Saturday, November 21, 2020

INTROVERTS

 



                 நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி   J K  SIVAN   


நம்மில் சிலரை புரிந்து கொள்வது சிரமம்.  எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டாமல் தனக்குள்ளேயே புகைபவர்கள் .  சிலர் தனிமையில் தனக்கு தானே  பேசி உணர்ச்சிவசப்படுபவர்கள். இல்லாத ஒருவர் எதிரே இருப்பதுபோல்  பாவித்து  தலை, கை , உடம்பை ஆட்டி கோபிப்பவர்கள், சிரிப்பவர்கள், பேசுபவர்கள்... கொஞ்சம் மறை கழன்ற நண்பர்கள் என்று நாம் அந்தரங்கத்தில் கமெண்ட் அடிப்போமே  அவர்கள். 
ஆங்கிலத்தில் இவர்களை  introverts  உள்வாங்கிகள்  என்போம். படாடோபம்,  சுய தம்பட்டம்,   டம்பம்,  பீத்தல் ஆசாமிகளுக்கு  எதிர் துருவத்தில் இருப்பவர்கள்.  இந்த கொரோனா சமயத்தில்  நிறைய பேர்  தனிமை விரும்பிகளாகி விட்டார்கள். சந்தர்ப்பம் சூழ்நிலை அப்படி ஆக்கிவிடுகிறது.

இளம் வயதில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட   மிரட்டப்பட்ட,   ஜீவன்கள் இப்படி  வளரும். வெட்கம் இதில் பெரும்பங்கு கொள்ளும்.  தனிமை விரும்பிகள்.  கலகலவென்று பேசாமல்,  கண்களில்  ஏதோ ஒரு  ''வெறுமை, தூரம்'' தெரிய  மற்ற   பேசுபவர்களின் வாயைப்  பார்த்துக்கொண்டு ஓரமாக  இருப்பவர்கள்.    இது வளர வளர தான்  சிலர்  மற்றவர்களை வெறுப்பவர்கள்.  

இவர்களை ஒதுக்கக்கூடாது.  அவர்களை  மெதுவாக   உண்மையாகவே   நமது நட்பு வட்டத்துக்குள் கொண்டுவரவேண்டும்.   அன்பாக பேசவேண்டும்.  அவர்களை பேசவிட்டு பொறுமையாக, நடுவே   குறுக்கிடாமல்,  ஆர்வமாக கேட்க வேண்டும்.   ''போர்'' அடித்தாலும்  விடக்கூடாது. இது ஒரு வைத்தியம் அல்லவா?   அவர்கள் பேசும்போது  அலுத்துக்  கொள்வார்கள்,  அவர்கள் போகிற போக்கிலேயே  விட்டுப் பிடிக்கவேண்டும்.

முகத்தில்  கொஞ்சம் கொஞ்சமாக சிரிப்பை வரவழைக்க வேண்டும். நம்மை விரும்ப ஆரம்பித்தால் நம்மையே சுற்றுவார்கள்.  உதாசீனம் செய்யக்கூடாது.  அணைத்து  தட்டிக்கொடுக்கவேண்டும். மெச்ச வேண்டும்.  மாறிவிடுவார்கள்.

அடிக்கடி  எல்லோருடனும் கலந்து பேசச்செய்ய வேண்டும். அவர்கள் பேச்சு ஹாஸ்யமாக, விருப்பமாக இருக்கிறது.  நீ  நன்றாக கவர்ச்சியாக பேசுகிறாய் என்று புகழவேண்டும்.  அவர்கள் யாரையும்  எதிர்ப்பவர்கள், எதிரிகள் அல்ல.  ஒதுங்குபவர்கள் என்று புரிந்துகொள்ளவேண்டும். சமூகத்தை வெறுப்பவர்கள் அல்ல.   எங்கோ  எப்போதோ  யாராலோ, புண் பட்டவர்கள், காயம், ரணம்  ஆறாதவர்கள்.  
அவர்களைப்  புரிந்து கொண்டு  பரிவோடு பழகவேண்டும்.   பரிசுகள் கொடுக்கவேண்டும்.   வயதானாலும்  தனிமையில் இருக்கும் பெற்றோர்கள்,  முதிய உறவினர்களும் இப்படி இருப்பதுண்டு.  அவர்கள் அன்புக்கு பாசத்துக்கு  ஏங்குபவர்கள். சுதந்திரம் தேடுபவர்கள்.   அவர்களோடு சேர்ந்து வெளியே போகலாம், பாட்டு  சினிமா, டிவி அனுபவிக்கலாம். குழந்தைகளோடு விளையாட வைக்கலாம்.

ஒரு சிலருக்கு தமது அங்க ஹீனம், கருப்பு நிறம்,  வழுக்கை தலை,  திக்கு வாய்,  போன்றவை  மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி தனிமையை தேட வைக்கலாம்.  அவர்களைத்  தேடித்  பிடித்து  அவர்களது அங்கஹீனம், குறைகளைப்  பற்றியே  ஒன்றும் பேசாமல், கவனிக்காமல்  மற்றவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசமின்றி நடந்துகொள்வது அவர்களை சமூகத்தில் நம்பிக்கையோடு பழக வைக்கும்.  ஒருவர் வாழ்க்கையில் அமைதி கூட்டுவது  மிகச் சிறந்த  தர்மம், தானம்,    அதிக நேரம் தனிமையாக இருக்க விடக்கூடாது.   நம்மைவிட  எந்தவிதத்திலும் அவர்கள் குறைந்தவர்கள் இல்லை என்பது எப்போதும் நினைவில் இருக்க வேண்டும். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...