Friday, November 13, 2020

RAMAYANAM

 ராமாயணம்   J K  SIVAN 



         11.  சீதையின்  கஷ்டம் யாருக்காவது உண்டா?

இக்ஷ்வாகு ராஜா ,  ரகுகுல திலகன்  ஸ்ரீ ராமனின் பட்டாபிஷேகம்  மகரிஷி வசிஷ்டர் குறித்த   சுப தினத்திலிருந்து 14 வருஷங்களுக்குப் பிறகு மற்றொரு சுப தினத்தில் அவர் கைப்பட  நடைபெற்றது. தசரதன் இருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பான்?  என்ன செய்வது அவனால் அல்லவோ நடைபெற
வேண்டியது தடைபட்டது.   கோலாகலமான  ராம பட்டாபிஷேகத்தை கம்பர் அற்புதமாக கண் எதிரே கண்டு வந்து  நிறுத்துகிறார். 

''அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி!''


சிம்ஹாசனத்தில் அமர்ந்திருந்த  ஸ்ரீ ராமனின் திருவடிகளை  ஹனுமான் தனது கைகளால் தாங்கிப்பிடித்தான்.  ராமனின் அருகே  ராமனின் வாளை  பயபக்தியோடு சந்தோஷமாக  அங்கதன் ஏந்தி நின்றான். 

பட்டாபிஷேக  சிம்மாசனத்தை அடுத்து நின்று  ஒருபக்கமாக   பரதன் நின்று, வெண் கொற்றக்குடையை ஸ்ரீ ராமன்  சிரத்திற்கு மேல்  கவிழ்த்தவாறு  பிடித்துக்கொண்டு நின்றான்.    மற்ற இரு சகோதரர்கள் சத்ருக்னனும் , லக்ஷ்மணனும் சிம்மாசனத்தின் அருகே  ஆளுக்கொரு பக்கமாக நின்று கவரி வீசினார்கள். 

கம்பர்  தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை  மறக்காமல்  ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தில் சேர்க்கிறார். சடையப்ப வள்ளலின்  மரபாய்ச் சார்ந்த ஒருவர்  கிரீடத்தை எடுத்துக் கொடுக்க, அதை மஹரிஷிகளில் ஸ்ரேஷ்டமானவரான வசிஷ்டர் என்ற குலகுருவே  கிரீடத்தை  முகூர்த்த நேரத்தில் ஸ்ரீ ராமன் தலையில் சூட்டி அவன் அயோத்தி அரசனானான்.  அயோத்தியில் உள்ள அனைவரும்,   விண்ணோரும் மண்ணோரும் 

மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.  ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் படம் நிறைய  பார்த்திருக்கிறேன்.  யாரோ   ஒரு   சுப்பையா நாய்டு எத்தனையோ வருஷங்களுக்கு முன்பு ஒரு அற்புத படம் வரைந்திருக்கிறார், அதில்  ராம பட்டாபிஷேக த்துக்கு வந்திருந்த  ரிஷிகள், அரசர்கள், ஜாம்பவான், வானரர்கள், விபீஷணன், முனிவர்கள் என்று அற்புதமாக பல முகங்களை திணித்திருக்கிறார்.  இதில் ராமன் திருவடிகளை  கையில் ஏந்திய  ஹனுமான்   மேல்நோக்கி   ராமர்  முகத்தைப் பார்த்திருக்கும்படியாக  வரைந்தது அற்புதம்.  சீதை  திருணப் பெண் போல  வலக் காலை   மடித்து இடக்காலை குத்திட்டு, இடக்கையை இடது முழங்கால் மேல் வளைத்து வைத்திருப்பது    நாய்டுவின் அபார கற்பனையும் கைத்திறனும்.   இந்த படத்தையே  நாம் எனது '' ரமே  ரமே மனோரமே'   அத்யாத்ம ராமாயண புத்தகத்தை பட்டாபிஷேக படமாக இணைத்தேன். தனியாக  பிரதிகள் போட்டு நூற்றுக்கணக்கான இலவச பிரதிகளை  விநியோகித்து மகிழ்ந்தேன். 


பட்டாபிஷேகம் முடிந்த சில நாட்களில் பரிசுகள் பெற்று வந்திருந்த  விருந்தினர் நாடு திரும்பினார்கள்.  சுக்ரீவன் மற்ற வானர வீரர்களுடன்  கிஷ்கிந்தைக்கும் ,  விபீஷணனும் அவனோடு வந்தவர்களுடன்   இலங்கைக்கும்  திரும்பிச் சென்றனர்.  புஷ்பக விமானம்  அதன் எஜமானனான குபேரனிடம் திரும்பிச் சென்றது. 


சில மாதங்கள் சென்றன. வத்ரன்  எனும்  ஒற்றர் படை தலைவன்,ஆலோசகனை ராமன் ஒருநாள் அழைத்து  நகரத்தில் மக்கள்  ராமராஜ்யத்தை பற்றி என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து வா என அனுப்பினான். 

