Sunday, November 29, 2020

KRISHNA THE LEADER

                        பெருந்தலைவன் , வழிகாட்டி. J K  SIVAN 



நாம்  நேரில் பார்த்திராத,  குரல் கேட்காத, ஐந்தாயிரம் வருஷம் முன்பு வாழ்ந்த கிருஷ்ணன் ஏன் எனது மனதில் பசை போல் ஒட்டிக்கொண்டிருக்கிறான்?  அப்படி என்ன விசேஷமான சக்தி குணம், திறமை, சாதுர்யம்  அவனிடம்  என்று பார்த்தேன்.   அவன் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியது புலப்பட்டது. எப்படி?

ஹிந்து கடவுள்களில்  முதலிடம் பிடித்தவனாக இருக்கிறான். கடவுளாக  மட்டுமா இருந்தான் ?  சிறந்த  தலைவனாக,  அரசனாக,  ஞானியாக, பேச்சாளியாக, சமயோசித ராஜதந்திரியாக, பலவானாக, எல்லாமுமாக இருந்தான் என்ற  ஒரு  விசேஷம்  போதுமே. எந்த சந்தர்ப்பத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை அவனிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும்.

இப்போதெல்லாம்   யார் யாரையெல்லாமோ  ஒன்றுமில்லாததற்கே  புகழ்ந்து தள்ளுகிறோம். இவரைப்போல எவராவது உண்டா  என்கிறோம்.  பெரிய  கார்பொரேட் கம்பெனி, அதிபர்களை யெல்லாம்  மஹா கெட்டிக்காரர்கள், புத்திசாலிகள், தீர்க்க தரிசிகள் என்று புகழ்கிறோமே   ஒரு  நிமிஷம்  நமது கிருஷ்ணனை  நினைத்துப் பார்ப்போம். சற்று யோசித்தால்  நன்றாக புரியும். 

கிருஷ்ணனுக்கு  வெகு நன்றாக அறிந்தவன்.  கௌரவ சேனையின் சக்திக்கு  முன் பாண்டவ சேனை பலமற்றது. 11 அக்ரோணி  சேனை,  பீஷ்ம துரோணர்,  கிருபர் , அஸ்வத்தாமா, கர்ணன்  சல்லியன் போன்ற மஹா ரதர்கள். நிறைய பேர். நீளமான லிஸ்ட் எங்கே,    ஏழு அக்ரோணி பாண்டவர்கள் சேனை எங்கே?

தான் அர்ஜூனனுக்கும் பாண்டவர்களுக்கும் உதவப்போகிறோம்  அவர்கள் தான் வெல்லப் போகிறார்கள் என்று க்ரிஷ்ணனுக்கு யுத்தம் வரும் முன்பே தெரியும்.  எந்த சந்தர்ப்பத்திலும் அவன் அமைதியை இழக்கவில்லை. அர்ஜுனனை, மற்ற பாண்டவர்களை வழி நடத்தி  ஜெயிக்க வைத்த  திறமை  பிளானிங் ஒன்றே போதுமே அவன் திறமைக்கு  சாட்சி சொல்ல.   நிறைய  அழுத்தம் வரும்போது அமைதியை, நெஞ்சுறுதியை இழக்காதவன் தான்  திறமைசாலி.

கிருஷ்ணன் யார் பேசினாலும் அமைதியாகக்  கேட்பவன்.  அர்ஜுனன்  எதிர்பாராமல் திடீரென்று யுத்தகளத்தில்  ''நான் யுத்தம் புரிய போவதில்லை''  என்றபோதும்,  ''வெற்றி எமக்கே நாங்கள் தான் வெற்றி பெறப்போகிறோம்''    என்று துரியோதனன் முழங்கியபோதும் கிருஷ்ணன்  துளியும்  கலங்கவில்லை.  உணர்ச்சி வசப்படவில்லை.  அவன் மனதில் வெற்றி எங்கே இருக்கிறது, யார் பக்கம் என்று திட்டமிட்டாகிவிட்டது.  ஒரு சிறந்த  பெரிய  நிர்வாகத் திலும் தலைமைப்பதவியில்  இருப்பவன் இடையூறுகளை லக்ஷியம் பண்ணாமல், தீர ஆலோசித்து தனக்கு எது  சரியான முடிவாக தோன்றுகிறதோ, அதை  நடத்திக் காட்டவேண்டும். 

