Wednesday, June 10, 2020

ANANDHA RAMAYANAM



ஆனந்த ராமாயணம்:  J K  SIVAN 
                                                                         
                      17   கண்டேன் சீதையை ...

''பார்வதி,   ஹனுமான்  இலங்கை' மாநகரை எரித்து விட்டு  திரும்பும் முன்  அசோகவனம் சென்று சீதையை தரிசித்து விடைபெற செல்லும்போது தரையெல்லாம்  பொன்மயமாக   தங்கத்தை உருக்கி வார்த்தது போல்  ஏதோ  ஓட  ஒரு காரணம் இருந்தது.  அதைச்  சொல்கிறேன். அது ஒரு பழங்கதை. கேள்:

பாற்கடல் மத்தியில் திரிகூடம் என்று ஒரு பர்வதம்.  அதில் ருதுமது  என்ற  வருணனின்  உத்யானவனம் . அங்கே ஒரு தாமரைக்குளம். நீலோத்பலம், செங்கழுநீர், குமுதம் , தாமரை மலர்கள் அதில் நிறைய இருக்கும்.  அந்த குளத்தில் ஆழத்தில் ஒரு பெரிய முதலை. அதற்கு ஒருநாள் நல்ல பசி.  அந்த நேரம்  ஒரு மதயானை பெண்யானைகளோடு இந்த தடாகத்தில் இறங்கி நீர் பருக வந்தது. யானையின் காலை முதலை பிடித்தது.  ரெண்டும் பலத்துடன் போராடின.இந்த முதலை யானை  யுத்தம்  ஆயிர வருஷம் தொடர்ந்து நடந்தது.   வருணன் முதலைக்கு உதவினான்.  யானை தன் சக்தியை இழந்துகொண்டே வந்தது. தனக்கு நேர்ந்த ஆபத்தை நினைத்து ஆபத்பாந்தவன்  ஆதி நாராயணனை வேண்டியது. துதிக்கையால் தாமரையை தடாகத்திலிருந்து  பறித்து மானசீகமாக பூஜை செய்தது.  அடுத்த கணமே   கருடாரூடராக வந்த  நாராயணனின்  சக்ராயுதம் முதலை வாயை பிளந்தது. யானை கரையேறியது.  அதன் ஜென்மமும்  முடிந்தது. இந்த   கதையின் பூர்வ  விருத்தாந்தம் சொல்கிறேன்.

யானை முன் பிறவியில் இந்த்ரத்யும்னன் என்ற பாண்டிய அரசன் நாராயணனை துதித்து தவம் செய்துகொண்டிருந்தபோது  அங்கே வந்த அகஸ்தியரை கவனித்து உபசரிக்கவில்லை. ''மதம் பிடித்தவன் நீ மதயானையாக திரிவாய் '' என்று  அகஸ்தியர் சபிக்க, தான் நிரபராதி, தவம் செய்து கொண்டிருந்தபோது ல் அவரை பார்க்கவில்லை,  அதனால் உபசரிக்க தவறினேன் என்று கெஞ்ச   ''ஒரு தடாகத்தில் ஒரு முதலையால் உன் உயிரை இழக்கும் சமயம்  நாராயணனால்  காப்பாற்றப்படுவாய். உன் சாபம் விடியும்.பிறவி முடியும்''' என்கிறார். 

அதேபோல்  முதலை  முன் ஜென்மத்தில்  ஹுஹு எனும் கந்தர்வன்.  அநேக  அப்ஸரஸ் ஸ்திரீகளோடு  ஒரு நாள் வருணனின் தடாகத்தில் ஜலக்ரீடை செய்கிறான். அப்போது   தேவலர் என்கிற  ரிஷி அகமர்ஷண ஜபம் செய்து கொண்டு   நீரில் ஸ்னானம் செய்கிறார்.தனது  ஜலக்கிரீடைக்கு இடைஞ்சலாக இருக்கிறாரே என்று அவர் காலை நீருக்கடியில் இழுக்கிறான்  ஹுஹு.   ''முதலை போல்  நீரில் இருந்து என் காலை இழுத்த நீ  ஒரு முதலையாக   கடவாய்''   நாராயணனால் உனக்கு  விமோசனம் கிடைக்கும். '' என்கிறார் தேவல ரிஷி. 

