Thursday, March 28, 2019

AINDHAM VEDHAM


ஐந்தாம் வேதம் J K SIVAN
மஹா பாரதம்.

யுத்தமா அமைதியா?

''மஹாபாரத யுத்தம் நெருங்கப்போகிறதா மகரிஷி?'' ஜனமேஜயன் ஆர்வமாக கேட்டான்.

''ஏன் உனக்கு யுத்தம் என்றால் அவ்வளவு ஆர்வமா, ஆசையா? எத்தனை உயிர்கள் நாசமாகும் அதில் என தோன்றவில்லையா?'' என்கிறார் மகரிஷி.

''ஆமாம் வாஸ்தவம். நான் ஆர்வப்பட்டது அப்படி ஒரு யுத்தம் நேர்ந்தபோது என்னுடைய பாட்டனார்கள் அதில் எவ்வளவு வீரமாக செயல்பட்டார்கள் என்று அறியவே'' என்றான் ஜனமேஜயன்

வாசகர்களே, நாமும் யுத்தத்தை வெகு சீக்கிரம் சந்திப்போம். தர்ம யுத்தம்...!!!! இனி கதைக்குள் செல்வோம். துரியோதனாதிகளும் பாண்டவர்களும் யார் யார் தமக்கு ஆதரவாக செயல்படுவார்கள் அவர்கள் சேனை, சைன்யம் முழுதும் அதில் பங்கேற்க வேண்டும் என்று முனைந்தார்கள்.

பாண்டவர்களிடமிருந்து சேதி கிடைத்ததும் சால்யன் தனது பிள்ளைகளுடன் ஒரு படை திரட்டினான். சேனை நகர்ந்தது. சால்யனின் சேனை பாண்டவர்களுக்கு சென்றடைய போகிறது என்ற விஷயம் அறிந்த துரியோதனன் வேகமாக சென்று சால்யனை வணங்கி, வரவேற்றான். மனம் மகிழ்ந்த சால்யன்.

' கௌரவ அரசனே, உன் அன்புக்கு ஈடாக நான் என்ன செய்யட்டும் உனக்கு?''

'' மகாராஜா, சால்ய படைகள் எங்களுக்கு ஆதரவாக யுத்தத்தில் உதவ வேண்டும். இந்த வாக்கு கொடுத்து அதை நிறைவேற்ற வேண்டும்'' என்று துரியோதனன் கேட்க, சால்யன் ''அவ்வாறே ஆகட்டும் என்று வாக்கு கொடுத்து விட்டான்''

''அப்பாடா, சால்ய படைகளை ஒரு வழியாக பாண்டவர்களுக்கு எதிராக திருப்பியது முதல் வெற்றி'' என மகிழ்ந்தான் துரியோதனன்.

''சரி, நான் யுதிஷ்டிரனை நேரில் கண்டு வாழ்த்தாமல் திரும்ப உத்தேசம் இல்லை'' என்று சால்யன் கிளம்ப, ''சீக்கிரமே வந்து விடுங்கள். எனக்கு கொடுத்த வாக்கு நினைவில் இருக்கட்டும். உங்கள் உதவியை நம்பி இருக்கும் எனக்கே சால்ய சேனை அளிக்க வேண்டும் '' என்றான் துரியோதனன். சால்யன் உபப்லாவ்யம் சென்று பாண்டவர்களை சந்தித்தான். பாண்டவர்கள் அவனை உபசரித்தார்கள். க்ஷேமலாப குசலத்திற்குப் பிறகு யுதிஷ்டிரனை ஆதரவோடு அணைத்தான் சால்யன்.

''யுதிஷ்டிரா, உன்னைச் சந்திக்கு முன்பு துரியோதனன் என்னை வந்து வழியில் சந்தித்தான். என்னிடம் ஒரு வாக்கு பெற்றான்.''

''என்ன வாக்கு ?''

''பாண்டவ- கௌரவ யுத்தம் நேர்ந்தால் எனது படைகள் கௌரவர்களுக்கு முழுதுமாக உதவ வேண்டும் என்றான். நான் வாக்கு கொடுத்ததால் சரி'' என்று சொல்லி விட்டேன். உனக்கு என்ன செய்யட்டும் சொல் ?'' என்றான் சால்யன் .

