Saturday, November 28, 2020

PESUM DEIVAM


 

பேசும் தெய்வம்    J .K SIVAN 



                         ஸ்ரீ காமாக்ஷி சந்நிதியில் கல்யாணம்


நான்  சொல்லாமலேயே  நீங்களே  புரிந்து கொள்வீர்கள்.  இந்த கதையில் வரும்  பக்தர் பெயரை நான் குறிப்பிடவில்லை.  காரணம்  எனக்கு கிடைக்க வில்லை.அவர்  மஹா பெரியவா பக்தர் என்ற அடையாளமே போதும்.  அவர் பூர்வீகம்  கொள்ளிடம் ஆற்றின் தென் கரையில் உள்ள ஒரு கிராமம். அதன் பெயரும் நான் சொல்ல வில்லை.  காரணம் மேலே சொன்னது தான். 

பக்தருக்கு   சென்னையில் ஒரு   தனியார்  நிறுவனத்தில் பலவருஷம் பெரிய உத்யோகம்.   வயதாகி விட்டது.   சில வருஷங்களுக்கு முன்பே  அவர் மனைவி காலமாகி விட்டாள்.  அவருடைய வாரிசுகள்   ரெண்டு  பிள்ளைகள்.   மனைவியின் நகைகளை ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மனுக்கு அர்ப்பணித்து விட்டார். ஏதோ சிறு மனஸ்தாபத்தால்  இரு பிள்ளைகளுடனும்  அவர்  வாழவில்லை.   தனியே  வாழும் நிலை..

சமையலுக்கு ஒரு அம்மா தினமும் வருவாள்.  அவர்  வேலை பார்த்த  தனியார் நிறுவன முதலாளிக்கு  இந்த பக்தர் மேல்  பிரத்யேக அன்பு,  மரியாதை.  ஆகவே   அவருக்கு வெளியே  செல்ல  கம்பனியில்  ஒரு காரும் டிரைவரும் கொடுத்து  இருந்தார்.

ஒரு நாள்  ஸ்ரீ  மஹா பெரியவாளை தர்சனம் செய்ய  பக்தர் மனம்  நினைத்தது.   ஒரு நண்பருடன் சென்றார்.   

 எல்லோரையும் போல்  வரிசையாக  தரிசனம் செய்த பிறகு  அவரது மனதில் ஏதோ தயக்கம் இருப்பதை மஹா பெரியவா கண்டுபிடித்துவிட்டார். அவரை சற்று தள்ளி நிற்க  சொன்னார் . நின்றார்.  சற்று நேரம் கழிந்தது.  கொஞ்சம் கூட்டம் எல்லாம் கழிந்ததும்  பெரியவா அவரை ஜாடையால்  அழைத்தார்.   பக்தர் அருகே சென்று வணங்கி  நின்றார். 

''  நீ என்ன ஏதோ சொல்ல விரும்புகிறாய் போல் இருக்கிறதே. சீக்கிரம் சொல்லு ''
''ஆமாம் பெரியவா  ரொம்ப நாளா  மனசிலே ஒரு எண்ணம்.   என்கிட்ட  ரூ.50,000/- பணம்  சேர்த்து  வச்சிருக்கேன்.   ஏதாவது ஒரு  சின்ன கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்ய உத்தரவு அளிக்க வேண்டும் ''

மஹா பெரியவா பதில் சொல்லவில்லை.   பிரசாதம் கொடுத்து அனுப்பி விட்டார். 

கூட வந்த  நண்பர் காரில் திரும்பும்போது    '' இந்த  ஐம்பதாயிரத்தில் எப்படி ஒரு  கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து, பூஜைக்கு வேண்டிய நிரந்தர நிதி ஏற்படுத்த முடியும் ? என கேட்டார்.

' ஆமாம்  நீ சொல்வது மிகவும் சரியாக இருக்கிறது. ஆதலால் தான் மஹா பெரியவா
 மௌன
மாக  இருந்து விட்டா  போல  தோணுகிறது'' . 

