Friday, June 26, 2020

KALAMEGAM



                 
    மீண்டும் காளமேகம்  J K  SIVAN

டாக்டர் ஸ்ரீனிவாசன் என்று ஒரு கோயமுத்தூர்  நண்பர். நேரில் பார்த்ததில்லை. எழுத்தால் பழக்கம்.  இப்படி தெரிந்த நண்பர்கள்  எண்ணிக்கை  லக்ஷத்தை   நூறை தாராளமாக தாண்டிவிடும்.


காளமேகத்தை பற்றி நான் எழுதிய  பாடல் விமர்சனத்துக்கு  பரிமாறலாக தான் ஒன்று அனுப்பி இருந்தார். அற்புதமாக இருக்கிறது.   அதை ரசியுங்கள்.  

'' பாணர்க்கு ஏவுவதும் பைம்புனலை மூடுவதும்
தாணு உரித்ததுவும் சக்கரத்தோன் வூணதுவும்
எம்மானை ஏத்துவதும் ஈசனிடத்தும் சிரத்தும்
தை மாசி பங்குனிமா தம்''

 மேலே  கொடுத்த  காளமேகம் பாடல் புரியவில்லை. திரும்ப படித்தல்  ஏதோ   பாணர்கள்,  தாணு,  பெருமாள், ஈசன்  என்று  ஏதோ   சொல்லிவிட்டு  கடைசியில்  மூன்று தமிழ் மாதங்களை   தை  மாசி, பங்குனி என்று முடிக்கிறார். என்னய்யா இது?  இதற்கு  ஜாலிலோ  ஜிம்கானா  பாட்டே  நன்றாக  புரியும்போலே இருக்கிறது. 

இப்போது கொஞ்சம் என்னருகே உட்காருங்கள். பாடலை அக்குவேறு ஆணி வேறாக  பிரிப்போம்.

 தை மாசி பங்குனிமா தம்     : என்ற கடைசி அடியை உற்றுப்பார்த்து பிரித்தால் ?

''தை  மாசு  இபம்  கு  உனி  மாது  அம்''     என்று ஆகிறது அல்லவா.  அதை அப்படியே  வாணலியில் சுட வைத்துவிட்டு அடுத்த அடிக்கு போவோம். 

பாணர்க்கு ஏவுவது --  பாணர்கள்  என்றால்  துணி தைக்கும் தையல் காரர் என்று ஒரு அர்த்தம். அவர்களுக்கு என்ன கட்டளை இடுகிறோம்    :
தை   :  துணியை தைத்துக்கொடுங்கள். 

பைம்புனலை மூடுவது --   தண்ணீரின் மேலே மூடியிருப்பது --மாசு  அதாவது --அசுத்தம்
தாணு உரித்தது --சிவபெருமான் உரித்தது யானையாக வந்த கஜமுகாசுரனை வதைத்து அவன் தோலை உரித்தது.

சக்கரத்தோன்  ஊண் உண்டது:  --திருமால் அவதாரமான கண்ணபிரான்  என்ன சாப்பிட்டான்? 

கு        என்றால்  பூமி --அதாவது  மண். கிருஷ்ணன்  குட்டியாக இருக்கும்போது மண்ணை தின்றான் அல்லவா. 

எம்மானை ஏத்துவது --அதாவது போற்றுவது -

-உனி --அதாவது  நினைத்து 
ஈசன் இடத்தும் சிரத்தும் --மாது  -  பரமேஸ்வரனின் இடது பாகத்தில் இருப்பவள்  உமை எனும் மாது 
 அதே போல் அவரது தலையில் இருப்பவள்  கங்கை எனும் மாது. 

அம்  என்பது அசை

இப்போது பாடலை மீண்டும் படித்துப்பாருங்கள் ரசியுங்கள்  அதன் பொழிப்புரை: 

தையல் காரரிடம்  என்ன  சொல்கிறோம்?  :     தைத்து கொடுங்கள்       தை 
குளம்  ஏரி குட்டை  நீர் நிலைகள் மேல் என்ன படிகிறது?      மாசு    அழுக்கு 
சிவன் எதை ஆடையாக பூண்டான்?    இபம்        தோல் 
மஹா விஷ்ணு  கிருஷ்ணனாக  உண்டது எது ?     கு    மண் 
பரமேஸ்வரன்  உடலில் இடப்பாகத்தில், தலையில் இருக்கும் மாதுகள்?   உமை , கங்கை 
இதை எல்லாம் கருதி, நினைத்து:   உனி 
மூன்று வார்த்தைகளில் பொருள் சொல்:   மாசி பங்குனி தை  என்ற மூன்று மாதங்களின் பெயர்கள். 
இப்படி யாராலாவது தமிழ் எழுத முடியுமா?
இன்னொன்று சொல்லி முடிக்கிறேன் .

