Monday, November 9, 2020

ELLAM ONRE

 எல்லாம் ஒன்றே - 4       J.K.  SIVAN   



               ஓம்  சாந்தி  சாந்தி  சாந்தி : 

உலகில் எந்த மதத்தின் புத்தகத்திலும் இந்த அளவுக்கு உலக அமைதி, ''உள்ள''  அமைதி பற்றி சொல்லவில்லை என்ற பெருமைக்கு உரித்தானது நமது ஹிந்து ஸநாதன  வேத தர்ம  மந்த்ரங்கள்.  எந்த  மந்திரமும்  ''ஓம்''  என்ற பிரணவ சப்தத்தோடு  துவங்கி  முடிவில்  '''ஓம் சாந்தி  சாந்தி சாந்தி '' என்று   முடிவது அதன் தன்னலமற்ற  பொது நல  விருப்பத்தை குறிக்கிறது. உலகம் எல்லாம் சுகமாக இருக்கட்டும்.   லோகா சமஸ்தா சுகினோ பவந்து  :  என்று நாம்  ஒருவர் தான் விடாமல் தினமும் ஒருமுறையாவது சொல்கிறவர்கள்.  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றறியேன் பராபரமே  என்பது தாயுமானவர் சொல், பரந்த மனதை அழகாக வெளிப்படுத்தும் வாக்கியம். 

சாந்தி  என்ற மன அமைதியை   ஒவ்வொருவரும்  அடிக்கடியோ  எப்போதாவதோ  அனுபவிக்கிறோம்.    சுஷுப்தி நிலை   என்ற அயர்ந்த நிலையில் மரக்கட்டை போல்  இருக்கும்போது, தன்னைப் பற்றியோ, மற்றவற்றை, மற்றவரைப் பற்றியோ ஒரு எண்ணமும், கவலையும் இல்லை. அதில் கிடைக்கும் சாந்தமான சுகானுபவம் எழுத்தில் வெளிப்படுத்த முடியாதது.   இந்த சுகத்தையும் நாம்  ஒவ்வொருவரும்  அறிவோம்.  விழிப்பு  நிலையிலும் ஒருவன் இந்த பிரபஞ்சத்தை,  அதில் உள்ளவற்றை,  காணும்போது அதே  மனக்  குளிர்ச்சியுடன்  காண்பதே  சாந்தம்.  இது எல்லோராலும் முடிவதில்லை என்பதற்கு காரணம்,  ஈடுபாடு எல்லோருக்கும் இல்லை. முயற்சி இல்லாதபோது பயன் எப்படி பெறமுடியும்?

