Friday, March 29, 2019

arupaththu moovar



 அறுபத்து மூவர்                      J K  SIVAN  

திருக்குறிப்புதொண்ட நாயனார்                            

                                                               தூய்மையா(க்கி)ன  தொண்டர்

சைவ திரு நெறியில்  அறுபத்து மூன்று  நாயன்மார்களை, சிறந்த சிவ பக்தர்களாக  சுந்தரர் காலத்திலேயே திருத்தொண்டத் தொகை  என்று பாடி இருக்கிறார்.  சுந்தரர் காலத்திற்கு பிறகும் எத்தனையோ  சிவபக்தர்கள் நிறைந்திருக்கிறார்கள். அவர்களை நாயன்மார்களாக்க  இன்னொரு சுந்தரரோ சைவசமய குரவர்களோ  இல்லையே.  நாம்  அவர்களைப்பற்றியும்  தேடிப்பிடித்து அறிந்து கொள்ளவேண்டும்.  அவர்கள் குடத்திலிட்ட விளக்குகள். வெளியே  தம்பட்டம் அடித்து படாடோபமாக  விளம்பரம் செய்பவர்களோ அதைச்செய்ய அனுமதிக்கவோ மாட்டார்கள். இறைவன் அவர்களுக்கு நேரில் அருள்வதை அவர்களோ மற்றவர்களோ சொன்னாலொழிய தெரியப்போவதில்லை.  சுந்தரர் கால  அறுபத்து மூவரில் மற்றுமொருவரை இன்று அறிந்து கொள்வோம்.

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் என்ற  சிவபக்தர்  தொண்டை நன்னாட்டில் காஞ்சி மாநகரத்தில்  வெளுத்து தரும்  வண்ணார்  குலத்தவர்.

நிறைய  புலவர்கள், துறவிகள்,  சித்தர்கள், ஞானிகள்  ஆகியோரின்  இயற்பெயர்  நமக்கு கிடைப்பதில்லை. அவர்களது,  உருவம், பழக்கம், தோற்றம்  செயல், பற்றிய   பெயர்களே அவர்கள் அடையாளமாக நிலைத்து விட்டது.   இந்த அடியார் பெயர் ஏன்   குறிப்புத் தொண்டர்  (திரு என்பது மரியாதைக்கான  சொல்)
என்றால் சிவபக்தரான அவர்  சிவனடியார்களையே, எப்போதும்   சுற்றும் வந்து போல்,  நெருங்கி பழகி அவர்களது உள்ளத்தில் அவர்கள் என்ன தேவை என்று நினைக்கிறார்களோ அதை அறிந்து அதை பூர்த்தி செயது அவர்களை மகிழ்விக்கும்  பணியில் ஈடுபட்டார். அவர்களை பற்றிய குறிப்புகளை நுட்பமாக அறிந்து  சேவை, பணிவிடை,  செய்ததால்  இந்த சிவனடியாரை திருக்குறிப்பு தொண்டர் என்று அழைத்தார்கள். நாமும் அவரை அப்படியே  63பேரில் ஒருவராக அழைத்து வணங்குகிறோம்.

இந்த சிவனடியார் தொழில் துணி வெளுத்து தருவது என்பதால்,  சிவனடியார்கள் ஆடைகளை எடுத்துச் சென்று  அன்போடு கவனத்தோடு, பொறுப்போடு  வெளுத்தும் தரும் பணியில் ஈடுபட்டார்.

சர்வ லோகத்திலும் நடப்பதை அறியும் சர்வேஸ்வரன் திருக்குறிப்பு தொண்டர் சேவையை அவர் பக்தியை மெச்சினான். பூலோகத்தில் அனைவருக்கும் அவர் மஹிமை தெரியவேண்டும் என்று திருவிளையாடல் ஒன்று நிகழ்த்தினது தான் இந்த அடியார் பற்றிய இன்றைய தொகுப்பு.

காஞ்சிபுரத்தில் அருள் பாலிக்கும் ஏகாம்பரேஸ்வரர் ஒரு குளிர் மிகுந்த மழைகாலத்தை தேர்ந்தெடுத்தார். ஒரு பரம ஏழை சிவனடியாராக உருக் கொண்டு திருக்குறிப்பு தொண்டர் வசித்த இடத்துக்கு வருகிறார்.
முதிர்ந்த உடல், பளபளக்கும்  பொன்மேனி.  அதில் வெண்மையாக கண்ணைப் பறிக்கும்  விபூதி பூச்சு.  கழுத்து கைகளில், தலையில் ஜாடையில் ருத்ராக்ஷ மாலைகள்.  இடையில் அழுக்கடைந்த கறைபடிந்த  ஆடை.

''சிவோஹம் ''   கம்பீரமான குரல்  கேட்ட அடுத்த கணம் திருக்குறிப்பு தொண்டர்  ஓடிவருகிறார்.  முதிர்ந்த சிவனடியாரை உபசரித்து வீட்டுக்குள் அழைத்து வணங்குகிறார்.  அவரது தொழில் துணி வெளுப்பது என்பதால் அவர் கண்கள் சிவனடியாரின் இடையில் இருந்த அழுக்காடையை நோக்குகிறது.