சில நாட்கள் சென்றது.  பக்தர்  உடல் சீர்கெட்டு, படுத்த படுக்கையாகி விட்டார். நண்பரைக் கூப்பிட்டு   ''என்னால்  செல்ல முடியவில்லை,  நீ எனக்காக  மஹா  பெரியவாளைப் போய் தர்சனம் செய்து,   நான் சேர்த்து வைத்த  பணத்தை எப்படி உபயோக  ப்படுத்த வேண்டும் என்று மஹா பெரியவா  கட்டளை இடுகிறாரோ  அப்படியே செய்யக் காத்துக் கொண்டு இருக்கிறேன் '' என்று சொல்லி  அவர் உத்தரவை பெற்றுக்கொண்டு வா அப்பா '' என்கிறார் 

அப்போது மஹா பெரியவா வடக்கே   ஸதாரா சென்று விட்டதால் அங்கே  சென்று  
பெரியவா
தர்சனம் செய்துவிட்டு  காத்திருந்து அவரிடம்  பக்தர் சொல்லி அனுப்பிய விஷயத்தை சொன்னார் நண்பர். 

இப்போதும்  இதற்கும்  பெரியவா  மௌனமாகவே இருந்து விட்டார். ஒன்றும்  பதில் சொல்லவில்லை. உத்தரவிடவில்லை. 

ஆவலாக  காத்திருந்தார் பக்தர்.   ''மஹா பெரியவா என்ன சொன்னார்?''
 ' பெரியவா மௌனம் சாதிச்சா. ஒண்ணுமே  சொல்லலை''
 
ஒருவாரம் பத்துநாள்  ஆகிவிட்டது.  பக்தர் உடல் மேலும்  சக்தி இழந்து பலஹீனம் அதிகமாகி விட்டது.    நண்பரை மீண்டும்  அழைத்து 

''என் உடம்பு ஸ்திதி மிகவும் மோசமாகி விட்டது. ஆதலால்  நீ எப்படியாவது  மஹா பெரியவா  உத்தரவை எப்படியும் வாங்கிக்கொண்டு வா '' என்கிறார் 

மறுபடியும் பெரியவா சந்திப்பு நடந்தது. நண்பர்  பக்தரின்  வேண்டுகோளை அறிவித்து உத்தரவு கேட்டார்.  பெரியவா பேசினார்.  ஆச்சர்யமாக இருந்தது நண்பருக்கு: 

 ''அவன்  பார்யாள்  காலமான பிறகு பிள்ளைகளை கேழ்க்காமல் நகைகளை ஸ்ரீ காமாக்ஷிக்குக் கொடுத்தது தவறு,   அவன் பிள்ளைகள் வந்து என்னைக் கேட்டால், அப்பறம்  ஏதாவது என்ன செய்யலாம் என்று சொல்றேன்'' என்றார்.

பக்தர்  பெரியவா சொன்ன பதிலை கேள்விப்பட்டதும் ஆடிப்போய் விட்டார்.  தனது  மூத்த 
 பிள்ளைக்கு போன் செய்து ஸ்ரீ பெரியவாள் ஆக்ஞையை சொன்னார். மனஸ்தாபங்கள் எல்லாம் மறைந்து, பிள்ளையும் வந்து தகப்பனாரைப் பார்த்து, அவரை தன் வீட்டுக்கு அழைத்துப் போனான் . அங்கு அவர் ஒரு மாத காலம் இருந்து, மாட்டுப்பெண் கொடுத்த ஆகாரத்தைச் சாப்பிட்டு, மன நிறைவுடன் காலமானார்.

பக்தருக்கு நமது முடிவு நெருங்கிவிட்டது தெரிந்தது.  சில நாட்கள் தான் இருக்கிறது என்பதால் ஒரு நாள்  மூத்த மகனை அழைத்து   "இதுவரை  மஹா பெரியவாள் எந்த  உத்தரவும் தரலை. ஆகவே  நானே  சில  தர்ம காரியங்களுக்கு என் சேமிப்பை  அளிக்க  எழுதி வைத்திருக்கிறேன்.   இதற்காவது   பெரியவா
 உத்தரவு  கிடைத்தால்  அப்படியே  செய்யலாம்'' என்று எழுதிக் காண்பித்தார்.  அவரால்  பேச முடியவில்லை. 

பக்தர்  காலமும் முடிந்தது.  கார்யங்களும்  முடிந்தது.   குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்   பக்தரின் நண்பரோடு   காஞ்சிபுரம் சென்று  பெரியவாளிடம் எல்லா விபரத்தையும் சொன்நார்கள்.  

பெரியவா ஒரு நிமிஷம் கண்ணை மூடிக்கொண்டு தியானித்தார்.    பிள்ளையை அழைத்து  ''அவன் வச்சிட்டு போன  பணத்தோடு கூட  கொஞ்சம்   மூலதனமாக  டெபாசிட் பண்ணிடு. அதில் இருந்து வருஷாவருஷம் கிடைக்கிற  வட்டியில் இருந்து,ஏழைகளுக்கு ரூ.2000/- 3000  செலவில் (ஒரு தம்பதிக்கு) பிள்ளை வீட்டார் சம்மதத்தோடு காஞ்சி ஸ்ரீ பங்காரு காமாக்ஷி அம்மன் சந்நதியில் கல்யாணம்  சிக்கனமாக பண்ணி வை. 

