Thursday, November 12, 2020

DIWALI NOSTALGIA

            


 லோகா ஸமஸ்தா ஸு கினோ பவந்து:  J K  SIVAN  


இந்த  82 வருஷத்திலே  இப்படி ஒரு தீபாவளி பார்த்ததில்லை.  அமைதியான  வெடி சத்தமில்லாத  கொஞ்சூண்டு  ஒளிமட்டும் வீசும்   'தனித்வ'  தீபாவளி.    நேற்று  வாட்சப்பில்  எங்கேயோ  படித்தேன்.  பட்டாசு வெடித்தால்  ஆறுமாதம்  ஜெயில்.  நான்  9 மாதமாக  ஜெயிலில் தானே  இருப்பவன்.  இன்னும்  எத்தனை மாதமோ ?
   
பழைய ஞாபகம் வருகிறது.    உரக்க  எனக்கு நானே  பேசுகிறேன்: 
  
''தீபாவளிக்கு   கிட்டத்தட்ட  மூன்று வாரங்கள் முன்பே எங்கே பார்த்தாலும் 'படார் டபார்''  என    காதைப் பிளக்கும் இடி சப்தம் கேட்கும் .  ஏதோ யுத்த பூமியில் இருக்கிறோமோ என்று தோன்றும்.   தெருவில் எந்த நேரம் எது வந்து தாக்குமோ என்று பயத்தோடு தலையை நாலா பக்கமும், மேலே கீழே கூட பார்த்து செல்ல வேண்டி இருந்தது. . செத்தது மாதிரி அசைவு இல்லாத ஏதோ ஒன்று நான் அருகில் போனவுடன் மட்டும்  நான் தான் சஞ்சீவி பர்வதம் போல்  நினைத்து  திடீரென்று  புத்துயிர் பெற்று வெடித்தது.. இல்லை பறந்தது. .ஸ்கூட்டர்  கை நடுங்கி பாலன்ஸ் தவறி விழுந்து விடுவேனோ ? எதிரே யார் மீதாவது மோதிவிடுவேனோ?  தெரு ஓரத்தில் சில பையன்கள்   பேசாமல் நின்றுகொண்டிருந்தால் நடுத்தெருவில் எதையோ கொளுத்திவிட்டு காத்திருக் கிறார்கள் என்று அறியாதது என் மடமை.  அருகில் நான் சென்றபோது  ஒருவன் பட்டாசு என்று கத்தினதும் மூன்று அடி உயரம் திடீரென்று எம்ப எப்படி சக்தி வந்தது?

தெருவெல்லாம் ஏற்கனவே குப்பை. இப்போது அதிகம். கந்தக நெடி மூச்சு திணறுகிறது. ஒரு நாய் மாடு கண்ணில் படவில்லை. ஒரு பறவை மூச்சு காட்டவில்லை.  கிருஷ்ணன் அவற்றை எங்கோ பதுங்க வைத்துள்ளான். காசெல்லாம் கரியாகி , கரியெல்லாம் காசாகும் நேரம் இது. போகட்டும் எல்லாம் கண்ணனுக்கே.

கிருஷ்ணா  உன்னை நினைக்காதே  நேரமே  இல்லையே.   பூஜை அறையில் குத்து விளக்கு எரிகிறது. அதன் எதிரே புல்லாங்குழல் கையிலேந்தி ''ஆடாது அசங்காது நிற்கிறாயே ''உன் பார்வை ஒன்றே போதுமே''

வெளியே உள்ள சப்தம் என் மனதில் இல்லாமல் அமைதி ஓடட்டும். குப்பைகள் அகலட்டும். வா  கிருஷ்ணா, வா, வந்து இரு அதில்.  ''பாரோ க்ரிஷ்ணய்யா. நீ எங்கும் இருப்பவன் எல்லோர் மனத்திலும் குடி புகுந்துவிடு. என்றும் , எங்கும்,  நிறைவைக் கொடு. எதிலும் நிம்மதியைக் கொடு. இயற்கையின் சீற்றமும் போதும். வறட்சியும் போதும்.  கிருமி பயமும்  போதும்''

