Friday, June 12, 2020

SRINIVASA KALYANAM




                                    வேங்கடேசன்  கதை  J K  SIVAN  



மீண்டும்  திருப்பதி வெங்கடேசன் ஆலயம்  திறக்கப்படும் என்று அறிந்தேன்.  அவனைப்பற்றிய நினைவு வந்தது.

''இரவும் பகலும் ஓய்வில்லாமல் தரிசனம் தந்து  கொண்டிருந்த  திருமலை வெங்கடேசா!,   உனக்கு சற்று இப்போது தான் ஒய்வு. இன்னும்  ஆயிரக்கணக்கான வருஷங்கள், எண்ணற்ற கோடி பக்தர்களுக்கு தரிசனம் தர இது போன்ற ஒய்வு தேவை.'' 

ஏன் இப்படி திருப்பதி வெங்கடேசனை தேடி ஓடுகிறோம்? அங்கே தெய்வத்தை  உணர  முடிகிறது.தெய்வீகம் எங்கும்  பரிமளிக்கிறது. திருப்பதி, ஸ்ரீ ரங்கம்,  ராமேஸ்வரம்,  துவாரகை,  போன்றவை இந்து சனாதன தர்ம நம்பிக்கை  அஸ்திவாரத்தின்  தூண்கள்.

திருப்பதி வெங்கடேசனை பற்றி நிறைய  சொல்லும் நூல்கள்  வராஹபுராணம், பத்ம புராணம், கருட புராணம், பிரம்மாண்ட புறம், மார்க்கண்டேய புராணம், ஹரிவம்ச புராணம், வாமன புராணம், ப்ரம்ம புராணம், ப்ரம்மோத்ர புராணம். ஆதித்ய புராணம்\, ஸ்கந்த புராணம், பவிஷ்யோத்தர புராணம்.  போதுமா??
ஆதிவராஹன்  சுவாமி புஷ்கரணியின் மேற்கு கரையில் தோன்றியவர்.  தெற்கு கரையில்  வெங்கடேசன்.

 ப்ரளயத்துக்கு  முன்பு  எண்ணாயிரம் யுகங்கள் அக்னி   ஜ்வாலையோடு எரிந்தான் . பூமி சாம்பலாயிற்று. வாயுதேவன் பலமாக வீசி அக்னியை பரப்பினான்.  எங்கிருந்தோ  கருமேகங்கள் ஆகாயத்தில் குவிந்தன. விடாது தொடர்ந்து பெய்த மழை பூமியில் பிரளயத்தை உண்டாக்கியது. பூமி  பாதாளத்தில் அழுந்தியது.  இதற்கெல்லாம் காரணம்  ஹிரண்யாக்ஷன் எனும்  பலம் வாய்ந்த அசுரன்.   மஹா விஷ்ணு ஆதிவராஹனாக பலமிக்க  கோரைப்பற்கள் கொம்பாகி நிற்க,   நீரில் பாய்கிறார் . கடும் யுத்தம் ஹிரண்யாக்ஷனுக்கும்  வராஹனுக்கும், வென்றது  வராஹன் .  பூமியை கோரைப்பற்களால் தாங்கி மேலே கொண்டுவருகிறார்.  பூமியில் மீண்டும்  உயிர்ப்பு   துவங்க சங்கல்பம் செயகிறார்.  ''கருடா, நீ போய் வைகுண்டத்திலிருந்து   க்ரீடாச்சலத்தை இங்கே கொண்டுவா''  ஆதிசேஷன் உருவில் உள்ள  பெரிய  பர்வதத்தை    கொண்டு  வருகிறான் கருடன்.


''  நீங்களே  சாந்தஸ்வரூபமாக இந்த மலைமேல் நின்று பூமியில் உயிர்களை காக்க,  பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தந்திட,   வேண்டும்'' என்று தேவாதி தேவர்கள் விஷ்ணுவை   பிரார்த்திக்கிறார்கள். 
சதுர் புஜங்களோடு, பூமாதேவியோடு, வெங்கடாத்திரி சிகரத்தில் தங்கிநிற்க  வராஹன்  முடிவெடுத்தான்.

