Monday, November 9, 2020

RAMAYANAM


 ராமாயணம்    J K  SIVAN 


                         8.    கண்டேன் சீதையை.

சீதைக்கு  சந்தேகம் தீரவில்லை.  கலக்கமாக இருந்தது.   எப்படி எனது வாழ்க்கை சம்பவங்களைச்  சரியாக சொல்கிறது.? யார் இந்த குரங்கு? ராவணனின் மந்திர தந்திர சக்தியால் என் வாழ்க்கையை உணர்ந்து மெதுவாக என்னை தீய எண்ணத்துடன் இப்படி  ஒருவேளை  குரங்கு ரூபத்தில் நெருங்குகிறானோ?  ஸ்ரீ ராமா  இது என்ன சோதனை?

ஆஞ்சநேயனை நாம் வணங்கும்போது  ''ஜானகி  சோக நாசனம்... நிர்பயத்வம்,  ....புத்திர் பலம்,.... வாக் படுத்வம்'' என்று போற்றுகிறோம் . அதன் அர்த்தத்தை உணரவேண்டும்.   அது இங்கே வேலை செய்கிறது.  ஜானகியின் துயர் ஹநுமானுக்கு  புரிகிறது. தெரிகிறது. அதை தீர்க்கவேண்டும்.  அவள் சந்தேகத்தை தீர்த்து ''நிர்பயத்வம்''' அவளது நியாயமான பயத்தை போக்கவேண்டும். எனது புத்தியை      எவ்வளவு சரியாக  உபயோகிக்க முடியுமோ அதனால்  அவளுக்கு சுருக்கமாக, சீக்கிரமாக,  இந்த சூழ்நிலையில் நம்பிக்கை ஊட்டவேண்டும். நேரம் அதிகம் இல்லை. ராக்ஷஸிகள் எந்த நேரமும் விழித்துக் கொள்வார்கள். சரியான வார்த்தையை,   உளறாமல், அதிகம் பேசாமல்,  பிரயோகித்து  அவள்  நம்பிக்கையை பெறவேண்டும்.

அனுமன் அவள் எதிரே  குதித்து வணங்கினான்.  எங்கு போனாலும்  எதற்கும் நாம்  யார்  என்று நிரூபிக்க,  ஆதார் PAN  கார்ட்  காட்டுவது போல்,   முன்னெச்சரிக்கையாக,  ஹனுமான் ராமனிடம்  சீதையை கண்டுபிடித்து அவளிடம் அடையாளம் காட்டுவதற்கு  ராமனிடமிருந்து பெற்றுக்கொண்டு வந்த கணையாழியை  இடுப்பில் ஜாக்கிரதையாக முடிந்து வைத்திருந்தான் அல்லவா? அவள் கரத்தில்
 கணையாழியை எடுத்து  iஅளிக்கிறான்.  

''அம்மா, இது ஸாக்ஷாத் ராமனின் கணையாழி, உங்களுக்கு நன்றாக தெரிந்தது. அவர் உங்களிடம் கொடுக்க சொன்னது.   நான் ராம தூதன்.   நீ ங்கள் இருக்கும் இடம் தேடி வந்து கண்டு  பிடித்து ராமனிடம் சொல்லி அவர் விரைவில் உங்களை வந்து மீட்பார்  தைரியமாக, பயமில்லாமல்,  இருங்கள். உங்களை நான் சந்தித்தேன் என்று அவருக்கு அடையாளம் காட்ட ஏதாவது கொடுங்கள். உடனே செல்கிறேன். நான் வந்த வேலை முடிந்தது.''    

சீதை  ஹனுமானைக் கண்டு மகிழ்ந்தாள்.  தனது தலையிலிருந்து  சூடாமணியை எடுத்து கொடுக்கிறாள். ''ஆஞ்சநேயா, இதை ராமனிடம் கொடு. காத்திருக்கிறேன் என்று சொல்''  கண்ணில் ஒற்றிக்கொண்டு ஆஞ்சநேயன் அதை இடுப்பில் ஜாக்கிரதையாக முடிந்து கொள்கிறான்.

