தாசன் என்று தான் அழைத்துக் கொள்வார்கள்.

8. ஸக்யம் :  சகா . நண்பனாக,  உயிர்கொடுக்கும் தோழனாக இருந்தவன்  சுக்ரீவன். அவன் மந்திரி ஹனுமான் இல்லையென்றால்  ராமாயணம் இல்லை.  அவனது வானர சைன்யம் இரவு பகலாக சீதையை தேடி கண்டுபிடித்து,  கடலுக்கு பாலம் அமைத்து, யுத்தத்தில் பங்கு கொண்டு  சீதையை மீட்டு  பட்டாபிஷேகத்தில் கலந்து கொள்வது வரை உழைத்தவர்கள். 

9. ஆத்ம நிவேதனம்:    ஜடாயு எனும் அற்புத  குடும்ப நண்பன்.  கழுகரசன்.  தசரதனின் சிநேகிதன். ராமனுக்காக தனது  உயிரை அர்ப்பணித்தவன்.  ஒரு விஷயம்  முக்கியம்  சிவனிடம் வரம் வாங்கிய வாளை  ராமன்மேல் பிரயோகித்து அவனைக் கொல்ல  ராவணன் வைத்திருந்தான். அதை வீசினால்  எவரும் உயிர் தப்ப முடியாது.  ராவணனை அதிகம் கலங்க வைத்து அவன் பொறுமை எல்லைமீறி  தன்னை விடுவித்துக் கொள்ள   ராவணன்  ஜடாயுவின் மேல் வாளை  பிரயோகித்து அதை  ஒரு தடவைக்கு மேல்  பிரயோகித்த தால்   சக்தி இழக்க செய்தவன் ஜடாயு. 

இது போல்  எண்ணற்ற  கருத்துக்களை,  கருவூலங்களை  ராமாயணம் மஹாபாரதத்தில் காணலாம்.  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...