Monday, June 1, 2020

ANANDHA RAMAYANAM



ஆனந்த ராமாயணம்   J K  SIVAN  
                                                                                   
                      வாலி மறைகிறான் 

''ஸ்ரீ ராமா, என் அண்ணன் வாலி முன்கோபி, பலிஷ்டன். எவராலும் வெல்ல முடியாதவன். நான் கிஷ்கிந்தையை விட்டு உயிருக்கு பயந்து  நான்  ஏன்  இங்கே  ருஷ்யமுக பர்வதத்தில் இருக்கிறேன் என்று நீ கேட்காவிட்டாலும் நானே சொல்கிறேன்  என்று ஆரம்பிக்கிறான்  சுக்ரீவன்.

முன்னொரு  காலத்தில் துந்துபி என்ற மஹிஷ ரூப அசுரன் கிஷ்கிந்தைக்கு வந்து  வாலியை  சண்டைக்கு  இழுத்தான் .  அவனை எளிதில்  வாலி கொன்று அவன் தலையை பிய்த்து வெகுதூரம் எறிய ,அது  இங்கே  ரிஷ்யமுக பர்வதத்தில் மதங்க ரிஷி ஆஸ்ரமத்தில் அவர் யாகம் செய்யும் போது  ரத்த சொட்ட சொட்ட  விழுகிறது.  அது வாலியின் வேலை என்று அறிந்த முனிவர் ''வாலி, இனி ஒரு முறை இந்த மலையில் கால் வைத்தால் அந்த க்ஷணமே  நீ மரணமடைவாய்''  என்று சபிக்க, வாலி இந்த மலைப்பக்கமே வரமாட்டான்.  உலகில் வேறு எங்கிருந்தாலும் வாலி என்னை கொன்றுவிடுவான் என்பதால் இங்கே இருக்கிறேன்.

ராமா, சீதையை தேடி கண்டுபிடிப்பது இனி எங்கள் வேலை.  ஆகாய மார்க்கமாய் சீதையை தூக்கிக்கொண்டு ராவணன் செல்வதை நான் பார்த்தேன். அப்போது சீதை சில ஆபரணங்களை கீழே துணியில் முடிந்து வீசியது இவை தான்'' என்று சில ஆபரணங்களை கொடுத்தான் சுக்ரீவன்.  

'' லக்ஷ்மணா இவை சீதையுடையதா என்று நீயும் பார்த்து சொல். '' 

''அண்ணா , மன்னிக்கவும்.   சீதை அன்னையின் பாதங்களை மட்டுமே பார்த்து  தினமும் வணங்குவதால் அவர்கள்  பாதங்களில்  அணியும்  நூபுரங்களை தவிர வேறு எந்த ஆபரணமும் நான் அறியேன்'' என்றான். 

பெரிய  மலை போல்  விழுந்து கிடந்த  துந்துபியின் சிரத்தை  ராமர் தனது கால் பெருவிரலால் நெட்டி தள்ள  அது பத்து காத தூரம் தாண்டி விழுந்ததை சுக்ரீவன் பார்த்து ராமனின் பராக்கிரமத்தை வியந்தான். 

பூமிக்குள் ஒரு பெரிய பாம்பின் உடலில் இருந்து முளைத்த  ஏழு பெரிய  பனைமரங்கள் சக்கரம் போல்  வட்டமாக நின்றதை கண்ட ராமர்,  லக்ஷ்மணனின் காலை தனது கால் பெருவிரலால் அழுத்த, ஆதிசேஷன்  அந்த  ஏழு வட்ட வடிவ  பெரிய பனை மரங்களை  நேர்ப்படுத்தி  வரிசையாக்க,  ஒரே   பாணத்தால்  அந்த ஏழு மரங்களையும் துளைத்து  வீழ்த்தினார்  ராமர்.  இதிலும் ஒரு குட்டி கதை இருக்கிறது.

