Monday, November 2, 2020

RAMAYANAM


 ராமாயணம்.   J K  SIVAN        


                                                                       3   சீதையைக் காணோம்.

''இனி  பரதன்  நம்மைத்  தொடர்ந்து வர வழியோ  வாய்ப்போ,  இல்லை.   அவனது  உண்மையான அன்புக்கு எல்லையே இல்லை. அடர்ந்த தண்டகாரண்ய வனத்துக்குள்  நாம்  சென்றுவிட்டால்  எங்கிருக்கிறோம் என்று  நமக்கே தெரியாது  என்று  ராமன் லக்ஷ்மணனிடம் சொன்னான்.    அங்கு  ராக்ஷதர்கள் கொடிய மிருகங்கள் நடமாட்டம்  ஜாஸ்தி.  வழியில்   விராதன் என்று ஒரு ராக்ஷஸன் எதிர் கொள்கிறான்.  ஒரு காலத்தில் தேவலோகத்தில் அவன் ஒரு  கந்தர்வன்.  ரம்பையின் மேல் காதல் கொண்டு இந்திரன் சாபத்தால்   மனிதனை உண்ணும் ராக்ஷசனாகி தண்டகாரண்யத்தில் அலைகிறான். அவன் எப்படி இருப்பான் தெரியுமா?   பெரிய  ஒரு யானை உடம்பு. சிங்கத்தலை.  மனிதனின் கை கால்கள்.....

ராமனிடம் அவன் காட்டிய  ஒரே கருணை:   ' ஆண்கள் உங்கள்  ரெண்டுபேரையும்  முதலில் சாப்பிடப் போகிறேன். உங்களோடு  இருக்கும்  பெண் என் மனைவியாக இருக்கட்டும்'' என்று சொல்லி சீதையைபிடித்து இழுக்க  வந்தான்.   ஒரே ஒரு அம்பு  ராமன் வில்லிலிருந்து புறப்பட்டு  விராதனைத் துளைத்து  அவன் கைகளை துண்டித்து அவன் மரண வேதனையில் தரையில் விழுந்தான். உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து கொண்டிருந்தது. விராதனின்  உடலிலிருந்து ஒரு கந்தர்வன் வெளிப்பட்டு  ராமனை வணங்கினான். சாபம் தீர்ந்து கந்தர்வன்  விண்ணேகினான்.

ராம லக்ஷ்மணர்கள் சீதையுடன் மேற்கொண்டு நடந்து  கோதாவரி நதிக்கரையை  அடைகிறார்கள்.   அங்கே  அகஸ்தியரை  சந்தித்து வணங்குகிறார்கள். 

''ராமா  இது உனக்கு சிறந்த  இடம். இங்கேயே  ஆஸ்ரமம் அமைத்து உன் வனவாசத்தை முடி '' என்கிறார் அகஸ்திய ரிஷி. பஞ்சவடி எனும் அந்த  கோதாவரி நதிக்கரை க்ஷேத்ரத்தில் லக்ஷ்மணன்  ஒரு பர்ணசாலை அமைக்கிறான்.   அமைதியான  வனவாச வாழ்க்கை சில காலம்  தான் தொடர்ந்தது.   வசந்தம், இலை யுதிர் காலம்,  மாரிக் காலம் கழிந்தது. 

ஒருநாள்  பர்ணசாலை வாசலில் அமர்ந்து மூவரும் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு கொடிய ராக்ஷஸி  அவர்களைப்  பார்த்துவிட்டாள் . ராமனின் அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்து அவன் மேல் 777 ரக  காதல் கொண்டாள் . சூர்ப்பனகை என அவளுக்குப்  பெயர்.  ஒரு பெண்ணாக வடிவெடுத்து  ராமனை அணுகுகிறாள். 

''அழகா, இந்த அவலக்ஷ்ணமான பெண்ணை (சீதையை) விட்டு விட்டு என்னோடு வா. என் கணவனாகிவிடு.''
 
ராமன் சிரித்தான். துன்பத்திற்கிடையிலும் சற்று  விளையாட்டு , பொழுது போக்கு,  மனிதனுக்கு தேவை தானே.  விளையாட்டு சில சமயங்களில்  வினையாகிறது.  இங்கு   ''திரு வினை''  ஆகப்போகிறது.  