வைகுண்டத்தில் ஒருமுறை வாயுதேவன் அனந்தசயனனாக மஹாலக்ஷ்மி சமேத  விஷ்ணுவை தரிசிக்க செல்கிறான். ஆதிசேஷன் அனுமதிக்க வில்லை. இருவருக்கும் யுத்தம்.     ''வாயுதேவா, ஆனந்தகிரியை  ஆதிசேஷன் பிடியிலிருந்து விடுவிக்க உன்னால் முடிந்தால் நீயே  பலசாலி''  என்கிறார்  இதில் குறுக்கிட்ட மஹா விஷ்ணு.  வாயுதேவனை  மகிழ்விக்க  ஆதிசேஷனும் ஆனந்தகிரியும் காற்றில் மிதந்து ஸ்வர்ணமுகி ஆற்றங்கரையை அடைகிறார்கள்.   ஆதிசேஷன் சேஷாத்திரி  ஆகிவிட்டான்.  ஆதிசேஷனின்   ஐந்து தலை பாகம்  குடையாக  வெங்கடேசனுக்கு வேங்கடாத்ரி ஆகிறது.   அவனது நீண்ட வயிறு பாகம்  அஹோபிலமாகிறது   அங்கே  நரசிம்மனாக  விஷ்ணுவை ஏந்தி நிற்கிறான்.  அவனது வால்பாகம்  ஸ்ரீ சைலமாகி மல்லிகார்ஜுனர் அங்கே காட்சி அளிக்கிறார். சிவனுக்கும்  பாம்பு ரொம்ப பிடிக்குமே.

கலியுகத்தில்  விஷ்ணு  வேங்கடாத்ரியை விட்டு  வைகுண்டம் சென்றுவிட்டார்.  ஒருநாள் பிருகு மகரிஷி  சத்யலோகத்தில்  பிரம்மாவை பார்க்க வருகிறார்.  முடியவில்லை, பிறகு கைலாசம் சென்றும்  சிவனைப்  பார்க்க முடியவில்லை.    அலட்சியம் செய்ததாக   ப்ரம்மா சிவன் மேல் கோபமாக   ரிஷி  நேராக வைகுண்டம்  வருகிறார். பிரிகுவுக்கு  விஷ்ணுவும்   தன்னை மதிக்கவில்லை என தோன்றி விஷ்ணுவை மார்பில் உதைக்கிறார்.  கோபமின்றி  விஷ்ணு   ரிஷியின் கால்களை பிடித்து விடுகிறார்.  விஷ்ணுவின் மார்பில் மஹாலக்ஷ்மி இருப்பதால்  பிருகு மகரிஷியின் செயலுக்கு கண்டிக்காமல் கால்களை பிடித்துவிட்ட  மஹா விஷ்ணுவின் செயல்  வெறுத்து   பூலோகத்தில் கரவீரபுரம்  சென்று ( இப்போது மகாராஷ்டிரா வில் கோலாப்பூர்) தவம் செயகிறாள்.

மஹாலக்ஷ்மியின் பிரிவால் அவளைத்தேடி  விஷ்ணு பூமிக்கு வருகிறார்.  வெங்கடாத்திரியில் ஒரு பெரிய புளிய மரத்தடியில்  பாம்பு புற்றில்  விஷ்ணு தானும்  தவம் செயகிறார்.  அருகில் புஷ்கரணி .   பிரம்மாவும் சிவனும்  வருகிறார்கள் கன்றுக்குட்டி பசுவாக .  சோழ ராஜா அவற்றை  வாங்கி அவனது  வேலையாள்  வேங்க
டாத்திரியில்  மேயும்போது  ஒரு புற்றின் மேல்  பசு பால் சொரிகிறது. பசு  புற்றின் மேல் பால் சொறிந்து புற்றில்  ஸ்வயம்பு லிங்கம் தோன்றும் புராணக்கதைகள் பல கோவில்களுக்கு  சொந்தமானது. 

தனது பாலை இப்படி வீணாக்கிய  பசுவை  மேய்ப்பவன்  கோடாலியை  பசுவின் மேல்  எறிய  அதை தடுக்க  விஷ்ணு புற்றிலிருந்து எழ, அவர் மேல் கோடாலி பட்டு  காயம் அடைகிறார்.  பசு மேய்ப்பவன் அதிர்ச்சியில் மரணமடைய  ரத்தக்கரையோடு  பசு  அந்த ஊர்  ராஜாவின் முன் போய் நிற்கிறது.  அவன் தான் பசு கன்றுக்கு  எஜமானன் அல்லவா?  மேய்ப்பவன் செயலுக்காக   ராஜாவுக்கு  அசுரனாக பிறக்க சாபம்.

