Sunday, November 8, 2020

RAMAYANAM

 ராமாயணம்.       J K SIVAN 


               

            7.      சீதையைக் கண்டான்..


சுக்ரீவனின்  வானர வீரர்கள்  தேடாத  இடம்  பாக்கியில்லை.  இதோ கடல் கரை வந்துவிட்டதே, ஒரு இடம் விடாமல் தேடியும்  சீதை சென்ற இடம் தெரியவில்லையே என்று அங்கதன் தலைமையில் அந்த வானர வீரர்கள் கலங்கி நின்றபோது தான்  அவர்கள் ஒரு பெரிய  கழுகை சந்திக்கிறார்கள்.  

வயதான அந்த கழுகின் பெயர் சம்பாதி.  அது  இறந்த கழுகரசன்  ஜடாயுவின்  அண்ணா.  அவர்கள் வந்த நோக்கம்,கவலை எல்லாம் புரிந்தபின்  சம்பாதி அவர்களுக்கு ராவணன் யார்  எங்கிருக்கிறான்  எவ்வளவு தூரம்  அங்கிருந்து கடல் தாண்டி இலங்கை தீவு என்று சொல்கிறது. 

வெகுகாலம் முன்பு, சம்பாதியும் ஜடாயுவும் இளம் வயதில், சூரியன் இருக்கும் இடம் வரை நாம் இருவரும் பார்ப்போம் என்று உயரே பறந்தன.  சூரியன் அருகில்  நெருங்கும்போது, வெப்பமான  கிரணங்கள் அவர்கள் உடலை  பொசுக்க  தொடங்கியது. இளையவன்  ஜடாயு உடல் பொசுங்காமல் பாதுகாக்க சம்பாதி தனது   ரெக்கைகளுக்குள்  ஜடாயுவைபோர்த்தி அணைத்துக்கொண்டு  கீழே  இறங்கியது.  ஜடாயுவைக் காப்பாற்றிய  சம்பாதியின் இறகுகள்  சூரியனின் வெப்ப கதிர்களில் எரிந்து விட்டன.  அவனால் இனி பறக்க முடியாது.  கடற்கரை ஓரமாக விழுந்து ஒரு மரத்தில் வசித்து வந்த போது  சுக்ரீவனின் வீரர்களைக்   கண்டான். 
சகோதரன் ஜடாயு ராமனின் குடும்ப நண்பன் என்று அறிந்து அவன் முடிவு பற்றி  அறிந்து  வருந்தினான் .

''ஒருநாள்  நான் மேலே  ராவணன் ஒரு பெண் அலற அலற  ஒரு விமானத்தில் பறந்து லங்கை செல்வதைப் பார்த்தேன். அவன் என் சகோதரனைக் கொன்ற  ராவணன்   என்று  எனக்குத் தெரியாமல் போய்விட்டதே. அவனைக் கொன்றிருப்பேனே'' என்றது சம்பாதி.

''ஹனுமான், இது ரொம்ப நல்ல சேதி.   ஒருவழியாக சீதை இருக்கும் திசை தெரிந்துவிட்டது.  எப்படி லங்கை போவது என்று யோசிப்போம்.'' என்றான்  அங்கதன். 

ஹனுமானின் தாய்  அஞ்சனை,  வாயு தேவன் அவளை மணந்ததால்  ஹனுமானின் பெயர் ஆஞ்சநேயன் மற்றும் மாருதி. வாயு தேவனின் சக்தி  ஹனுமானுக்கு உண்டு. அவனால் பறக்க முடியும். ஜாம்பவான்  எனும் வயதான கரடி அரசன் அங்கதன் குழுவில்  சீதையைத் தேடிச்சென்றவர்களில் ஒருவன்.  அவன்  ஹனுமானால்  மட்டுமே   நூறு யோசனை தூரம்  கடல் மேல் பறந்து திரும்பி வரமுடியும் என்று  ஹனுமனை உற்சாகப்படுத்தி  பறக்கச்  செய்கிறான்.    

