Monday, June 8, 2020

ANANDHA RAMAYANAM



ஆனந்த ராமாயணம்    J K  SIVAN  

                         16.   ஹனுமானின்  வீர விளையாட்டு.

''நான்  காண்பது கனவா?  ஏதோ ராக்ஷஸ மாயமா?   இப்படி  என்  வாழ்வின் முக்கிய விஷயங்களை, என் ராமனைப் பற்றிய  வார்த்தைகளை   என் செவி இனிக்க  கூறுவது  யார்? நான் கேட்டது உண்மையாக இருந்தால் அந்த மஹானுபவன் என் எதிரே வரட்டும்''  

சீதை  நினைத்த, இதை சொன்ன, அடுத்த கணமே  ''தொப்''பென்று அவள் முன் குதித்து கைகட்டி பவ்யமாக நின்றார் ஹனுமான்.  அடுத்த கணமே  ராமர் கொடுத்த கணையாழியை கண்களில்  ஒற்றிக்கொண்டு   சீதையிடம்  நீட்டினார். தனது வரவின் விருத்தாந்தங்களை சுருக்கமாக கூறினார்.  சீதை காதுகுளிர கேட்டு மீண்டும் சொல்லு என்றாள்.  சீதை பஞ்சவடியில் ராமனைப்  பிரிந்தது முதல் நடந்த அனைத்தும் கோர்வையாக கூறுகிறார். 

சீதைக்கு இன்னும் சந்தேகம் முழுதும் தீரவில்லையோ ? அவளுக்கு ஆறுதல் கூறி விரைவில் ராமர் வந்து மீட்பார்  என்று சொல்லிவிட்டு   ''அம்மா  உங்களுக்கு மட்டும் தெரிந்த ஒரு சேதியை அடையாளத்துக்கு ராமர்  சொல்ல சொன்னார். சித்ரகூட பர்வதத்தில் நீங்கள் இருவரும் மட்டும் இருக்கும்போது ராமர் தங்கள் கன்னத்தில் மனோசிலை எனும் ஒளஷதியால் கொடி  எழுதியதை சீதைக்கு  நினைவு படுத்து '' என்று சொன்னார்.''

 சீதை  ஹா ஹா என்று வாய் விட்டு முதல் தடவையாக சிரித்து பரமானந்தம் அடைந்தாள்.

''தாயே.   அங்கே ராமர்  என் வரவுக்காக  ஆவலுடன் காத்திருப்பார். நான் சீக்கிரம் திரும்ப வேண்டும்.
 உங்களை பார்த்து உங்களிடம் கணையாழியை சேர்த்ததற்கு அடையாளமாக   நீங்கள் ஏதேனும் அவருக்கு தந்தால்  அவரும் மகிழ்வார்''   சீதை தனது சிரசில் சூடியிருந்த சூடாமணியை எடுத்து அனுமனிடம் கொடுக்கிறாள். 

''ஹனுமான்,  ராமரிடம்  சித்ரகூடத்தில் எனக்கு ஒரு காகத்தால் நேர்ந்த துன்பத்தை அடையாளமாக நினைவு படுத்தினேன் என்று சொல்லு ''

 ராம காரியம் வெற்றியாக நிறைவேறியதும் ஹனுமான் மகிழ்ந்து  ''தாயே  இந்த  ராக்ஷசர்கள்  வனத்தில்  நிறைய  கனிகள் உள்ளது. அவற்றை நான் புசிக்க  நீங்கள் அனுமதிக்கவேண்டும்.  

''ஹனுமா,  இது தசக்ரீவன்  ராவணன் தோட்டம். இதில் எதையும் தொட எவருக்குமே  அனுமதி இல்லை.. அவனை எதிர்க்க  உனக்கு  சக்தி போதாது.. வேறு எங்காவது புசித்து விட்டு செல். ''

'' அம்மா  என் இதயத்தில்  ''ராம'' எனும்  சக்தி வாய்ந்த தாரக மந்திரம் உள்ளது. அதன் முன் இந்த அனைத்து ராக்ஷஸர்களும்   துரும்பு. '' வாலை  உயர்த்தி   ஒரு பெரிய மரத்தை ஒரே உலுக்கு  உலுக்க  அனைத்து பழங்களும்  பொலபொல வென்று  உதிர்ந்து மலையாக சேர்ந்தது. வேண்டியதை சாப்பிட்டார்.  வாலால் மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தார்.  காவலர்கள் ஓடிவந்தனர். அவர்களை மரங்களால் தாக்கி  அவர்கள்  மாண்டனர்,  சிலர்  படுகாயம் அடைந்தார்கள்.  மரங்கள் இருந்த இடம்  கால்பந்து மைதானமாகியது.  ராவணனுக்கு சேதி பறந்தது.  அவனுக்கு  பிடித்த அசோகவனம் பாலைவனமாகிறது   என்று அறிந்து  கோபத்தோடு காவல் தலைவன்  ஜம்புமாலியை அழைத்தான்.  