''மகாராஜா, தாங்கள் பராக்கிரமம் எனக்கு தெரியும். சத்தியவான். கொடுத்த வாக்கு மீற மாட்டீர்கள் என்றும் அறிவேன். எனக்காக நீங்கள் ஒரு உதவி செய்தால் அதுவே போதும். உங்கள் பலமுள்ள சேனை துரியோதனனிடம் சென்று எங்களை எதிர்க்கட்டும். நீங்கள் கிருஷ்ணனுக்கு சமமானவர் போர்க்களத்தில். நிச்சயம் கர்ணனும் அர்ஜுனனும் மோதப்போகிறார்கள். அப்போது கர்ணனுக்கு தாங்கள் தேரோட்ட வேண்டும்.

''யுதிஷ்டிரா, நான் அவனுக்கு தேரோட்ட உனக்கு வாக்கு கொடுக்கிறேன். கர்ணன் என் சொல்படி நடந்தால் அவனுக்கு நல்லது. இல்லையேல் அவன் என் உதவியை இழப்பான்.அவன் பேச்சை எடுத்தாலே அரசவையில் திரௌபதிக்கு அவன் இழைத்த அநீதி நினைவுக்கு வருகிறது. ஆத்திரம் பொங்குகிறது.'' என்றான் சால்யன்.

' யுதிஷ்டிரா, தபோபலம், பித்ருக்கள், ரிஷிகள் வரம் பெற்ற நஹுஷன் கதை தெரியுமா உனக்கு?

'' ஏதோ கொஞ்சம் தெரியும், உங்கள் வாக்கில் அதைச் சொல்லுங்கள் அரசே'' என்றான் யுதிஷ்டிரன்.

'' நஹுஷன் ரிஷிகள், பித்ருக்கள் ஆசியோடு இந்திர பதவி பெற்றான். ஆனால் அவன் இந்திரனின் மனைவி சசியை தனது ராணியாக்க முயன்று, ரிஷிகளை தனக்கு பல்லக்கு தூக்கும்படி கட்டளையிட்டு, அவர்களை அவமரியாதைப் படுத்தி, அகஸ்தியரின் தலையில் காலை வைத்து விரட்டி அவரால் சபிக்கப்பட்டு பாம்பாக கீழே விழுந்து மாண்டான். பொறுத்திருந்த இந்திரன் மீண்டும் பதவிக்கு வந்தான். அதிகாரத்தை துஷ் பிரயோகம் பண்ணுபவர்கள் அக்ரமத்தை அநியாயத்தை நாடுபவர்கள் அழிவார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். கர்ணன், துரியோதனன் ஆகியோர் உனக்கும் திரௌபதிக்கும் இழைத்த தீங்கிற்கு கூலி கொடுக்கப் போகிறார்கள். நீ அவர்களை அழித்து ஆட்சியைக் கைப்பற்றப் போவது உறுதி'' என்றான் சால்யன்.
இதற்கிடையில் நடந்த இன்னொரு விஷயத்தை அறிவோம்.

துருபதனால் அனுப்பப் பட்ட அவனது அரசவை பிராமண குரு, துரியோதனனை சந்திக்க ஹஸ்தினாபுரம் நடந்தவர் ஒரு வழியாக அங்கே சென்றடைந்தார்.

''யார் வந்திருக்கிறது என்னைப் பார்க்க என்று விவரம் அறிந்து சொல்லுங்கள் ?'' என்கிறான் திருதராஷ்டிரன் .
'' மஹாராஜா,தங்களை பார்க்க துருபத மஹாராஜாவின் ஆஸ்தான குரு வந்திருக்கிறார் ''
'' அழைத்து வா என்னிடம் ' என்றான் திருதராஷ்டிரன்.

