Sunday, November 1, 2020

RAMAYANAM


 ராமாயணம்.        J K SIVAN  

                                                                       
2.  பரதன் வருகையும் பாதுகை ஆட்சியும்  


தசரதனுக்கு  திடீரென்று தனக்கு   சித்தபிரமை வந்துவிட்டதோ என்று  தோன்றியது. அவனால் நடந்ததை நம்ப முடியவில்லை.  கைகேயி எவ்வளவு பிரியம் கொண்டவள் ராமன் மீது. அவளா இப்படி  நெஞ்சில் இரக்கமின்றி.....  ராமன் சென்றுவிட்டானா. இனி பதினான்கு வருஷம்  நான் பார்க்க முடியாதவனா..... என்னால் அவனை ஒரு கணமும் கூட பிரிந்து இருக்க முடியாதே...  பிரமையோ  கனவோ இல்லை. இதோ  சுமந்திரன் தேரில் அவர்களை நாட்டின் எல்லையை விட்டு அனுப்பிவிட்டு வெறும் தேர் வந்து நிற்கிறதே......  தசரதன்  மார்பு துயரத்தால் துடித்தது.  வேதனையில்  வியர்த்தது. மூச்சு திணறியது. கண்கள் இருண்டது . உலகம்  வேகமாக அவன் கண் முன்  சுழன்றது.  உடம்பு  குலுங்கியது.  மடாரென்று விழுந்த  தசரதன் இனி இல்லை.....
மந்திரி பிரதானிகள் கலந்தாலோசித்து என்ன செய்வது என்று  முடிவெடுத்தார்கள்.  தசரதன் விருப்பம்  பரதன் முடி சூட்டிக்கொண்டு அடுத்த இக்ஷ்வாகு குல  மன்னனாக அயோத்தி
யை ஆள வேண்டும்... ராமன் காட்டிற்கு சென்றுவிட்டான் . பரதன் தொலைதூரத்தில்  கிரிவ்ராஜ தேசத்தில் மாமனோடு இருக்கிறான். அவனோடு சத்ருக்னனும் சென்றுவிட்டான். லக்ஷ்மணன் ராமனோடு சென்றுவிட்டான். நாலு பிள்ளை இருந்தும் இறந்த மன்னன் அருகே எவருமே இல்லையே.  குதிரை வீரர்கள் படு  வேகமாக பராதனைத் தேடி சென்று  விஷயத்தை  சொன்னபோது பரதன் துடித்தான்.  அரசன் கட்டளைகள் அறிந்தான்.    பரதனுக்கு  தனது தாய் கைகேயியின் திட்டம்  தெரியாதே.  '' நான் மட்டும்  அயோத்தியில் இருந்திருந்தால்  ராமனை  வனவாசம் செல்ல விட்டிருக்க மாட்டேன் என நினைத்தான்.. இனி நான் செய்யவேண்டியது உடனே கானகம் சென்ற ராமனைச்  சந்தித்து அவன் காலில் விழுந்து அயோத்தி திரும்பி அவன்  அரசனாக ஆளவேண்டும் என்று  வேண்டுவது ஒன்றே...

அயோத்தி திரும்பிய  பரதன் தசரதனுக்கு  பதிமூன்று நாள்  அந்திம கிரியைகள் நடத்தினான். 14ம் நாள் காலை மந்திரி பிரதானிகளை கூப்பிட்டு ''நான் முடி சூட்டிக்கொள்ளப்போவதில்லை...வேகமாக ஓடும் குதிரைகளைத் தேரில் பூட்டுங்கள்'' என்று  சத்ருக்னனோடு ராமனைத் தேடி புறப்பட்டு விட்டான். கங்கை நதி யை அடைந்தான். 

