Saturday, June 20, 2020

FATHER'S D AY



அப்பா தினம் J K SIVAN நேற்றும் அப்பாவுக்கு தர்ப்பணம், இன்றும் கிரஹண தர்ப்பணத்தின் போதும்.... இன்று உலக அப்பா தினம். ''அப்பா , நீ இருந்த போது சர்வ தேச அப்பா தினம் எதுவும் கிடையாதோ?
ஒரு நாள் கூட உன் அப்பாவை பற்றி சொல்ல உனக்கு நேரம் இருந்தது கிடையாதே. கேட்டால் எனக்கு என் அப்பாவை பற்றி அதிகம் தெரியாத வயதிலேயே போய்ட்டார் என்பாய். அம்மா அண்ணா சொல்லியதை வைத்து ஏதோ உன் அப்பா ஜம்புநாதய்யரை பற்றி சொல்வாய்.
புஸ்தி மீசை, காதை மறைத்த தலைப்பாகை. ரெண்டு கண் மூக்கு உதடுகள் மட்டும் தெரிய முகத்தை மறைத்த மீசை தாடி.
எனக்கு ஞாபகம் இருக்கிறது .ஒரு பழைய சாம்பல் நிற கலர் கண்ணாடியில்லாத அட்டையில் ஒட்டிய கொஞ்சம் செல்லரித்த கருப்பு வெளுப்பு பட தாத்தா நினைவிலிருக்கிறார். கழுத்தை மறைத்த கோட்டு. அதில் வரிசையாக பெரிய பொத்தான்கள். இது தான் தாத்தா அவர் வீர பிரதாபங்கள். அவர் வழிபட்ட, அவர் காட்டில் கண்டெடுத்த நாகம் சுற்றிக்கொண்டிருந்த கல் பிள்ளையார். நாகம் அவரைக்கண்டு ஓட குதிரையிலிருந்து இறங்கி வீட்டுக்குக் கொண்டு வந்த 200 வருஷ பிள்ளையார் இன்னும் என் அண்ணாவின் வீட்டில் தானே இருக்கிறார். பெரிய கனமான தாத்தா போட்டு நடந்த பாத ரோட்டு கட்டை எனும் மரப்பாதுகையில் காலை நுழைத்து நடக்க முயற்சித்து விழுந்தபோது எனக்கு வயது ஐந்தோ ஆறோ. ஜம்புநாதய்யர் பாரஸ்ட் ரேஞ்சர். FORREST RANGER கரடிகளோடு, புலியோடு முதியவர். சந்தன மரங்களை வெட்ட வரும் கொள்ளையர்களை தனி ஒருவனாக அடித்து நொறுக்கியவர். கையில் எப்போதும் வைத்திருக்கும் பாணா தடி (உலக்கையை விட கொஞ்சம் பருமன் கம்மியான வழவழ குண்டாந்தடி மாதிரி ஆறு அடி நீள கனமான தடி) என் வீட்டில் ஒரு காலத்தில் இருந்தது எங்கே போயிற்றோ? எப்போதோ? வீட்டில் புலி நகங்கள் நிறைய வைத்திருந்ததை, இந்த குண்டாந்தடியை, பாதுகையை, படத்தை பார்த்து, கேட்டதை , எல்லாம் ஒன்று சேர்த்து அது தான் தாத்தா என்று அவர் பெயர் முதல் எழுத்து ''J '' ஜேஜே என்று என் பெயரோடு ஒட்டிக்கொண்டுவிட்டதில் எனக்கு பெருமை தான். என் மகன் ஒருவன் அவர் பெயரன்.
