Wednesday, June 24, 2020

LIFE LESSON



                   வாழ்க்கை எனும் ஓடம்... J K   SIVAN 


''சிவன் சார்,    ஒரு காபிக்கோசரம்  சண்டை.  வீட்டை விட்டே  ஓடிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.  என்னசார் வாழ்க்கை இது''

  மார்க்கபந்து இப்படி அடிக்கடி  அலுத்துக் கொள்வார்.  இது எனக்கு புதிதல்ல.  இப்படி என்னிடம் சொல்வதன் மூலம் வாழ்க்கையை பற்றி ஏதாவது நான் சொல்லவேண்டும்.  பெப் டாக்  PEPTALK   கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம்.  அவருக்கு சொல்வதை உரக்க சொல்கிறேன். நீங்களும் கேட்க வேண்டு மல்லவா?

வாழ்க்கை எதிர்பார்ப்பது போல்  எவருக்கும் அமைவதில்லை. ஆனால் அற்புதமானது.  ஒவ்வொரு கணத்தையும்  அனுபவிக்க வேண்டும்.   வாழ்க்கைக்கு   குறுகிய காலம் தான்  கொடுக்கப்பட்டுள்ளது.  அதை வீணாக்க கூடாது. பணம் பணம் என்று ஓடுகிறோம். இரவும் பகலும் உழைக்கிறோம், பணம் சேர்க்கிறோம்.  அது  நோய்வாய் பட்ட நேரம் உதவாது. நண்பர்களும் குடும்பமும் தான் கைகொடுக்கும்.

 நாம் சொல்வது தான் சட்டம்  என்று பேசக்கூடாது. நமக்கு தெரியாதது கடலளவு இருக்கிறது. 
 கஷ்டத்தை, துன்பத்தை  யாராவது  ஒரு நண்பனிடமாவது சொல்லி அழுதால் பாதிக்கு மேல் குறைந்துவிடும்.
கடவுள் மேல் தாராளமாக  கோபித்துக் கொள்ளலாம்.   நம்மைப்பற்றி  கிருஷ்ணனுக்கு   நன்றாகத்  தெரியும். சிரித்துக் கொண்டே ஏற்றுக்கொள்வான்.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். எந்த வருமானம் சம்பாதித்தாலும் கொஞ்சூண்டு எதிர்காலத்துக்கு என்று , மிச்சம் பிடி.
நடந்ததையே, பழசையே நினைத்து நினைத்து  நிகழ்காலத்தை கோட்டை விடாதே. 
உன்னை மற்றவரோடு ஒப்பிடாதே . ஒவ்வொருவருக்கும் அவருக்கென்று சில தொல்லை, துன்பம் உண்டு. அது உனக்கு தெரியாது.  
மாற்றம் என்பது வாழ்வில் நம்மைக்  கேட்டு நடப்பதில்லை. அது பாட்டுக்கு  சொல்லாமல் கொள்ளாமல் நடந்துகொண்டே இருக்கும். அதை புரிந்து கொண்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வது தான் புத்திசாலித்தனம்.

மூச்சை நன்றாக  உள்ளிழுத்து நிதானமாக நீளமாக வெளியே விடு. மனதுக்கு அமைதி தரும்.

உன்னை சுற்றி குப்பை சேராமல், உள்ளே மனத்திலும் தான்,  பார்த்துக் கொள் . நிம்மதி கிடைக்கும். இதற்கு இன்னொரு அர்த்தம்   தேவைகளை குறைத்துக் கொள் .

சந்தோஷமாக இருப்பது நம் கையில் தான். இருக்கிறது.  இப்போதும் ஒன்றும் குடி முழுகிப்போகவில்லை. நாளையிலிருந்து கூட  நீ  சந்தோஷமாக இருக்கமுடியும். நாம் தான் அதற்கு எஜமானன். இது தான் உண்மையிலேயே நமக்கு நாமே திட்டம். 

''மறப்போம்  மன்னிப்போம்''  ரொம்ப அருமையான கோட்பாடு.  தவறாமல் இதை உபயோகித்தால் பாதிக்கு மேல் துன்பம் விலகி நிம்மதி பெருகும். 

