Saturday, March 23, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K SIVAN
மஹா பாரதம்
'' தேவன் வந்தான் வென்றான் சென்றான் ''

ஒரு தந்தைக்கு தனது மகனின் அசகாய சூரத்தனம் எவ்வளவு சந்தோஷத்தைத் தரும் என்று தெரியாதவர்கள் அன்று விராடனின் முகத்தைப் பார்த்தால் தெரிந்து கொண்டிருப் பார்கள்.

''என்ன நடந்தது என்று விவரமாக கூறுங்கள்'' என்று திருப்பித் திருப்பி கேட்டான் விராடன். உத்தரன் தனி ஒருவனாக ப்ரஹன்னளையை தேரோட்டியாக வைத்துக்கொண்டே, கௌரவ சேனையை அழித்து, புறங்காட்டி ஓட வைத்து பசுக்களை மீட்டுக்கொண்டு மத்ஸ்ய தேசம் திரும்பி வந்து கொண்டிருக்கிறான் என்று உத்தரன் சொல்லி அனுப்பிய செய்தியை அவர்கள் அப்படியே சொல்ல காதில் இன்பத் தேன் பாய்ந்தது விராடனுக்கு.

''கங்க பட்டரே, பார்த்தீர்களா என் மகன் வீரத்தை. பார்ப்பதற்கு சாதுவாக சிறு பிள்ளையாக இருந்தாலும் அவன் எப்படி மா பெரும் கௌரவ சேனையை தனியாக வென்று இருக்கிறானே, இதற்கு என்ன சொல்ல ?''

''அரசே, இதில் என்ன ஆச்சர்யம், அவனது அதிருஷ்டம் ப்ரஹன்னளா அவனுக்கு தேரோட்டியாக அமைந்தது'' என்று கங்கபட்டர் பதில் சொன்னதும் விராடன் முகம் சுருங்கியது. அவனுக்கு பட்டர் பேச்சு பிடிக்கவில்லை.
வீதி யெல்லாம் தோரணங்கள், வாழ்த்துக்கள், சங்கீத முழக்கம், மலர்கள் தூவி எல்லோருக்கும் இனிப்பு வழங்கி உத்தரன் வரவுக்கு ஏற்பாடு நடந்தது. யானை குதிரைப் படைகள் வரிசையாக இரு புறமும் நின்று அவனை வரவேற்க காத்திருந்தது.

''வாருங்கள் கங்க பட்டரே, இந்த சந்தோஷ நேரத்தில் சற்று நாம் விளையாடுவோம்'' என்ற விராடன் அங்கே நின்ற திரௌபதியைப் பார்த்து ''சைரந்திரி, பகடைக் காய்களைக் கொண்டு வா'' என்று கட்டளை இட்டான்.

பகடையாட்டம் வழக்கம் போல் பேச்சுடனேயே தொடர்ந்தது. விராடன் அபரிமிதமான சந்தோஷத்தில் இருந்தான்.

''கங்க பட்டரே, என் மகன் வீரத்தை எப்படி மெச்சுவது என்று வார்த்தைகளே வரவில்லை ஐயா. அப்பப்பா, பீஷ்மர் என்ன, துரோணர் என்ன, கர்ணன், அஸ்வத்தாமா, கிருபர் அவ்வளவு பேரையும் எப்படித்தான் தைரியமாக என் வீர மகன் முறியடித்தானோ? ஆச்சரியம் தாங்கவில்லை''

"அரசே நான் தான் ஏற்கனவே சொன்னேனே , ப்ரஹன்னளையை தேரோட்ட உடன் வைத்துக்கொண்டு அவன் யாரை வேண்டுமானாலும் வெல்ல முடியும் என்று '' என்று அமைதியாக கங்கபட்டர் சொன்னதும் ஆட்டத்தை நிறுத்தினான் விராடன். தனது மகன் வீரத்தை விட ஒரு ஆணுமில்லாத பெண்ணுமில்லாத நபும்சகன் தேரோட்டியது பாராட்டக்கூடியதா?.

கங்கபட்டரின் பதில் விராடனுக்கு அதிக கோபத்தை கிளப்பி விட்டது.