''இந்த சாபம் எப்போது விலகும்? என்று  கேட்ட ராஜாவுக்கு  ''நான்  ஸ்ரீனிவாசனாக  ஆகாச ராஜன் மகள் பத்மாவதியை மனம் செய்து கொள்ளும்போது அவன் ஒரு  கிரீடம் எனக்கு  அணிவிப்பான். அப்போது''  என்கிறார் விஷ்ணு.    ராஜாவின் வம்சம் தான் பாலாஜி கோவில் கற்பகிரஹ கதவை திறக்கும்  உரிமை பெற்றவர்கள். அந்த ராஜா தான் ஆகாச ராஜாவாக பிறக்கிறான். குழந்தை இல்லை. ஒரு தாமரைக்குளத்தில் பெண் குழந்தை கிடைக்கிறாள். ''அலர் மேல் மங்கை'' (பத்மாவதி)  என்ற மகளாக வளர்கிறாள். 

வகுளமாலிகா எனும் முதிய  விஷ்ணு பக்தையின்  வளர்ப்பு மகன் ஸ்ரீனிவாசன். வகுளா முற்பிறவியில் கிருஷ்ணனின் வளர்ப்பு தாய்  யசோதை. அவனுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்டவள்.   ஒரு  நாள் காட்டில் தோழிகளோடு விளையாடும் பத்மாவதி  யானையைக்கண்டு மிரள, ஸ்ரீனிவாசன் சமய சஞ்சீவியாக வந்து காப்பாற்றுகிறான். பத்மாவதிக்கு அவனை மணந்துகொள்ள ஆசை. குறி சொல்லும் பெண்ணாக ஸ்ரீனிவாசன் வருகிறான்.  வகுளமாலிகா  தனது மகன் ஆசையை நிறைவேற்ற  ஆகாச ராஜனிடம் சென்று அவன் பெண்ணை தன்  மகனுக்கு வரனாக கேட்கிறாள்.  ஒரு நல்ல  நாளில்  பத்மாவதி கல்யாணம் நடக்கிறது.  தனது கல்யாணத்திற்கு குபேரனிடம் ஸ்ரீனிவாசன்  பெற்ற  கடன் இன்றும் அடையாமல், வட்டி மட்டுமே கட்டிவருகிறார். 

பிரிந்து கோலாப்பூர் சென்ற  மகாலட்சுமிக்கு   விஷ்ணு ஸ்ரீனிவாசனாக பத்மாவதியை மணந்த விஷயம்  தெரிகிறது.  ஸ்ரீனிவாசனை பத்மாவதியும் லக்ஷ்மியும்  வேங்கடாத்ரியில்  சந்திக்கிறார்கள்.  அப்போது ஸ்ரீனிவாசன் பூமியை காப்பதற்கு கல்லாக உருவம் கொண்டு ஏழுமலையானாக நிற்பது தெரிகிறது. வணங்குகிறார்கள். பத்மாவதி   மலையடிவாரத்தில்  கோவில் கொண்டு அலர்மேல் மங்காபுரத்தில் அருள் பாலிக்கிறாள்.  ஸ்ரீ  என்கிற  மஹாலக்ஷ்மி  விஷ்ணு  மார்பில் வழக்கம்போல் குடிகொள்கிறாள்.  ஆகவே தானே அவன்  ஸ்ரீனிவாசன். 

பத்மாவதி யார் ? என்ற  .கேள்விக்கு பதில். ராமாயணத்தில் ராவணன் சீதையை கடத்தும் முன்பே அக்னியில் பிரவேசித்த  சாயா லக்ஷ்மி . பின்னர்  விபீஷணன் லங்காதிபதியாக முடிசூட்டி  சீதை ராமனை அடைய மீண்டும்  அக்னியில் பிரவேசித்து மறைந்த சாயா லட்சுமி ஒரிஜினல் சீதையாக  ராமனை அடைகிறாள். சாயா சீதை வேகவதியாக அவதரித்து பத்மாவதியாகி,  விஷ்ணு ஸ்ரீனிவாசனாக அவதரித்தபோது ஆகாசராஜன் மகள்  பத்மாவதியாக பிறந்து விஷ்ணுவை மணந்தவள் . எல்லாம்  ஒன்றே. பெயர்கள் உருவங்கள் வேறு.

வராஹ க்ஷேத்ரத்தில் வேங்கடாத்ரியில்  ஸ்ரீனிவாசன் உறைவிடம்  கொண்டார். கருடன் க்ரீடாசலத்தை  கொண்டுவந்து சுவாமி புஷ்கரணிக்கு இடது புறம்  ஆதிவராஹனுக்கு விமானமாக வைத்தான். சதுர்புஜ  ஆதி வராஹனை வணங்காமல்  வெங்கடேசனை வணங்குவது முறையாகாது.

ரொம்ப ரொம்ப  நீளமான  ஒரு புராணத்தை  ஒரு பக்கத்தில் சுருக்குவது ரொம்ப ரொம்ப கஷ்டம் தான்.  புரிந்தால் சந்தோஷம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...