Sunday, March 3, 2019

PATTINATHAR


பட்டினத்தார் தத்துவம் கொஞ்சம் - J K SIVAN

பட்டினத்தார் ஒரு சிறந்த வேதாந்தி. அவர் தமிழ் எளிதானது. படித்தால் புரியும். இன்று ஒரு சில தத்துவப் பாடல்களை படித்தேன் அதை சொல்லட்டுமா?.

''இருப்பதுபொய் போவதுமெயென்றெண்ணிநெஞ்சே
யொருத்தருக்குந் தீங்கினை நீ யுன்னாதே - பருத்தொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்மதென்று தாமி ருக்குந்தான்

எத்தனை பொய் , பித்தலாட்டம், ஏமாற்று வித்தை, இதெல்லாம் செய்து, கூட்டணி சேர்ந்து காசு தேடி சொத்து சேர்த்து சுகமான வாழ்வை வாழும் தொந்தி பெருத்த தனவான்களே. கொஞ்சம் இதை கேளுங்கள். ஒரு நிமிஷம் யோசியுங்கள். ''நீங்கள் காண்பது கனவு. இந்த உலக வாழ்வு தாமரை இலைத்தண்ணீர். சாஸ்வதம் இல்லாதது. இந்த உலகை விட்டு எதையும் கொண்டுபோகாமல் வெளியேறப்போவது மட்டும் தான் நிச்சயம்.ஆகவே எவரையும் துன்புறுத்தாதே. தவறு தீமை, தீங்கு எதுவும் நினைக்காதே. நீ தடவிக் கொடுத்துக் கொண்டு ஊஞ்சலில் ஆடுகிறாயே , தம்பி, உன் ஆசைத் தொந்தி நீ நினைத்துக் கொண்டிருப்பது போல் உனதல்லவே அல்ல. அதோ எதிரில் தெரிகிறதே இடுகாடு, அதில் உலவுகின்றதே, நாய்கள், நரிகள், கன்னுக்குத் தெரியாத பேய் பிசாசுகள், மேலே வட்டமிடுகிறதே உன்னைப் பார்த்தவாறே ஒரு சில கழுகுகள் அவை எல்லாவற்றிற்கும் நன்றாகவே தெரியும் ''ஒரு நல்ல கொழுத்த தொந்தி நமக்கு நிச்சயம் ஆகாரமாக ஒருநாள் வரப்போகிறது. அது வரை நன்றாக கொழுக்கட்டும்.'' என்று
எந் தொழிலைச் செய்தாலு மே தவத்தைபட்டாலு
முத்தர் மனமிருக்கு மோனத்தே - வித்தகமாய்க்
காதி விளையாடி யிரு கை வீசி வந்தாலுந்
தாதி மன நீர்க்குடத்தேதான்

இந்த கிராமத்தில் கிழக்கே ஒரு ஆறு. அதன் கரையில் தினமும் கிராமப் பெண்கள் குளித்து நீராடி, துணி பிழிந்து, குடத்தை பளபளவென்று ஆற்றுமணலில் தேய்த்து கழுவி நல்ல குடிநீர் பிடித்து நிரப்பி ஒன்றன் மேல் குடங்கள் அவர்கள் தலையில் இடம் பெற்றுவிட்டன. என்னென்னவோ ஊர் கதை பேசுகிறார்களே. வாய் ஓயாமல் பேசினாலும், கைகள் அதற்கேற்ப அபிநயம் பிடித்தாலும், சிரித்தாலும், மேடு பள்ளம் அசைந்து நடந்தாலும் அவர்கள் மனம் நினைவு, முழு கவனம், பூராவும் தலையில் சும்மாட்டில் இருக்கும் நீர் குடத்தின் மீது தான். அசையாமல் வீடு போய் சேரவேண்டுமே. அது போலவே தான் முக்தர்களும். என்கிறார் பட்டினத்தார். எப்படி என்றால், என்ன பணியில் வேண்டுமானாலும் நாம் ஈடுபட்டிருக்கலாம். அந்த பணி காரணமாக பல விதமான அவஸ்தைகள் பட நேரிடலாம். இருந்தாலும் நல்லோர், சான்றோர்,முக்தி நாடுவோர் மனது எப்போதும் மற்றதெல்லாம் மறந்து இறைவன் பால் மட்டுமே சேர்ந்திருக்கும் .

