Friday, June 5, 2020

ANANDHA RAMAYANAM




ஆனந்த ராமாயணம் J K SIVAN

15 சீதை கண்ணில் பட்டாள்

இனி பரமேஸ்வரன் பார்வதியிடம் ராம சரித்திரம் பற்றி சொல்வதெல்லாம் சாரகாண்டம் ஒன்பதாவது சர்க்கத்திலிருந்து நாம் அறியப்போகிறோம்.

ஹனுமான் கடல் மேல் பறந்து போகும்போது முதல் தடங்கலாக எதிர்படுபவள் சுரஸா எனும் ராக்ஷஸி. வாயை திறந்து.

'' ஹனுமா என் வாயில் புகுந்து விட்டு மேலே செல்.'' என்கிறாள்.

''இப்போது நான் ராம கார்யமாக செல்கிறேன். நேரமில்லை. வரும்போது உன் இஷ்டப்படி செயகிறேன்''. சுரஸா விடவில்லை..அவள் தொந்தரவு பொறுக்கமுடியவில்லை.
'' சரி வாயைத்திற''
அவள் வாயை திறக்க உடனே தன் உருவத்தை பெரிதாக்கிக் கொள்ள, அவளும் இன்னும் பெரிதாக வாயை பிளக்க, கண் இமைக்கும் நேரத்தில் ஒரு வண்டாக உருமாறி சரசாவின் வாயில் ஒரு பக்கம் புகுந்து மறு புறம் வெளியே வந்துவிட்டார் ஹனுமான். சுரஸா அவரது சமயோசிதம், ராம பக்தியை மெச்சி மறைகிறாள்.
மைநாகம் எனும் மலை அடுத்து கடலிலிருந்து எழும்புகிறது.
'ஆஞ்சநேயா, வா என் மேல் சற்று ஓய்வெடுத்து விட்டு செல். சுவையான கனிகள் அம்ருதம் எல்லாம் உனக்காக தயார் செய்து வைத்திருக்கிறேன். உன் ராம காரியத்துக்கு நான் உதவவேண்டாமா?. ஒருகாலத்தில் தேவேந்திரன் மலைகளோடு யுத்தம் செய்த போது நான் தவித்த சமயம் தசரதன் வந்து காப்பாற்றியதால் நான் தப்பி இந்த கடலில் வாழ்கிறேன். அந்த நன்றிக்கடன் தீர்க்க எனக்கு இது நல்ல சந்தர்ப்பம்''.

'மைனாகா, அப்புறம் வைத்துக் கொள்வோம் இதெல்லாம். நான் வெகு அவசர ராம கார்யமாக போகிறேன். அதுவும் ராமநாமம் சொல்லி பிரயாணிப்பதால் எனக்கு பசியோ தாகமோ , களைப்போ எதுவுமே இல்லை.. ஒய்வு வேண்டாம் ''

''ஹனுமா, என்னை உன் கையால் தொட்டு விட்டாவது செல். அதுவே எனக்கு ஆசி.''
ஹனுமான் மைநாகத்தை நெருங்கினான். தொட்டான். மீண்டும் பறந்தான். அவனால் வேகமாக ஏன் முன்போல் செல்லவில்லை?. தன்னை ஏதோ ஒரு சக்தி கீழே இழுப்பது தெரிந்தது. கீழே பார்த்தான். காரணம் புரிந்தது.

கோர உருவம் கொண்ட சாயாகிரஹணி ஒருவள், சிம்மகி என்ற பெயருடைய ராக்ஷஸியின் வேலை அது என்று தெரிந்து கொண்டான் ஹனுமான். கடலில் வாழும் அவள் மேலே பறக்கும் எந்த ஜீவனின் நிழல் பட்டாலும் அதை பிடித்து தன்னிடம் இழுத்து உண்பவள். மைநாகத்தை நெருங்கிய ஹனுமானின் நிழல் கடல்மேல் பட்டதும் பிடித்து விட்டாள். அவள் எண்ணம் புரிந்து ஹனுமான் அவள் வாயில் புகுந்து உள்ளே சென்றதும் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்து அவள் வயிற்றை பிளந்து கொன்றுவிட்டு மேலே பறக்கிறார் .