தினமும்  பேப்பரில்  எத்தனையோ சின்ன குழந்தைகள் சாவது,  விபத்துகள் ,  தீ விபத்து, பணம் நகை, மூன்று ஐந்து வயது குழந்தைகள் கூட பாலியல் கொடுமைக்கு ஆளாவது,  பேங்க், நகை பறிப்பு  கொள்ளை என்று படிக்கும்போது நம்மை அது பாதிப்பதில்லை. நமக்கு அதில் ஏதாவது  ஒருவிதத்தில் சம்பந்தம்  இருந்தால்  அப்போது தான் நம் வெளிப்பாடு குய்யோ முறையோ.   மற்றவர்கள், மற்றவைகள் மேல் நாம் வைத்திருக்கும் மதிப்பு,  தொடர்பு தான் நம்மை பாதிக்கிறது.  வருத்தமும்  சந்தோஷமும் அதில் தான் உண்டாகிறது.  எல்லாவற்றையும்  தூரவே   வைத்து  பார்ப்பவனுக்கு சொந்தம் பந்தம்  கோபம்  தாபம்  அதனால் விளையும் நல்லது கெட்டது  பாதிப்பு இல்லை.  அவன் எப்போதும் சாந்தமாகவே இருப்பான்.   சமநோக்கோடு பார்ப்பவனுக்கு சாந்தம் நிலைக்கும். கனவில் தனது வீட்டில் கொள்ளை  போவது போல் கண்டு அலறுபவன் கண் விழித்ததும்  அது கனவு  என்று அறிந்து ''அப்பாடி'' என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறான். கனவில்  ராஜாவாகி  ஒரு  அழகிய பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொண்டு  அவள்  அவன்  ராணியாகிறாள். கனவு  கலைந்தது.  அடேடே  அது கனவா  என்று தன்னை சுதாரித்துக் கொள்கிறான்..  
கனவு நிலைப்பதில்லை.  விழிப்பு அதை விரட்டியது.  விழிப்பிலும் அப்படி  இருக்க முடிந்தால்  அதில் கிடைக்கும்  சாந்தி, சாந்தம்,  உசிதமானது.    உடலளவில்  அவன் உலகத்தோடு ஒட்டியே  வாழ்ந்தாலும் உள்ளத்தில் அவை தன்னோடு ஸம்பந்தப்படாதவை  என்ற  நினைவு இருந்துகொண்டே இருந்தால்  சாந்தி குறையாது. மறையாது. 
இருட்டில்  மேட்டிலும் பள்ளத்திலும்  இடறி விழுகிறான். தடுமாறுகிறான். அதை தடுக்க அவன் கையில் உள்ள ஒரு சிறு விளக்கு உதவுகிறது.  விளக்குக்கும்  மேடு பள்ளத்துக்கும்,  இருட்டுக்கும்  பகை  இல்லை. இருந்தாலும்  விளக்கு இருட்டை விரட்டுகிறது.  அதுபோல்  சாந்த நிலை கொண்ட மனது உலகை  எந்த  உறவோடும் எதிர்ப்போடும்  பார்க்காமல்  சமமாக  காண்கிறது.  மனதின் குளிர்ச்சி சாந்தத்தை அள்ளிதருகிறது.  எந்த வித பாதிப்பும் தொடர்பும் இல்லை.    உலகத்தை  துன்பமயமானது  என்று  அதில்  உழல்பவர்கள் தான் சொல்வார்கள்.  மனதில்  சாந்தியில்லாதவன் அவன்.  அது வேறல்ல நான், என்று அதை அபேதமாக பார்ப்பவனுக்கு  அது இன்பமாக தான் காணும். இயற்கையாகவே எல்லாமே  இனிது இனிது தான். இந்த உலக உறவு அவனுக்கு  தாமரை இலைத்தண்ணீர்.   சுகம்  துக்கம், இன்ப துன்பம் உணர்ச்சியைக் காட்டாது  வேலை செய்யும்  இயந்திரம் அவன். 
சாந்த ஸ்வரூபன் இந்த உலக இயல்பில் ஈடுபட்டான் என்றால் எங்கோ சில கோணல்களை நிமிர்த்தவே என்று புரிந்து கொள்ளலாம். பெறுவதற்கோ  தருவதற்கோ  எதுவும் இல்லை.  
குருடர்களை சரியான வழி நடத்துபவன்  கண்ணுள்ளவனாகத்தான் இருக்க முடியும்.  சாந்தி உடையவன் தான்  ஆரவாரங்களை விலக்கமுடியும் . லோக க்ஷேமம்  எனும் இந்த உலக நன்மைக்கு அவனால் தான் பாடுபடமுடியும். 
