Tuesday, November 10, 2020

RAMAYANAM

 

ராமாயணம் J K SIVAN

9. நான் மூலிகை கொண்டுவருகிறேன்.

ஆஞ்சநேயன் வெற்றியோடு இலங்கை யிலிருந்து திரும்பினான். சீதையை கண்டுபிடித்து பேசிவிட்டு வந்திருக்கிறான் என்ற சந்தோஷமான செய்தி அங்கதன் தலைமையில் உள்ள வானரவீரர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி தந்து அந்த அவசர செய்தி தலைவன் சுக்ரீவனுக்கு செய்தி போயிற்று. ''அப்பாடா இனி நாம் நமது ஊர் கிஷ்கிந் தைக்கு திரும்பலாம்'' என்று வானரவீரர்களும் மகிழ்ந்தனர்
சுக்ரீவனோடு ராமனை ஹனுமான் சந்திக் கிறான். சீதை கொடுத்த சூடாமணியை அளிக்கிறான். அவளது நிலைமை, தான் ராவணனை சந்தித்தது பற்றி எல்லாம் சொல்கிறான். விரைவில் ராமலக்ஷ்மணர்கள் வானர வீரர்களோடு தெற்கு கடற்கரை நோக்கி செல்கிறார்கள். இனி கடலைக் கடந்து இலங்கை செல்லவேண்டும். சில தினங்கள் காத்திருந்த பின் கடலரசனை, சமுத்திர ராஜனை நேரில் சந்திக்கிறான் ராமன். ''ஸ்ரீ ராமா, சுக்ரீவன் படையில் நளன் என்று ஒரு வானரவீரன் உள்ளான். விஸ்வகர்மா என்னும் தேவ சிற்பியின் மகன். அவன் விரைவாக பாலம் அமைப்பதில் நிபுணன். அவனை என் மேல் இலங்கைக்கு பாலம் எழுப்ப சொல்லுங்கள். அதை நான் தாங்குகிறேன்''. நளன் மற்ற வானரவீரர்கள் உதவியோடு உடனே பாலம் அமைக்க துவங்கினான். அந்த பாலம் தான் சேது பாலம். அது இன்றும் இருக்கிறது. பல்லாயிர வருஷங்களில் கடல் நீர் மட்டம் உயர்ந்து அந்த பாலம் இன்னும் கடலடியில் இந்தியாவை ஸ்ரீலங்கா வுடன் இணைத்தவாறு காண்கிறது.
அதை அழித்து கடல் வழி ஆழப்படுத்தும் செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டு அது அற்புதமாக கடலடியில் இன்றும் நினைவுச் சின்னமாக காண்கிறது.
வானர சேனை ராம லக்ஷ்மணர்களோடு லங்கைக்கு பாலத்தை கடந்து செல்கிறது.
இலங்கையில் ஒற்றர்கள் மெல்லாம் பாலம் அமைத்த செய்தி பரவுகிறது. விபீஷணன் சுக்ரீவனின் படை இலங்கையை அடைந்து விட்டது என்று அறிந்து ராவணனுக்கு மீண்டும் அறிவுரை சொல்கிறான்.
''அண்ணா, எனக்கு என்னவோ நாம் பேராபத் தில் இருக்கிறோம் என்று படுகிறது. கடக்க முடியாத சமுத்ரத்தையே கடந்து பாலம் அமைத்து ராமலக்ஷ்மணர்கள் சுக்ரீவனின் சேனையோடு இலங்கை வந்து கொண்டி ருக்கிறார்கள். இந்த ராஜ்யத்தில் அனைவர் உயிரும் காக்க, நமது உயிர்களை காப்பாற் றிக்கொள்ள நீங்கள் தயவு செய்து இனியும் கால தாமதம் செய்யாமல் சிறைப்பிடித்து வந்த சீதையை ராமனிடம் சேர்ப்பித்து விடுங்கள். ராமனிடம் சமாதானமாக உறவு தேடுங்கள். நமது அழிவை நிறுத்துவோம்'' என்றான்.