''நான் துருபதனின், பாஞ்சால தேசமன்னனின், குலகுரு. ப்ரோஹிதர். உங்களை கண்டு வணங்கி ஆசிபெற வந்துள்ளேன். பாண்டவர்களிடமிருந்து ஒரு சேதி கொண்டு வந்துள்ளேன்.''
பாண்டவர்களிடமிருந்து சேதி என்றதும் கண்ணற்ற திருதராஷ்டிரன் யோசிக்கிறான்.
பிறகு தக்க மரியாதைகளுடன் பிராமணர் அரண்மனையில் அரச சபைக்கு கூட்டிச் செல்லப்படுகிறார். பீஷ்மர் துரோணர் விதுரனை எல்லாம் வணங்குகிறார். பாண்டவர்கள் நலம் பற்றி விஷயம் சொல்கிறார்.

பிறகு மெதுவாக விஷயத்துக்கு வருகிறார். பாண்டு, திருதராஷ்டிரன் இருவரும் சகோதரர்கள். அவர்கள் குடும்பமும் அவ்வாறே குடும்பச் செல்வத்தில் சரி பாதியாக பங்கு பெற்று ஒற்றுமையாக வாழ வேண்டியவர்கள். பாண்டவர்கள் எதற்காக அதை அடையாமல் வாட வேண்டும்? ஆரம்பத்திலிருந்தே கௌரவர்கள் பாண்டவர்களை அழிக்க பல் வேறு திட்டங்கள் போட்டு தோற்றனர். தங்களது வீரத்தினால் தங்களுக்கு அளிக்கப் பட்ட இந்திரப்ரஸ்தத்தை மேம்படுத்தி பேரும் புகழுமாக வாழ்ந்தது பொறுக்காத துரியோதனன் சகுனியின் சதியோடு திருதராஷ்டிரன் அனுமதியோடு யுதிஷ்டிரனை சூதாட்டத்துக்கு அழைத்து அனைத்து செல்வங்களையும் இழக்க வைத்து, பதிமூன்று வருஷ வனவாசங்களில் சொல்லொணாத் துயரோடு வாழ்ந்தார்கள். இந்த நிலையிலும் இடையிடையே இந்த பதிமூன்று வருஷங்களில் பல் வேறு துன்பங்களை துரியோதனனும், கௌரவர்களும் கொடுத்தபோதும் அனைத்தும் சமாளித்து இப்போது சமாதானமாக தங்கள் பங்கை சகல உரிமையோடும் கேட்கிறார்கள். பாண்டவர்களுக்கு இன்னமும் கௌரவர்களோடு போர் புரிய எண்ணம் கிடையாது. தங்களது பங்கை உயிர்ச் சேதமின்றி பெறவே விருப்பம். துரியோதனன் குணம் தெரிந்ததாலும், அவன் நண்பர்கள் எண்ணங்கள் அறிந்ததாலும், தக்கவாறு நல்வழி கூறி எல்லோரும் நலமடைய அமைதியான முறையில் இந்த விவகாரம் தீர வேண்டும் என்று விருப்பம். உலகத்தில் ஒரு உயிருக்கும் சேதமின்றி தங்கள் பங்கு பிரித்துக் கொடுக்கப் பட வேண்டும் என்று பாண்டவர்கள் விரும்பு கிறார்கள். யுத்தம் தேவை என்று துரியோதனன் நினைத்தால் அதற்கு தகுந்த காரணம் இல்லாததால் முறையாகாது. ஏழு அக்ஷௌணி சேனை இதுவரை பாண்டவர்கள் பக்கம் அணி சேர்ந்திருக்கிறது. பீமன், அர்ஜுனன் பலம் பராக்கிரமம் ஏற்கனவே கௌரவர்களுக்கு அனுபவத்தில் தெரியும். கிருஷ்ணன் வேறு அவர்களுக்கு சாதகமாக இருப்பதால் கேட்கவே வேண்டாம். எனவே பாண்டவர்கள் பங்கை உடனே பிரித்துக் கொடுக்கவேண்டும் என்று கேட்கிறேன். இந்த அரிய சந்தர்ப்பத்தை வீணாக்க வேண்டாம்.'' பிராமண குரு ஆணித்தரமாக பாண்டவர்களிடமிருந்து பெற்ற செய்தியை அறிவித்தார்

ANYONE INTERESTED IN THE TWO VOLUMES OF ''AINDHAM VEDHAM'' MAY CONTACT ME BY WHATSAPP NO. 9840279080 FOR DETAILS.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...