ஒருமுறை ஏழு பனம்பழங்களை ஒருவன் கொண்டுவந்து தர, வாலி அவற்றை தனது குகையில் வைக்கச்  சொன்னான். பின்னர் குகையில் சென்று பார்க்கும்போது அந்த ஏழு பழங்களும் சர்ப்பங்களாக மாறி இருந்த தால் வாலி இந்த சர்ப்பங்கள் ஏழும்  பனை மரங்களாக  பாம்பின் மேல் முளைக்கட்டும் என்று சபித்தான்.   பாம்பும் பதிலுக்கு  என்னை அனாவசியமாக  நீ  சபித்ததால்  உன்னை இந்த ஏழு பனைமரங்களை எவன் வெட்டி வீழ்த்துகிறானோ அவனே உன்னைக்கொல்வான்  என்று  பாம்பு  பிரதி சாபம் கொடுத்தது..

ஸ்ரீ ராமா,  வாலியின் பலத்தின் ரகஸ்யம் சொல்கிறேன்.  அவனுக்கு இந்திரன் ஒரு மாலையை கொடுத்தான்.அதை அணிந்து எதிரே இருப்பவன் முகத்தை வாலி பார்த்தால் , எதிராளியின் அத்தனை பலமும் வாலியிடம் சேர்ந்து விடும்.   ஆதலால்  அவனை எதிர்த்துக்  கொல்ல  முடியாது.  

இதை  ராம லக்ஷ்மணர்கள்,  பனை  மரமாக இருந்த  பாம்பு எல்லோரும் கேட்டனர்.  பாம்பு  ராமர் முகத்தை பார்த்தது.   உடனே  ராமர்  அதனிடம் 

''ஹே  பாம்பே, உன்னை வாலியின் சாபத்திலிருந்து மீட்டேன்  அல்லவா.  இன்று  இரவே  நீ வாலியிடம் சென்று அவன் உறங்கும் வேளையில்  அவன் மஞ்சத்தின் மேல் வைத்திருக்கும் அந்த இந்திரமாலையை கொண்டுவா ''  என்கிறார்.  பாம்பு அவ்வாறே செய்தது. 

''சுக்ரீவா நீ கிஷ்கிந்தை சென்று வாலியை யுத்தத்திற்கு அழைப்பு விடு '' என்று சொல்ல  வாலியை அழைத்த  சுக்ரீவன்   படுகாயமடைந்து  அவனோடு போராடி களைத்து உயிர் தப்பி ராமனிடம் வருகிறான். 
  
''ராமா ஏன் என்னை வாலியின் கையால் மரணமடைய  நினைத்தாய் .. நீயே  என்னை  கொன்று இருக்க
லாமே   என்று முறையிட, 

''சுக்ரீவா உனக்கும் வாலிக்கும்  கொஞ்சம் கூட  எனக்கு வித்யாசமே தெரியவில்லை. எனது  அஸ்திரம் அவனுக்கு பதிலாக உன்னை கொன்றுவிட்டால் மித்ர துரோகம் செய்ததாகிவிடும்.  லக்ஷ்மணா,  இந்த காட்டு மலர்கள் சிலவற்றை மாலையாக கொடிகளில்  சுற்றி  சுக்ரீவன் கழுத்தில் மாட்டு''    

சுக்ரீவா,   இப்போது எனக்கு நீ யார் அவன் யார் என்று அடையாளம் தெரிவதால் உடனே அவனை மீண்டும் யுத்தத்துக்கு அழை ''  

சுக்ரீவன்  வாலியின் அரண்மனை வாயிலில்  நின்று அவனை யுத்தத்துக்கு அழைக்க, வாலியின் மனைவி  தாரை, வாலியை தடுக்கிறாள்.