 மறுநாள் காலை வத்ரன்  ராமன் முன்னே முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு   நின்று  எப்படிச்சொல்வது என்று மென்று முழுங்கினான்.  

''பயப்படாதே, தயக்கமில்லாமல்  நீ என்ன  விஷயம் சேகரித்தாய் என்று சொல் ''

''மஹாராஜா, நாட்டு மக்கள் தங்கள்  ராஜாங்க  நிர்வாகம், வசதிகள்  பாதுகாப்பு பற்றி எல்லாம் சந்தோஷமாக பேசிக்கொள்கிறார்கள். ஆனால்...

''என்ன ஆனால்.... மேலே சொல்..?''

''மஹாராஜா தங்கள்   நேர்மை பற்றி தான் மக்கள் கொஞ்சம் அருவருப்பாக  பேசுகிறார்கள் ... 

''ஏன் , எதற்காக?''

''இவ்வளவு அருமையான நல்ல வீரமுள்ள மஹாராஜா  எப்படி  தன்னிடமிருந்து பிரிந்து 14 வருஷம் எங்கோ ஒரு ராக்ஷஸன் வீட்டில்  இருந்த மனைவியை ஏற்றுக்கொண்டார். அது ஏற்றுக்கொள்ளமுடியவில்லையே?''  என்கிறார்கள்.

சற்று நேரம் யோசித்த ராமன், லக்ஷ்மணனைக் கூப்பிட்டான். 

 ''லக்ஷ்மணா, உனக்கு ஒரு முக்கியமான வேலையை தரப்போகிறேன். நீ உடனே சீதையை தேரில் அழைத்துச்

சென்று நமது நாட்டு  எல்லையில் கங்கைக்கரைக்கு தெற்கே  உள்ள வனத்தில் விட்டுவிட்டு வா. அவளுக்கு அயோத்தியில் இனி  இடம் இல்லை ''

லக்ஷ்மணன் அதிர்ச்சி அடைந்தான்.  ராமன் கோபத்தில் சொல்லவில்லை. ஆழ்ந்து யோசித்து நிதானமாக சொல்கிறான். அவன் ஆணையில் எந்த தயக்கமும் இல்லை, முடிவானது என்பதால் லக்ஷ்மணன்   சீதையிடம் சென்றான்.  

''அம்மா என்னோடு கங்கைக்கரை வாருங்கள், அங்கே ஒரு ஆஸ்ரமத்திற்கு  நீங்கள் செல்லவேண்டும்  என்று அரசன் கட்டளை''  

சீதையும் எந்த மறுப்பும் சொல்லாமல் அரசனின் கட்டளையை ஏற்றாள் .  கங்கையை ஒரு படகில் கடந்து  அதன்  மறு  கரையை அடைந்து  படகில் இருந்து  லக்ஷ்மணன்  அவளை இறங்கச்  செய்தான். அவன் இறங்கவில்லை.  படகில் இருந்து அவள் இறங்கியதும் ராமனின் கட்டளையை மெதுவாக அவளிடம் சொல்ல அவள் அதிர்ச்சி அடைகிறாள்.  அந்த நிலையில் அவளை விட்டு  விட்டு  அழுது கொண்டே  லக்ஷ்மணன் படகில் திரும்பி, அயோத்தி செல்கிறான். 


சீதை படகு கங்கையின் வடகரையை அடைந்து  லக்ஷ்மணன் திரும்பி தேரில் செல்வதைக் கண்டாள். ராமன் கட்டளையை நிறைவேற்றி விட்டான் என்று புரிந்தது.   கருவுற்றிருந்த  சீதை தனியாக நடந்து  ஒரு ஆஸ்ரமத்தை அடைகிறாள்.  அது வயதான  மகரிஷி வால்மீகியின் ஆஸ்ரமம்.  தசரதரை நன்றாக  அறிந்தவர் மகரிஷி வால்மீகி.  ராமாயணத்தையே  எழுதியவர் அவர் தானே.    வாலமீகி சீதையைக்கண்டு  அதிசயித்து  அவளை வரவேற்று உபசரிக்கிறார்.  அருகே இருந்த சில பெண்களிடம் அவளை ஒப்படைக்கிறார்.  சில மாதங்களில்  சீதை இரட்டை குழந்தைகளை பெற்றாள் .  வாலமீகி முனிவர்  அவர்களுக்கு லவன் குசன் என்று பெயரிட்டார்.  தர்ப்பை போன்ற ஒரு புல்லின்  மேல் பாதியை  குசன் தேகத்திலும்   கீழ் பாதியை லவன் மேலும் தடவி  இதன் மூலம்  எந்த  தீய  சக்தியும் அவர்களை நெருங்காமல்  வளர்த்தார்.   அயோத்தி ராஜாவின்

 குழந்தைகள் அப்பாவைத் தெரியாமல், காணாமலேயே,  காட்டில்  ஆஸ்ரமத்தில் வளர்ந்தார்கள்.

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...