Sunday, November 22, 2020

THE OMNIPOTENT OMNISCIENT AND OMNIPRESENT

 

     நான் தான்  வந்தேனே... J K  SIVAN 


நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு வாக்கியம்.  ''பகவான்  எங்கேயும் இருக்கிறார்"  இப்படி வாய் பேசுகிறதே. எங்கேயாவது அவர் இருக்கிறதை மனதார  உணர்கிறோமா?  அதற்கு மனது பக்குவம் அடையவேண்டும்.  நெருப்பு என்று சொல்லும்போதே  வாய்  சுடவேண்டும்.  ஐ லவ் யூ  என்று சொல்லும்போது மனது அன்பால் பூரிக்க வேண்டும்.  தேங்க் யூ  சொல்லும்போது உதடு மட்டும் சொல்லுகிறது. மனதுக்கும் அதற்கும் காத தூரம்.

ஒவ்வொரு இதயமும் பகவான் குடியிருக்கும் இடம்.  அதை உணர்ந்தால் நம்மில் ஒரு புது மாற்றம் இருக்கும். எங்கும் இன்பமாக அவனே தோன்றுவதை அறிய முடியும். மனது பார்த்தால் தான்   கண்ணுக்கு  தெரியும்.  அப்போது  தான் ''பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது''   புரியும்.  ஒரு கிருஷ்ணன் கதையோடு நிறுத்திக் கொள்கிறேன்.

போனவாரம் தீபாவளி. விசேஷமான நாள் ஆயிற்றே.   கொரோனாவினால்  நடமாட்டம் குறைந்தாலும்  எங்கும் மகிழ்ச்சியும் குதூகலமும் காண்கிறது. புத்தாடை, பக்ஷணங்கள்


' இந்த எண்பத்தியோரு  வயதில் எத்தனை தீபாவளி பார்த்தாச்சு,  எத்தனை வித ஸ்வீட் விழுங்கியாச்சு
  கிருஷ்ணா உன்னை மட்டும் தான்  இன்னும்  பார்க்கலே . படத்திலே பார்க்கிற  உன்னை நேரில் பார்க்கணுமே? எப்படா வருவே? ''

கிருஷ்ணனை ரொம்ப பிடிக்கும். கிருஷ்ணா கிருஷ்ணா என்று தான் சாம்பமூர்த்தியின் வாய் எந்த பையனைப் பார்த்தாலும் கூப்பிடும். அவர்   பேரே  கிருஷ்ணா மாமா. அவர் வீட்டில் ஒவ்வொரு கிருஷ்ணன் பொம்மைக்கும், படத்திற்கும், ஏதாவது ஒரு பெயர்  அடையாளம்  வைத்து தான் கூப்பிடுவார். கும்பிடுவார். உதாரணம்  கருப்பண்ணன், குண்டு கோபு , கிட்டு, சுட்டி, கள்ளப்பயல், ப்ளூட்டுக்காரன், வெண்ணை திருடன், புளுகாண்டி   இன்னும்  எத்தனையோ செல்லப்பெயர்கள்.

கிருஷ்ணன் பேசுவானோ, பதில் சொல்வானோ? ஹுஹும் அதெல்லாம் சும்மா என்று தானே நாம் சொல்வோம்? மாமாவைக் கேளுங்கள்: 

''ஆஹா அந்தப்பயல் கேட்டதெல்லாம் கொடுப்பவன் மட்டுமில்லே. கேட்டதுக்கு பதில் கொடுப்பவனும் கூட ''.

தீபாவளி அன்று கிருஷ்ணனை மாமா என்ன கேட்டார்தெரியுமா?   ''கிருஷ்ணா உன்னை நான் இன்னிக்கு  பார்க்கணும்.  உன்னை நேரில் பார்க்கணுமே? எப்படா வருவே? ''

"ஆஹா உன் விருப்பத்தை பூர்த்தி செய்கிறேனே!" காத்திரு. இதோ வருகிறேன்''

தீபாவளி பட்டாசு சத்தம்  இருந்தது.  டிவி  அலறியது.  குறுக்கும் நெடுக்கும் அலைந்தார்  வாசலைப் போய் பார்த்துக்கொண்டே  கண் பூத்து போயிற்று.  வீட்டில் குடும்பத்தினர் நடமாட்டம் பேச்சு வேறு..

 சாம்பமூர்த்தி மாமா கிருஷ்ணனை தனியே காண விரும்பினார். எனவே வீட்டின் பின்புறம் கொல்லைப் பக்கம் வந்திருக்கிறானோ  என்று  போய்  பார்த்தார்.  நல்லவேளை   ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் நங்கநல்லூரில்  எப்போவோ வாங்கி கட்டிய  பெரிய தனிவீடு. கொல்லையில் பச்சென்று செடி கொடி மரங்கள். துணி தோய்க்கும் கல் (பல வருஷங்களாகிறது. இப்போது யாரு துணி கல்லில் அடித்து தோய்க்கிறார்கள். 