இதற்கிடையே,  காட்டில் சுமந்திரனை அனுப்பி விட்டு  ராமன் லக்ஷ்மணன் சீதை மூவரும் கங்கை நதிக்கரையில் ஸ்ரிங்கிபேரம்  என்ற வேடுவர்கள் ஊரின்  அரசன் குஹனைத்தேடி சென்றார்கள்.   ராமனின் பால்ய சிநேகிதன் குகன்.  ''குஹா, அயோத்தியில் நடந்ததை சொல்கிறேன் கேள் என்று தந்தையின் விருப்பத்தை சொல்கி றான்  ராமன். 
''இந்த பதினாலு வருஷமும் இந்த ஊரில் என்னோடு நீ இருக்கவேண்டும் ராமா''
''இல்லை குஹா,  நான் வனத்தில் வாசம் செய்வது தான் தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவது. எங்கோ ஒரு ஊரில் சௌக்யமாக வாழ்வதற்கு இல்லை.எங்கள் மூவரையும் கங்கைக்கு  அக்கரை கொண்டு சேர். அது போதும்''
வேறு வழியின்றி  குகன் தன்னுடைய படகில் அவர்களை கங்கை நதியின் மறுகரைக்கு கொண்டு சென்றான். மனித நடமாட்டம் குறைந்து அடர்ந்த காடுகள் அங்கே இருந்தன.  இரவு  கங்கை மறு கரையிலேயே தங்கி உறங்கினார்கள்.  மறுநாள் காலை மூவரும் தெற்கு பக்கமாக    காட்டை கடந்து  கங்கையும் யமுனையும்  சங்கமிக்கும் இடம் வந்து சேர்ந்தார்கள். அந்த வனப்பகுதியில்  ரிஷி பாரத்வாஜர் இருந்தார்.  அவரதுஆஸ்ரமத்துக்குச்  சென்றார்கள்.  மிகுந்த சந்தோஷத்தோடு    ரிஷி அவர்களை வரவேற்று உபசரித்தார். இரவெல்லாம் உற்சாகமாக  அவர்களோடு  சம்பாஷித்தார்.  அடுத்த நாள் காலை சூரியன் உதித்ததும்  ''ராமா  நீ எங்கும் போகவேண்டும்  என்னோடு 14 வருஷமும் இங்கேயே  இருந்துவிடு  என்று வேண்டினாலும்  ராமன்  மறுத்துவிட்டு,  அங்கிருந்து செல்கிறான்.  கங்கைக்கரையில் மறுபக்கத்தில்  அயோத்தி மற்றும் ராஜ்ஜியங்கள் இருப்பது தெரிகிறது.    அப்பாவின்  ஆணையை நிறைவேற்ற  அடர்ந்த காட்டுக்குள் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறான்.  சித்ர கூடம் செல்லும் வழி கேட்டு தெரிந்து கொள்கிறான்.   அடர்ந்த காட்டுக்குள் அங்கு  சில  ரிஷிகள்  தவம் செய்கிறார்கள் என்று அறிகிறான்.   அமைதியான சூழ்நிலையிலே  அங்கே  வனவாசம் இருக்க  நினைக்கிறான்.    கங்கை நதியின் கரையோடு மேலே செல்கிறார்கள்.  ரெண்டு மூணு நாள்  நடந்து  காளிந்தி நதி   கங்கையோடு  கலக்கும்  இடம் அடைகிறான்.   காளிந்தி நதியை கடந்து  மறுகரை செல்கிறான். சித்ரகூடம் மலை பிரதேசம் தெரிகிறது.    ஒரு இடம் தேர்வு செயது  அங்கே  லக்ஷ்மணன் மரங்களை வெட்டி ஒரு    குடிசை அமைத்து  அதில் தங்குகிறார்கள். 
எப்படியோ  ராமனை விடாமல்  தேடிக் கொண்டி ருந்த  பரதம் அவர்களை அங்கே சந்திக்கிறான். முதலில்  கங்கைக் கரையில்  குஹனைத் தேடி சந்தித்த  பரதனை   குகன் சந்தேகிக்கிறான். ராமனுக்கு தீங்கு செய்ய வந்தவன் என்று எண்ணியவன் பரதனின்  உண்மையான சகோதர பாசத்தையம்,  ராமனை மீண்டும் அயோத்திக்கு திரும்பி அரசனாகும்படி  அழைக்க வந்திருப்பதை உணர்ந்து  அவனுக்கும்  கங்கையை கடந்து மறு கரை செல்ல உதவுகிறான்.   பரதன் அடர்ந்த காட்டுக்குள் நடந்து  எப்படியோ  ராமனைத்தேடி சித்ரகூடம் வந்துவிட்டான். பரதனை  அன்போது கட்டி அணைத்து  வரவேற்ற  ராமன்  அவன்  வேண்டுகோளை நிராகரித்து   தந்தையின் சொல்லை தட்டாமல் 14 வருஷம் வனவாசம் இருக்க முடிவு செய்ததை தெளிவாக எடுத்துரைக்கிறான்.

''ராமா  நீ வரும் வரையில் அயோத்தியை உன் பாதுகையாவது ஆளட்டும்''    என்று  ராமனின்  பாதுகைகளை பெற்று  பரதன்  திரும்புகிறான்.   அயோத்தி எல்லையில்  நந்திக்ராமம்  சென்று  அங்கிருந்து  ராமனின் பாதுகையின்  சேவகனாக  14 வருஷங்கள்  ஒவ்வொரு நாளையும் எண்ணியவாறு  அயோத்தியை நிர்வகிக்கிறான்.   
சித்ரகூடத்தில் இருந்து  மீண்டும்  பரதன் தங்களை பின் தொடராமல் இருக்கும் பொருட்டு  மேலும் அடர்ந்த தண்டகாரண்ய வனத்துக்குள்  ராமன் லக்ஷ்மணன் சீதை ஆகியோர் பிரவேசிக்கிறார்கள்.  

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...