பல இன்னல்களைக் கடந்து  ஆஞ்சநேயன் இலங்கைத்தீவில்  இறங்குகிறான். ஒரு மலை உச்சியில் இறங்கி  அந்த தீவை நோட்டம் விடுகிறான்.  ராவணனின்  கோட்டை  தெரிகிறது. அடேயப்பா அதில் எவ்வளவு பெரிய  பெரிய  மாளிகைகள்.   ஒவ்வொரு மாளிகையின் சாளரங்கள் வழியாக  உள்ளே எங்காவது எதிலாவது சீதை தெரிகிறாளா என்று தேடுகிறான். 

ராவணன்  எதிர்பார்த்தது  நடக்கவில்லை.  சீதையை சிறைப்பிடித்து எவ்வளவோ  முயன்றும்  சீதை அவனை  வெறுத்தாள்.  அவனை ஏசி,  மிரட்டி, தனது கணவனின்  சக்தியை எடுத்துச்  சொல்லி திருத்த முயன்றாள் வேறு வழியின்றி  ராவணன் அவளை  அரண்மனைக்கு வெளியே  ஒரு நந்தவனத்தில்  ராக்ஷஸிகள்  சிலர்  காவலில்   சிறைவைத்தான்.   அவள் மனம் மாறுவதற்கு காத்திருந்தான்.  அந்த இடத்தின் பெயர் அசோக வனம்.    

சுற்றி சுற்றி அலைந்த  ஹனுமான்  அசோகவனத்தைப்  பார்த்துவிட்டான். அதில் ஒரு மூலையில் மரங்கள் அடர்த்த ஒரு பகுதியில்  சில ராக்ஷஸிகள் சூழ ஒரு பெண்  ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்ததை பார்த்தான். அழுது கொண்டே இருந்த  அந்த பெண்,  அழுக்கு உடைகளோடு, மற்ற ராக்ஷஸிகள் போல் இல்லாமல் அழகு வடிவமாக  ஆபரணங்கள் இன்றி இருந்ததால்  இவள் தான்  விமானத்தில்  ஆபரணங்களை கழற்றி  ரிஷ்யமுக பர்வத உச்சியில் போட்ட, சீதை என்று புரிந்து விட்டது.  ராக்ஷஸிகள் சும்மா இல்லை. அவளைக்  கேலி செயது,  மிரட்டி, கட்டாயப்படுத்தி ராவணனை மணக்க சொல்லி  துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள். 
அவள் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தலையை குனிந்து அழுதவாறே இருந்தாள் . 

''நான் தேடியது கிடைத்துவிட்டது. என் தேடல் முற்றுப்பெற்றது.  இதோ  என் தாய்  சீதா தேவி''.   
மெதுவாக  ராக்ஷஸிகள் கண்ணில் படாமல்  அந்த  இடத்தை நெருங்கினான். சற்று நேரத்தில்  ராக்ஷஸிகள்  அங்கங்கே  சரிந்து படுத்து  தூங்கினதைப்  பார்த்தான்.  அருகே வந்தான்.  சீதை  அமர்ந்திருந்த  மரத்திற்கு தாவி அதன் கிளைகளில் ஒன்றில் அமர்ந்தான்.   மெல்லிய குரலில்  சீதை மட்டும் கேட்கும்படி யாக  ராமனின் மஹிமையை பாடினான்,  எப்படி தாரகையை வதம் செய்தான்,  சுபாஹுவை கொன்றான், மாரீசனை விரட்டினான், மிதிலையில் சிவதனுசை எடுத்து வளைத்து ஒடித்து  சீதையை  மணந்தான்.....தந்தை சொல்லை மந்திரமாகக் கொண்டு அரச வாழ்க்கை துறந்து கானகம் ஏகினான்.....

சீதைக்கு தனது காதுகளை நம்பமுடியவில்லை. அங்கு மிஞ்சும் சுற்றி பார்த்தாள் . கனவா? பிரமையா?  தனது வாழ்க்கை நிகழ்ச்சிகளை துல்லியமாக சொல்வது யார்?  இதுவும் ஒரு ராக்ஷஸ தந்திரமா?  மேலே ஒரு சிறு குரங்கு தெரிந்தது.  ராவணனின் மாயலீலையா?

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...