மற்றவர்களோடு எல்லாம் நான் சேர, இணைய மாட்டேன், பேசமாட்டேன் என்று உயர் அதிகாரிகள் போல்  கிருஷ்ணன்  இல்லை.  சாதாரண யாதவ சிறுவன் முதல்  பீஷ்மர்  நாரதர் வரை எல்லோருடனும்  இணைந்து  சரிசமமாக பழகி அனைவர் அன்பையும் சம்பாதித்தவன் கிருஷ்ணன்.  ஜாதி மதம், ஏழை பணக்காரன் எந்த வித்யாசமும் இல்லை.  இன்றும் நான் அவன்  குசேலன் என்ற பரம ஏழையை  எப்படி மனதார வரவேற்று உபசரித்து பழகினான் என்று அறிந்து மகிழ்கிறோம். 

தக்க நேரத்தில்  எது தர்மம், நீதி, நெறி, முறை என்று உணர்த்தி    சரியாக எடுத்துரைக்க வேண்டியது தலைவனின் கடமை. அதை அற்புதமாக செய்தவன் கிருஷ்ணன்.  ஒரு  வினாடி நேரத்தில்  திடீரென்று வில்லை கீழே போட்டுவிட்டு யுத்தம் புரியமாட்டேன் என்று தளர்ந்த அர்ஜுனனைத் தேற்றி, அவன் செய்ய வேண்டிய தர்மத்தை எடுத்துரைத்து  போர் புரிய வைத்து  யுத்தத்தில்  வெற்றியும் பெற  வைக்க,   கிருஷ்ணன்  படாத பாடு  எதுவும்  படவில்லை.  கண் இமைக்கும்  நேரத்தில் அவனை சரியானபாதையில் மீண்டும் செல்ல வைத்தான். 

 700-800 ஸ்லோகங்களை மூன்று நாளாக  யுத்தகளத்தில் சொல்லி விளக்கவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் புரிய வைத்தான். நமக்கு படிக்க சௌகர்யமாக இருக்கும் என்று  பெரிய புத்தகமாக  வியாசர்  எழுதி வைத்திருக்கிறார்.  யுத்தகளத்தில் இதற்கெல்லாம் நேரம்  எது?  மனதில் உள்ளதை சொன்னவனும் ஞானி,  அதை சொல்லாமலேயே  புரியவைத்தவன்  கிருஷ்ணன்  அர்ஜுனனை விடசிறந்த   பெரிய  ஒரு  ப்ரம்ம ஞானி. 

சொந்த,  நெருங்கிய,   உறவானாலும்  கடமை என்று வரும்போது  பாரபக்ஷம் பார்க்காத நிலையை  கற்றுக்கொடுத்தவன் கிருஷ்ணன் எனும்  ஜட்ஜ்.

ஒரு  யுத்தம், போர், பல பரிக்ஷை என்றால்  எதிராளியின் சக்தி, யுக்தி, உத்தி, எல்லாம்  கணக்கில்  கொள்ள வேண்டும். கணிக்கப்பட வேண்டும்.  அதை வெற்றி கொள்ள  என்ன  ஆயத்தம் மேற் கொள்ள வேண்டும். தக்க தருணம் எது என்று அறிந்து செயல்பட  திறமை, சமயோசிதம் வேண்டும். பலஹீனத்தையும் பலமாக  மாற்ற  திறமையோடு  முடித்தவன் கிருஷ்ணன்.   எவரை  எப்படி எதிர்கொள்ள, எவரைத்  தயார் செய்ய வேண்டும் என்று முன்பே  திட்டமிட்டு நிறைவேற்றியவன்.   ஒரு பெரிய  நிர்வாகத்தை நடத்துபவனுக்கு இந்த தந்திரம்  சாதுர்யம், சாமர்த்தியம், எல்லாம்  அவசியம்..

