Saturday, November 7, 2020

ELLAM ONRE

 எல்லாம் ஒன்றே -   J.K.  SIVAN 


''எல்லாம்  ஒன்றே''  என்று  ஒரு புத்தகம் யாரோ  எழுதியது என்கிறார்கள்.  அனால்  1935ல்  வையை  R .சுப்ரமணியன் என்பவர்   எழுதி அதை  ரெண்டு அணாவுக்கு அச்சடித்து  விற்றிருக்கிறது .  பகவான் ரமணர் அடிக்கடி இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டுவார்.  அந்த குட்டி புஸ்தகம் எனக்கு கிடைத்து அதில் இருந்து சில உயர்ந்த  அத்வைத  தத்துவங்களை  சுருக்கமாக புரியும்படியாக (நான் புரிந்து கொண்டபடி!!) தருகிறேன்.

''நீயும்  நீ பார்க்கிற இந்த உலகமும் ஒன்று தான்.. மற்றவை, மற்றவர்கள் எல்லாமும் எல்லாரும் நீயே,  அதாவது  ஒன்றே தான். அறிவுள்ளது,  அறிவில்லாதது,  பஞ்ச பூதங்கள்  எல்லாமும் ஒன்றே தான்.  இப்படி எல்லாவற்றையும் எல்லோரையும் ஒன்றாக  பார்ப்பதால்,  நினைப்பதால்  கிடைக்கிற  மன இன்பம்,   வேறு வேறாக பிரித்துக்   காண்பதில் கிடைக்காது.

ஒரு சின்ன விஷயம்.  வேறு வேறாக  பார்ப்பதால், விருப்பு வெறுப்பு, சுயநலம், பொறாமை  போன்ற துர்குணங்கள் சேர்ந்துவிடுகிறது. ஒன்றாக பார்க்கும்போது  த்வேஷம்  எங்கிருந்து வரும்.  பாரபக்ஷம்  எப்படி நெருங்கும்?

என்னய்யா  உளறுகிறாய்?  ஆடு மாடு,  செடி ,கொடி,   மரம், மனிதன் எல்லாமே வேறு வேறாக காண்கிறதே , அது  எப்படி ஒன்றாகும்?  நல்ல கேள்வி.   செடி, இலை , காய், பழம் , வேர், கிளை, தண்டு எல்லாம் வேறு தான் ஆனால்  இதெல்லாம் சேர்ந்திருப்பதை என்னடா சொல்கிறாய்? ''மரம் ''என்று தானே பார்க்கிறாய் .

 அதில் உள்ள வேறு வேறு வஸ்துக்களை மரமாக தான் உணர்கிறோம்.  அதுபோல்  உருவம்   உடல்கள்
 பலவாயினும் உள்ளே உயிர் ஒன்று தானே. அதனால் தான் அந்த உயிராய், ஆத்மாவாக எல்லாம் பார்க்க  பயிற்சி செய்,  கற்றுக்கொள். பாரபக்ஷம், பேதம்  கண்ணில்  படாவிட்டால் மனதில் பதியாது.

வேறு வேறாக  எண்ணாமல், தானே பிறர், பிறரே  தான் என்று எண்ணுபவனுக்கு தீங்கு எங்கிருந்து வரும்? தீமை எங்கிருந்து வந்து ஒட்டிக்கொள்ளும்?அவனால்  யாருக்கு எதற்கு தீங்கு, தீமையோ  கெடுதலோ  நேரும்?  எல்லாம் ஒன்றே என்று   எண்ணும்போது  அனைத்தையும்   இணைப்பது  பேரன்பு ஒன்றே.  தாய்  குழந்தைகளை தன்னுயிராக கருதுகிறாளா என்றால் இல்லை. வேறு உடலாக  பார்க்கிறாள்.அன்பை தருகிறாள். பகவான் அப்படியில்லை  நீ தான் அவன் அவன் தான் நீ. அதனால் அவனை அடைவது பேரின்பம். 
அவனி டமிருந்து நாம் அடைவது பேரின்பம். 

நீ வேறு, நான் வேறு அது, அவள்,  அவர்கள், அவைகள்  வேறு வேறு  என்று பார்க்கும்போது தான்  தனித்தனி குணாதிசயங்கள் காண்கிறது. எல்லாம் நானே, எல்லாம் ஒன்றே என காணும்போது  பாகுபாடு, தனித்துவம் எதிலும் இல்லை. சந்தோஷம் ஒன்றே மிச்சம். அதைக்காட்டிலும் உயர்ந்த   வழி எதுவும் இல்லை, சாந்தம் பெற.  ஒரு   கவலையும் இல்லை. எல்லாம் இன்ப  மயம்.  இந்த உலகே உன் உடல்,  உன் உயிர் தான் எல்லா உயிர்களும் என்று மனது திடமாகிவிட்டால்  அவன் தான் ப்ரம்ம ஞானி.   பகவான் ரமணர் அப்படி வாழ்ந்தவர்.

எல்லாம்  ஒன்றே தான்  ''ஓம் தத் சத்'' . நீ அதுவாக இருக்கிறாய்.  ''அஹம்  ப்ரஹ்மாஸ்மி'' .  நான் தான் ப்ரம்மம்.  இப்போது  புரிகிறதா  உயர்ந்த  உபநிஷத மஹா வாக்கியம்.  நிறைய ஆயிரம் பக்கங்கள் படித்து புரியாமல் தலையை சொரிந்துகொள்வதை விட  சிம்பிளாக இப்படி புரிந்துகொண்டால் போதுமே. 

நமக்கு நாமே  எப்பவாவது கெடுதல் செய்துகொள்வோமா?.  சொந்தக்காசில்  சூன்யம் வைத்துக் கொள்வது என்பது  சும்மா  தமாஷுக்கு சொல்வது.   எல்லாம்  ஒன்றே  என்ற உயர்ந்த  எண்ணத்தில் அதற்கு
 இடமில்லையே.     பேதமில்லாதபோது  சூனியம் வைப்பவன் யார், வைக்கப்படுபவன் யார்?

இந்த ரெண்டணா புத்தகத்தில்  கண்

டஇன்னும்  சில  உயர்ந்த  அற்புத விஷயங்களை   அடுத்து சொல்கிறேன். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...