''இருபதாயிரம்  வீரர்களோடு செல்.  அந்த குரங்கை உயிரோடு என்னிடம்  பிடித்துக் கொண்டு வா'' 
அவர்களைக் கண்டதும்  ஹனுமான் சந்தோஷம் அடைந்தார்.  அருகே இருந்த மாளிகையை நொறுக்கி  வாசலில் இருந்த பெரிய  தோரண ஸ்தம்பத்தை   உருவி அனைவரையும் நொடியில்  கொசுவை  அடிப்பது  போல் கொன்றார். ஜம்புமாலியும் நசுங்கி செத்தான்.  ராவணனின் ஐந்து சேனாதிபதிகள் லக்ஷம் ராக்ஷஸர்களோடு ஹனுமனை தாக்கினார்கள்.  தோரண ஸ்தம்பம் ஒன்றாலேயே அனைவரையும் எமனுலகு அனுப்பினார் ஹனுமான். ராவணன் பிள்ளை அக்ஷகுமாரன்  பெரும் சைன்யத்தோடு வந்து  மரணத்தை தழுவினான்.   

ராவணனின்  மகன் இந்திரஜித் கோடி ராக்ஷஸர்களோடு தேரில் வந்தான். அஸ்திர வித்தையில் தேர்ந்தவன் என்றாலும்  ஹனுமானின் பலத்துக்கு ஈடுகொடுக்க இயலாமல்  படைகளை முற்றிலும் இழந்து  தோரண ஸ்தம்ப அடியில் எலும்பு நொறுங்கி ஒரு குகையில் ஓடி ஒளிந்தான்.  

ப்ரம்ம தேவன் ஓடிவந்து ''ஆஞ்சநேயா,  என் அஸ்திரத்தை  இப்போது மேகநாதன் உன் மேல் பிரயோகிப்பான். அதற்கு  நீயாகவே  அடங்கி கட்டுப்பட்டு  ராவணனை சந்திக்க வேண்டும்.''  

''ஆஹா  அப்படியே''  என்று   இந்திரஜித்  பிரம தேவன் அறிவுறுத்திய  பிரம்மாஸ்திரத்தை  பிரயோகித்ததும்  ஹனுமான் தானாகவே  பிடிபட்டு,  கட்டுப்பட்டு  ராவணன் முன்னே கொண்டு செல்லப்பட்டார். 

'' ப்ரஹஸ்தா, இவன் யார் என்று விசாரி'' என்றான் ராவணன்.  விசாரித்தான். ஹனுமான் ராவணனை நோக்கி 


''நான்  ராம தூதன்.உன் மூர்கத்தனத்தை  விட்டு  சீதா தேவியை வணங்கி ராமனிடம் ஒப்படைத்து, சரணடைவாய். உன் உயிர் குடும்பம் எல்லாம் தப்பும். இல்லையேல்  வானர சைன்யங்கள் உன்னையும் உன் நாட்டில் ஒருவர் மிஞ்சாமல் அனைவரையும் அழிக்கும். உன்னை எச்சரிக்கிறேன்''

''ஹே  முட்டாள் குரங்கே, எனக்கா உபதேசம் செய்கிறாய். தேவாதி தேவர்கள் என் பணியாட்கள். என் வீரம் பலம் அறியாமல் பேசிவிட்டாய். ராமன் எனக்கு ஒரு கொசு. ராவணன் உடைவாளை உருவி ஹநுமானைக் கொல்ல எழுந்தான். 

''அண்ணா, இவன் நிராயுதபாணி, தூதன். இவன் ஒரு மிருகம். இவனை கொல்வது  உனக்கு வீரமாகாது'' என விபீஷணன் தடுத்தான். 

''இவன்  வாலை  வெட்டுங்கள் '' என்று ராவணன் கூற  எந்த ஆயுதமும் உடைந்தது, மழுங்கியதே தவிர  வாலை சேதப்படுத்த முடியவில்லை.   ஹனுமார் தானே  ஒரு யோசனை சொல்கிறார்.