''ஓய் முட்டாள் பிராமணரே, எது சொல்ல வேண்டும், எது சொல்லகூடாது என்று கூட தெரியாமல் உளறுகிறீர்.
என்னை அவமானப் படுத்திய உங்களை உயிரோடு விட்டது உமது அதிருஷ்டம். என் மகன் பீஷ்ம துரோணர்களை வெல்ல முடியாதவன் என்று என்னிடமே சொன்ன உங்கள் நாவை அறுத்தெறியாமல் மன்னித்து விட்டிருக்கிறேன். உயிர் வாழ விருப்பம் இருந்தால் மற்றுமொரு முறை இந்த மாதிரி பேசாதீர்''

''அரசே, நான் பொய் பேசாதவன். மிகவும் தாழ்மையோடும், மரியாதையோடும், உங்கள் மீது அளவுகடந்த நன்றியோடும் பாசத்தோடும் உண்மையை மட்டுமே சொல்கிறேன். ''எங்கு பீஷ்மர், துரோணர், விகர்ணன், கர்ணன், துரியோதனன், கிருபர், அஸ்வத்தாமா போன்ற மகாரதர்கள் இருக்கிறார்களோ, எங்கு இந்திரனே தனது சைன்யத்தோடு எதிர்க்கி
றானோ, அங்கு ப்ரஹன்னளையைத் தவிர வேறு எவராலும் நிற்கக் கூட முடியாது. சுருக்கமாக சொன்னால் எங்கு எதிர்ப்பு மிக கடினமாக, பலமாக இருக்கிறதோ அந்த சூழ்நிலை தான் ப்ரஹன்னளைக்கு மிக விருப்பமான சந்தர்ப்பம். அங்கு தான் தன் திறமை வெளிப்பட விரும்புவான். இப்படிப்பட்ட ஒரு அசகாய சூரன் அருகில் இருக்க உங்கள் மகன் எளிதில் வென்றதில் அதிசயம் ஒன்றும் இல்லை''

' கங்க பட்டர் சொல்லி முடிப்பதற்குள் 'பொடேர் என்று 'கனமான உலோகத்தாலான ஒரு பகடைக்காய் அவர் முகத்தில் பலமாக தாக்கி, மூக்கிலிருந்து ரத்தம் சொட்டியது.

''திரும்ப திரும்ப என்னை கோபமூட்டாதே, முட்டாளே, என்னை அவமதிக்காதே'' என்று சொல்லியும் நீ கேட்காததற்கு இது உனக்கு பரிசு. மீண்டும் இனி இந்த தவறைச் செய்யாதே '' என்று விராடன் வெகுண்டு சொல்லியபோது வெகு அவசரமாக தனது மூக்கிலிருந்து வழிந்த ரத்தம் ஒரு சொட்டுகூட பூமியில் விழாதவாறு கங்கபட்டர் முகத்தை ஜாக்ரதையாக பொத்திக் கொண்டார். அவர் கண்கள் அருகே இருந்த சைரந்திரியைப் பார்க்க அவள் அதன் அர்த்தத்தை புரிந்தவளாக ஓடிச் சென்று ஒரு தங்க பாத்திரத்தில் ஜலத்தோடு வந்து அந்த ரத்தத்துளிகள் கீழே விழாமல் அதில் விழும்படியாக வைத்தாள்.

உத்தரன் கோலாகலமாக திரும்பினான். வரவேற்பு வைபவம் மலர் மாரியாக அவன் மீது விடாது பொழிய, உடலையே மறைத்து விடும் அளவிற்கு எண்ணற்ற தாங்கமுடியாத மலர் மாலைகளைச் சுமந்து அரண்மனைக்குள் நுழைந்தான்.

''உத்தரனை இங்கே அழைத்துவா அவனையும் ப்ரகன்னளையையும் நான் கண்டு பேசவேண்டும் பாராட்ட வேண்டும்''
என்றான் விராடன்.

அதற்குள் கங்கபட்டர் ' அரசே, தயவு செய்து 'உத்தரன் மட்டும் இங்கே வரட்டும், ப்ரஹன்னளையை அனுமதிக்க வேண்டாம். ''என் உடலிலிருந்து யுத்தத்தில் தவிர வேறு எந்த சந்தர்பத்திலும் ஒரு துளி இரத்தம் சொட்டினால், அதற்கு காரணமானவர்களை பூண்டோடு அழிப்பேன் என்று சபதம் செய்தவன்'' என்றார்.

உத்தரன் ஓடி வந்தான். முதலில் கங்கபட்டரை காலில் விழுந்து வணங்கியபிறகே தந்தையைக் கண்ணால் பார்த்தான். பிறகு சைரந்திரியை அங்கே கண்டதும் ஓடி அவள் காலில் விழுந்தான்.

கங்கபட்டர் முகத்தில் ரத்தத்தைக் கண்ட அவன் படுவேகமாக ''ஐயோ இதென்ன அக்ரமம், யார் இப்படி அவரை ரத்தம்சொட் ட தாக்கி மா பெரும் பாவத்தை செய்தது?'' என்று அலறினான்.