பழைய கிணற்றில் இன்னும் தண்ணீர் வற்றவில்லை. அங்கே அமைதியாக காத்திருந்தார் . எங்கும் நிசப்தம்.

''கிருஷ்ணா.. முகுந்தா......'' என்று ஹரிதாசில் MKT பாகவதரின் பாட்டு  பிடிக்கும். ஆனால் பாட வராது. இருந்தாலும் பாடுவார்.  அவன் வரும் வரையில்  பொழுது போக்கவேண்டுமே.  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். வரேன் என்று சொன்னால் வராமல் இருப்பானா, வரட்டும்  அதுவரை  இங்கேயே  காத்திருப்போம். 

ஒரு   சின்ன கருங் குயில் எங்கிருந்தோ  விர்ரென்று பறந்து வந்து அவர் எதிரே மாமரத்தில் ஒரு கிளையில் உட்கார்ந்து  அழகாக சின்னதாக கருப்பாக கொட்ட கொட்ட விழித்துவிட்டு  மதுர குரலில் சில நிமிஷங்கள் ஏதோ இனிமையாக ஒரு ட்யூன் (tune) கூவியது. என்ன தோன்றியதோ சட்டென்று பறந்தும் போயிற்று. மாமாவுக்கு சங்கீதம் தெரியாது என்றாலும் ரசித்தார். கிருஷ்ணன் ஏன் இன்னும் வரவில்லை.  காத்திருந்தார்.

சற்று  நேரத்தில்  பிசு பிசு மழை மீண்டும்  தூறிற்று.   வானில் எங்கோ ஒரு பேரிடி முழக்கம். வீட்டில் உள்ளே இருந்தவர்களிடம்   டிவியில்  ஒரு  நிபுணர்    ''மழை  இன்று  பெய்தாலும் பெய்யலாம். பெய்தால் கனத்த மழையாகவும் இருக்கலாம்'' என்று ஆரூடம் சொல்லியது சிரிப்பு வந்தது. மாமாவுக்கு   மழை வரும் முன்பு வீட்டிற்குள் போய்விடலாமா என்று ஒரு கிலேசம்.  அந்த கிருஷ்ணன் பயல் ஏன் இன்னும்  கண்ணில் படவில்லை?  இன்னும்  கொஞ்ச நேரம் கிருஷ்ணன் வர காத்திருப்போமே? வரேன் என்று சொன்னால்  வருவான். ஏன் வரவில்லை?''

 எங்கோ படித்தேனே கிருஷ்ணா, உன்னைப் பார்க்க, கேட்க ஏன் தொட கூட முடியுமாமே?'' எங்கோ எவரெல்லாம் சொன்ன உபன்யாசங்கள், படித்தவைகள் எல்லாம் மனதில் தோன்றியது.

''ஐயா,  உங்களை எங்கே எல்லாம் தேடறது. இங்கே வந்து உக்கார்ந்திருக்கீங்களா?''

''யாரு?'' . மாமா திரும்பிப்பார்த்தார். வீட்டில் வேலை செய்யும் பெரியாயி ஒரு சிறு குழந்தையை பொட்டலமாக அணைத்துக்கொண்டு அருகில் வந்தாள்.
''என்னம்மா வேண்டும்?''
''ஒண்ணும்  வேணாங்க  ஐயா.  அம்மா கிட்டே புதுசா பொறந்த என் பேரனை த்தூக்கி யாந்து காட்டி ஆசீர்வாதம் கேட்டேன். அய்யா தோட்டத்திலே இருக்கார் அவர் கிட்டேயும் காட்டு ன்னு சொன்னாங்க.''

''ஆஹா! பேஷ் பேஷ். ஜாக்ரதையா சீக்ரம் உள்ளே எடுத்துண்டு போ. மழை தூத்தல் போடறது. '' அவர் மனது கவனம் எல்லாம் கிருஷ்ணனின் வரவில் இருந்ததால் வாய் மெஷினாக பேசியது துணிப்  பொட்டலத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை மேல் பார்வையோ  மனமோ   போகவில்லை.

எங்கிருந்தோ ஒருபாதி அணில் கடித்த கொய்யா பழம்  சாம்பமூர்த்தி மீது தொப்பென்று மரத்தின் மீதிலிருந்து மாமா மீது விழுந்தது. மேலே பார்த்தார். எப்படி காலம் ஓடறது. இப்போது தான் செடி வைச்சமாதிரி இருக்கு இந்த  ஆறு  வருஷத்தில் நம் வீட்டு கொய்யா மரம் இவ்வளவு உயரமா? அவர் வாய் தான் பெரியாயிடம் பேசியதே தவிர   மனம் பூரா கிருஷ்ணனை தேடிகொண்டு தான் இருந்தது. கிருஷ்ணன் மீது கொஞ்சம் கோபமும் வந்தது.

