Wednesday, March 27, 2019

ORU ARPUDHA GNANI



ஒரு  அற்புத ஞானி   J  K SIVAN 
 ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் 

                       
    ஒரு கப்பல் விஷயம்

வேலூரில் ஒரு சேஷாத்திரி ஸ்வாமிகள் பக்தை. பெயர் சுந்தரம்மாள். ஒருநாள் அவள் ஸ்வாமிகளிடம் ''அஜபா'' என்றால் என்ன என்று கேட்டுவிட்டாள் . அவளுக்கு  நம் அனைவரின்  ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்.  .அவளால் நமக்கு ஒரு மிகப் பெரிய உபதேசம் எளிதாக கிட்டிவிட்டது. நீடூழி வாழ்க அந்த சுந்தரம்மாள் ஆத்மா.

சுவாமி இதற்கு பட்டென்று பதில் சொல்லிவிட்டார்:

''ஒரு பெரிய சமுத்திரம் இருக்கு. அதில் ஒரு பெரிய கப்பல் போகிறது. அந்த கப்பலில் ஐந்து பேர் சௌரியமாக உட்கார்ந்துண்டு போறா. இன்னொருத்தன் அதை ஓட்டறான். ரொம்ப ஜாக்கிரதையா ஓட்டணும்''

இது ஏதாவது புரிந்ததா?  ஹுஹும்.....   நிச்சயம் என்ன பேத்தல் இது என்று தான் நமக்கு தோன்றும். இப்போது கொஞ்சம் விபரம்  சேகரிப்போம், அதை அறிவோம். பிறகு புரியும்.

ஸ்வாமிகள் சொன்னது அஜபா காயத்ரி மந்த்ர தாத்பர்யம்.

அஜபா காயத்ரி எந்த வித ப்ரயத்தனத்துடனும் உச்சரிக்கப் படாமல் தானாகவே நடைபெறுகிற ஒரு காயத்ரி ஜபம். '' ஜபா'' என்றால் ஏதோ ஒரு ப்ரயத்தனத்துடன், முயற்சியுடன், ஈடுபாடுடன்,  முக்கியமான சில அக்ஷரங்களை உச்சரிப்பது அல்லவா.       ''அ--ஜபா'' என்றால் அப்படி எந்தவிதமான  ப்ரயத்தனமும்   முயற்சியும்  ஈடுபாடும்  இல்லாமல்  தானாகவே  நிறைவேறுவது  என்று அர்த்தம்.  இது எப்படி சாத்தியம் ? என்று தலையை சொறியவேண்டாம்? கொஞ்சம் மெதுவாக யோசிப்போம்.

நமக்கும் தெரியாமலேயே நமது தேகத்துக்குள் ஏதோ ஒரு ஜபம் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதுதான் அஜபா காயத்ரி.

குறைந்தது ஒவ்வொருநாளும் நமது தேகத்தில் 21600 மூச்சு, ஸ்வாசம், நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.  இப்போது இதை படிக்கும்போது  கூட மூச்சு விடும் உங்களுக்கு   இதில் நமது முயற்சி ஒன்றுமே இல்லை என்று    புரியும்.நாம்  யோசித்து பார்த்து  ஏதோ  ஒரு  பிளான்   பண்ணியா  சுவாசிக்கிறோம்?  


. ''அஹம் ஸ: ஸோஹம்'' ( நானே அவன் : அவனே நான்) என்ற மந்திரம் ஒவ்வொரு உஸ்வாஸ, நிஸ்வாஸத்திலும் உள்ளும் வெளியும் போய் கொண்டிருக்கிறது. இப்படி நடப்பது எல்லா தேகத்திலும். இதில் ஆண் பெண், குழந்தை, பெரியவன் என்று வித்யாசமே இல்லை. தானாகவே ஓடும் சுவாச மந்திரம். இதெல்லாம் தெரியாமலே நிறைய பேருக்கு ஜனனம் மரணம் சம்பவித்து வாழ்க்கையே முடிந்து போகிறது.

ஒரு நிமிஷம். ஒரு சின்ன அப்பீல். அறிக்கை :

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்வாசத்திலும் இப்படி ஒரு காயத்ரி ஜபம் நடந்து கொண்டிருக்கிறது என்று அறிந்தால் போதும். முடியுமானால்   ஸ்வாசத்தை  இனிமேலாவது  கவனித்துக் கொண்டே வரலாம். அப்போது நாம் 21600 காயத்ரி ஜபம் பண்ணவர்களாக ஆகிவிடுவோம். அதனால் நமது தேகத்துள் அதி சூக்ஷ்மமாக இருந்து வரும் பரமாத்மாவை உணரமுடியும். இது தானய்யா ஆத்ம ஞானம் என்பது. ரொம்ப பெரிய பெரிய வார்த்தைகளால் இது புரிபடாமல் மழுங்குணி மாங்கொட்டையாக நாம் இருக்கவேண்டாம்.

மேலே நான் சொன்னது ஹம்ஸ உபநிஷத்தில் வருகிறது.

அஜபா காயத்ரி நமது தேகத்தில்  நடப்பதை  எப்படி அறிவது? எப்படி கவனிப்பது? என்பதை தான் ஸ்வாமிகள் பூடகமாக அவருக்கே உரித்தான பாஷையில் சொல்லியிருக்கிறார்.   மேலே சேஷாத்திரி ஸ்வாமிகள்  சொன்னதை  இன்னொரு முறை படியுங்கள்.

சமுத்திரம்:      ஜனன மரண அலைகள் ஓயாது கொந்தளிக்கும் பிறப்பு-இறப்பு வாழ்க்கை.
கப்பல்         :     இந்த பவ சாகரத்தில் அவ்வப்போது நாம் எடுக்கும் தேகம். கப்பல் இல்லாமல் சமுத்திரம் எப்படி கடப்பது?

5 பேர் யார்? :     சுரோத்திரம், த்வக், சக்ஷு, ஜிஹ்வா, க்ராணம் என்ற ஞானேந்திரியம்   ஐந்திற்கும் உடைய அதிபதிகள் திக், வாயு, சூர்யன், வருணன், அஸ்வினி தேவர்கள்,

ஓட்டுபவன்: ஜீவன் - ஒவ்வொரு தேகத்திலும் உள்ளவன்.

ஜாக்கிரதையாக ஓட்டுவது:         நானே அவன்: அவனே நான் என்ற எண்ணத்தால் மற்ற அனைத்தையும் விட்டொழித்து பரமாத்மா சிந்தனையில் ஸ்வரூப ஸ்திதியில் நிலைத்திருப்பது.

அஜாக்கிரதையாக, குடித்து விட்டு ஓட்டும் ட்ரைவர் வண்டியில் உட்கார்ந்தால் நம் கதி, வண்டியின் கதி ??     இந்த ட்ரைவர் தேக கப்பலை பவ சாகரத்தில் மூழ்கடித்து விடுவான். அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்வாமிகள்.

சரீர கப்பலை ஜாக்கிரதையாக ஓட்டுவது புரிந்தால் நான் எழுதினதில் பிரயோஜனம் இருக்கிறது என்று ஆகும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...