''குருநாதா, வேறு ஆடை தருகிறேன், தங்கள் இடுப்பிலுள்ள ஆடையை அவிழ்த்து தருவீர்களானால்   உடனே அதை சீக்கிரத்தில் வெளுத்து காயவைத்து தருகிறேன். அருள்வீர்களா?  '' என்கிறார்.

''இன்று மாலை நேரத்திற்குள் அதை என்னிடம் வெளுத்து திருப்பித்தருவதாக இருந்தால் அவிழ்த்து தருகிறேன். முடியுமா உம்மால்?   உம்மால் தக்க நேரத்தில் தரமுடியவில்லை என்றால் என் உடலுக்கு  இடர் விளைத்த பாவம் சேரும்'' என்கிறார் சிவனடியார்.

''தங்கள் சித்தம் என் பாக்கியம். அப்படியே  மாலை பொழுது சாய்வதற்குள் துவைத்து வெளுத்து காயவைத்து தருகிறேன் ''  என்று அந்த கந்தல் ஆடையை வாங்கி கொள்கிறார் திருக்குறிப்பு தொண்டர்.  வழக்கமாக துணி துவைக்கும் குளக்கரைக்கு ஓடுகிறார்.  மழை பெரிதாக பிடித்துக் கொண்டது.  துணி துவைத்தாலும் அதை  மாலை நேரத்திற்குள்  உலர்த்த வழியில்லாமல்  மழை தொடர்ந்து பெய்தது.
''பெருமானே, என்ன செய்வேன். எப்படி சிவனடியார் ஆடையை அவருக்கு அளிப்பேன்?'' என்ற கவலை திருகி குறிப்பு தொண்டரை  வாட்டியது. மாலை நேரம் முடியப்போகிறது. இனி இரவு நெருங்கிவிடுமே .  மழை விட்ட பாடில்லையே.

சிவனடியார் குளிரில் ஆடையின்றி அவதிப்படுவாரே. கால தாமதம் ஆகிவிட்டதே.  கொடுத்த நேரம் கெடு  தாண்டி விட்டதே.  இனி சிவனடியாரை நான் சந்திக்கமுடியாது. தவறு செய்துவிட்டேன். அவருக்கு கொடுத்த வாக்கு  பொய்த்து விட்டது. இனி நான்  உயிரோடு வீடு திரும்ப முடியாது. அவரை காண முடியாது. ஒரு பெரும் பாவத்துக்கு  ஆளாகிவிட்டேனே.  அவர் கண்கள் எதிரே இருந்த துணி துவைக்கும் பாறைக்கு கல்லை கண்டது முடிவு எடுத்துவிட்டார். என் தலையை பாறையில் மோதி உயிர் விடுகிறேன்.
யோசிக்காது துளியும் வந்தது, தனது தலையை பாறையில் வேகமாக மோதினார்.
வேகமாக  பாறையை நோக்கி  சாய்த்த தலையை ஒரு கை  பிடித்து தடுத்தது.  சிவன் நாடகத்தால்  பெய்த மழை சட்டென்று  நின்றது. அதிசயத்தோடு தன்னை தடுத்த கை  யாருடையது என்று பார்க்க தலையை  தூக்கியபோது எதிரே பார்வதி சமேத பரமேஸ்வரன், காஞ்சி வாழ்  ஏகாம்பரநாதர் நின்றார்.

'' பக்தா,உன் உண்மையான சிவபக்தியை சோதிக்கத்தான் நான் சிவனடியாராக உன்னை நாடி வந்தேன்.  உண்மையான நீ வெளுக்கும் துணியைப் போன்ற தூய சிவபக்தி இதுமுதல் உலகறியும்'' என்று ஆசிர்வதித்து மறைகிறார்.

காஞ்சி மாநகரம்  புண்ய பூமி. நகரங்களில் தலை சிறந்தது காஞ்சி என்ற புகழ் பெற்றது. மஹா பெரியவர்  வாழ்ந்த ஸ்தலம். இன்றும் அருள்புரியும் க்ஷேத்ரம். எண்ணற்ற சிவ விஷ்ணு ஆலயங்களை திவ்ய தேசங்களை தன்னுள் கொண்ட புராதன நகரம்.   சிற்ப சாஸ்த்ர நிபுணர்கள், சிவபக்தியில்   ஈடற்ற பல்லவர்கள் தலைநகரமாக கொண்ட நகரம். சென்னை வாசிகள் கொடுத்துவைத்த  புண்யசாலிகள். ஒன்றரை ரெண்டு மணி நேரத்தில் நினைத்த  76 கி.மீ. தூரத்தில் உள்ள காஞ்சி மாநகரை அடையலாம். புண்யம் சம்பாதிக்கலாம்.   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...