 வேறு யாராவது கன்னிகாதானம்  இப்படி  செய்ய  முன்வந்தால்,  நாலு நாள் ஔபாசனம் செய்து வைக்கிற  செலவுக்கு உதவு.  றவர்களுக்கு கீழ்கண்ட லிஸ்டுபடி கல்யாணம் செய்து வைத்து, அன்று  சாயந்திரத்துக்குள்  கட்டுச்சாதக் கூடையுடன் பிரவேச ஹோமத்திற்கு அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்.  இது மாதிரி செய்தால் ஏழைகளுக்கு உபகாரமாக இருக்கும், முடிஞ்சா  இதை செய், 

''நான்  என்னுடைய  வருமானம் சேமிப்பும் சேர்த்து  ஒரு லக்ஷம் அப்பாவுடைய சேமிப்போடு  கூட  இதற்கு  தயார் பண்றேன். மற்ற பந்துக்கள்,  நண்பர்கள்  கிட்டே எல்லாம்  சொல்லி அவர்கள் ஏதாவது கொடுத்தாலும் அதையும் இதோடு சேர்த்து   மொத்தமா டெபாசிட் பண்றேன். இது  அதிக  தொகையை  அளிக்க  மஹா பெரியவா அனுக்ரஹம் செய்யணும் .  ஸ்ரீ பெரியவாளின் பூர்ண அனுக்ரஹத்தோடு சென்னை திரும்பினார்கள்
.
ஸ்ரீ காமாக்ஷி சித்தமல்லி வாத்யமான் விவாஹ டிரஸ்டு" என்ற பெயருடன், ஒரு லக்ஷம் மூலதனத்தில் ஆரம்பித்து, அந்த டிரஸ்டு நகலை சென்ற 11-4-82 அன்று ஸ்ரீ பெரியவாள் முன்னிலையில் சமர்ப்பித்து அவர்கள் உத்தரவு பெற்று கொள்ளப்பட்டது. 

 மஹா பெரியவாள்  ஆலோசனையில் தயாரான  கல்யாணத்திற்கு லிஸ்டு (ஒரு தம்பதிக்கு ஆகும் உத்தேச செலவினம்)
(1) திருமாங்கல்யம் 4 கிராம் அளவில்; 
(2) நிச்சயதார்த்த வேஷ்டி, அங்கவஸ்திரம்; 
(3) நிச்சயதார்த்தப்புடவை; 
(4) முஹூர்த்தப் புடவை, (பட்டு இல்லை ) முஹூர்த்த வேஷ்டி, அங்கவஸ்திரம்; 
(5) குத்துவிளக்கு 1 
(6) செம்பு 2;
 (7) பஞ்சபாத்ர உத்தரணி ஒரு செட்;
 (8) தாம்பாளம் 1; 
(9) குத்தடுக்கு 1; 
(10) காசியாத்ரை சாமான்கள்;
 (11) வைதீகச் செலவு, சாப்பாட்டு செலவு எல்லாம் சேர்ந்து ரூ.2000-3000   (அப்போது தீர்மானித்தது)
 அளவில் ஒரு தம்பதிக்கு என்ற முறையில் இந்தத்திட்டம் சமர்பிக்கப்பட்டது. ஜானவாசம் இல்லாமல் நிச்சயதார்த்தம்; வரதக்ஷிணை கிடையாது, நிச்சயதார்த்த, முஹூர்த்தப் புடவைகள், நூல் புடவைகளாக இருக்கும், ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மன் சந்நிதியில் கல்யாணம் என்ற சிறப்பு அம்சங்களோடு இந்த விவாஹ திட்டம் நடைபெற உத்தரவானது.   

(நான் வலைதளத்தில் மேலே கண்ட  பெயரில்  இந்த டிரஸ்ட் இன்னும் செயல்படுகிறதா, மேலே கண்ட பெரியவா சொன்ன சேவை தொடர்கிறதா என்று அறிய  வலைதளத்தில் தேடினேன்.  என்  முயற்சி வெற்றி பெறவில்லை. விவரம் எதுவும் அகப்படவில்லை. யாருக்காவது விலாசம்,  தொடர்பு டெலிபோன் எண்  தெரிந்தால்  அனுப்பினால் நாமும் உதவலாம்) 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...