மிகவும் கடுங்கோபத்தோடு ராவணன் அவன் அறிவுரையை நிராகரித்து விபீஷணனைக் கொல்லாமல் விடுகிறான். விபீஷணன் இனியும் அங்கிருந்து பயனில்லை என்பதை உணர்ந்து நேராக ராமன் இருக்கும் இடம் வந்து சுக்ரீவனை சந்தித்து ராமனைச் சரண டையும் தனது எண்ணத்தை தெரிவிக்கிறான்.
ராமன் வானரசேனையுடன் இலங்கை அடை கிறான். இலங்கையில் விபீஷணன் உதவி யால் ராவணனின் சேனை பலத்தை, ரகசியமான ஆயுதங்களை , அவனது மறைவு இடங்களை , ரகசிய பாதைகள், தாக்கும் வீரர்கள் பற்றியெல்லாம் ராம லக்ஷ்மணர்கள் அறிகிறார்கள். ராம ராவண யுத்தம் நடை பெறுகிறது. இருபக்கமும் எண்ணற்றோர் உயிரிழப்பு.
ராவணனின் கோட்டையின் வடக்கு வாசலை முற்றுகை இட்டு, ராமலக்ஷ்மணர்கள் நின்று கடும் தாக்குதல் நேர்கிறது. வானர வீரர்கள் வீராவேசமாக போர் புரிவதை ராக்ஷஸ வீரர்கள் எதிர்பார்க்காததால் தோல்வி யுற்று, பலர் மாண்டனர். சீதை இருக்குமிடத்தை சுற்றி மிக பலமான வீரர்கள் படை அவளை கைப் பற்ற முடியாமல் காத்தது. ராவணனின் குமாரர்கள் சகோதரர்கள் சேனாபதிகள் அனைவரும் மாண்டனர். ராவணன் மகன் இந்திரஜித் ஒருவன் தான் இருந்தான். அவன் தானே படைக்குத் தலைமை தாங்கி ராமனுடன் போர் துவங்குகிறான். அவனுக்கு மேகநாதன் என்று பெயர். திடீரென்று மறையும் சக்தி உடையவன். எங்கிருந்து தாக்குகிறான் என்று தெரியாவண்ணம் யுத்தம் புரிபவன். கொடிய விஷம் தோய்ந்த அம்புகள் எங்கிருந்தெல்லாமோ வந்து வானர வீரர்களின் உயிரை குடித்தது. அவன் இருக்குமிடம் தெரியாததால் அவனைத் தாக்கி வெல்லவோ கொல்லவோ முடியாது.
மறைந்து நின்று மேகநாதன் செலுத்திய எண்ணற்ற அம்புகளின் தாக்குதலில் ராமலக்ஷ்மணர்கள் மயங்கி விழுகிறார்கள். இந்திரஜித் ராவணனிடம் திரும்பி ராமலக்ஷ்மணர்களை கொன்றுவிட்டேன் என்று பெருமைப்படுகிறான். அன்போடு ராவணன் அவனைக்கட்டி மகிழ்கிறான். ராவணன் உடனே அசோகவனம் செல்கிறான். சீதையை தூக்கி புஷ்பகவிமானத்தில் கட்டாயமாக அமர்த்தி யுத்தகளத்தில் மேலே இருந்து கீழே விழுந்துகிடக்கும் ராம லக்ஷ்ம ணர்களை காட்டுகிறான். சுற்றிலும் இறந்த வானர வீரர்கள் உடல் நடுவே ராம லக்ஷ்ம ணர்கள் விழுந்து கிடக்கிறார்கள்.
''பார்த்தாயா, உன் கணவன் வீராதி வீர ராமன் அவன் சகோதரன் என்னைத் தாக்க வந்து அடைந்த நிலையை. இனியுமா உனக்கு அவர்கள் வந்து காப்பாற்றி நீ திரும்பி அயோத்தி சென்று ராணியாவாய் என்ற கனவு ? பேசாமல் நல்ல புத்தியோடு என்னை மணந்து இங்கேயே என் ராணியாகிவிடு''
சீதையால் தனது கண்களை நம்ப முடிய வில்லை. அழுகிறாள். பேசாதிருக்கிறாள். அவளைத் திருப்பி அசோகவனத்தில் விட்டு யுத்தத்தில் மேற்கொண்டு மனதை செலுத்து கிறான் ராவணன்.