''நாதா, ராமர் என்று மனிதர் சுக்ரீவனுடன் நட்பாக  உள்ளார். அவர் பராக்கிரம சக்தி கொண்டவராம். நமது மகன் அங்கதன் அதை பார்த்துவிட்டு வந்து சொன்னான். நீங்கள் சுக்ரீவனுடன் யுத்தம் செய்ய வேண்டாம். அவனை அழைத்து  யுவராஜ்ய பட்டாபிஷேகம் செய்யுங்கள். ராமரை வணங்கி நட்பாக பழகுங்கள். உங்கள் உயிரை பணயம் வைக்க வேண்டாம் ''

''தாரா,     ராமர்  மஹா விஷ்ணுவின் அவதாரம் என்பதை அறிவேன். அவரால் தான் எனக்கு  மரணம் என்பது விதி. அந்த நேரம் வந்துவிட்டது என்னை தடுத்து பயன் இல்லை. என்னிடம் இருந்த  இந்திர மாலை மாயமாக மறைந்ததே  அதற்கு அடையாளம்.  நான் சுக்ரீவன் மனைவியை அபகரித்ததன் பலன். நீ சுக்ரீவன் அங்கதன் இருவரோடும் இங்கே  வாழ்வாயாக '' என சொல்லி  வாலி மீண்டும் சுக்ரீவனோடு  மோதுகிறான்.  ஒரு மரத்தின்  பின் நின்ற ராமர்  வாலியை ஒரே பாணத்தால்  வீழ்த்தி அவன் காயமுற்று வீழ்கிறான்.

தாரை ஓடிவருகிறாள்.  வாலி  இறக்கும் முன் ''ராமா  நீ சுத்த வீரனா?  என்னை மறைந்திருந்து கொல்ல  என்ன காரணம்?    

''உன் துர் நடத்தை. நிரபராதியான சுக்ரீவனை கொல்ல முயன்றது. நான் உன்னை கொன்றதற்கு பிரதி பலனாக துவாபரயுக முடிவில்   நீ ஒரு வேடனாக பிறந்து  ப்ரபாஸ க்ஷேத்திரத்தில், என்னுடைய  காலில் ஒரு பாணம் எய்தி  என் மறைவிற்கு காரணமாவாய்.  இந்த பழியும் தீரும். அப்பிறப்பிலேயே உனக்கு முக்தியும் அருள்வேன்.  கிருஷ்ணன்  மறைவு  ஜரா என்கிற வேடனால் இப்படி தான்  நிகழ்ந்தது. 

வாலி ராமனை வணங்குகிறான். ''ராமா,   சீதையை  ராவணன் தூக்கி சென்றான் என்று எனக்கு சொல்லி இருந்தால் நொடியில் ராவணனைக் கொண்டே  சீதையை உம்மிடம் ஒப்படைக்க செயதிருப்பேனே... என் குமாரன்  அங்கதனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். பாதுகாக்கவேண்டும்'' என்று மறைந்தான் வாலி. 

அங்கதன் வாலிக்கு அந்திமக்ரியைகளை செயது முடித்து, லக்ஷ்மணனைக் கொண்டு  சுக்ரீவனுக்கு கிஷ்கிந்தாவில் வானர  ராஜாவாக முடிசூட்டி  கார்காலம் ஆரம்பித்து விட்டதால் நான்கு மாதங்கள் ராமர்  ப்ரவர்ஷ்ண  கிரி உச்சியில் ஒரு ஸ்படிகமயமான குகையில்  லக்ஷ்மணனோடு வாசம் செய்கிறார்.

ஒருநாள்  ராமரை காண வந்த  லக்ஷ்மணன் ராமரின் வலது பக்கம் சாத்வீகமான சீதை இருப்பதை கண்டு வணங்க அவள் ராமரின் ஐக்யமானாள் .

''பார்வதி, உனக்கு  ராமர் சரித்திரம் சொல்லி வருகிறேன். முன்பே ராமர்  சீதையை  மூன்று  அங்கமாக பிரித்துக் கொள்ள சொன்னது ஞாபகம் இருக்கிறது. வலதுபுறம் சீதா எப்போதும் ராமரோடு ஐக்கியம்  என்று சொன் னேனே.   ராமரை சீதை ஒருநாளும் பிரியவில்லை''

''நாதா  தொடந்து சொல்லுங்கள்    கேட்பதற்கு ரொம்ப  ஆர்வமாக  இருக்கிறது   ராமர் சரித்திரம்'' என்று சொன்ன பார்வதியோடு நாமும் கேட்போம். 

  



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...