மாலைப்பொழுதி னறுமஞ்சளரைத்தே குளித்து
வேலை மினக்கிட் டு விழித்திருந்து - சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்ற பிள்ளை
பித்தானால் என் செய்வாள் பின்.

'' கிருஷ்ணா, எனக்கு ஒரு தங்கமான பிள்ளை வேண்டும் என்று வேண்டினாள். தினமும் மாலைவேளையில் இதற்காகவே பளபளவென்று ஒளிவீசும் நறுமணம் மிக்க மஞ்சளை தானே அரைத்து பூசிக்கொண்டு குளித்தாள். இரவும் பகலும் விழித்திருந்தாள். அவள் பட்ட பாடு வீண் போகவில்லை.ஒரு நாள் கருத்தரித்தாள் பத்து மாதம் காத்திருந்து ஈன்றாள். எனக்கு பெயரிட்டாள். ஊர் கூட்டி கொண்டாடினாள் . வளர்த்தாள் . இதோ அவள் பெற்ற நான் பித்தனாக இறைவனை மட்டுமே ஈசனை மட்டுமே நாடி எல்லாம் துறந்து சொல்கிறேனே . அவள் கனவு என்னவானது?? ஆவென்று வாயைப் பிளந்து என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாளே. சிரிப்பு தான் வருகுதய்யா..

''நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியந் தேடி
நலனொன்று மறியாத நாரியரைக்கூடிப்
பூப்பிளக்கப் பொய்யுரைத்துப் புற்றீசல்போலப்
புலபுலெனக்கலகலெனப் புதல்வர்களைப்பெறுவீர்
காப்பதற்கும்வகையறியீர்கைவிடவுமாட்டீர்
கவர்பிளந்தமரத்துளையிற்கானுழைத்துக்கொண்டீர்
ஆப்பதனையசைத்துவிட்டகுரங்கதனைப்போல
அகப்பட்டீர்கிடந்துழலவகப்பட்டீரே.

ஆஹா இந்த உலகத்தில் நாம் வாழும் வாழ்க்கை பற்றி மொபைல் காமிராவில் செல்ஃபீ படம் எடுப்பது போல் அல்லவா பட்டினத்தார் படம் பிடித்து காட்டுகிறார்!

ஒன்றா இரண்டா, இரவு பகல் என்று பாராமல் எப்போதும் பொய் பொய் பொய் மட்டுமே பேசி எல்லோரையும் ஏமாற்றி காசு சேர்த்து, கட்டிடம் கட்டி, கார் வாங்கி, நாய் வளர்த்து, ஒன்றுமறியாத அழகான மனைவியை, (சிலர் மனைவிகளை) மணந்து, இந்த பூமியே ரெண்டாக பிளந்துபோகும் அளவு பொய்களைச் சொல்லி, நிறைய புற்றீசல் போல், மழைக்கால புழுக்கள் போல் எண்ணற்ற குழந்தைகளைப் பெற்று அவர்களை எப்படி வளர்ப்பது என்பது தெரியாமல், விழித்து, அவர்களை நல்ல படி பாதுகாக்கவும் தெரியாமல், வெளியே விடவும் முடியாமல், அங்குமிங்குமாக அலைந்து நீ அவஸ்தை படுவதை பார்க்கும்போது யாரோ ஒருவன் மரத்தை பாதி பிளந்து அது மீண்டும் ஒன்று சேராமல் அதன் பிளவில் ஒரு ஆப்பு நட்டுவிட்டு போயிருந்த சமயம் அந்தப்பக்கம் வந்த ஒரு முட்டாள் குரங்கு அந்த மரத்தின் மேல் அமர்ந்து அதன் வால் அந்த பிளவில் நுழைந்திருப்பதை கவனியாமல், மரப்பிளவில் இருந்த த ஆப்பை வெளியே பிடுங்கி விட்டது. மரப்பிளவு அடுத்த கணமே, மீண்டும் ஒன்று சேர்ந்து, மரத்தின் இடுக்கில் வால் மாட்டிக்கொண்டு விட்டதால் தவிக்கும் குரங்கு நீ தான் ஐயா ' 'என்கிறார் பட்டினத்தார். இதைக்காட்டிலும் எப்படி நாமாக வரவழைத்துக்கொண்டு தவிக்கும் உலகவாழ்க்கை பற்றி சொல்லமுடியும்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...