''அம்மா  தாயே,  நீ ஒரு அழகிய பெண்ணாக இருக்கிறாயே.   என்மேல் எதற்கு இந்த ஆசை எல்லாம்?  நீ சுட்டிக்காட்டும் இந்த பெண்  யாரோ அல்ல.  நான்  மணந்த என் மனைவி.    அதோ இருக்கிறான் பார்  என் தம்பி  லக்ஷ்மணன்  அவனைப் போய்  பார்.  அவன்  உனக்கு  தக்க   ஜோடி.  போய்க் கேள் ''
'
இதெல்லாம்  பார்த்துக்கொண்டிருக்கும் லக்ஷ்மணன்  '' அம்மா பேரழகியே, நான் இளையவன். என் அண்ணா இருக்கிறார் பார், பேரழகன், வீராதி வீரர்  சூராதி சூரர். அவர் தான் உனக்கு பொருத்தமானவர்.  அவரையே  தான் நீ   வேண்டிக்   கொள்ளவேண்டும்... என்னை விட்டுவிடு தாயே...''  என்றான்.

''நீ சொல்வதும்  சரி. என் மனதிற்கும் ராமனைத்  தான் பிடித்து இருக்கிறது.''
சூர்ப்பனகை  ராமனிடம் சென்றாள் .
'' ராமா, உன்னை நான் கணவனாக அடையவேண்டும்.  அதற்கு முன்  இன்னொருத்தி என் வாழ்வில்  குறுக்கிட தேவையில்லை. இவளை முதலில் கொன்று  விடுகிறேன்..அப்புறம் நீ எனக்கு மட்டுமே சொந்தம்'' என்று  சீதையை  சூர்ப்பனகை நெருங்கினாள்.   

ராமனையும்  சீதையையும்  கண்ணுக்குள் வைத்து காவல் காக்கும் லக்ஷ்மணன் சும்மா இருப்பானா?. அடுத்த கணமே  வாளை  உருவி  சூர்ப்பனகையின் காது, மூக்கு எல்லாம் அறுத்து  விட்டான். ரத்தம் சொட்டச் சொட்ட   வலியோடு சூர்ப்பனகை அழுதுகொண்டே ஓடினாள் . அவள் பேரிரைச்சல்  காடு முழுதும் எதிரொலிக்க  ஜனஸ்தானம் எனும் அவள் வாழும்  இருண்ட   பகுதிக்குள் சென்றாள் . அவளுடைய  பலமிக்க ராக்ஷஸ சகோதரர்கள் கரன்,  தூஷணன் இருவரும்  கடும் கோபம் கொண்டு  ராமனையும் லக்ஷ்மணனையும் கொல்ல  பெரும் ராக்ஷஸ கூட்டத்தோடு பஞ்சவடிக்கு வருகிறார்கள். 

 ராம லக்ஷ்மணர்களுக்கு நன்றாக தெரியும்.  வந்தவள் ஒரு ராக்ஷஸி, நிச்சயம் பழி வாங்க நம்மை தாக்க யாராவது வருவார்கள் என்று.   ஆகவே தயார் நிலையில் இருந்த இருவரும்   கர தூஷணர்களை சரமாரியாக அம்புகளால் தாக்கி கொன்றுவிடுகிறார்கள்.  கூடவந்த  ராக்ஷஸர்கள் எவரும்  உயிரோடு திரும்பவில்லை. சூர்ப்பனகையின் மற்றொரு ராக்ஷஸ சகோதரன்  ராவணன் என்பவன் இலங்கையில் அரசாட்சி செய்து கொண்டிருந்தான். 

லக்ஷ்மணன் சூர்ப்பனகையின் நாசியை அறுத்த இடம் தான்  நாசிக் என்று  இன்றும் அழைக்கப்படுகிறது. 

ககன மார்கமாகப்  பறந்த  சூர்ப்பனகை இலங்கையில் ராவணனிடம்  சென்று  தனக்கு நேர்ந்த அவமானத்தை அழுது கொண்டே சொல்லி  ராம லக்ஷ்மணர்களை பழிவாங்கிக்  கொல்ல வேண்டும்  என்கிறாள்.  கர  தூஷணர் களை வேறு கொன்றுவிட்டார்கள் என்று அறிந்த ராவணன் மிகுந்த சீற்றம் கொள்கிறான். 

