Friday, November 20, 2020

MY THOUGHTS


  விரும்புவது வேறு,  தேவை வேறு.. J K   SIVAN  

நானும்  எனது நண்பன் ஒருவனுமாக    ஞாயிறுகளில் மட்டும் தான்  விடியற்காலையில் காஞ்சிபுரம் செல்வோம். நிறைய  வாழை இலைகள், காய்கறிகள், கீரைகள் இவற்றை அள்ளிக்கொண்டு  கோசாலை  பசுக்களுக்கு அளிப்போம்.  பெரியவா தரிசனம் செய்வோம்.   ஏதாவது கேட்போம். அவர் அறிவுரைகள் பெறுவோம்.  சாப்பிடுவோம். திரும்புவோம். 

மற்ற நாட்களில் காலை முதல் இரவு வரை  ஆபிஸே கதி என்று இருப்பவர்கள். தனியார் நிறுவனத்தில் வேலை என்பது எளிதல்ல. பயந்து பயந்து தான் வேலை செய்வோம். உத்யோகம் என்றுமே நிரந்தரமானதல்ல. கொடுக்கும் சம்பளத்துக்கு  அவர்கள்  கசக்கிப் பிழிவது பலமடங்கு அதிகமானது என்பது அப்போது எங்களுக்கு எல்லோருக்குமே தெரியும்.  இருந்தும்  அரசாங்க வேலையை விட கொஞ்சம் கூடுதல் சம்பளம் என்பதால்  உயிரை விட்டு உழைத்து உருவானவர்கள் நாங்கள்.

நான் விரும்பிய எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.   ஆனால் தேவையான எல்லாமும் எனக்கு இறைவனிடம் இருந்து கிடைத்தது   என்பது  வாழ்க்கையில்  பிறகு தான்  புரிந்தது.     பக்தி அவனிடம் இருந்ததால் எனக்கு சக்தி வேண்டும் உழைக்க என்று வேண்டினேன்.   சக்தியைக்கொடுப்பதற்கு பதிலாக  கஷ்டங்களை   மேலே மேலே கொடுத்து  புழுவை வண்டாக்கி சிறிய சிறகடித்து பறக்க விட்டான். 

 எனக்கு  என் சாமர்த்தியத்தை  வெளிப்படுத்த அறிவு தேடினேன்.  
''அறிவா கேட்கிறாய். முட்டாளே,   இந்தா   பிரச்சினைகள் . இவற்றை தீர்த்து அறிவைப் பெறு '' என்று கொடுத்துவிட்டான்.  
முன்னேற வழி தெரியாமல்  தவித்தபோது  சிந்தனையையும் சக்தியையும் கொடுத்து உழைக்கச் செய்தான்  முன்னேறினேன். 

ஒவ்வொருநாளும்  எதிர் நீச்சல் வாழ்வில்  தைரியம் இல்லையே என்று ஏங்கினேன்.  கிருஷ்ணன்  ஆபத்துகளை ஒவ்வொன்றாக வரிசையாக அனுப்பினான்  எதிர்கொள்ள சக்தியையும் வழியையும் மனதில் வைத்தான். தைர்யம் வளர்ந்தது. ''என்னதான் நடக்கும் நடக்கட்டுமே''  பாட்டு  வாழ்க்கையில் பாடமாயிற்று.  
உதவ  எவருமில்லையே  என்ன செய்வது  பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டு சாதித்துக் காட்டுவேன்  என்று மிரண்டபோது   அவன்  எதிர்பாராத  பல  சந்தர்ப்பங்களைத் தந்ததை இப்போது நினைத்துப் பார்த்து வியந்து போற்றுகிறேன். கிருஷ்ணா  நீ நல்லவண்டா . 

மொத்தத்தில்  நான்  எதையாவது விரும்பி அதை மட்டும் அவன் அளித்திருந்தால் நான் அழிந்திருப்பேன். நான் ''விரும்பியது'' என்ன என்று தெரிந்த அந்த புத்திசாலி கிருஷ்ணன் எனக்கு  நான் விரும்பியதை விட எனக்கு முக்கியமாக   எது  ''தேவை'' என்பதை நன்றாகவே புரிந்துகொண்டு  தாயை விட பத்திரமாக என்னை கைப்  பிடித்து வழி நடத்தியதற்கு இப்போது நிறைய அவனை நினைத்து எழுதுகிறேன், பேசுகிறேன். அப்போது தெரியவில்லை, புரியவில்லை.  அவன் மேல் கோபம் வந்தது.

எனக்கு '' தேவையான'' து எதுஎன்று என்னை உணர வைத்தது  மஹா பெரியவாளின்  தரிசனம், அவரது அறிவுரைகள் அவரது  பக்தர்களின் அனுபவங்கள்.  என் லக்ஷியம் நிறைவேறிக்கொண்டு வருகிறது.   நன்றி  அவனுக்கும் அவன் காட்டிய  உங்கள் எல்லோருக்கும்.


 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...