Saturday, June 6, 2020

RAMANA




                                             ரமண தத்வம்   J K   SIVAN 

திருவண்ணாமலையில்  பகவான் ரமண மகரிஷி வாழ்ந்த காலத்தில் அவர் வாழ்க்கையின்  முதல் பாதி   குகைகளிலும் , பிற்பாதி மலையடிவாரத்தில் ஆஸ்ரமத்திலும்  கழிந்தது.   ஆஸ்ரமத்தில்  அவர் தாயின் சமாதி இடம்பெற்றது. ரமணர் நிறைய எழுதவில்லை.  எழுதியவைகளில் முத்தானது  ''உள்ளது நாற்பது''   இதை  அப்புறம் விவரமாக ஒவ்வொன்றாக பார்ப்போமா?. உபதேசசாரம்,  அருணாசலத்தின் மேல் ஐந்து பாடல்கள், 


அவர் சொன்னவை  தான் வேதங்களில்  நாம் அறிவது.     தனது சத்ய அனுபவத்தை பக்தர்களுக்கு  உபதேசித்தார்.  வார்த்தைகள்  உண்மையை அணுக சிலசமயங்களில் உதவாது என்று மௌனத்தையே முற்றிலும் கடைபிடித்தார்.  ஆத்மாவின் மொழி  மௌனம்.   அதுவே மனிதனின் ரஹஸ்யம்.  ஒரு விஷயம்  பரிமாற்றம்  அடைய  ரெண்டு பேர் வேண்டும். சொல்பவர்,  கேட்பவர். ரெண்டு பேரின் அறிவாற்றல், புரிந்து கொள்ளல்  ஒரே மாதிரியாக இருந்தால் தான் அந்த   விஷயம் அதே உருவத்தில் ஒருவரிடமிருந்து மற்றவரை  அடையும்.      இல்லையேல்  நான்கு பேரிடம் சென்றடையும்   போதே  அதன் நிறம் குணம், உருவம் எல்லாமே  மாறிவிடும். இதை நாம் உலகில் அன்றாடம் பார்க்கிறோம். 
குருவை சரியாக சிஷ்யன் புரிந்து கொள்ளவேண்டும்.  சிஷ்யன் தனது கருத்தை சரியாக புரிந்து கொண்டானா என்று  குருவும்  சோதிக்கவேண்டும் .  குரு குறித்த தக்க  நேரத்தில்   தோன்றுவார் .  தனது பணி முடிந்த   சரியான நேரத்தில் மறைவார்.  

14  ஏப்ரல் 1950  ரமணரின் பணி முடிந்தது. ஒரு வால்  நக்ஷத்ரம் அவர் ப்ராணன்  உடலை விட்டு வெளியேறும்போது வானில்  தோன்றி அருணாசல சிகரம் பின்னே மறைந்தது.   ரமணரின் பூலோக  பயண நேரம் முடிந்துவிட்டது 

 ஆத்ம ஞானம் என்றால் என்ன? அது எதற்கு ? அவசியமா?    அதை தேடாமல்  இப்படியே  இருக்கும் நிலையிலேயே சந்தோஷமாக இருக்க முடியாதா?
முடியாது என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால்  இப்படி  இருக்கும் நிலையில் மனக்கஷ்டம், துன்பம், ஏக்கம், ஏமாற்றம் கோபம் தாபம் எல்லாம் ஏன் வரவேண்டும்?   ஆத்ம ஞானம் அடைந்தவனுக்கு  இதெல்லாம் கிட்டேயே நெருங்காதே.

''நீ  சந்தோஷமாக  இருக்கிறாயா?'' என்று கேட்டவனுக்கு  ஒருவன் '' சந்தோஷம் என்றால் என்ன?'' என்று மறு  கேள்வியை பதிலாக அளித்தால், அவன் யோசித்திருக்கிறான் , உலகியலில் சந்தோஷம் எவ்வளவு   அற்பம் என்று தெரிந்திருக்கிறது என்று அர்த்தம். 

நமது மனதுக்கு சந்தோஷம்  எத்தனையோ விதத்தில்  உருவத்தில், எதிர்பார்ப்பில்  இருக்கலாம்.  அந்த சந்தோஷம்  அற்ப சுகம்.  அது  வேண்டியதை அடைவது,  வேண்டாததை விலக்குவது.   அவரவர்  அனுபவம் இதை  உணர்த்தும்.
வழக்கமாக  மனது  ஒரு ஆசையில்  திருப்தி அடைந்தால் அதிலிருந்து வேறு ரெண்டு புதிதாக ஆசைகள்  முளைக்கும்.  இதற்கு எல்லையே இல்லை.  அந்த தேடலிலேயே  வாழ்க்கை முடியும். இடையே எத்தனையோ, தடை, தடங்கல், போட்டி, பொறாமை, ஏமாற்றம், ஆத்திரம் எல்லாம்  நமது  முயற்சிக்கு  போனஸ்.

நம்மை நாம் சரியாக இன்னும் புரிந்து கொள்ளவே இல்லை. எது சந்தோஷம் என்றே அறியவில்லை.
உண்மை  சந்தோஷத்துக்கு  எந்த அலைச்சலும், தடுமாற்றமும், கடின உழைப்பும் வேண்டாம்.  நாம் யார் என்று சிந்தித்தாலே போதும். அடையாளம் தெரியாமல் இருட்டிலே எதையோ தேடுகிறோம்,  நாம் யார் முதலில்? அப்புறம் தான் அந்த ''நான்'' சந்தோஷம் எது என உணர்த்தும். 
நான்  யார் என்று கேள்வி கேட்டுக்கொள். உடனே விடை தேடாதே.  விடை கிடையாது . ஏனெனில் எந்த விடை தோன்றினாலும்  அந்த ஒத்தையா ரெட்டையா சரியான பதில் இல்லை. பொறுமையாக, நிதானமாக  மெதுவாக  சிந்தனை தொடரட்டும் அது 
''இது இல்லை  இது இல்லை''  என்று  ஒவ்வொன்றாக கழன்று நிலையான சாஸ்வத சந்தோஷம் மெல்லத்தான் தெரியவரும். சுய முயற்சியில் விடாமல் தேடி அனுபவிக்க வேண்டும். 

''குருநாதா,   ''நான்''  யார்  என்று தேடுகிறோம்,  அப்படி கேட்பது  தேடுவது  உண்மையில் எது?

''ஆத்மா  இல்லை.  அதற்கு தான் யார் என்று கேட்கவோ தேடவோ அவசியம் இல்லை.  அதை சூழ்ந்து நிற்கும் அஹம் பாவம் தன்னை  ''நான்'' என நினைத்துக்கொண்டு  உண்மையை மறைக்கிறது.  அஹம்பாவத்தை இந்த  ஆத்ம  விசாரம் விலக்கும் . மாயை விலகியபின், திரை நீங்கிய பின்   ஆத்ம ஜோதி தெரியும் .

இன்னும் தொடர்வோம்...

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...