உணர்ச்சி வசப்படுவது  வெற்றி வாய்ப்புக்கு எப்போதும்  எதிரி.  செய்யும் தொழிலில் கடமை, பொறுப்புணர்ச்சி, நேர்மை, நியாயம்,  வலிமை, உறுதி,   சக்தியை வீணாக்காமல் பலத்தை  உபயோகிப்பது என்பது ஒரு பெரிய நிறுவனத்திற்கு மட்டும் தேவை மட்டுமல்ல, மாபெரும் யுத்த களத்திலும் அது தேவை என்று உணர்த்தி அர்ஜுனனை செயல்வீரன் ஆக்கியவன் கிருஷ்ணன்.

ஒரு சங்கடமான நிலை.   மிகவும் நெருக்கமாக  வேண்டிய  இருவரில் ஒருவரை ஆதரிக்க வேண்டுமென்றால் அடுத்தவரை எதிர்த்து தான் ஆகவேண்டும். மனதில் உறுதி இதற்கு வேண்டும்.   கிருஷ்ணன்  பாண்டவர்களுக்கு  பக்கத்துணையாக  ஆயுதமின்றி தனியாளாக இருக்க நிச்சயித்தான். எக்காரணத்தைக் கொண்டும்  அதில்  பிறழவில்லை.  ஒரு பெரிய நிறுவன  அதிகாரி  முன் வைத்த காலை பின் வைக்க மாட்டான். வருவதை எதிர்கொள்ள தயாராக  தன்னை பாதுகாப்பான நிலையில் வைத்துக் கொள்கிறான்.

ஒரு பெரிய பொறுப்புள்ள தலைவன்  அமைதி காக்க வேண்டும், எல்லோரையும் மதிக்க வேண்டும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப அடக்கமாக, பொறுமையாக  தன்னுடைய வலிமையான செயல்பாட்டை தொடரவேண்டும்.  அவன் முன்னுதாரணமாக இருந்தால் அவனை பின்பற்றுவோர் முழுமனதோடு அவனை பின்பற்றுவார்கள்.  மனத்தில் உள்ளே இருந்து கொண்டு  வழிநடத்தும் ஆத்மாவின் குரலை  புறக்கணிக்க கூடாது.  இப்படி  நடந்து காட்டியவன் கிருஷ்ணன். 
 
சிலர் எப்போதும் தமது குறைகளை, துயரங்களைச் சொல்லிக்கொண்டே  மகிழ்பவர்கள். பிறர் அனுதாபம் எப்போதும் தேடுபவர்கள். அவர்கள் தலைவர்களாக முடியாது.  கிருஷ்ணன்  பிறந்ததிலிருந்து ஒவ்வொருநாளும்  உயிருக்கு வந்த  பல  ஆபத்துகளை சந்தித்தாலும்  அவற்றைப் பற்றி எங்கும் மூச்சு விட்டதில்லை.  பாகவதத்தில் எங்கு தேடியும் கிடைக்காது. ஆனால் பிறர் துன்பம் தீர்ப்பதில் முன் நின்றவன்.முதல்வன்.

தனக்கு ஆதாயம் இல்லாமல் பிறர்க்கு உதவவே உழைப்பவன் பெருந்தலைவன் ..  மஹாபாரத த்தால் கிருஷ்ணன் என்ன ஆதாயம், சுய லாபம் பெற்றான்? உடம்பு முழுக்க  அம்புகளைத்தான் 18 நாட்கள் வாங்கினான், தாங்கினான்.  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சென்று அவன் முகத்தை பாருங்கள் தெரியும். தர்மம் வெல்லவேண்டும், தீமை அழியவேண்டும்  என்று தன்னை வருத்திக் கொண்டவன். 