''ராவணா  என்னை  துன்புறுத்த நினைத்தால் என் வாலில் தீயை வையுங்கள். அது என்னை  கொளுத்தும் '' என்கிறார் ஹனுமான். 

''இவன் வாலில் தீ மூட்டி  லங்கா நகரம் முழுதும் ஊர்வலம் கொண்டு சொல்லுங்கள்  மக்கள் தெரிந்து கொள்ளட்டும்''   என்று ராவணன் ஆணையிட்டான்.  இலங்கை நகரத்தின் கடைகளில்  வீடுகளில் இருந்த எல்லா வஸ்திரங்களை ஹனுமாரின் நீண்ட  வாலை  சுற்றியும்  முழு  வாலை  சுற்ற  அவை போதவில்லை. ஒரு வழியாக   சுற்றி,  குடம் குடமாக  எண்ணெய் , நெய்   எல்லாம் ஊற்றி  நனைத்து  வாலின் நுனியில் தீ மூட்டினார்கள்.  எவ்வளவு தீ மூட்டியும்  எரியவில்லை.  ஹனுமார்  சிரித்தார். 

''ஹே,   மூடர்களே,  உங்கள் தலைவன் வந்து வாயினால் ஊதினால் தான் தீ பற்றிக்கொள்ளும்.''என்கிறார் ஹனுமான்.

ராவணன் வந்து குனிந்து ஹனுமார் வாலுக்கு  அருகே தலை வைத்து  பலம் கொண்டு ஊதினான். தீ  குபீரென்று பற்றி எரிந்தது.  ராவணன் மீசை தலை முடி எல்லாம் கூட  தீப்பற்றி கருகியது. எல்லோரும் நகைத்தார்கள். ஹனுமாரை நகர்  வலம்  அழைத்து சென்றார்கள். எங்கே என்ன இருக்கிறது என்று கவனித்தார்.  மேற்கு கோட்டை வாசல் வந்ததும், உடலை  பெரிதாக்கி கொண்டார். பிரம்மாஸ்திரத்தின் சக்தி  விலகியது.  அருகே இருந்த ஒரு அரண்மனையின்  பெரிய  தூண் ஒன்றை  உதைத்து தகர்த்தி அதை கையிலேந்தி தன்னை சூழ்ந்த  அனைத்து  ராக்ஷஸர்களை தாக்கி கொன்றார். பிறகு உடலை சிறிதாக்கிக்  கொண்டு கொழுந்து விட்டெரியும்  வாலின் தீயோடு அனைத்து மாளிகைக்கல், அரண்மனைகள் எல்லாம் தீப்பற்றி எரிய செய்தார்.   வேகமாக அங்குமிங்கும் நகர் முழுதும் தாவி தாவித் தீப்பரவ  செய்தார்.  ராவணன் பலத்த  சேனையோடு  துரத்தினான். அனைவரையும் கொன்று  ராவணன் உடல் மீது  தீப்புண்கள் உண்டாகி  அவன் மயக்கமடைந்து விழுந்தான். ராமர் கொல்ல வேண்டும் அவனை என்பதற்காக அவனை உயிரோடு விட்டு     வாலிலுள்ள தீயை அணைத்து, வாலை  கடல் நீரில் அமிழ்த்தி குளிர்ச்சி அடைய செய்துவிட்டு யோசித்தார்.  ஒருவேளை  தான்  மூட்டிய தீ  அசோகவனத்தையும்  பாதித்து சீதைக்கு துன்பம் உண்டாக்கி இருக்குமோ. அவசரப்பட்டு விட்டோமோ''  என்று வாடினார்.  ''ஹே  ராமா  என்று வேண்டினார்.  

''ஹனுமான், கவலை வேண்டாம். ஜானகியே  ஒரு அக்னி. அவளை சாதாரண தீ நெருங்காது'' என்று ஒரு அசரீரி கேட்டது.  சீதையை பார்த்து வணங்கி புறப்படுவோம் என்று  ஹநுமன்  அசோகவனம் நோக்கி சென்றார்.''  

'' பார்வதி,  ஹனுமான் அசோகவனம் சென்று சீதையை தரிசிக்கும் முன்பு  நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவூட்டுகிறேன் ''  என்று   பரமேஸ்வரன்  ஒரு கதை சொல்கிறார். அது என்ன என்று அறிவோம்......



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...