ராவணனுக்கு உடனே  மாரிசன் எனும் ராக்ஷஸ   மாமன் ஞாபகம் வருகிறது.   மாரிசன் ஏற்கனவே  ராமனால் தாக்கப்பட்டு கடலில் ஒரு தீவில் வசிப்பது தெரியும்.  ஆகவே  ராமனோடு  நேரில் போரிடாமல் வஞ்சித்து  பழிவாங்க திட்டம் தீட்டுகிறான்.  அதன் படி,  மாரிசன் ஒரு அழகிய  தங்கநிற மானாக  பஞ்சவடிக்கு சென்று  எப்படியாவது  சீதையின் மனதை கவர்ந்து ராமனையும்   லக்ஷ்மணனையும்  அவளிடமிருந்து பிரித்து வெகு தூரம் கொண்டு செல்லவேண்டும்.   ராவணன் தனியாக  ஆஸ்ரமத்தில் இருக்கும்  சீதையைக் கடத்திக்கொண்டு புஷ்பக விமானத்தில் இலங்கை திரும்பவேண்டும்''. 

ஒரு நாள்  பஞ்சவடியில்  சீதை ராம லக்ஷ்மணர்களோடு  அமர்ந்திருக்கும்போது  ஒரு அழகிய  பொன்மான் கன்னுக்குத் தெரியும்  சற்று தூரத்தில்   ஒரு  குட்டி மான்,  குதித்து குதித்து விளையாடி அவள் மனத்தைக் கவர்ந்தது.  சீதைக்கு அந்த மான் குட்டி வேண்டும் என்று ஆசை மிகுந்தது. 

''அந்த அழகிய மான் குட்டியை எனக்கு பிடித்துக் கொடுங்கள்'' என்று ராமனைக் கேட்க  அவன் அதை துரத்த, அது எப்படியெல்லாமோ போக்குக்காட்டி காட்டுக்குள் வெகு தூரம்  அவனை இழுத்துக் கொண்டு போய்விட்டது. லக்ஷ்மணன்  ஆஸ்ரமத்தில்  சீதையோடு இருந்த போது  நடுக்காட்டிலிருந்து   ''ஓ  சீதா  ஓ  லக்ஷ்மணா'' என்று ராமனின் தீனக்குரல்  கேட்டது.  இருவரும் திகைத்தனர்.  சீதை  லக்ஷமனை ''உடனே செல்  ராமனுக்கு ஏதோ ஆபத்து '' போ  அவனைக் காப்பாற்று என்று அலறுகிறாள்.  லக்ஷ்மணன் ''அம்மா  தாயே , ராமனுக்கு ஒரு ஆபத்தும் நேரிடாது.  இது ஏதோ ராக்ஷஸ சூதாக தெரிகிறது.  நான் உங்களை தனியாக விட்டு போக முடியாதே. ஆபத்து உங்களைத் தான்  சூழ்ந்திருக்கிறது இங்கே ''  என்று பதிலளித்தான்.  சீதை கோபமிகுந்து தகாத சூடு சொற்களால்  லக்ஷ்மணை சாடுகிறாள். வேறு வழியின்றி  அவளை விட்டு ராமனைத் தேடி செல்கிறான். 

எல்லாம்  ராவணன் திட்டப்படியே  சரியாக நேர்ந்தது.  ஆனால்   மாரிசன் மாய பொன் மானாக ராமனை காட்டில் வெகு தூரம்  இழுத்துச் சென்றபோது ராமன்   அந்த பொன் மான்   ஒரு பொய்  மான்  என்று அறிந்து உயிரோடு அதை விடாமல்  ஒரு அம்பினால் அந்த   மானை கொல்கிறான் . சாகும்  முன்பு அது ராமனைப் பழி வாங்க  அவன் குரலில்   கத்தியதை தான் லக்ஷ்மணன் சீதை இருவரும் கேட்டார்கள்,. 

ராமன் வேகமாக  திரும்பிக்கொண்டிருந்த போது  எதிரே  லக்ஷ்மணன் ஓடி வருவதைக்  காண்கிறான்  மாரீசன் கத்தியதின் விளைவு இப்படி ஆகும் என்று எதிர்பார்த்தபடியே  லக்ஷ்மணன் சீதையை தனியாக விட்டு வந்துவிட்டானே . இருவரும்  நடந்ததை அறிந்து  பஞ்சவடி ஆஸ்ரமம் திரும்பிய போது  அதில் யாருமில்லை. சீதையைக் காணோம்.?அவளுக்கு என்ன ஆயிற்று? கொடிய விலங்கு ஏதாவது அடித்து இழுத்துச் சென்றிருக்குமோ? ராக்ஷஸன் எவனாவது வந்து விழுங்கி இருப்பானோ?
''சீதா''   என்று உரக்க கூப்பிடுகிறான் ராமன். அவன் குரல் காடு முழுதும் எதிரொலிக்கிறது. ஆனால்  சீதையை எங்கும் காணோம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...