யானையை காப்பாற்றிவிட்டு திரும்பியதும்  கருடன்   எனக்கு  பசிக்குணவு வேண்டும் என்று  நாராயணனை வேண்ட,  தடாகக்கரையில் நீ கொன்ற  முதலை, இறந்த  யானை இரண்டையுமே   ஆகாரமாக கொள் .ப்பாய். அவற்றுக்கும் விமோசனம் ஏற்படும்''என்கிறார்.  கருடன்  தடாகத்தின் அருகே சென்றபோது அந்த இரு உடல்களையும் ஒரு பெரிய கழுகு கொத்தி தின்ன வந்ததால்  அதனோடு சண்டையிட்டு  மலை போன்ற அந்த கழுகை  கொன்று,  ஒரு காலில் அந்த பெரிய கழுகு, இன்னொரு காலில் யானை, முதலை இரண்டையும் தூக்கிக்கொண்டு  பாற்கடலின் மீது பறந்து  ஒரு பெரிய  ஸ்வர்ண விருக்ஷத்தின்  கிளையில் அமர்ந்தான்  கருடன்.  அந்த விருக்ஷத்தின் கிளையில்  அறுபதினாயிரம்  வால்கில்லியர்கள்  தலை கீழாக\ தொங்கிக்
கொண்டு  தவமிருந்தார்கள்.    கருடன், முதலை, யானை, கழுகு  எல்லாவற்றின்  பாரத்தையும் தாங்கமுடியாத  கிளை  முறிய  அதில் தொங்கிக்கொண்டிருந்த அறுபதாயிரம் ரிஷிகளும்  கீழே பாற்கடலில் விழுந்தால்  தவம் கலைந்து  சாபமிடுவார்களே என  கருடன் அந்த கிளையோடு, கழுகு, யானை, முதலையோடு   பாற்கடல் மேல் பறந்தான். வழியில்  தனது தந்தை காஸ்யபமுனிவரைப் பார்த்து, ''எனக்கு ஒரு நல்ல இடம்  சொல்லுங்கள் இந்த கிளையோடு  அங்கே ஜாக்கிரதையாக   முனிவர்களை தாங்கிக்  கொண்டு செல்லவேண்டும்'' என்கிறான். 

 ''கருடா,  இன்னும்  நூறு காதம் சென்றால் இலங்கை  தீவு வரும் அங்கே  அமர்ந்து உன் ஆகாரத்தைப் புசி  என்கிறார் காசியபர். கருடன் இலங்கையில் திரிகூட மலை வருகிறான். மலைச்சிகரத்தில்  கொண்டுவந்த கிளையை ஜாக்கிரதையாக  மலை உச்சியில் வைக்கிறான்.  வல்கில்லியர்கள்  தவம் முடிந்து  அங்கிருந்து விஷ்ணு லோகம் செல்கிறார்கள். கருடன் வைத்த அந்த பெரிய  கிளை  ஸ்வர்ணமயமான சிலையானது.  ஹனுமார் இலங்கையை கொளுத்தியபோது உருகி  பொன்னிற ஆறாக  ஓடியது .  இது தான்  ஹனுமான்
கண்ட பொன்னிறமாக உருகி ஓடிய திரவம்''.   எப்படி  கதை?  என்கிறார்  பரமசிவன்.

இதற்குள்  ஹனுமார்  அசோகவனத்தில்  சீதையை வணங்கி ''தாயே  என் தோளில்  அமருங்கள், ராமரிடம் கொண்டு சேர்க்கிறேன்'' என்றார் . 

'' இல்லை ஹனுமான்,  ராமர் தானே வந்து என்னை மீட்பார் .  கவலை கொள்ளாதே.  இந்தா , நான் கொடுத்த சூடாமணியோடு அவர் கொடுத்த கணையாழியையும் அவரிடம் சேர்ப்பித்து விடு ''   என்று அதை தருகிறாள்.  பிரம தேவன்  ஹனுமார்  இலங்கை நகர் நுழைந்தது  முதல் நடந்தவற்றை  முழு விவரத்தோடு ஒரு  கடிதமாக  எழுதி ராமரிடம் சேர்ப்பித்து விடு என்கிறான்.  லிகடிதம்,  கணையாழி, சூடாமணி ஆகியவற்றோடு ராமர் கடலை தாண்டி அங்கதன் முதலானோர் காத்திருக்கும் இடத்தை நொடியில் அடைகிறார்.  வெற்றிகரமாக  தான் இலங்கை பயணம் செய்தது பற்றி ஹனுமார்  பெருமைப் பட்டுக்கொண்டார். அங்கே  ஒரு  முனிவரை வணங்கி  தாக சாந்திக்கு ஒரு இடம்  சொல்லுங்கள் என்கிறார். அவர் ஒரு  தடாகம்   காட்ட முனிவரிடம்  பிரமன் கடிதம், கணையாழி, சூடாமணி மூன்றையும் தந்துவிட்டு  தடாகத்தில் தாகம் தணிந்து  முனிவரிடம் மூன்று பொருள்களையும் கேட்க,  கணையாழியை தவிர மற்ற இரண்டையும் தருகிறார்.   ஒரு குரங்கு  கணையாழியை எடுத்து  என் கமண்டலத்தில் போட்டுவிட்டது எடுத்துக் கொள்''  என்கிறார். கமண்டலத்தில் பார்த்த ஹனுமான் ஆயிரக்கணக்கான கணையாழிகள்  ராமர் நாமம் பொறித்து அதில் காண  எது நான்  கொடுத்தது எனக்கேட்க.  ஆயிரக்கணக்கான கணையாழிகள், ஆயிரக்கணக்கான குரங்குகள்  எடுத்து வந்து ஆயிரக்கணக்கான  கமண்டலங்களில் போட்டபோது ,  உன்னுடைய  கணையாழி என்று எதை நான் உனக்கு  சொல்ல முடியும்''  என்கிறார் முனிவர். 

