Thursday, November 5, 2020

RAMAYANAM

 


ராமாயணம்.          J K SIVAN 

                                                              
                       4   சீதையைத்தேடும் போது....

மாரீசனோடு பேசி திட்டம் வகுத்து அவனை அழகிய  பொன்னிற மானாக  பஞ்சவடிக்குப்   போ என்று  அனுப்பிய பிறகு ராவணன் சும்மா இருக்க வில்லை.  தனது புஷ்பக விமானத்தில் பறந்து பஞ்சவடிக்கு மேல் மறைந்து  நின்று  கீழே  பர்ணசாலையில் நடப்பதை கழுகு மாதிரி பார்த்துக்கொண்டிருந்தான்.   மாரீச  மான்  பஞ்சவடி  பர்ணசாலை அருகே ஓடி ஆடி பாய்ச்சல் காட்டியது. சிரித்தான். சற்று நேரத்தில் ராமன்  பின் தொடர  வெகு தூரம் காட்டிற்குள் ஓடியதையும்,   சற்று நேரத்தில்  ''ஹா  லக்ஷ்மணா, ஹா  சீதா'' என்ற  ராமன் குரல் கேட்டு  லக்ஷ்மணன் காட்டுக்குள் ஓடியதும் பார்த்தான்.  புஷ்பக விமானத்தை விட்டு கீழே இறங்கினான்.  தனது பத்து தலை இருபது கைககளைப்  பார்த்தால்  சீதை மிரள்வாள் என்று தெரியும்.  ஒரு சாமியாராக வடிவெடுத்தான்.  ஒரு சாதுவாக  பர்ணசாலை வாசலில் நின்றான்.  சீதை வெளியே வந்து அவனைப்  பார்த்தாள் . அருகில் அவன் பிடியில் வந்ததும்  தனது  பழைய உருவத்தை எடுத்தான்.  வெகுண்ட சீதை  கோபமாக அவனை ஏசினாள் , விரட்டினாள் . ஹாஹா  என்று சிரித்துக்கொண்டே  அவளை அப்படியே  கவர்ந்து   தனது  புஷ்பகவிமானத்திற்குள் தூக்கிப்  போட்டுக்கொண்டு  பறந்தான்.  உயரே தெற்குபக்கம் இலங்கையை  நோக்கி வேகமாக  விமானம் பறந்தது. 

பஞ்சவடியில்  ராமனுக்கு  நண்பனாகிய ஒருவன்  ஜடாயு என்ற  கழுகரசன்.  ராமனின் தந்தை தசரதனின் உற்ற நண்பன். நான் உங்களை பஞ்சவடியில் பாதுகாக்கிறேன் என்று ராமனிடம் சொன்னவன். அன்று பஞ்சவடியை நோக்கி வந்தபோது அங்கே நடந்ததை  அதிர்ச்சியுடன் பார்த்தான்.  சீதையின் அழுகுரல் கேட்டது.  விர்ரென்று  வேகமாக  பறந்து  ராவணனின் விமானத்தை அடைந்து தனது கூரிய  நகங்களால் ராவணனைத்  தாக்கினான்.  ராவணனுடன் யுத்தம்  வெகு நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை. மிகுந்த சக்தி வாய்ந்த  ராவணன் தனது வாளால் ஜடாயுவின் ரெக்கைகளை  வெட்டியதால்   படுகாயத்தோடு ஜடாயு கீழே விழுந்தான். ராமனுக்கு உதவ,   சீதையை மீட்க,   முடியவில்லையே என்ற துக்கத்தோடும்  உள்ள வலியோடு, உடல் வலியும் சேர்ந்து கண்ணீர் மல்க கீழே கிடந்தான். 