ஒருவழியாக இலங்கை சமுத்திரத்தின் தென்கரையில் குதித்தபோது அங்கே க்ரவுஞ்சை என்ற ராக்ஷஸி தென்பட்டாள் . அவளையும் கொன்ற பின் அஸ்தமன நேரம் இலங்கையில் பிரவேசித்தார். இலங்கையை காவல் காக்கும் இலங்கிணி ஹநுமானைத் தடுக்கிறாள். பலமாக தாக்குகிறாள். அவளை இடது முஷ்டியால் பலம் கொண்டு அடித்து வீழ்த்துகிறார். அவளுக்கு ஒருகாலத்தில் பிரம்மன் கொடுத்த வரம் நினைவுக்கு வருகிறது. ஹனுமனை வணங்குகிறாள்

'' மஹா வானர வீரரே, என் சாப விமோச னத்துக்கு பிரமனை வேண்டியபோது '' ஒருநாள் ஒரு பலமிக்க குரங்கு உன்னை
எதிர்த்து இலங்கையில் புகும். அப்போது ராவணேஸ்வரனை வதம் செய்ய ராமர் வருவார். அந்த வானரன் கை உன்மேல் பட்டதும் உனக்கு சாப விமோசனம் '' என்றான்.
'வானர வீரரே, நீங்கள் தாராளமாக செல்லலாம். நீங்கள் தேடும் சீதை அசோக வனத்தில் உள்ளாள். உங்கள் காரியம் ஜெயம் பெறும் '' என வாழ்த்தினாள். ராமர் எல்லா அரண்மனைகளிலும் சீதையைத் தேடுகிறார்.

'பார்வதி, ஒரு கணம் ஹநுமானுக்கு ராவணன் அரண்மனையில் மண்டோதரியை பார்த்ததும் அவள் தான் சீதையோ என்று கூட சந்தேகம் வந்தது'' என்று இடையே சொல்கிறார் பரமேஸ்வரன்.

''நாதா, மண்டோதரி ராக்ஷஸ பெண் ஆயிற்றே எப்படி சீதை என ஹனுமான் நினைத்தான்?'' என கேட்டாள் பார்வதி.

''மண்டோதரி, விஷ்ணுவின் ஸ்ருஷ்டி.
என்னை தனது சிறந்த சாமகானத்தால் திருப்தி படுத்திய ராவணன் ரெண்டு வரம் பெற்றான். ஒரு வரத்தால் ஆத்மலிங்கத்தை தனது தாய் பூஜிக்க வேண்டும் என்று உன்னிடம் கேட்டு பெற்றான். மற்றொரு வரம் மூலம், உமா, நீயும் வேண்டும் என்றான். ஆத்ம லிங்கத்தை கொடுத்தபோது இதை தரையில் வைத்தால் அங்கேயே பிரதிஷ்டை ஆகிவிடும் என்றேன். நீ என் வாம பாகத்தில் இருப்பதால் நமது மேனி சந்தனத்தால் உன்னைப்போல் ஒரு உருவம் அமைத்து கொடுத்தேன். வழியில் விஷ்ணு ஒரு பிராமணனாக அவன் கையில் இருந்த ஆத்மலிங்கத்தை அவனுக்கு உதவுவதாக சொல்லி தரையில் வைத்ததும் அங்கேயே அது பிரதிஷ்டை ஆகிவிட்டது. அந்த இடம் தான் புனித சிவ க்ஷேத்ரம் கோகர்ணம்.

பாதாள லோகத்தில் நீ இருப்பதாக விஷ்ணு சொன்னதால் அங்கே சென்று மயன் வீட்டில் மண்டோதரியை சந்தித்து அவளை நீயாக காண்கிறான். மனைவியாக்கிக் கொள்கிறான். அதனால் தான் ஹனுமார் இவள் தேவ மங்கையோ சீதாவோ என ஒரு கணம் தயங்கினார்''. என விளக்கினார் பரமசிவன்.

பல இடங்களில் தேடிய ஹனுமார் கடைசியில் அசோகவனத்தை காண்கிறார். அங்கே உயரமான ஒரு சிம்சுபா விருக்ஷத்தின் அடியில் ஒத்தை பின்னலோடு, அழுக்கு ஆடையுடன் தரையில் படுத்து, ''ராமா ராமா'' என்று உச்சரித்தவாறு இருக்கும் பெண் தான் சீதை என்று உணர்கிறார். சுற்றிலும் ராக்ஷஸிகள் காவல். ஹனுமான் யார் கண்ணிலும் படாமல் சிம்சுபா மரக்கிளைமேல் மறைந்து அமர்கிறார்.
ராவணன் ஒரு கனவு கண்டான். அதில் ஒரு குரங்கு இலங்கையில் புகுந்து அசோக வனத்தில் சீதையை கண்டு விட்டது, .தூக்கம்
விழித்து தனது மனதில் தொருவதை உரக்க சொல்கிறான்.

'நான் 'ராமன் கையால் மரணம் அடைந்து நற்கதி பெறவேண்டும். அதற்கு இப்போதே அசோகவனம் சென்று சீதையை விரும்புவது போல் காட்டினால் அந்த குரங்கு பார்த்துவிட்டு ராமனிடம் போய் சொல்லும். ராமன் வருவான். யுத்தத்தில் என்னை கொல்வான் ''

எனவே ராவணன் சீதையின் முன் நின்றான்.

