Tuesday, June 16, 2020

KRISHNA'S PARENTS MEET





   
                                    இரு தந்தைகளின் சந்திப்பு       J K   SIVAN  

வசுதேவன்  துரதிர்ஷ்டசாலி. பெற்ற  குழந்தைகளை பிறந்தவுடனே இழந்தவன். விதியின் கொடுமை.

எட்டாவது குழந்தையாவது உயிரோடு  ஆயர்பாடியில்  கோகுலத்தில் நந்தகோபன் வீட்டில் வளர்வது அவனுக்கு மட்டுமே   தெரியும்.  நந்தகோபன்  ஒரு கிராமத்தலைவன்.   சிற்றரசன்போல. . மதுராபுரி அரசன் கம்சனுக்கு  கப்பம் கட்டுபவன்.  ஒருமுறை  நந்தகோபன்  மதுராவுக்கு கப்பம் கட்ட வந்தபோது வாசுதேவனை சந்திக்கிறான்.

நந்தகோபனுக்கு அவன் வீட்டில் வளரும் கிருஷ்ணன் வசுதேவன் மகன் என்பது தெரியாது. பிறந்த உடனே அவன் மகள் மாற்றப்பட்டது தேவ ரஹஸ்யம்.  வசுதேவரின் இன்னொரு  மகன் ரோஹிணியில் கர்ப்பத்தில் வளர்ந்த பலராமன். ரோகிணியும் பலராமனும் நந்தகோபன் கோகுலத்தில் வளர்பவர்கள். 

நந்தகோபன் வீட்டில்  கிருஷ்ணன் பிறந்த அன்று நிறைய  பசுக்கள்  தானியங்கள் எல்லாம்  தானம்   கொடுத்தான்.வேத மந்திரங்கள் முழங்கின. எங்கும் தோரணம் வண்ணக்கோலங்கள். கோகுல கிராமம் முழுதும் மக்கள் வீட்டு வாசல்களில் மலர்களை வைத்து அலங்கரித்தார்கள் .. பசுக்கள் கன்றுகள் சிங்காரிக்கப்பட்டன. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள்.  ஒற்றுமையாக வாழ்ந்த கிராம மக்கள் ஒரு வீட்டின் இன்ப துன்ப நிகழ்வுகளை தமதாக பங்கேற்கும் குணம் இன்னும்   முற்றிலுமாக மறையவில்லை. 

சில  கிராமங்களில், அக்ரஹாரங்களில் ஆங்காங்கே சிறு குழுவாக இருப்பது அதிசயம் தான்.

கிருஷ்ணன் தான்  விஷ்ணு என்பாதை மறந்து போன  வசுதேவர் விஷ்ணுவாகிய  நாராயணனை  வேண்டி  கிருஷ்ணன் பலராமன் ஆகியோர் க்ஷேமமாக வாழ  பிரார்த்தித்தார் . கிருஷ்ணன் பலராமன் என்ற இருவரும்  அங்கு   இருந்ததாலோ என்னவோ, வ்ரஜபூமி முழுதுமே  இயற்கைவளங்கள் நிறைந்ததாக எல்லோருக்கும் சுபிக்ஷமான வாழ்க்கையைத்  தந்தது. 

எப்படியோ  நந்தகோபனை  வசுதேவர்   மதுராவில் கம்சன் அரண்மனையில் தனிமையில் சந்திக்க  முடிகிறது.

''என் அருமை நண்பா நந்தகோபா, உன்னை பார்த்ததில் எனக்கு புத்துயிர் வந்ததடா''

''வசுதேவா  உன்னை பார்க்க நானும் எத்தனை நாள் துடித்தேன் என்று உனக்கு தெரியாதப்பா''  நன்றாக இருக்கிறாயா''

''உயிரோடு இருக்கிறேனே இன்னும்  நந்தா. அதுவே  நல்ல சேதி அல்லவா? உன் பிள்ளைகள் கிருஷ்ணனும் பலராமனும்  எப்படி இருக்கிறார்கள். அவர்கள் ரொம்ப அழகான குழந்தைகள் என்று பார்த்தவர்கள் சொல்கிறார்களாமே.  மதுராவில் இந்த  சேதி  என் காதுக்கு கூட  எட்டுகிறதே. 

எட்டு  குழந்தைகளை கொன்றதும் கம்சன் என்னையும் தேவகியையும்  விடுதலை செய்து கம்சன் அரண்மனையில் தான் அவன் கட்டுப்பாட்டில்  வசிக்கிறோம்.  இது எங்களுக்கு மறுவாழ்வு என்பதே தவிர  ஆனந்தமயமானது அல்ல.  வயதான உனக்கும்  இறைவன் அருளால் அருமையான புதல்வன் ஊரே மெச்சும்  கிருஷ்ணன் பிறந்திருக்கிறான். நீ  அதிர்ஷ்டசாலி அப்பா நந்தகோபா. 

