Tuesday, June 16, 2020

THIRUKKOLOOR PEN PILLAI



திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் 
J K SIVAN

   71   சூளுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார்ப் போல


‘சூள்’ என்றால், சபதம் அல்லது ஆணை என்று பொருள். 
ஸ்ரீ வைஷ்ணவ ஆழ்வார்கள் ஆச்சார்யர்க ளுக்கு பொதுவாக   ஒன்றுக்கு மேற்பட்ட  நாமங்கள் உண்டு. திருக்கோஷ்டியூர் நம்பி என்கிற மஹானுக்கு  திருக் குருகைப் பிரான், கோஷ்டி பூரணர் ,  கோஷ்டி புரீசர்  என்ற பெயர்கள் உண்டு. .  ஆளவந்தார் என்கிற  யமுனாச்சார்யரின்  பிரதம சீடர்களில்  நம்பியும் ஒருவர். 

''கோஷ்டியூர் நம்பிகளே , நமது வைணவ  ஸம்பிரதாயத்தில் உள்ள ஸகல அர்த்த விஶேஷங்களையும்  ராமானுஜருக்கு கற்றுக்கொடுக்கவேண்டும் நீர்  ரஹஸ்ய த்ரயத்தின்  (திருமந்த்ரம், த்வயம், சரம ஶ்லோகம்) அர்த்த விஶேஷங்களைக் கற்று கொடுக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ளும் '' என்று  அவரை  நியமித்தார்  ஆளவந்தார்.

 நம்பிகள்  தனது குரு  ஆளவந்தாரிடம் கற்றுகொண்ட ரஹஸ்ய த்ரயத்தினுடைய  அர்த்த த விஶேஷங்களையே எப்பொழுதும் த்யானித்துக்கொண்டே இருப்பதால்  மெளனமாக இருப்பார்.  வேறு எவரிடமும்  அதை  பரிமாறிக் கொள்ள வில்லை. திருக்கோஷ்டியூரில் வசிக்கும் ஒருவருக்கும்   நம்பிகளின்  பெருமைகள் தெரியாது.     ஸ்ரீ ராமானுஜருக்கு இவருடைய பெருமைகள் தெரியும் . 

''அடியேன் தங்களிடம் ரஹஸ்யமான சரம ஶ்லோகத்தினுடைய அர்த்த விஶேஷங்களைக் கற்றுக்கொள்ள  விருப்ப முடையேன். சீடனாக ஏற்று உபதேசிக்கவேண்டும்  ''  என்று ராமானுஜர் வேண்ட,  

''அப்புறம் வா '' என்று  18 முறை ஸ்ரீரங்கத்திலி ருந்து திருக்கோஷ்டியூருக்கு  ராமானுஜரை நடக்க வைத்தார்  நம்பிகள்.   ரஹஸ்யத்தை தெரிந்து கொள்ள சீடன்   தகுதியானவரா என்று சோதனை செய்த பிறகே   கற்பிக்க வேண்டும்  என்று எண்ணம்.    கடைசியில் 18வது முறை நம்பி அவருக்கு சரம ஶ்லோகத்தினுடைய அர்த்த விஶேஷத்தைக் கற்றுக் கொடுக்க முடிவு செய்தார். 

தகுதி இல்லாதவர்களுக்கும், கற்றுக் கொள்ள வேண்டும் என்று கடுமையான முயற்சி இல்லாத வர்களுக்கும் இந்த அர்த்த விஶேஷத் தைக் கூறக்கூடாது என்று ஸத்தியம் செய்யுமாறு நம்பி ராமானுஜரிடம் கேட்டார். ராமானுஜரும் அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஸத்தியம் செய்தார்.  அதன் பிறகே   நம்பி மிகவும் ரஹஸ்யமான சரம ஶ்லோகத்தினுடைய அர்த்த விஶேஷத்தை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். 

சரம ஶ்லோகம் எது என்றால்   கண்ணன் கீதையில்  உபதேசித்த “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய” ஶ்லோகம் (கீதை 18.66). இந்த ஶ்லோகத்தில் முக்கியமான அர்த்த விஶேஷத்தைக் கூறும் வார்த்தை “ஏகம்” – பகவான் மட்டுமே உபாயம் என்பதே இந்த வார்த்தைக்கு அர்த்தம். கர்ம, ஞான, பக்தி யோகங்கள் மற்றும் நாம் செய்யும் ப்ரபத்தி (சரணாகதி), மற்றும் பல – இவை அனைத்துமே உண்மையான உபாயம் அல்ல.     இந்த  ரஹஸ்யமான அர்த்தத்தை  தகுதியற்ற வர்களுக்கு  கூறினால், தான் செய்யவேண்டிய கர்மத்தை  அல்லது கடமைகளைக் கூடச் செய்யாமல் இருக்கலாம் என்று தவறாகப் புரிந்து கொள்வார்கள். ஆகவே  ராமானுஜருக்கு முன்னால்  இருந்த  ஆசார்யர்கள் இந்த அர்த்த விஶேஷத்தை  சிரத்தையோடு பாதுகாத்து வந்தார்கள். 