சிவபெருமான் குடும்பம் என்ன ? நமக்கு தெரியாதா ? 
சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன்......  இதை நாம் சொல்வதற்கும் காளமேகம் அவர்களை விவரிப்பதற்கும் உள்ள  வித்யாஸம்  இந்த பாடலின் அருமை.   இகழ்வது போல் புகழ்வது வஞ்சப்புகழ்ச்சி . இதற்கு  பின்புலமாக  இருவர்  பேசுவதாக  கற்பனை பண்ணிக்கொள்வோம். ஒருவர்  வீர சைவர். மற்றொருவர்  ஒரு ஆழ்வார்க்கடியான் நம்பி  போல  வீர வைஷ்ணவர்.  சிவனைப் பற்றி புகழ்ந்து பேசுகிறார் பாடுகிறார்  சைவர்.  இரு காதுகளையும் பொத்திக்கொண்டு   '

''சைவா , நிறுத்து உன் புராணத்தை. உன் சிவன் யார், அவர் குடும்பத்தார் யார் என்று நான் சொல்கிறேன் கேள் '' என்று சொல்வதை போல இருக்கிறது இந்த காளமேகம் பாடல்.

''அப்பன் இரந்துஉண்ணி; ஆத்தாள் மலைநீலி;
ஒப்பறிய மாமன் உறிதிருடி;--சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத்தானுக்கு இங்கு
எண்ணும் பெருமை இவை''.


வீட்டுக்கு தலைவன்  அப்பன் யார் ஐயா ?   இரந்து உண்ணி :  கபாலம் எனும் மண்டை ஓட்டை, திருவோட்டை, கையில் ஏந்தி  அடுத்த வாய் சோற்றுக்கு  பிச்சை எடுப்பவன்,  பிக்ஷாடனர்

வீட்டுக்காரி அம்மா வைப்பற்றி  கேட்கவே வேண்டாம். அவள் யார் என்று தெரியாதா?    எங்கேயோ ஒரு மலையில்  இருப்பவள்,   ஹேமா, ஹிமகிரி தனயை,    நீலி,  நீலகலர் பெண். பச்சை பொண்ணு  பார்வதி என்று ம் சொல்வார்கள். 

அந்த பெண்ணின் சகோதரன், அதாவது அவர்கள் இரு குழந்தைகளின் மாமன் எப்பேர்பட்டவன் தெரியாதா?சின்னவயசிலேயே  பக்கா வெண்ணை திருடன்.  அவன் ஏறி உடைக்காத, திருடாத  உடைக்காத  வெண்ணை சட்டிகள் வைத்த   உறி  கோகுலம் பிருந்தாவனத்தில் ஒன்று கூட  கிடையாதே.  திருடுவதில் அவனுக்கு ஈடு இணையே கிடையாதே .அதனால்  தான்  ஒப்பிலா  என்கிறார் காளமேகம்.
அடாடா இந்த அற்புத தம்பதிகளின்  ரெண்டு பிள்ளைகளை பற்றி கேட்கவா வேண்டும் ?
ஒருத்தன், பெரியவன்  தொப்பை, தொந்தி கணபதி.  அவன் பெரிய  வயிற்றை  அவன் கால்களே சுமக்க முடியாமல் வளைந்தவை . அவன் கவட்டை காலுடன் நடந்து வரும் அழகே தனி.  இன்னொருவன் பற்றியும் சொல்கிறேன்.   ஒன்று இரண்டு இல்லை, பன்னிரண்டு வாய் அவனுக்கு  ஆறு தலைகள் கொண்டவன். இவர்களையா  பெருமையாக எண்ணி பேசுகிறாய்?



முடிந்தபோது இன்னும் தமிழ் புலவர்களை ரசிப்போம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...