தன்னை சுற்றி  ஏதாவது பிரபலம், புகழ்,  கைதட்டல்,  விளம்பரம்  எதுவும்  இல்லாமல்  தான் இருப்பது தெரியாமலேயே, தேவைப்படாமல்,  எந்த  காரியத்தையும்  கச்சிதமாக முடிப்பவன் தான் சிறந்த தலைவன்.  கிருஷ்ணன் அப்படித்தான் மஹா பாரதத்தில் பங்கேற்றவன். எந்த  ஆயுதமும் தாங்காமல்  தேர் மட்டும் ஒட்டியே , பாண்டவர்களை வெற்றி பெறச் செய்தவன்.  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இதைத்தான்.  
 
ஒரு சிறந்த தலைவன் தனது கஷ்டங்களை, துன்பங்களை பொருட்படுத்தாமல், அவற்றை ஒரு பொருளாக்காமல், அவனது சேவைகளை சிறப்பாமல் செய்பவன். இதற்கு உதாரண புருஷன்.  கிருஷ்ணன்  தான்.   அவன் பிறந்ததே சிறைச்சாலையில், பெற்றோரை  பிரிந்தவன்.அவற்றை அவன் ஒரு போதும் மூச்சு கூட விட்டதில்லை. நாம் தான் தேடித்தேடி அவன் பட்ட  துயரை பட்டியலிடுகிறோம்.  

தன்னுடைய  ,கல்வி கேள்வி  ஞானம் எல்லாம்  பிறருக்கு  ப்ரயோஜனப்படும்படி  வழி நடத்து பவன் தான் தலைவன்.   கிருஷ்ணன் கீதை ஒன்றே போதுமே இதை தெளிவாக்க.

பிறரை  உழைக்கச்செயது பயன் பெற வழிநடத்துபவன் தலைவன்.  உழைக்காமல் தனது நிழலில் பலனை அனுபவிக்க செய்வது தவறான வழி.  கிருஷ்ணன் மனது வைத்திருந்தால்  ஒரு சில நிமிஷங்களிலேயே  மகாபாரத யுத்தத்தை  தானே  முடித்திருக்க முடித்தவன்.  18 நாள்  அர்ஜுனன், மற்ற பாண்டவர்கள் கடினமாக உழைத்து வெற்றியின் பலனை அனுபவிக்க உதவியவர்.  குழந்தை தானாகவே  நடக்கும் முன்பு பலமுறை விழுந்து எழுந்திருக்க வேண்டும். தூக்கிக்கொண்டே இருந்தால் எப்போது நடக்கும்? இதை தான் அவரவர் காலில் அவரவர் நிற்க அறிந்துகொள்வது.

சிறந்த  தலைவன்,  கடமை , பொறுப்பு மிக்கவன்   சொந்தம், பந்தம், நட்பு,  என்று பாரபக்ஷம் பார்க்காத  பொது நலம் ஒன்றே மனதில் கொண்டவனாக இருக்க வேண்டும். இப்போது அப்படி  ஒருவரைக்கூட  பார்க்கக் கூட முடியவில்லை என்று குறை பட்டுக்கொள்கிறோம்.  கிருஷ்ணன்  தனது சொந்த மாமன் என்று கூட  துளியும் லக்ஷியம் பண்ணாமல்  தீயவன் என்பதால் அவனைக் கொன்றான்.  

ஆஹா  எவ்வளவு சிறந்த சிந்தனையாளன், வாயைத் திறந்து பேசமாட்டானா என்று ஆவலோடு காத்திருக்கச்  செய்பவன் தலைவன். வார்த்தைகள் அவன் கைப்பாவை. அறிவுரைகள்பொருத்த
மாக தானே வெள்ளமாக வெளிவரும்.   கிருஷ்ணன்  அப்படித்தான் அறியப்பட்டவன் .


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...