''மந்திரி நமது ராஜ்யமதிலே மாதம் மும்மாரிமழை பொழிகிறதா?"" 
 இப்போதெல்லாம்  இப்படி கேட்கும்  ராஜா கிடையாது.   கேட்டாலும் மந்திரிக்கு தெரியாது. யாரையாவது  ஒரு உயர் அதிகாரி,  IA S  அதிகாரியை  கேட்டு தான் சொல்ல வேண்டும்.  அதற்கே  யாராவது காசு கேட்டாலும்  ஆச்சர்யமில்லை.  சட பட என்று வானம் அடிக்கடி பொத்துக்கொண்டு பொழியட்டும். ஐப்பசி அடைமழை
  கார்த்திகை கன மழை எல்லாம்  பொழியட்டும். எங்கும் சுபிட்சம் நிலவட்டும். நோய் நொடி மறையட்டும். ஒற்றுமை எங்கும் நிலவட்டும். அன்பு உன் எதிரே ஒளிவீசும் தீபத்தைப் போல அழகாக ஒளி வீசட்டும். 

ஒரு விஷயம்.  கிருஷ்ணனுக்கு பிடிச்ச  பசு  மாடுகளை, பறவைகளை,  இந்த வருஷம் பட்டாசு சத்தம்  அதிகம் பயப்படுத்தப் போவதில்லை.   நிறைய விளக்கு ஏற்றி பிரார்த்தனை பண்ணுவோம்.. கிருஷ்ணனைப் பாடுவோம், கேட்போம்.  கும்பல்  இல்லாமல்  தனித்தனியாக.... அது தான் தீபாவளி. தீப ஒளி தான் தீபாவளி.
இனிப்பு நாக்கை தாண்டி உள்ளே இறங்கி இதயத்திலும் நிறையட்டும். நெஞ்சில் பரவட்டும். கண்ணில் கருணை தெரியட்டும். எல்லோரும் நல்லவரே. கிருஷ்ணா உன் படைப்பில் எது மட்டம்?

தீபாவளி  தீப ஒளியே,   இருட்டிலிருந்து என்னை வெளிச்சத்துக்கு அழைத்துக் கொண்டு போ. தமஸோமாம்   ஜோதிர் கமய ,  அஞ்ஞானத்திலிருந்து விடுவித்து  ஞானத்தைத்  தா.    -- லோகா சமஸ்தா சுகினோ பவந்து. இது தானே உனக்கு பிடித்த மந்திரம். அதை திருப்பி திருப்பி சொல்கிறேன். இன்று மட்டும் அல்ல ஒருநாள் வாழ்த்தாக இல்லை. வாழ்நாள் முழுதும் எதிரொலிக்கட்டும்.தீபம் அவசியம். ஏன். இருட்டை போக்க. அதுபோல் நமது உள்ளத்திலே இருக்கிற அஞ்ஞானம் என்கிற இருட்டு போக நாம் ஞானம் என்கிற தீபத்தை ஏற்றுவோம் .தாமச குணமாகிய அறியாமை என்கிற இருட்டு போக ஞானம் என்கிற ஒளியைக் கொடுக்கும்  கிருஷ்ணா,   உன்னை எல்லோரிலும் கண்டு  இனிப்பு கொடுத்து மற்றவர்களை உறவினர்களை எல்லாம்  பழையபடி போல் சந்திக்க  சீக்கிரம் அருள் செய்.  ஒற்றுமையை வளர்க்க அன்பைப் பரப்ப, நேசம் வளர,

தீபாவளி அன்று புதிய ஆடை தரித்துக்கொள்வது கூட எதற்கு?  '' இன்றிலிருந்து நான் இதுவரை செய்த தவறுகளை செய்யாமல் திருந்தி புத்தம் புதியவன் ஆகவேண்டும். என் பாபங்கள் இன்று விடியலில் நான் குளித்த நீரில் கங்கை இருந்து அவற்றை அழித்து என்னை புனிதனாகட்டும் ''என்று உணர்வதற்காக. அதனால் தான் ''கங்கா ஸ்நானம் ஆச்சா ?'' என்று கேட்பது.    குழாய் தண்ணி, கிணற்று தண்ணி எதிலும்  தீபாவளி அன்று  கங்கை நீர் தான்.      இந்த வருஷம் நல்லவேளை காசு கொடுத்து எந்த தண்ணியும்  வாங்க வைக்கவில்லை நீ.  தெருவில்  தண்ணீர் லாரி அசுரனை  காணவில்லை.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...