அப்பாக்கள் தினம் ஞாயிறு இன்று, அதுவும் முழுதும் அடைபட்டு வீட்டிலேயே எல்லோரும் அரசின் கட்டாயத்தால் சேர்ந்திருந்த நாள் வந்தது சௌகர்யம். இன்னும் முக்கியமாக சூர்ய கிரஹணம் எங்கும் வெளியே செல்லமுடியாமல் அப்பாக்களை வாரிசுகள் நினைக்க உதவட்டும். உங்கள் அப்பாக்களைப்பற்றி உங்கள் குழந்தைகளுக்கு நினைவூட்டுங்கள். வாழ்பவர்களை வணங்குங்கள். அப்பா என்கிற ஸ்தானம் மிக உயர்ந்தது. ஈடற்றது. இதற்கு பணம், உத்யோகம், குலம் கோத்ரம் எதுவும் முக்கியம் இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரது அப்பா ஒஸ்தி INCOMPARABLE ஒப்புமை காட்டமுடியாத உன்னத புருஷர். கடவுளுக்கு அடுத்தபடி மனதில் இதயத்தில் பூஜிக்கப்படுபவர். சாணக்கியர் எனும் கௌடில்யர் என்கிற பிராம்மணர் அதி புத்திசாலி என அனைவருக்கும் தெரியும். அவரது அர்த்த சாஸ்திரம் புஸ்தகம் படித்திருக்கிறேன். இவ்வளவு சிந்தனையா? இத்தனை ராஜ தந்திரமா? சாஸ்த்ர ஞானமா? என்று மூக்கின் மேல் விரல் வைக்க பண்ணுபவர். எத்தனை எதிர்ப்புகள் அவருக்கு. கடைசியில் எதிரிகள் சூழ்ச்சியால் உயிர் துறந்தவர். ஞானி. நமது ராஜாஜியை சாணக்கியர் என்பார்கள். அடுத்தது துக்ளக் சோ வும் கூட ஒரு ராஜதந்திரி, சாணக்ய மூளை உள்ளவர், என அழைக்கப் பட்டவர். இப்படிப்பட்ட சாணக்கியரிடம் யாரோ ''அப்பா என்பது யார்?'' என்று கேட்டிருக்கிறார்கள் '' ''அப்பா என்றாலே நான் சொல்கிற இந்த ஐந்து அப்பாக்கள் தான் '' என்கிறார் சாணக்கியர். அவர்கள் யார்? கர்ம பலனாக ஒரு ஜீவன் உலகத்தில் பிறக்கிறது. அப்பாவாகவும் யாருக்கோ அது ஆகிறது. அப்பா என்கிற அந்த ஜீவனின் கடமை என்ன? ப்ரம்ம வைவர்த்த புராணம் ஏழு அப்பாக்களை சொல்கிறது. இந்த ஏழு வித அப்பாக்கள் வித்யாசப்படு கிறார்கள். 1. உணவை அளிப்பவன் அப்பா. அம்மா ஊட்டுவாள். ஆனால் அப்பாதான் எங்கோ சென்று யாருக்கோ ஸலாம் போட்டு உழைத்து சம்பாதித்து அரிசி உப்பு புளி பருப்பு வாங்கி வருபவன். வண்டி இழுத்தவது உண்டி க்கு வழி செய்பவன். அன்னதாதா. உணவின்றி ஒரு நாள் இருக்க முடியுமா. ''என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது'' என்று அவ்வையார் பாடியிருக்கிறாளே. அப்பா இல்லை என்றால் சித்தப்பா பெரியப்பா என்று யாராவது இவ்வாறு அம்மாவையும் பிள்ளையையும் காப்பாற்றினால் அவன் கடவுள். பூஜிக்கத் தக்கவன். அப்பாவும் மகனும் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். பெண்ணுக்கு தான் அப்பா மேல் அதிக ஆசை என்று அநேகர் சொல்கிறார்கள். 2. பயத்ராதா: பயத்தை போக்குபவன் of fear (Bhaya-trata , भयत्राता) அப்பா. பயம் என்பது மரணத்தின் நிழல். புலியைக் காட்டிலும் கிலி கொல்கிறதே. பயம் உண்மையானால் மரணமும் உண்மையானது. ''நீ கவலைப்படாதே, என்னிடம் விட்டுவிடு. நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று நமது கவலைகளை, பயத்தை போக்குபவன் யாரா இருந்தாலும் அவன் அப்பா ஸ்தானத்தில் இருப்பவன். பகவானை அப்பனே என்று அதால் தான் வேண்டுகிறோம். 