Saturday, November 14, 2020

ADHITHYA HRUDHAYAM

 ஆதித்ய ஹ்ருதயம்    J K  SIVAN 



                            வணங்குகிறேன்  சூர்யா  - ஸ்லோகங்கள்   21-30


तप्तचामीकराभाय वह्नये विश्वकर्मणे।
नमस्तमोऽभिनिघ्नाय रुचये लोकसाक्षिणे॥

தப்த சாமீகராபாய வஹ்னயே விஶ்வகர்மணே |
நமஸ்தமோ‌உபி னிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே || 21 ||

தங்கத்தை உருக்கி ஓட விட்டால் போல தக தக வென்று ஒளிரும் ஆதித்யா, வித்யாசம் பார்க்காமல் சகலத்தையும் ஒரே சமமாக பாவித்து ஜிவாலையோடு எரிக்கும் சூர்யா, அஞ்ஞான இருள் நீக்கியே, பிரபஞ்ச ஸ்ரிஷ்டிகாரண விஸ்வகர்மா, சகல காரியங்களுக்கும் காரணமானவனே, சர்வ ஜீவன்களுக்கும் உயிர்ச்சக்தி அளிப்பவன், நீ விஸ்வ காரணன், அஞ்ஞானத்தை நீக்கும் ஒளிச்சுடர். அக்னிஸ்வரூபம், லோக காரணன், சர்வ வியாபி, செந்நிற ஒளிப்பிழம்பு, ஸ்வர்ணமயன் , சர்வ சாக்ஷி. உனக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள் ஆதித்ய நாராயணா.

नाशयत्येष वै भूतं तदेव सृजति प्रभुः।
पायत्येष तपत्येष वर्षत्येष गभस्तिभिः॥

நாஶயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்றுஜதி ப்ரபுஃ |

பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபிஃ || 22 ||

வாழ்க்கை என்பது வளர்ச்சி. அதற்கு அதி முக்கியம் உன் ஒளிக் கதிர்கள் தானே சூர்ய நாராயணா, இருள் நீக்கி உன் ஒளிக்கதிர்கள் உயிரூட்டுகிறதே. என் மன மாசுகளையும் சுட்டெரித்து உள்ளொளி பெற அருள்வாய், உன் ஒளி க்கதிர்கள் வெம்மையை அளித்தாலும் மழைக்கே ஆதாரம் அவை தான் என அறிவோமே உனக்கு ஆயிரமாயிரம் நமஸ்காரங்கள் ஆதித்யா.

एष सुप्तेषु जागर्ति भूतेषु परिनिष्ठितः।
एष एवाग्निहोत्रं च फलं चैवाग्निहोत्रिणाम्॥

ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரினிஷ்டிதஃ |
ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னி ஹோத்ரிணாம் || 23 ||

ஆதித்யா, உறக்கத்திலிருந்து மீட்பவன் நீ. உறக்கமில்லாதவன். எங்காவது எப்போதும் ஒளி அளித்து காப்பவன். புத்துணர்ச்சியும், களைப்பையும் போக்குபவன். யக்ன மூர்த்தி, அக்னி ஹோம அக்னிஹோத்ர காரணன். உனக்கு நமஸ்காரங்கள்

वेदाश्च क्रतवश्चैव क्रतूनां फलमेव च।
यानि कृत्यानि लोकेषु सर्व एष रविः प्रभुः॥

வேதாஶ்ச க்ரதவஶ்சைவ க்ரதூனாம் பலமேவ ச |
யானி க்றுத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவிஃ ப்ரபுஃ || 24 ||

நீயின்றி எது யாகம், எது வேதம், எது கர்மம், எது தர்மம், எது காரணம், எது காரியம்?. சர்வமும் நீயே ஆதித்யா, ஹ்ருதயத்தில் வீற்றிருக்கும் சூர்ய நாராயணா.உனக்கு நமஸ்காரங்கள்.

ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள் மிக சக்தி வாய்ந்தவை. நம்முடைய அதிர்ஷ்டம் இது போன்ற நிறைய ஸ்லோகங்கள் உபதேசங்கள் எல்லாம் நமது வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்களில் நிரம்பி இருக்கிறது. கொள்வார் தான் இல்லை.   மகரிஷி வால்மீகியின் ராமாயணத்தில் 107வது அத்தியாயமாக ஆதித்ய ஹ்ருதயம் வருகிறது.மேற்கொண்டு முடிவாகும் சில ஸ்லோகங்களை அறிவோம்:

एनमापत्सु कृच्छ्रेषु कान्तारेषु भयेषु च।
कीर्तयन् पुरुषः कश्चिन्नावसीदति राघव॥ 25

ஏன மாபத்ஸு க்றுச்ச்ரேஷு கான்தாரேஷு பயேஷு ச |

கீர்தயன் புருஷஃ கஶ்சின்-னாவஶீததி ராகவ

அகஸ்தியர் ராமனிடம் ''ஹே ராமா, இதுவரை சொன்னேனே ஆதித்யன் மகிமையை பற்றி கவனமாக கேட்டாயா. ஒரு ரகசியம் உரக்க சொல்கிறேன் எல்லோருமே கேட்கட்டும். எவருக்கெல்லாம் கஷ்டம், துன்பம், பயம், இருள் நடுக்கம் உள்ளதோ அவர்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான். அது தான் இந்த ஆதித்ய ஹ்ருதயம். ஒரு முறை உச்சரித்தால் போதும். எங்கே போயிற்று அந்த துன்பங்கள் எல்லாம் என்று அப்புறம் தேடவேண்டும்!!

पूजयस्वैनमेकाग्रो देवदेवं जगत्पतिम्।
एतत् त्रिगुणितं जप्त्वा युद्धेषु विजयिष्यसि॥ 26

பூஜயஸ்வைன மேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம் |
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

சூர்ய நாராயணா, நீ விஸ்வபதி, தேவாதி தேவன், பிரபஞ்ச புருஷன், மனத்தை ஒருமித்து இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகம் சொல்லி உன்னை மனமார வணங்குபவன் எதிலும் வெல்வான். எவரையும் வெல்வான் சகல துன்பங்களும் துயரங்களும் அவனை விட்டு ஓடிவிடும்.

अस्मिन् क्षणे महाबाहो रावणं त्वं वधिष्यसि।
एवमुक्त्वा तदागस्त्यो जगाम च यथागतम्॥ 27

அஸ்மின் க்ஷணே , மஹாபாஹோ ராவணம்  த்வம்  வதிஷ்யஸி 
ஏவமுக்த்வ ததாகஸ்த்யோ ஜகாம  யதாகதம். 

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், இதுவரை இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்களை ராமனுக்கு உபதேசித்தது யார்? சாக்ஷாத் அகஸ்த்ய மஹ ரிஷி. யாருக்கு சொன்னார்? ஸ்ரீ ராமனுக்கு. '' ரகுகுல ராமா, வீராதி வீரா, ஹே ராமா, நீ இந்த பாதகன் ராவணனை சம்ஹாரம் செய்யும் நேரம் நெருங்கிவிட்டது. நொடியில் அவனை முடிப்பாய்'' என்கிறார் அகஸ்திய மகரிஷி.'' ராமனை ஆசிர்வதித்து விட்டு யுத்தகளத்தை விட்டு செல்கிறார்.

एतच्छ्रुत्वा महातेजा नष्टशोकोऽभवत्तदा।
धारयामास सुप्रीतो राघवः प्रयतात्मवान्॥ 28

ஏதச்ருத்வா மஹாதேஜ நஷ்டஸோகோ பவத்ததா 
தாரயாமாஸ  சுப்ரிதோ ராகவ: ப்ரயதாத்மவான் 

இவ்வாறு அகஸ்திய ரிஷியால் உபதேசிக்கப்பட்ட ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை ராமன் மனதில் ஒருமித்து சொன்னான். அவனுள் ஒரு புது சக்தி பிறந்தது மூச்சினிலே. நமக்கும் கிடைக்காமலா போகும்?

ராமன் அகஸ்தியரை வணங்கி புத்துணர்ச்சி பெற்றதை உணர்ந்தார். ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகங்கள் அவர் மனதை நிரப்ப அவரிடம் பலம் மிகுந்தது.