''உத்தரா, இந்த பிடிவாத கெடுமதி பிடித்த பிராமணன் உன்னை நான் புகழ்ந்து பேசியபோதெல்லாம் அந்த நபும்சகன் ப்ரகன்னளையையே புகழ்ந்து கொண்டிருந்தான். அதற்காக அவனை நான் தான் தண்டித்தேன்''

''அப்பா என்ன தகாத காரியம் செய்து விட்டீர்கள். முதலில் அவர் காலில் விழுந்து அந்த பிராமணனின் மன்னிப்பைப் பெறுங்கள். ஒரு கணம் தாமதித்தாலும் நம் குலமே சர்வ நாசமாகிவிடும்''

விராடன் திகைத்தான். உத்தரன் சொன்னபடியே கங்கபட்டரை வணங்கி நெருங்கி கை கூப்ப அதற்குள் அவர் ''எனக்கு கோபமே வராது. என் ஒரு துளி ரத்தம் தரையில் சொட்டினால் உங்கள் வம்சமே பூண்டோடு அழியுமே என்ற கவலையே எனக்கு. உத்தரனை நான் குறை சொல்லவோ, உங்களை அவமதிக்கவோ இல்லை. அதிகாரத்தில் உள்ளவர்கள் அவசரப்படுவதும் அநீதி இழைப்பதும் இயற்கை'' ரத்த சுவடே இல்லாமல் கங்கபட்டர் துடைத்துக் கொண்டு அமர்ந்திருக்க ஒரு ஓரமாக ப்ரஹன்னளை அந்த மண்டபத்தில் வந்து நின்றாள் . முதலில் ய;யுதிஷ்டிரனான கங்கபட்டரை பட்டரை வணங்கிவிட்டு விராடனையும் வணங்கினாள் .

''உத்தரன் தனது வீரத்தால் இந்த குலத்திற்கே பெருமை தந்துவிட்டான். மகா வீரன் என்று நிருபித்து விட்டான்.

''உத்தரா, சொல்லப்பா, நீ எவ்வாறு மகா ரதர்கள் கர்ணன், பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோரை தனி ஒருவனாக புறமுதுகு காட்டி ஓட வைத்தாய் ? சபையோர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள், அதை உன் வாயாலேயே கேட்க?'' என்றான் விராடன்.

''அப்பா, நமது பசுக்கள் என்னால் காப்பாற்றப்பட்டு மீட்கப்படவில்லை என்பது தான் உண்மை. அந்த மகா ரதர்களை வென்றதும் நான் அல்ல. ஒரு தேவ புருஷன் அல்லவோ வந்து அந்த அதிசயத்தை நடத்தினான். என்னை தேரோட்டச் செய்து அவன் தேர்த்தட்டில் ஏறி தேவ லோக ஆயுதங்கள் எடுத்து அவற்றால் அல்லவோ இந்த அபூர்வ தேவ புருஷன் வீர சாகசத்தால் பீஷ்மர் முதல் சகலரும் திணறி தடுமாறச் செய்ததை நான் என் கண்ணால் பார்த்து திகைத்தேன்.

''துரியோதனா நீ ஹஸ்தினாபுரம் ஓடினாலும் என்னிடமிருந்து தப்ப முடியாது, ஓடாமல் நின்று என்னை எதிர்ப்பது உசிதம். தப்புவது உன் அதிர்ஷ்டம்'' என்று அந்த தேவ புருஷன் சொன்னதை என் காதால் கேட்டேன். அத்தனை உலகப் புகழ் பெற்ற எவராலும் வெல்ல முடியாத மகாரதர்களையும் தனி ஒருவனாக அவன் தாக்கித் திணறச் செய்ததற்கு ஒரு உதாரணம் வேண்டுமானால் ''பசித்த சிங்கத்தின் முன் செம்மறியாட்டுக் கூட்டம்'' என்பதே பொருத்தமாகும்.

''ஆஹா , கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கிறதே யார் நீ சொல்லும் அந்த தேவ புருஷன்,வீராதி வீரன்? நான் அவனைக் காணவேண்டுமே ''

''அப்பா, அந்த புண்ய புருஷனான மஹா வீரர் வந்ததைப் போலவே ரகசியமாக மறைந்து விட்டார் , ஒருவேளை நாளையோ, மறுநாளோ, இங்கே தோன்றலாம் அப்போது காட்டுகிறேன் ''

ANYONE INTERESTED IN THE BOOK ''AINDHAM VEDHAM'' TWO VOLUMES, MAY CONTACAT ME 9840279080

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...