Saturday, November 7, 2020

ELLAM ONRE

  எல்லாம் ஒன்றே - 2         J.K.  SIVAN 


எல்லாம் ஒன்றாக  ஒரே ஆசாமியாக இருந்தால்  எது தப்பு, எது சரி?  எல்லாம் நல்லதையே தரும் போது தப்பு எங்கிருந்து வரும்.  சரி தப்பு, இன்பம் துன்பம், கெடுதி, தீமை, நன்மை என்று பிரித்து நோக்கும்போது தான் தகராறுகள் வருகிறது.

ரெண்டணா புஸ்தம் மேலே  என்ன சொல்கிறது,  இல்லை,   என்ன கேட்கிறது தெரியுமா?   ''நீ யார்?'' 
நான்  யாரா, தெரியவில்லை, இதோ சில்க் ஜிப்பா, ஜரிகை வேஷ்டி, பெரிய பெல்ட் இடுப்பில் கட்டி உன் எதிரே நிற்கிறேனே?  
''ஓஹோ  நீ  தான் உன் உடலா?'' அப்படியென்றால் நேற்று ராத்திரி  ஒரு  அரணையோ, பூரானோ உன் மேல் நீ தூங்கும்போது  வயிற்றில் ஏறி அந்த பக்கம், நல்ல வேலை கடிக்காமல், போயிற்றே, உனக்கு தெரியவில்லையே, அப்போது எங்கே போயிருந்தாய்? உன் உடம்பு  நீ இல்லை, சுப்பிரமணி  இந்த உடலுக்கு  யாரோ இட்ட பெயர்.  நிறைய சுப்ரமணிகளில்  நீ  கே .ஆர். சுப்பிரமணி. அதாவது உன் உடல். நீ அது இல்லை,  அதையும் தாண்டி ஒன்று இருக்கிறது. அது தான் நீ. 

AC   மைனஸ்  25ல்  வைத்துக்கொண்டு  தூங்கும்போது  எங்கோ ஒரு  கூரான மலை உச்சியில் மேலே இருந்து கீழே பாதாளத்தில் விழுவதாக ராத்திரி கனவு கண்டு  உளறினாயே, உடல் வியர்த்ததே, உன் மனைவி உன்னை  உலுக்கி  ''என்ன ஆச்சு, கனவா?''என்று எழுப்பியதும் பேந்த பேந்த விழித்தாயே, அந்த மலை உச்சி மேல் இருந்து விழுந்தவன் நீயா, யாரோவா? நீ தான் AC  அறையில் படுக்கையில் இருந்தாயே . அவன் எங்கே,? நீ வேறு அவன் வேறு. நீ கனவில் பார்த்தது உன் உடலின் உருவம்? அதை கண்டு அலறி எழுந்தது ....?

சரி கனவு ஒன்றுமில்லை. நன்றாக குறட்டை விட்டு தூங்கினது உனக்கே தெரியாது. மறுநாள் காலையில் ''ஆஹா  நல்ல தூக்கம், மரக்கட்டை மாதிரி தூங்கினேன்'' என்று ஆனந்தப்பட்டாயே . அப்படி உறங்கியது யார். உன் உடலா, அது வேறா?  ஏதோ ஒரு இருளை,  அந்தகாரத்தை, விவரம் தெரியாததை நீ  என்று ஒப்புக்கொள்ளமாட்டாயே.  ஆகவே  நீ இந்த உடல் அல்ல,  கனவில் வந்தவனும் , மரக்கட்டையும்  நீ அல்ல. அதையெல்லாம் தாண்டி ஒன்று...  இப்படி நீ பார்த்த மூன்றுமே ரெண்டு வகையில் அடங்கும்.   ஒன்றை சுட்டிக் காட்டி மற்றொன்றை அறியும்  நிலை.  மலை உச்சி சமாச்சாரம்.  ரெண்டாவது  தன்னையே  அறியாத நிலை.  அந்தகாரமான  ஆழ்ந்த தூக்க நிலையை அனுபவித்தாய், சொல்லத்  தெரியவில்லை.  அது.  அதைத்தான்  ஜாக்ரதா, சுஷுப்தி, ஸ்வப்ன   நிலை என்பது. நீ அதையும் தாண்டி வேறு நிலையில்  உள்ளவன்.  அதைத் தான் ''துரியம்'' என்பார்கள்.  ரொம்ப பயப்படவேண்டாம்.  புரிந்தவரையில் புரிந்துகொண்டால் போதும். தானாகவே யோசிக்க யோசிக்க அற்புதமாக விளங்கும்.

துரீயத்தை  எப்படி விளக்கலாம்?    எதையும் சுட்டிக்காட்டி  அதுபோல்,  அதே தான்  என்ற  அறிவில் அடங்காமல்,   ஜடமாக,  ஜடத்தன்மை இல்லாமல் இருப்பதாகவும் ஏதாவது ஒன்று இருந்தால்  அதை அறிந்துகொள்ளும் அறிவு இருந்தால் அது.  உண்மையில் நீ  தானப்பா அது. நீ உணரவில்லை. பயிற்சி இல்லை. 

துரியத்தில் சஞ்சரிப்பவன்,  இந்த உலகத்தில் இருந்தாலும், ஜாக்ரதா  என்ற விழிப்புணர்வில் இருந்தால்  அதை துரியத்தில் இருப்பதாக அறிபவன். ஏற்க்கனவே கண்ட பழைய உலகம் அல்ல. துரீய உலகம்.  அது தான் ஐயா  ''அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் விளங்கும் ஆனந்த பூர்த்தி''   கண்டதை, புறத்தில் புறத்தில் காண்பவன். வித்தியாசம் அறியாத  அபேத நிலையில் உள்ளவன்.  உறக்கம்  விழிப்பு, எல்லாம் ஒரே நிலை அவனுக்கு . ரமணர் படத்தில் அவர் முகம் உற்று பாருங்கள் இதை படித்துவிட்டு.   பாதி புரியும். அவன் ப்ரம்ம ஞானி.   அகம்  புறம்  எல்லாமே ஒன்று அவனுக்கு.    தான்  என்ற  எண்ணம் தன்னை அறிந்ததால் விலகியவன்.
இந்த உடல்  நீக்கினாலும் நீங்காதவன்.  மரணம் உடலுக்கு வந்தாலும்  மரணிக்காதவன்.  உடல் இருக்கும்போதும் அது இல்லாதவன்.  அவன் தான்  ஜீவன் முக்தன்.  அது தான் சார்  நீங்கள்.... மிஸ்டர் நித்தியானந்தம். (நித்யானந்தா என்று வேறு  யாரோ அல்ல.)

மேலே  அடுத்த பதிவில்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...