விமானம் தூரமாக பறந்தது. சீதை கீழே  அழுதுகொண்டே பார்த்தபோது  ஒரு மலை உச்சி தெரிந்தது. அங்கே சில வானரங்கள் அமர்ந்து மேலே பார்த்ததை கவனித்தாள் .  உடனே அவசரமாக தனது ஆபரணங்களை கழற்றி மேல் துணியை கிழித்து அதில் முடிந்து கீழே மலை உச்சியை நோக்கி வீசினாள் . யாராவது பார்த்து  ராமனிடம் சொல்ல மாட்டார்களா?

சீக்கிரமே  விமானம்  கடல் மீது பறந்து இலங்கையை அடைந்து  ராவணனால் ஒரு நந்தவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டாள் . 

ராமனும் லக்ஷ்மணனும்  பஞ்சவடியில் பர்ணசாலையில் சீதையைக் காணாமல்  வேகமாக தேடிக் கொண்டு  காட்டிற்குள் சென்றனர்.  வெகு நேரம் கழித்து ஜடாயு  விழுந்து கிடந்த இடம் வந்தார்கள்.  மரணத்தருவாயில் ஜடாயுவை அடையாளம் கண்டு அவனுக்கு நீர் கொடுத்து அவனுக்கு சிஷ்ருஷை செய்ய  அவன்  மெதுவாக சிரமப்பட்டு  திணறிக்கொண்டு  நடந்ததை சுருக்கமாக கூறினான்.  ராவணன் எனும்   ராக்ஷஸ அரசன் சீதையை அபகரித்து விமானத்தில்  சென்றது  புரிந்தது.   அவன் இலங்கையில் இருப்பதையும்    இலங்கை தெற்குப்பக்கம் இருப்பதையும்   சொல்வதற்குள்  ஜடாயுவுக்கு  மூச்சு நின்று,   இறந்துவிட்டான்.   ஜடாயுவின் அந்திம கிரியைகளை  முடித்துவிட்டு  ராம லக்ஷ்மணர்கள்  சீதையை தேடி மேற்கொண்டு நடந்தனர்.  கிரவுஞ்ச மலைக்காட்டை  அடைந்தனர்.  

எதிரே ஒரு  ராக்ஷஸ உருவம் தடுத்தது.   காது செவிடுபட கர்ஜித்தது.  ரெண்டு நீண்ட கைகள் எங்கிருந்தோ  வேகமாக அவர்களை  நோக்கி வந்தது.  அந்த  கைகள் லக்ஷ்மணனை பிடித்துவிட்டது. அவன் திணறினான். கைகளைத்  தொடர்ந்து பின்னால் ஒரு தலை இல்லாத ராக்ஷஸன் தோன்றினான்.   அவன் பெயர் கபந்தன். 
அவன் உடலில் வயிற்று பாகத்தில் பெரிய  வாய்  திறந்து அவர்களை விழுங்க தயாராகும் போது. ராம லக்ஷ்மணர்கள்  கபந்தனின் கரங்களைத்  துண்டித்தனர்.  கபந்தன் ஹா வென்று கத்தியபடி சாய்ந்தான். 

கபந்தன் ஒரு தேவலோக  கந்தர்வன்.  இந்திரனோடு மோதி  சாபம் பெற்ற  கபந்தன்  ராமனால் சம்ஹாரம் செய்யப்பட்டு  சாபம் நீங்கி  வணங்கி மேலே விண்ணுலகம் நோக்கி பறந்தான்.  ராமனின் சரித்திரம்  கேட்டு தெரிந்துகொண்டு    விடை பெற்று போகும் போது   ஸ்ரீ ராமா, ''நீ  தெற்கு நோக்கி போனால்  அங்கே மதங்க மலை வரும். அதன் அடிவாரத்தில்  பம்பா நதி ஓடும்.  அங்கே உனக்கு  உதவி கிடைக்கலாம்'' என்று சூசகமாக சொன்னான்.  அங்கே தான்  ஒரு மலை உச்சியில்  சீதை விட்டெறிந்த ஆபரண மூட்டை கீழே விழுந்தது.....

தொடர்வோம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...