'' ராமானுஜா,   இதை தகுதி உள்ளவர்களுக்கு கற்பித்தால் மோக்ஷம் அடைவாய். தகுதியற்றவர்களுக்கு கற்பித்தால் நரகம் அடைவாய்'' ஜாக்கிரதை என்று  நிபந்தனை யோடு எச்சரித்தார்  திருக்கோட்டியூர் நம்பிகள்.

 ராமானுஜர் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் அர்த்த விஶேஷத்தைக் கற்றுக் கொண்ட பிறகு,  திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி,  அனைவருக்கும் கேட்டு உய்யும்படி 

 ''திருக்குலத்தோரே,  யாருக்கெல்லாம் இந்த  ரஹஸ்ய அர்த்தத்தை அறிந்து கொள்ள  விருப்பமோ  இங்கே வாருங்கள். மோக்ஷம் கிடைக்கும்  உடனே  வாருங்கள் ''  என்று  ஊர்மக்களை   அழைத்து  விளக்கினார். 

 ராமானுஜர் செய்ததை கேட்டறிந்து திடுக்கிட்டார்  நம்பிகள்.  '' ராமானுஜா  ஏன் இவ்வாறு தவறு செய்தாய்? என வினவ 

“தேவரீருடைய ஆணையை மீறியதால் அடியேனுக்கு வேண்டுமானால் நரகம் கிடைக்கும், ஆனால் பலருக்கு (சரம ஶ்லோகார்த் தத்தைக் கற்றவர்களுக்கு) மிக உயர்ந்த மோக்ஷம் (பரமபதம்) கிடைக்கு மல்லவா” என்று கூறினார்.

மற்றவர்கள் உய்ய வேண்டும் என்று க்ருபையோடு இருக்கும் ராமானுஜருடைய பரந்த திருவுள்ளத்தைப் பார்த்து நம்பி அவருக்கு “எம்பெருமானார்” என்ற விஶேஷமான திருநாமத்தை சூடினார்

இந்த சரித்திரத்தில் புரிவது என்னவென்றால்  ரஹஸ்ய மந்திரத்தை   திருக் கோட்டியூர் நம்பி   தகுதி  அறிந்து பொருத்தமான  சோதனையில் வெற்றி  பெற்ற சீடனுக்கு மட்டும்  உபதே சிக்க  வேண்டும் என்று  சூள்  (சபதம், உறுதி)  கொண்டிருந்தார்.  ராமானுஜரின்  ஆர்வம் என்ன, தகுதி என்ன என்று அறிய  18 முறை  ஸ்ரீரங்கத்துக்கு திருக்கோஷ்டியூருக்கும் நடக்க வைத்தார்.   

ராமானுஜர் கொண்ட  சூள்  என்னவென்றால்.   எவ்வளவு தான் என்னை சோதனை செய்யட் டுமே, எத்தனை முறை வேண்டுமானால் அலைய விடட்டுமே, இவரிடமிருந்து  இந்த ரஹஸ்ய மந்திரம் பெறாமல் விடுவதில்லை என்று உறுதியாக இருந்தார். 

இந்த விஷயம் ராமானுஜர் சம்பந்தப்பட்டது என்றாலும் அதை சமயோசிதமாக  அவரிடமே தெரிவிக்கிறாள் நமது புத்திசாலியான திருக்  கோளூர்  பெண் பிள்ளை. 

''ஐயா,  நான்  என்ன திருக்கோஷ்டியூர் நம்பிகளைப்   போல  சூளுரைத்து உபதேசம் யாருக்காவது செய்ததுண்டா, அல்லது அவ்வளவு உறுதியோடு உபதேசம் தான் பெற்றவளா?? எந்த விதத்தில் நான் திருக்கோளூரில் வசிக்க அருகதை பெற்றவள்?? என்று ராமாநுஜரிடமே கேட்கிறாள் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...