3. ஒரு மனிதனுக்கு தனது மகளை கன்யாதானம் செய்து வைப்பவன் அப்பா. மாமனாரை இகழ்வோர் கள் இதை ரெண்டு மூன்று தரம் படிக்கலாம். தப்பில்லை. கன்யாதாதா. '' எவன் டீ உன்னை பெத்தான். கையிலே கிடைச்சா செத்தான்'' என்று ஒரு உபநிஷதப் பாடல் தமிழ் சினிமாவில் நிறைய டி. வி.யில் கேட்ட பாபத்தை எங்கே சென்று தொலைக்கப்போகிறேனோ? இதை கேட்ட காதும் ஒரு காதா? 4. குழந்தை தான் மனிதனுக்கு தந்தை என்று ஒரு பொன்மொழி கேட்டிருப்பீர்களே. 'Child is the father of man.' என்ன அர்த்தம்? குழந்தையாக உருவெடுப்பவனே அப்பாவாகிறான் அப்புறம் . குழந்தை தான் அப்பா. ஸ்ரீலங்கா தமிழர்கள், மற்றும் நம்மில் சில தமிழ் குடும்பங்களில் குழந்தைகளைக் கூட ''வாங்க போங்க'' என்று மரியாதை குறையாமல் அழைப்பதை பார்த்திருக்கிறேன். குழந்தை தான் அப்பா. மனிதன் தான் ஒரு குழந்தைக்கு அப்பாவாகிறான். கல்யாண சடங்குகள் அர்த்தமுள்ளவை. ஒரு புது உயிர் உண்டாக காரணம் அப்பா. ஜநிதா, ஜன்மதா என்று சமஸ்க்ரிதம் அவனை போற்றுகிறது. அந்த அப்பனின் குணங்கள் தோற்றம் எல்லாவற்றையும் தான் புதிதாக உருவான உயிர் பெறுகிறது. அவனுக்காக ஒரு குழந்தை பெற்றுத் தந்து அருமையாக வளர்க்கும் பணி அவன் மனைவியை சேர்ந்தது. அவள் அம்மா ஆகிறாள். முன்னறி தெய்வம் அவளே. எனவே குழந்தை பெற்றவன் அப்பா. போற்றத் தக்கவன். அந்த காலத்தில் அப்பாதான் முதல் வாத்யார். அப்போதெல்லாம் தந்தையின் வார்த்தைக்கு மதிப்பிருந்தது. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை யாரோ எழுதி வைத்திருக்கிறார்களே. இப்போது அதை யார் படிக்கிறார்கள். ஒருவனை ஆன்மீகத்தில் தெய்வ வழிபாட்டில் உயர்த்துபவன் அப்பா. அவன் வாக்கு மந்திரம். ''Mananam trayate iti mantram (मननं त्रायते इति मन्त्रम्)- மந்திரம் தான் ஒருவனது உண்மையான ஆயுதம். இதை கற்பிப்பவன் அப்பா. . இப்படி ஞானத்தை அளிப்பவன் அப்பா என்றேன் அவனுக்கு ஞான தாதா gnana-datha , ज्ञानदाता என்று பெயர். அவனே குரு. ஆசார்யன். தெய்வத்துக்கு சமமானவன். தந்தையைப் போலவே கல்வி கேள்விகளில் சிறக்க வைப்பவன் ஒரு அப்பா. உப நேதா upaneta , उपनेता என்ற பெயர் பெறும் அப்பா. அவன் தான் ஆச்சார்யனாக உபநயனம் பண்ணி வைப்பவன். உபா கர்மம் செய்விப்பவன். ஒருவனின் பிரம்மச்சர்ய வாழ்க்கை இந்த ஆச்சாரியனிடம் தான் கழியும். குருகுல வாச காலம். 