யுத்த களத்தில் சுக்ரீவன் படைத் தலைவர் களோடு விசனத்தில் ஆழ்ந்திருக்கிறான். ராமலக்ஷ்மணர்கள் இல்லையென்றால் இனி யுத்தம் ஏது? சீதையை மீட்பது எவ்வாறு? எதிர்பார்க்காத முடிவாக அல்லவோ இது இருக்கிறது? என்ன செய்வது என்று திகைக் கிறார்கள்.
சுக்ரீவன் படையில் வயதான ஒரு மருத்துவ வானரன் இருந்தான். சுஷேணன் என்று பெயர். படைகளோடு மருத்துவர்கள் சமையல் காரர் கள் மற்ற தொழில் வல்லுநர்கள் செல்வது பண்டைக்கால வழக்கம். அவன் சுக்ரீவனைச் சுற்றி எஞ்சி இருந்த வீரர்களில் ஒருவன்.
''அரசே, நான் பேசலாமா?
'''சொல் சுஷேணா ''
''அரசே நான் மருந்துகளோடு வீரர்களை சென்று பார்த்து தேவையான உதவிகளை செய்யும்போது நான் பார்த்த வரை ராம லக்ஷ்ம ணர்கள் இறக்கவில்லை. ஏதோ ஒரு மயக்கத்தில் தான் உள்ளார்கள். நினை வில்லை ஆனால் மூச்சிருக்கிறது. நினைவு திரும்ப வெகுகாலமாகலாம். உடனே அவர்களைக் காப்பாற்றினால் உயிரூட்டலாம் என்று சொல்ல தான் வந்தேன்.''
''சுஷேணா, வயிற்றில் பாலை வார்த்தாய், இப்போது என்ன செய்வது? எப்படி ராம லக்ஷ்மணர்களை மீண்டும் உயிரோடு பெறுவது? வழியிருந்தால் சொல் உடனே''
''அரசே, மஹா விஷ்ணு பள்ளி கொண்டி ருக்கும் பாற்கடல் நடுவே ஒரு சிறு தீவு இருக்கிறது. அதில் இரு சிறு குன்றுகள் உண்டு. சந்திரா, துரோணா என்று பெயர் அவற்றிற்கு. அந்த மலைச்சரிவில் தான் விஷல்யா எனும் ஒரு மூலிகைச்செடி வளர்கிறது. அதிலிருந்து தான் அம்ரிதம் தயாராகிறது. தேவர்கள் அதிலிருந்து தான் சாகா நிலையை தரும் அம்ருதத்தை தயாரிக்கிறார்கள். இறந்த வர்களையும் அதனால் உயிர்ப்பிக்க முடியும். இங்குள்ள யாராவது உடனே அங்கே சென்று சீக்கிரம் அந்த மூலிகை செடியைக் கொண்டு வந்தால் ராமலக்ஷ்மணர்களுக்கு உயிரூட் டலாம். முடிந்தால் யாரையாவது உடனே அனுப்புங்கள்'. அந்த மூலிகையை கொண்டு வரச்சொல்லுங்கள் '
சுக்ரீவன் பேரிடி தாங்கியவன் போல் தலை யில் கைவைத்து அமர்ந்து கண்ணீர் உகுத்தான். யாரால் உடனே பாற்கடல் செல்ல முடியும். மூலிகை உடனே வேண்டுமே?
அருகே இருந்த ஹனுமான் துளியும் யோசிக் கவில்லை.
''அரசே, நான் உடனே செல்கிறேன், எனக்கு இந்த கடல் தாண்டிய அனுபவம் இருக்கிறது. பாற்கடலை நோக்கி உடனே செல்கிறேன். எப்படியாவது என் ராமனை காக்க உயிர்ப் பிக்க மூலிகையோடு திரும்புகிறேன் ''
பதிலுக்கு கூட காத்திராமல் வாயு புத்ரன் ஆஞ்சநேயன் விண்ணில் ராக்கெட் போல் பறந்தான்.
தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...