''அம்மா, என்னோடு வருகிறீர்களா, உங்களை என் தோளில்  சுமந்து ராமனிடம் கொண்டு சேர்க்கிறேன்''

''ராமன் என்னை காப்பவன்,  அவன் வந்து என்னை மீட்க காத்திருக்கிறேன். அது போதும். நான் உன்னோடு வர சம்மதிக்கவில்லை. நீ  இப்போது செய்யும் உதவியே போதுமப்பா. ஜாக்கிரதையாக போய் வா ''

அம்மா  நான் போகுமுன்பு  ராமனின் சக்தி என்ன என்று புரியவைக்க சில 
 ''சித்து'' விளையாட்டுகளை
புரிந்து விட்டு போகிறேன்.  ராவணன் ராமனின்  பலத்தை, சக்தியை புரிந்து கொள்ளட்டும்.

ஹனுமான்  சீதையிடம் விடைபெற்று திரும்பு முன்  அழகிய அந்த பெரிய  அசோக வனத்தில் சீதை இருக்கும் இடம் தவிர மற்றவை எல்லாம் அழித்தான். மாளிகைகளைத் தகர்த்தான், எண்ணற்ற  ராக்ஷஸர்களை,  ராவணன் மகன் ஒருவனையும்  சேர்த்து  கொன்றான்.   தூதனாக வந்தவன் ராவணனை சந்தித்து  அவனுக்கு எச்சரிக்கை விடுவது நல்லது என்று தோன்றி,   வேண்டுமென்றே  ராவணன் மகன் இந்த்ரஜித்திடம் பிடிபட்டது போல் சிறைப்பட்டு ராவணன் முன் நின்றான். 

 ''இந்த குரங்கை கொல்லுங்கள்'' என்று ராவணன்  கட்டளையிட்ட போது  அவன் சகோதரன் விபீஷணன்,  '' அண்ணா,  பாவம் அது ஒரு விலங்கு, அது தூதுவனாக இங்கு வந்திருக்கும்போது அதை கொல்வது  நமக்கு வீரமாகாது. சிறு தண்டனை கொடுத்து அனுப்புவோம். ராமனுக்கும் அது நமது சக்தியை போய் சொல்லட்டும் என்றான்''

'' அப்படியே ஆகட்டும்.  இந்த குரங்கின் வாலில் தீயிட்டு  அனுப்புங்கள். அந்த தண்டனை போதும்''  என்று ராவணன் ஆணையிட  அதை சாதகமாக்கிக் கொண்டான் ஹனுமான்.  இலங்கையில்  ராவணன், அவனைச் சார்ந்தவர்கள்  மாளிகைகள் அனைத்துக்கும் தனது வாலில் கொழுந்து விட்டெறிந்த தீயை இட்டான். எங்கும் தீயின்  கபளீகரம்.  கவிஞர்  வாலி   எழுதிய  ஒரு வாக்கியம் மறக்க முடியாதது.  ஹனுமான் அடைந்தது  இலங்கை  தீவைத்தான்.  அங்கேதான்  தீவைத்தான்  என்பது அந்த ''தீவு''பற்றியும்  அங்கே'தீ வைத்தான்'     என்றும் பொருள் தரும்படி  எழுதிய  வாக்  சாதுர்யம் என்னை மயக்கியது. 

சில நிமிஷங்களில் ஒரு பெரிய ''சுனாமி''  நாசம் செய்து விட்டு  கடலில் வாலின் தீயைஅணைத்துவிட்டு ஹனுமான் பறந்தான்.  இலங்கையில் தீ அணைவதற்குள் சுக்ரீவனின்  மற்ற வீரர்களை அடைந்தான்.  கவலையோடு காத்திருந்தவர்களிடம்  ஒரே வார்த்தை சொன்னான்  ''கண்டேன் சீதையை''. அங்கிருந்து புன்னகைத்தபடி கடலை திரும்பி பார்த்தான். தெற்கே  இலங்கை இருந்த பகுதியில் வானம் சிவந்து ரத்தநிறத்தில் காணப்பட்டது.  ஓஹோ இன்னும் தீயை அணைக்க முடியவில்லையா??


 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...