ஏதோ ஒரு குழந்தை  நம் கண் எதிரே தடுமாறி கீழே விழுகிறது என்றால்  அடுத்த யோசனை இல்லாமல் நாம் ஓடிச்சென்று அதைத்தூக்கி  ஆசுவாசப்படுத்தி நிறுத்து கிறோமே.   அந்த குழந்தைக்கும் நமக்கும் எந்த உறவும் சம்பந்தமும் இல்லை என்று நமக்கு நன்றாக தெரியும்.  இருந்தும் தானாகவே ஓடி உதவுகிறோம்.  அது போல்  சாந்தியுள்ள அபேதன்  தான்  உலகத்தின் க்ஷேமத்துக்கு, நம்மைப் போன்றவர்களுக்கு, நம்மைத் தெரியாவிட்டாலும்,   தானாகவே  செயல்புரிவான்.   
தெருவில் ஒரு இறந்த உடலின் மேல் எத்தனை வண்டிகள்  ஏறிச் சென்றாலும் அதன் உயிருக்கு என்ன  ஆபத்து?  அதைப் போல   ''நாம் அல்ல, நமதல்ல '' என்ற இந்த உடல்  எத்தனை துன்பங்கள் பட்டாலும் அது  அவனை பாதிக்காது. 
ப்ரம்ம ஞானி சதாசிவ ப்ரம்மேந்திராவின் ஒரு கரத்தை தோளில்  இருந்து ஒரு முஸ்லீம் வெட்டி அது துண்டாக கீழே விழுந்தாலும் துளியும் லக்ஷியம் இன்றி ரத்தம் சொட்ட சொட்ட  ஒரு கையை இழந்ததும் தெரியாமல் அவர்  பாடிக்கொண்டே  காவிரிக்கரை செல்கிறார். முஸ்லீம் அதிர்ச்சி அடைந்து அவர் காலில் விழ  ''என்னப்பா விஷயம் ? என்று கேட்கிறார். அவரது கையை காட்டுகிறான். தோளில்  கை  இல்லாதது அப்போது தான் தெரிகிறது.  அவன் கொண்டுவந்த துண்டான கையை  தோளில்  மீண்டும் பொருத்திக் கொள்கிறார். இதை நம்புவதா வேண்டாமா  என்று யோசிப்பதை விட்டு  ப்ரம்மஞானி தேஹ ஆத்ம புத்தி இல்லாதவர் என்று அறிந்துகொள்வதுடன் நிறுத்திக் கொள்வோம்.   ரமணரும் அதே போல் தான்  கையில் ஆபரேஷன் பண்ணவேண்டும் என்றபோது கையை நீட்டியவாறு  துளியும் அதன் வலியோ, அவஸ்தையையோ உணரவில்லை. உடலுக்கும் தனக்கும்  சம்பந்தமில்லாதவர்.   மோக்ஷ உலகில் சஞ்சரிப்பவர். 
சாந்தம் சாதுவாக காட்சி அளிக்க வைத்தாலும்  சர்வ சக்தி வாய்ந்தது.   அதன் உறுதி  மெச்சத்தகுந்தது. 
மனதின் சாந்தம்  ஒரு புஷ்பம்  போன்றது.  அதை கசக்கினால்  வாசனை, மென்மை , அழகு, நிறம் எல்லாம்  குன்றும்.   தனக்கும் பயனுள்ளது, பிறக்கும் பயனில்லாது  போகும்.  கடவுளுக்கு  பூஜைக்கு அர்ச்சிக்க முடியாது.நமது மனதை புஷ்பமென்று மறவாமல்  அதை   பகவானுக்கும்  லோகக்ஷேமத்துக்கு   சேவை செய்ய   அர்ப் பணிப்போம். 
நமக்குள் உள்ள ஆத்மா  தான்  பகவான்.  மன சாந்தியின் மூலம் அவனை அர்ச்சிப்போம், வணங்குவோம். மற்றவர்களுக்கு உதாரணமாக இருப்போம். மற்றவர்களின் உலக ஈடுபாடு விகாரங்களைக் கண்டு மனது விரும்பாமல் , வெறுக்காமல் , மனச் சாந்தியை இழக்காமல் எல்லோருக்கும் நமது கடமையை  பாரபக்ஷமின்றி செய்வோம். அன்பின் அடிப்படையில்  செய்யும் எதுவும் பரிமளிக்கும். நமக்கு நாமே  எவ்வளவு ஆர்வமாக, சந்தோஷமாக செய்துகொள்வோமோ அதே தான் இதுவும். இதால்  சாந்தி எங்கும் நிலவும்.  
தொடரும். 

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...