5. அடுத்தது பெரிய அண்ணா. இன்னும் நிறைய குடும்பங்களில் அப்பாவை அண்ணா என்று மரியாதையாக எல்லோரும் அழைக்கும் வழக்கம் இருக்கிறது. அப்பாவுக்கு அடுத்து குடும்பத்தில் மரியாதைக்குரியவர் மூத்த தமையன். அவனே அப்பாவுக்கு சமமானவன். jyeshtha-bhrata , ज्येष्ठ-भ्राता பித்ரு சமஹா: டிவியில் கரை வேட்டி வெள்ளை அரைக்கை சட்டையோடு வரும் ''அண்ணே'' யை அண்ணன் என்று நீங்கள் புரிந்து கொண்டால் ஒருவேளை சாணக்கியன் தற்கொலை செய்து கொள்ளலாம். என் அப்பா ஜே . கிருஷ்ணய்யர் மூன்று மொழிகளில் வல்லுநர். ஆங்கிலம், தமிழ், ஸமஸ்க்ரிதம் . பள்ளி தலைமை ஆசிரியர், சரித்திரம் ஆங்கில வகுப்புகளில் மெய்ம்மறந்து அவரை கேட்க எனக்கு பாக்யம் இல்லை. நமது முகநூல்களில் இன்னும் அவரிடம் படித்தவர்கள் என்னோடு பேசி, அவரைப் பற்றி பெருமையாக சொல்லும்போது ''அப்பா '' என்று ஒருவார்த்தை நன்றியோடு உள்ளே எங்கிருந்தோ நாக்கு நுனி வரை வருகிறது. நான் SSLC படிக்கும்போது அவரிடம் சந்தேகங்கள் கேட்டு ஆங்கில பாடம் சொல்லி கொடுத்தது ஞாபகம் இருக்கிறது. சங்கீதம் தெரியும். சைக்கிள் விட தெரியாது. நடை. தலைப்பாகை, பஞ்சகச்சம், ஜிப்பா, மூக்கு பொடி , அங்கவஸ்திரம்.

சூளைமேட்டிலிருந்து நுங்கம்பாக்கம் வரை வழியெல்லாம் ஸ்லோகங்கள் சொல்லிக்கொண்டே நடப்பவர் பின்னால் ஓடிக்கொண்டே நடப்போம். அவர் வேகமாக நடப்பவர். 85வயது வரை நடந்தவர். அவரைக் கண்டால் கன்னிகா காலனி குழந்தைகள் எல்லோருமே ஓடிவருவார்கள். இடுப்பில் வேஷ்டியில் கடலை மிட்டாய், சின்ன சின்ன கலர் கலர் மிட்டாய்கள். பொறி, வேர்க்கடலை ஏதாவது எல்லோருக்கும் எடுத்து கொடுப்பார். என் வீட்டு வாசலில் கிழக்கு மூலை வேப்ப மரத்தடியில் ஈஸி சேரில் EASYCHAIR ல் அமர்ந்து ஹிந்து பேப்பர் படிப்பார். எழுதுவார். பழைய டயரி பேனா கொடுத்தால் போதும் அடித்தல் திருத்தல் இல்லாத இல்லாத பரிசுத்த ஆங்கிலத்தில் சொற்கள் நர்த்தனம் புரியும்.
ரெண்டு நாட்கள் முன்பு அவர் ஆசிரியர் பயிற்சி பெற்று அங்கீகாரமாக வெள்ளை அரசாங்கம் வழங்கிய செர்டிபிகேட் CERTIFICATE கண்ணில் பட்டது. என் அண்ணா அதை பாதுகாத்து படம் எடுத்து வைத்திருந்தான். அதை எப்போதோ அனுப்பியது என்னுடைய கம்ப்யூட்டரில் பார்த்தேன். 1920-1921ல் திருவாலூரில் பயிற்சி பெற்று பாஸ் செய்தவர் என்று வெள்ளைக்காரன் ஒருவன் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கிறான். இதில் ஒரு வேடிக்கை ஹிந்து மதம் என்று குறிப்பிடவில்லை. ஜாதி பிராமணன் என்று மட்டும் அந்த காலத்தில் ஏன் சொல்கிறான்? ஜாதியை மக்களிடையே பரப்பியது வெள்ளைக்காரன். பிறந்த மாதம் வருஷம் ஜூன் 1895 என்று போட்டவன் பிறந்த நாளை குறிப்பிடவில்லை. இதெல்லாம் போக போக மாறிவிட்டது. அப்பா மட்டும் மாறாமல் அப்படியே மனதில் நிற்கிறார். இப்போது இருந்தால் வயது 126. அவர் செர்டிபிகேட் வயது கிட்டத்தட்ட 100

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...