Wednesday, June 17, 2020

A DISCUSSION



யார் பெரியவர்? J K SIVAN

மனிதர்களுக்குள்ளே தான் ''மேலெழுந்த வாரியாக சிரிப்பு , உள்ளே எரிமலை. எப்போது எப்படி அடுத்தவனை கவிழ்ப் பது ? தற்பெருமை, எனக்கு ஈடு எவன் டா?? எஜமானனுக்கு என்னை தான் பிடிக்கும் '' இதெல்லாம் இருக்கும் என்று நினைத்தேன்.
இதை யோசித்துக்கொண்டே கொரோனாவால் சிறையிலடைபட்டு உள்ளே படுக்கையில் முடங்கினேன். அப்போது தான் தற்செயலாக எனக்கு வைகுண்டம் போக ஒரு சான்ஸ் கிடைத்தது. எப்படி யார் கூட்டி போனார்கள் என்பது அவசியமில்லை.

அங்கே என்ன நடக்கிறது என்று பார்த்தேன்.
என்னைப் போல் படுக்கையில் அல்ல, சில்லென்று பெரிய வழவழவென்ற ஆதிசேஷன் மேல் படுத்துக் கொண்டிரு ந்த நாராயணன் சட்டென்று எழுந்தார். என்ன அவசரம், ? ஏன் பள்ளி கொள்ள வில்லை. எதற்கு கையில் சங்கமோ சக்ரமோ எடுத்து செல்ல வில்லை? விடுவிடென்று எங்கே நடக்கிறார்? கருடனுக்கும் ஆதிசேஷனுக்கும் ‘ரெஸ்ட்’ பூலோகத்தில் போலவே வைகுண்டத் திலும் எஜமான் தலை மறைவில் எப்போதும் கொண்டாட்டம் தான் போலிருக்கிறது. ஒரு நாலு தலை தெரிந்தது. யார் யார் என்று உற்று பார்த்ததில் அடையாளம் தெரிந்தது. சங்கு, சக்ரம், ஆதிசேஷன், கருடன்.

ஓஹோ நாரயணனுடன் நெருங்கியுள்ள இந்த நால்வருக்குள்ளும் என்ன வாக்கு வாதம்?. இது நடைபெறும் என்று தெரிந்து தானோ, அல்லது நடக்க வேண்டும் என்று கருதி தானோ நாராயணன் அங்கில்லையோ? அவர்களை தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டாரோ?. “நீ எப்போதும் பெருமிதத்துடன் இருப்பது, எங்களை ஒரு மாதிரி பார்ப்பது, எனக்கு ரொம்ப நாளா மனசிலே வருத்தம் தான்”” என்றான் ஆதிசேஷன் கருடனை பார்த்து .

“பாம்பும் பருந்தும் ஜன்ம வைரிகள் என்று மக்கள் தான் கருதுவார்கள் நீயும் அப்படித்தானோ? எங்கே சொல்லு , நான் என்று, எப்போது, பெருமிதத்துடனும் கர்வத்துடனும் உன்னிடம் பழகினேன்??.

கண்ணதாசன் பாட்டை கேட்டு இருக்கி றாயா ''இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே " டயலாக் எல்லாம் நமக்குள் வேண்டாம்” என்றான் கருடன்.

"நீ ஏதோ நொண்டி சமாதானம் சொல்வதால் உண்மை மறைந்து விடுமா? கருடா. என்னைப் பார். நான் இல்லாவிட்டால் நாராயணனுக்கு படுக்கை கிடையாது. அதற்காக நான் பெருமையா பீற்றிக்கொள்கிறேன்??” என்று சொல்லாமல் சொல்லி பெருமைப் பட்டான் ஆதிசேஷன். “ஒரே இடத்தில் படுத்து கொண்டே இத்தனை பேச்சு பேசுகிறாயே, நான் நாராயணனை நினைத்த இடமெல்லாம் நொடியில் தூக்கி செல்கிறேனே, உன்னிலும் நானே உயர்ந்தவன் என்றா கருதுகிறேன்” என்று இடித்தான் கருடன். பேச்சு வளர்ந்தது

அங்கு சிரிப்பொலி கேட்டது. இருவரும் திரும்பி பார்க்க, சக்ரம் குறுக்கிட்டது, “நிறுத்துங்கள் உங்கள் இருவர் கதையையும் , ஆதிசேஷா. கருடா, நாராயணனை படுக்கும்போதும், பறக்கும்போதும் , மட்டும் சுமக்கும் நீங்கள் உங்களில் யார் பெரியவர் என்று ஏன் வறட்டு வேதாந்தம் பேசுகிறிர்கள்?? .என்னைப் பாருங்கள். நான் நாராயண னைச் சுமக்க வில்லை. அவன் தான் என்னை வலக்கரத்தில் சுமக்கிறான். என் சக்தி அவனுக்கு பெருமையை அளிக்கிறது. எங்கு சென்றாலும் வெற்றிகரமாய் எதிரிகளை வதம் செய்து நாராயணனின் கரத்திற்கு திரும்பும் நான் ஏதாவது என்னை பற்றி டம்பம் அடித்து கொள்கிறேனா? நன்றாக உண்மையைப் புரிந்துகொண்டு உங்கள் வேலையை அமைதியாக செய்யுங்கள்” என்று அமர்த்தலாக குரல் கொடுத்தது சுதர்சன சக்ரம் .

இதோ பார்த்தாயா? இந்த சக்ரத்தின் பேச்சில் என்ன ஆணவம், கர்வம்?? ஆகவே அவனை விட்டுவிட்டு இத்தனை நேரம் பேசாமல் இருக்கும் இதோ இந்த பாஞ்ச ஜன்யம் சங்கு கிட்டே நியாயம் கேட்போம்'' என்று கருடனும் ஆதிசேஷனும் சங்கை ஒபினியன் கேட்டன.
அமைதியாக இத்தனையும் கவனித்த சங்கு பேசாமல் தலையை மட்டும் ஆட்டியது

''இந்த விவகாரம் வேண்டாம் . நான் பேசமாட்டேன்” என்றது.
“நீ உன் அபிப்ராயம் சொல்லியே ஆக வேண்டும்” என்று பஞ்சஜன்யத்தை தொந்தரவு செய்தன.

''சரி. எனக்கு மனதில் பட்டதை பேசுகிறேன்'' என்று சங்கு அமைதியாக பேசியது:
“நம் நால்வருக்கும் நாராயணனால் தான் பெருமை. என் வாயால் நான் எந்த தவறான வார்த்தையும் பேச முடியாது. ஏனெனில் என் மீது தான் ஸ்ரீமன் நாராயணன் திருவாய் மலர்ந்தருளி சப்தம் வெளிப்படுகிறது. அவன் காற்றே என் ஜீவ நாதம் எனக்கென ஒரு செயலுமில்லை. ஏன் உங்களையும் சேர்த்து தான், உலகில் அவனின்று ஓர் அணுவும் அசையாது”. என்ற உண்மை யை உணர்ந்து உள்ளம் அமைதியுற்று என் கடன் பணி செய்து கிடப்பதே என்று இருங்கள்”. இதெல்லாம் அந்த நால்வருக்கும் தெரியாமல் கவனித்துக் கொண்டிருந்த நாராயணன் ஒன்று மறியாதவனாய் திரும்பினான். இனி அவர்களுக்குள் இந்த பிரச்னை எழாது என்று அவனுக்கு நன்றாக தெரியுமே.

''அட எனக்கும் கனவில் ஒரு கதை தோன்றியதே''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...