आदित्यं प्रेक्ष्य जप्त्वा तु परं हर्षमवाप्तवान्।
त्रिराचम्य शुचिर्भूत्वा धनुरादाय वीर्यवान्॥ 29

ஆதித்யம் பிரேக்ஷய  ஜப்த்வா  து பரம் ஹர்ஷமவாப்தவான் 
த்ரிராசம்ய சுசிர் பூத்வா தனுராதாய  வீர்யவான்.

உடலும் உள்ளமும் பரிசுத்தமாகி, மூன்று முறை அச்சுதாயநாம: அனந்தாய நாம: கோவிந்தாய நாம: என்று தனது பெயரையே சொல்லி ராமன் ஆசமனம் செய்தான். (நாம் ஆசமனம் செயகிறோமே அது இந்த உள் -புற பரிசுத்தத்திற்காகத்தான்)

பிறகு ராமன் சூரியனை நோக்கி நமஸ்கரித்தான். எடுத்தான் வில்லை. மனம் குதூகலித்தது எதிரே ராவணனைப் பார்த்து.


रावणं प्रेक्ष्य हृष्टात्मा युद्धाय समुपागमत् ।                                                                      सर्वयत्नेन महता वधे तस्य धृतोऽभवत् ॥३०॥  

ராவணன்  ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய சமுபாகமத் 
ஸர்வயத் னேன மஹதா  வதே தஸ்ய த்ருதோபவத் 30
 

எதிரே நின்ற ராவணன் ஏதோ ஒரு எட்டுக்கால் பூச்சி போல தோன்றினான் ராமனுக்கு. யுத்தத்தை மீண்டும் தொடங்கினான். இன்று ராவணனை முடிப்பதென்று தீர்மானித்தான். கோதண்டம் பேசியது. .

சூர்யநாராயணா, ஆதித்யா, ஒளி மயமே, இரவை விரட்டி, பகலைக் கொடுக்கும் பகலவனே, உயிர்காக்கும் பரம் பொருளே, எமக்கு நீண்ட ஆயுளை, ஆரோக்கியம், ஐஸ்வர்யம், ஞானம் அனைத்தும் அருள வேண்டி உன்னை நமஸ்கரிக்கிறோம்.

கிரஹங்களின் அனுக்ரஹம் அதுவும் அவற்றில் தலையாய சூர்யநாராயணனின் அருளாசி இந்த சுலோகத்தினால் கிடைக்கிறது. விடாது சொல்பவன் புன்யசாலி. சர்வ சத்ருக்களும் நாசமடைவார்கள். சகல சக்தியும் பெறுவான்.

ஆதித்ய ஹ்ருதயம் எங்கும் மங்களத்தை தருகிறது. பாபம் எங்கிருந்தாலும் அதை அழிக்கிறது. மன வியாகூலம், சோகம், பயம் சகலமும் நீக்குகிறது. கவலைகள், துன்பங்கள் நீக்கி நீண்ட ஆயுளைத் தருகிறது. இன்னும் என்ன வேண்டும்?.

கஷ்டமாக தோன்றும் நேரத்தில் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தை சொன்னால், கதிரவன் முன் பனியென அவை விலகும். மனதில் உடலில் புது தெம்பு தைர்யம் தோன்றும்.

நீயின்றி வேறெவர் சூர்ய நாராயணா  எமக்கு ஆதரவு. காருண்ய மூர்த்தே, அருள்வாயாக, ரக்ஷிப்பயாக உனக்கு கோடி நமஸ்காரங்கள்.

என் கடன் பணி செய்து கிடப்பதே. உன் கடன் அடியேனையும் தாங்குதல் - எவ்வளவு அழாகாக அப்பர் சொல்லியிருக்கிறார். அதானால் தான் நாவுக்கு அரசர் என்ற பெயர் அவருக்கு. ஆதித்யா உன்னை ஹ்ருதயத்தில் வைத்து பூஜிக்கிறேன். உன்னை பணிவதே என் என் கடன். அடியேனை மட்டுமல்ல இந்த அகிலத்தையே காத்தல் உன் கடன் அல்லவா?.

ஆதித்ய ஹ்ருதயத்தை நிறைவு செய்ய அருள்செய்த  சூர்யா உனக்கு நமஸ்காரம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...