''' ஹே ஜானகி, என்னைப்பார்த்து உனக்கு வெட்கமா? உன் ராமன் ராஜ்யம் இழந்து, தாய் தந்தை, உற்றார் எல்லோரையும் இழந்து, ஜடாதாரியாக ஏகாங்கியாக உன்னிடம் சிறிதும் அன்பில்லாமல் வாழ்கிறான். என்னைப்பார். மூவுலகிற்கும் அதிபதி. தேவமாதர்கள் பணிவிடை செயகிறார்கள். என் மனைவி மண்டோதரியை உனக்கு பணிப் பெண்ணாக் குகிறேன். என்னை மணந்து கொள். இராஜ்யம் என் உயிர் எல்லாமே சமர்ப்பிக்கிறேன்.'' பயமாகவும் பயமாகவும் சொல்கிறான்

. சீதை அவனை அவமதிக்கிறாள். ஒரு
துரும்பை எடுத்து ராவணன் முன் போட்டாள்

''ஹே அற்பனே, நீசா, ராமலக்ஷ்மணர்களுக்கு பயந்து அவர்களில்லாத நேரம் என்னை ஏமாற்றி என்னை கடத்தினவனே. யாக சாலையில் ஹவிஸை திருடிக்கொண்டு ஓடும் நாய் போன்றவன் நீ. அதன் பலன் வெகு சீக்கிரம் உனக்கு கிட்டும். ராமன் மனிதனல்ல என உன் உயிர் பிரியும்போது உணர்வாய். ''

''ராம லக்ஷ்மணர்களை நான் போரில் வெல்வேன். அவர்களுக்கு என்னால் பேராபத்து'' என்கிறான் ராவணன். அப்போது சீதை தனது வார்த்தை பாணங்களால் அவனை சித்ரவதை செய்ய, கோபத்தில் வாளை உருவுகிறான். உடனிருந்த மண்டோதரி தடுக்க, அருகே உள்ள ராக்ஷஸ பெண்களிடம்

''இவளை என்னை விரும்பும்படி செய்யுங்கள். இன்னும் இரண்டு மாதத்தில் அவள் இசையாவிட்டால் அவளைக் கொன்று சமைத்துவிடுங்கள். நானே அவளை உண்பேன்'' என்கிறான் ராவணன்.

''ராவணா, என் நாதன் ராமன் கரத்தால் தான் உனக்கு முடிவு. நீ உன் பந்துக்கள் உறவு குடும்பம் அனைவருமே அழியப் போகிறீர்
கள். இலங்கை பற்றி எரியப்போகிறது . எல்லாமே வெகு விரைவில்'' என்கிறாள் சீதை. ராவணன் சற்று கலவர மடைந்து திரும்பு
கிறான். ராக்ஷஸிகள் அவன் கட்டளைப்படி சீதையை துன்புறுத்துகிறார்கள். திரிசடை என்பவள் அவர்களை அடக்கி என்ன சொல்கிறாள் அப்போது:?:

''நிறுத்துங்கள். இன்று எனக்கு ஒரு கனவு. ராமரின் சேனைகள் இலங்கையில் நுழைந்து லங்கை பற்றி எரிகிறது. ராவணனையும் மற்ற அனைவரையும் ராமலக்ஷ்மணர்கள் வானரர்கள் கொல்கிறார்கள் . சீதையிடம் மன்னிப்பு கேட்டு வணங்குங்கள். அப்போது தான் ராமரிடம் இருந்து அபயம் கிடைக்கும்'' இல்லாவிட்டால் நாமும் அழிவோம்.''

இதெல்லாம் கண்டு சீதைக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது.

''நான் இப்போதே மரணமடைவேன். எப்படி உயிரை மாய்த்துக் கொள்வது? எனது நீண்ட கூந்தல் இதற்கு உதவட்டும். அதால் கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு பிராணனை விடுகிறேன். குற்றமறியாத லக்ஷ்மணனை கடுஞ்சொற்களால் வதைத்தேன். அதற்கு பிராயச்சித்தமாக இந்த ராக்ஷஸிகளிடம் நான் பெற்ற துன்பம் எனக்கு போதும் ''

சீதை பேசிக்கொள்வது மேலே மரக்கிளையில் அமர்ந்த ஹனுமார் காதுகளில் விழுந்துவிட்டது.

''இனி ஒரு க்ஷணமும் தான் தாமதிக்க கூடாது என்று சீதையின் தலைக்கு அருகே இருக்கும் கிளையில் வந்து அமர்கிறார். அவள் காது கேட்க ராமன் சாகேத நகரம் விட்டு புறப்பட்டது முதல் தான் சீதையை கண்டது வரை சம்பவங் களை விவரிக்கிறார்.

சீதைக்கு ஆச்சர்யம். நாமும் மேற்கொண்டு நடப்பதை காண்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...