வெகு நேரம் ஆகியும் ஏன் கிருஷ்ணன் வரவில்லை?  பக்கத்தில்  ரோஜா செடிகளிலிருந்து  விர்ரென்று ஒரு பட்டாம்பூச்சி முகத்திற்கு நேரே பறந்து வந்தது வந்ததும் இல்லாமல்  தனது  சின்ன அழகான  இறக்கையை அடித்துக்கொண்டு அவர் கைமேல் வந்து உட்கார்ந்தது. எரிச்சல் வந்தது மாமாவுக்கு. ''சனி.'' என்று அதை திட்டி வெடுக்கென்று கையை உதறி விரட்டினார்.

மழை தூற்றல் பெரிதாக வலுத்தது.  ஆகவே  வீட்டுக்குள் சென்றார். பெரும் ஏமாற்றம்.''வரேன்'' என்று சொன்ன கிருஷ்ணன் வராவிட்டால் சந்தோஷமாகவா இருக்கும்?
அவர் ஸ்பெஷலாக தினமும் எதிரே உட்கார்ந்து பாடும் பெரிய ராதா கிருஷ்ணன் படம். நிறைய அலங்காரம் செய்து, மலர் மாலைகள் சூட்டி தூப தீபங்களோடு காட்சியளித்தது. எதிரே தட்டுகளில்  தீபாவளி  பக்ஷணங்கள் பழங்கள், நைவேத்யம்.    புல்லாங்குழல் ஊதிக்கொண்டு புன்னகைத்த கிருஷ்ணனைப்  பார்த்ததும்   சாம்பமூர்த்திக்கு  கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

'' கிருஷ்ணா நீ இப்படி பண்ணலாமா? 'வரேன் என்று சொல்லி ஏன் வரவில்லை. எத்தனை நேரம் உனக்கா கொல்லையில் காத்திருந்தேன்? இவ்வளவு யுகம் ஆகியும் இன்னும் பொய் சொல்ற பழக்கம் உனக்கு போகலையா?''
கிருஷ்ணன் பேசாமல் சிரித்தான்
''கிருஷ்ணா , மாயாவி, என்னை ஏமாற்றியதில் உனக்கு இத்தனை சந்தோஷமா?''
கிருஷ்ணன் பேசினான் .

'என்னையா பொய் சொல்றவன் என்று சொல்றே நீ . உன் கிட்ட உடனே வரேன் என்று சொல்லி விட்டு தான் நான் உடனேயே வந்தேனே.''

''ஹாஹாஹா இது தான் கிருஷ்ணா நீ சொன்னதில் எல்லாம் ரொம்ப பெரிய அண்ட புளுகு, ஆகாச புளுகு. 

எப்போது வந்தாய் நீ? நான் உனக்காக எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா ? உடனே ன்னா என்ன அர்த்தம் தெரியாதா உனக்கு?

''நான் தான் வந்தேனே . நீ என்னை பார்த்தாய். என் குரல் கேட்டாய். நான்தான் அந்த கருப்பு சின்ன குயிலாய் வந்து உனக்கருகிலேயே அமர்ந்து பாடினேன். நீ கேட்கவில்லை.

''சரி ஒருவேளை காது கேட்கவில்லையோ என்று ஒரு பேரிடியாக சத்தம் போட்டேன். உன் டமார காதில் விழலியா? நீ எங்கே கேட்டாய்?

'' சரி அப்படி என்றால் ஒருவேளை என்னைப் பார்க்க மட்டும் தான் விருப்பமோ என்று ஒருபுத்தம் புதிய    குழந்தையாய் உன்னிடம் வந்தேன். துளிக்கூட என்னை பார்க்க வில்லை நீ.  என்னைத் தொடக்கூட  விரும்பவில்லை. விரட்டி விட்டாய்.

''ஓஹோ நீ என்னைத் தொட விரும்பவில்லை நானாவது உன்னை தொடுகிறேனே என்று தான் ஒரு அழகிய பட்டாம்பூச்சியாய் உன் கையைத் தொட்டேன்.  சீ  என்று என்னை வெடுக்கென்று உதறித் தள்ளினாய்.   இவ்வளவையும் நீ செய்து விட்டு என்னை குறை சொல்கிறாயே? ஞாயமா  சாம்பமூர்த்தி மாமா?'' கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே கேட்டான்.

மாமாவின் உள்ளம் உண்மையை உணர்ந்ததை அவர் கண்கள் குளமாக காட்டியது.   தப்பு தப்பு  என்று  தலை மட்டும்  ஆடியது.    இறைவனை எங்கும், எதிலும் எப்படியும் காணலாமே, கேட்கலாமே, உணரலாமே!! இதை அறிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ளாமல் வெறுமே வாயினால் மட்டும் He is omnipresent ,omniscient , omnipotent என்று சொல்லி படித்து என்ன லாபம்? 

-- முதலில் உள்ளிலிருந்தே...! அப்புறம் வெளியே எங்கும் எதிலுமே...! சரியா? 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...