ஹநுமானுக்கு  பொறி தட்டியது.  ஆஹா   எனக்கு முன்  எத்தனையோ அவதாரம் என் போல் எத்தனையோ சேவகர்கள் என்னைக்காட்டிலும் சிறந்த சேவைகள் புரிந்திருக்கிறார்கள்.  இதை தான்  ''ஆயிரக்கணக்கான குரங்குகள்  ஆயிரக்கணக்காக  ராமர்களுக்கு  சேவை செய்தபோது  ஆயிரக்கணக்கான கணையாழிகள் '' என்று  முனிவர் குறிப்பிடுகிறார். நான் என்ன பெரிதாக செய்துவிட்டேன் என்று  தான் செய்த காரியத்துக்கு கர்வம் கொண்டதற்கு வருந்துகிறார். 

அங்கதன் முதலானோர்  ஹனுமான் வரும் வரை உண்ணாமல்  காத்திருந்தவர்கள்  ஹனுமனை வரவேற்கிறார்கள். விஷயம் அறிகிறார்கள்.  வழியில்  சுக்ரீவனுடைய மதுவனம் ததிக்ரீவன்  என்பவன் பொறுப்பில் இருப்பதை கண்டு உள்ளே நுழைய  ததிக்ரீவன் அவர்களைத்  தடுக்கிறான்.  அவனைத் தாக்கிவிட்டு மதுவனத்தில் மது அருந்தி, கனிவர்கங்களையெல்லாம் வயிறு நிரம்ப  உண்கிறார்கள்.  ததிக்ரீவன் சுக்ரீவனிடம் முறையிட, ''அவர்கள் அப்படி  அத்து மீறி நடப்பவர்கள் அல்ல.  ரொம்ப  சந்தோஷமாக இருக்கிறார்கள், ராம கார்யம் வெற்றியாக முடிந்தது  என்று அர்த்தம்.  ஓஹோ  அங்கதன் ஆஞ்சநேயர் முதலானோர் சீதையை கண்டுபிடித்துவிட்டார்களோ?''  அவர்களை தடை செய்யாமல்  என்னிடம்  சீக்கிரம்  அனுப்பு'' என்றான் சுக்ரீவன். சுக்ரீவனிடம்  நடந்ததை சொல்கிறார்கள்.  சுக்ரீவன் அவர்கள் புடைசூழ  எல்லோரும்  ராமரிடம் வந்து  ''கண்டேன் சீதையை'' என்ற முதல் வார்த்தை ஹனுமான் சொல்ல,  பிரமன் கொடுத்த விகிதம், சீதை கொடுத்த  சூடாமணி, கணையாழி எல்லாம்  ராமனைச்  சேர்கிறது.   

ராமர்  ஹனுமனை அணைத்துக் கொள்கிறார்.  ராமர் கையில் அவர் கொடுத்த  கணையாழி சுண்டுவிரலில் இருப்பதை கண்டு ஆச்சர்யப்படுகிறார் ஹனுமான்.  

''ஆமாம் ஹனுமான், நீ வழியில் கண்ட முனிவர் நான் தான். ''உன்னை கர்வம் அணுகக்கூடாது என்பதற்காக நான் புரிந்த நாடகம்.'' என்கிறார்.

ஆமாம்  பார்வதி,  ஹனுமான்   இலங்கையில் புரிந்த சாகசமெல்லாம்  ராமர் கிருபையால் என ஹனுமான் அறிந்து அவரை வணங்குகிறான்''   என்று சொல்லி  பரமேஸ்வரர்  நிறுத்துகிறார்.   நாமும்  ஆனந்த ராமாயணத்தின் சாரா காண்ட 10வது சர்க்கத்தில் இனி புகுவோம். பரமேஸ்வரன் தொடர்ந்து சொல்வதை பார்வதியோடு சேர்ந்து கேட்போம். 




  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...