Monday, November 9, 2020

ELLAM ONRE

  எல்லாம் ஒன்றே - 3       J.K.  SIVAN 


தெய்வம் என்றால் யார்?  அருளின் உருவம், வடிவம்.  அருள் என்பது என்ன?   எப்போது  ''தான்''என்கிற  ஒரு  துண்டு அறுந்து விலகிவிட்டதோ  இருக்கும்  மீதி. அந்த நிலையை அடைந்தவன் தான் தெய்வமே.  தெய்வம் அவன் எல்லாம் ஒன்றே.    திருமூலர் சொல்வது இப்போது புரியும்   '' அன்பும் சிவமும் வேறென்பார் அறிகிலார், அன்பே சிவமாவதை  ஆரும்  அறிகிலார்,  அன்பே சிவமாவதை  ஆரும்  அறிந்தபின், அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே'' எல்லாம் ஒரே நிலை. 

அதெல்லாம் சரி,  கடவுள் என்பவர்  நாம்  இதெல்லாம் காண்கிறோமே அதெல்லாம்  இல்லை .  நம்மால் காண முடியாதவர். அப்படியென்றால்  கடவுள்  இல்லை அல்லவா?  அது தான் தப்பு. நம் கண்ணுக்கு காணமுடியவில்லை இல்லை என்று ஆகிவிடுமா?  இல்லை.  அவர் இன்றி  இங்கே  ஒரு அணுவும் அசையாது. எல்லாமும் எல்லோரும் அவருள் அடக்கம். சர்வ வியாபி என்கிறோம்.  சர்வம் ப்ரம்ம மயம் ஜகத். என்கிறோமே  அது.   நம் அறிவினால் அறியப்படாதவர்.  இந்த  '' உலகத்தை  கடந்து  உள்ளே  நிற்பவர்''  என்பதால்  தான்  ''கட உள்'' ,   நம்மால்  அறிய  முடிந்த ஜட  வஸ்துக்கள், சித்து  ரெண்டும் படைத்தவர்....  நம்மால்  அறியப்படாதவர்  என்றேன் . அறிய முடியாதவர்  என்று சொல்லவில்லை. நமது முயற்சியால்  ஒருவாறு உணர முடிந்தவர். ''அவனருளால்  அவன் தாளை'' வணங்கமுடியும்.   எந்த அளவுக்கு நம்மால்  அவர் மஹிமையை அறிந்து அதனால் பயனடையமுடியுமோ அந்த அளவுக்கு அறிவை வழங்கியவர்.  அவர் தான் சத், சித், ஆனந்தம்  மூன்றும்  ஒன்றானவர்.   சத்:  சத்யம், நிலையானது. அழிவற்றவர்.    சித்:  பேரறிவு.  பேரறிவாளன் துணை  என்கிறோமே அதனால் தான்.   நமக்குள்ளது சிற்றறிவு.  எல்லைக்குட்பட்டது. அவருக்கு எல்லையற்றது.  தடை இல்லாதது. அதில்  தவறு,  ஒழுங்கீனம் எதுவுமே இல்லையே.  அந்த பேரறிவு  எத்தனையோ முறை   இது தப்பு, இது தவறு  ஒழுங்கீனம்,  இப்படி செய்  என்று தூண்டி நல்வழி காட்டியும் நமது  சிற்றறிவு அதை உணர்வதில்லை.   ஒரு சிறிய  ஆலம்  விதைக்குள் எவ்வளவு பெரிய  விருக்ஷத்தை வைத்திருக்கிறது அந்த பேரறிவு.  எல்லா ஜடப்பொருள்களையும் ஒரு சிறந்த  முறையில் நடத்திச் செல்ல  '  தகுந்த  'சித்''  வேண்டும்.  அது அந்த பேரறிவு. தெய்வம் எனப்படுவது.    