மற்றவன் நம்மை பற்றி  என்ன நினைப்பான்  என்பதே நமது கவலையை அதிகரித்து, நிம்மதியை குலைக்கிறது. எவன் எதை நினைத்தால்  எனக்கென்ன என்று இருக்கவேண்டும்.

காலம்  எல்லா புண்களையும், உள்ளே வெளியே ரெண்டிலும்  ஆற்றிவிடும்.  

சந்தர்ப்பம் சூழ்நிலை மாறிக்கொண்டே தான் இருக்கும்.  விரும்பியது கிட்டும்போது கெட்டியாக பிடித்துக்
கொள். நழுவ விடாதே.

டேக் இட்  ஈஸி. என்பார்கள். take  it  easy.   எதைப்பற்றியும்  கவலை கொள்ளாதே. நல்லதே நடக்கும் என்று நம்பு. அது வீண்போகாது.
கடவுளுக்கு உன்னை மட்டும் அல்ல எல்லோரையும் ரொம்ப பிடிக்கும். நீ என்ன செயதாய், செய்ய வில்லை  என்று பார்ப்பவரில்லை அவர்.
தான தர்மங்கள் முடிந்தவரை திருப்தியாக செய். உனக்குள்  ஒரு சந்தோஷம், அமைதி, நிம்மதி தானாகவே தோன்றி உள்ளதை உணர்வாய். 

குழந்தைகளோடு  கொஞ்சி விளையாடும் சந்தர்ப்பத்தை இழக்கவே இழக்காதே.  அவர்கள் உங்களையும்  குழந்தைப் பருவத்துக்கு, இன்பலோகத்துக்கு,  கூட்டிச்  செல்பவர்கள். 

வெளியே  செல்லும்போது கடவுள் எவ்வளவு அற்புதமாக இந்த உலகைப் படைத்திருக்கிறார் பார் என்று வியந்து கவனி. எங்கும் சந்தோஷமே உனக்காக காத்திருக்கும். அதிசயங்கள் நேரும். 

மற்றவர்  செல்வமோ, வசதியோ சுகமோ  நாம் பொறாமைப் படுவதற்கில்லை. ரசிப்பதற்கு. ரோஜாப்பூ அழகா இருக்கிறதே, நான் கருப்பாக இருக்கிறேனே என்றா கவலைப் படுகிறோம். ரோஜாவின் அழகை 
ரசிக்கவில்லையா அது போல்.   எனக்கு கடவுள்  எது தேவையோ அதை கொடுத்திருக்கிறான் என்ற திருப்தி நம்மை உலகிலேயே பணக்காரனாக்கி விடும். 

வாழ்க்கை ஒவ்வொரு கணமும் சிரித்து ரசிக்க.  ஒவ்வொருநாளும்  காலையில் முதலில் எவ்வளவு பேருக்கு கொரோனா, எத்தனை செத்தது என்ற கணக்கு ஏன்? தெரிந்து நம்மால் ஆவது என்ன. பொழுது பொழுது விடிந்தபோதே மரண பயத்துடனா  ஆரம்பிப்பது? நமக்கு வராமல் பார்த்துக்கொண்டால்  அதுவே போதும்.

வயதாகிவிட்டதே என்று நொந்துகொள்ளவேண்டாம்.  அட  இன்னும் தெம்பாக இருக்க முடிகிறதே. தேங்க்யூ டா கிருஷ்ணா என்று கைகூப்புவோம். இந்த உலகை அனுபவிக்க  அதிக நேரம் நமக்கு கொடுத்திருக்கிறானே !

மேலே  சொன்னது கொஞ்சம் தான்.  எவ்வளவோ இருக்கிறது. 
இதெல்லாம்  ஒருவிதமான தெம்பை புத்துணர்ச்சியை  கொடுக்கும். மார்க்கபந்துக்களை போல் தனது வாழ்க்கையையும் பாழ் படுத்திக்கொண்டு மற்றவர் நிம்மதியையும் கெடுக்காது. சரிதானே!?




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...