''ஆமாம்   வசுதேவா ,  பொல்லாத சுட்டிப்பயல்  கிருஷ்ணன். என் மனைவி  யசோதையால் அவனை சமாளிக்க முடியவில்லை.  ஏதோ ஒரு தெய்வீகம் அவனிடம் இருக்கிறது வசுதேவா .அவனைப்  பார்க்காமல்  ஒரு நாளும் அந்த கிராம கோபியரால் இருக்க முடியவில்லை. . எப்போதும் அவனைச்சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. எல்லோரையும் புன்சிரிப்பால் கட்டி பிணைத்திருக்கிறான் கண்ணன்.'' 

''ஆஹா  நான் உன் வாயிலாக கேட்கும் பாக்யமாவது எனக்கு கிடைத்ததே நந்தா. அவனைப் பார்க்க இயலாவிட்டாலும் அவன் தந்தையான   உன்னை ப்பார்க்கும் அதிர்ஷ்டமாவது எனக்கு கிட்டியதே நாராயணன் அருள் தான். '' என்றார்  வசுதேவன் . 

''நந்தா கோபா,    பிருந்தாவனத்தில்  எல்லோரும்  சந்தோஷமாக  பாதுகாப்போடு இருக்கிறார்கள் அல்லவா?''  வசுதேவன் குரலில் அவர் கிருஷ்ணனைப் பற்றி போட்டுக்கொண்டிருந்த  கவலை த்வனித்ததை  நந்தகோபன் உணரவில்லை.  பசுக்களுக்கு  மேய்ச்சலுக்கு குறைவில்லை,  புல்வெளிகள் நீர் நிலைகள் அதிகம் உண்டல்லவா . எதிரிகள் பயம் எதுவும் இல்லை அல்லவா? ''

சுற்றி வளைத்து தான் வசுதேவரால்  தனது மகன்கள், அதிலும் கிருஷ்ணன் க்ஷேமத்தை பற்றி கேட்க முடிகிறது. விதியின் செயல். பெற்றவனால் பிள்ளையை அடையாளம்  காட்ட முடியவில்லை, அன்பை நேரடியாக செலுத்த முடியவில்லை. கண்ணாலே கூட  தனது பிள்ளையைக்   காண முடியவில்லை... இதைவிட ஒரு  கொடிய தண்டனை எந்த பெற்றோருக்காவது   நேர்ந்தது  உண்டா?  கிருஷ்ணனைக்   கொல்ல  இரவும் பகலும் கொடிய  வலிமை மிக்க  ராக்ஷஸர்களை கம்சன் அனுப்பிக் கொண்டிருப்பது  மதுராவில் எல்லோருக்கும் தெரியும்போது  வசுதேவருக்குத்  தெரியாதா?   கடந்த  பத்துநாளுக்குள்   ராஜ்யத்தில் பிறந்த எந்த குழந்தையானாலும் கொன்றுவிட வேண்டும் என்று கட்டளை இட்டிருக்கிறானே!  பகவான் அருளால் கிருஷ்ணன் உயிர் தப்பவேண்டும் என்று வசுதேவன் கண்ணீர் விடும்போது  பகவானை பாதுகாக்க பகவானையே வேண்டுகிறோம் என்று  பாவம் அந்த  புண்ணியம் செய்தவர் அறியவில்லை...

''வசுதேவா,   கண்கலங்காதே. உன் மன நிலை எனக்கு புரிகிறது.  தேவகிக்கு பிறந்த  உன் குழந்தைகள் ஏழையும்  வரிசையாக உன் கண்ணெதிரே கொல்லப்படுவதை பார்த்தவன் நீ.  என் குழந்தை கிருஷ்ணன் க்ஷேம லாபத்தை உன் மனம் கவலைப்படுவது ஞாயம் தான். ஒரு கொடியவன் ராஜாவாக இப்படி ஆணையிடும்போது குடிமக்கள் நிராதரவாக பகவானைத்தான் வேண்டமுடிகிறது.''

 ''நன்றி நந்தகோபா, வரி செலுத்தி விட்டாயானால்  விரைவில் கோகுலம் திரும்பு. அங்கு இந்த கால கட்டத்தில் குடும்பத்தோடு குழந்தைகளோடு  நீ   இருக்கவேண்டுவது அவசியம்.''  பிறகு சந்திப்போம்''  என்று விடைகொடுத்தார் வசுதேவர்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...