ஆனந்தம்  எனப்படுவது  எந்த  ஒரு ஆசையும் அற்ற நிலை.  திருமூலர் அற்புதமாக எளிதாக  அழகாக புரியும் தமிழில் ''ஆசை அறுமின்கள்   ஆசை அறுமின்கள், ஆசை படப்பட  ஆய்வரும்  துன்பங்கள், ஆசையை விட விட   ஆனந்தமாமே ''  என்பதை இதைத்தான்.  எப்போதும் சாந்தமான நிலை.   தனக்கு  தனது நிலையிலேயே  திருப்தியுள்ள  அந்த நிலை தான்  ஆனந்தம்.   சத், சித் , ஆனந்தம்  என்ற இந்த மூன்றும் ஒன்றான நிலை அந்த பேரறிவு. ஒன்று குறைந்தாலும்  ஆனந்தம் இல்லை.  இப்படிப்பட்ட  நிலையை எவராலும் அடைய முடியும். அதை அடைந்த  சிற்றறிவாளன் தான்  பேரறிவாளன்.   எல்லாம்  கடந்ததற்கு  பேர், அடையாளம், உருவம் என்று தனியாக ஒன்றில்லை.  கடவுளுக்கு நாம்  அளிப்பது தான் உருவம், நாமம்.   ''அருவத்தை உருவமாக்கி''  நம்மை நாமே   மகிழ்வித்துக் கொள்வது.  எல்லாம் ஒன்றான அவரை எந்த உருவிலும் பெயரிலும் கூட  நாம் உணரலாம்.   அந்த கடவுளிடம் காட்டும் அன்பை, மற்ற உயிர்களிடத்தும்  காட்ட தவறினால்  வழிபாடு  பயனற்றது. அவனே எல்லாம் என்று இருக்கும்போது பாகுபாடு செய்வது தவறு. குறை. முயன்றால் தான்  அவரை எல்லாம் ஒன்றே என்று காட்டும்.  அதைத் தான் '' முயற்சி  ''திரு''  வினை யாக்கும்''  என்பது. 


அருவத்தை  பல உருவத்தில் கண்டு கண்டு மகிழ்ந்து மனம் ஒன்றி அவரோடு இணைந்த பின்  உருவம் தேவையற்றதாகி விடும். அருவம் புரியும்.  சைக்கிளில்  மிதித்து ஓட்டும்போது   பாலன்ஸ்  வந்தபிறகு   பிடித்துக்கொண்டு கூடவே ஓடிவர யாரும் தேவையில்லை.  காய்  பழுக்கப் பழுக்க  இனிக்கும்.  மனம் பக்குவப்பட்டுவிட்டால்  குருநாதன் ஒருவர் மேலே வழிகாட்ட  தானே  கிடைப்பார்.  அந்த வழி நேர்வழி, கற்பனையற்ற, துன்பமற்ற, இன்ப வழி. துரீயத்தை காட்டும் இயற்கை  வழி.  அடியெடுத்து வைக்க காட்டி விட்டால் மேற்கொண்டு தானே  நடப்போம்.    ''அறியாத''  காலத்தில்  முயல்வது ,செய்வது  தான்  பக்தி.  அறிந்தபின்  அதன்  பெயர்  ''ஞானம்''.   பக்திக்கு  ரெண்டு வழி.  ஒன்று  நாம ரூபங்களில்  பேரறிவை உணர்வது  பக்தி.  மற்றொன்று அன்பினால் அனைத்தையும்  நேசிப்பது  கர்மம்.   

ஒரு வஸ்துவை வெகு காலம்  காணாமலே இருந்தாலும்  அது இருப்பதை உணர்வது தான் நம்பிக்கை.  நம்பிக்கை ஒருநாள்  அதை காணச்செய்யும்.   நம்பாதவர்கள் எக்காலத்திலும் அதை உணரப்போவதில்லை, காணப்போவதில்லை.  நம்மைச்சுற்றி நாம் காண்பதெல்லாம் அந்த நம்பிக்கையை வளர்க்கக்கூடியவை. அதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.   காணாததெல்லாம்  கிடையாது என்று ஆகாது.   எந்த கொள்கைக்குள்ளும் போகவேண்டாம்.  கடவுள்  என்ற ஒரு பேரறிவு உள்ளது   என்ற நம்பிக்கை மனதில் ஆழப் பதிந்தால் போதும். தானாகவே  வித்து விருக்ஷமாகும். பெரிதாக வளர்ந்து வேறெதுவும் இல்லை, அதே எல்லாம். எல்லாம் ஒன்றே  என்று காட்டும்.  நீ காணாமல் போய்விடுவாயே. அதற்குள் கலந்து ஒன்றானபின் நீ யார் நான் யார்? புரிகிறதா. 

மேலே  அந்த  ரெண்டணா புஸ்தகத்திற்குள்  போகலாமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...