Wednesday, March 13, 2019

MOTHER


   நம் வீட்டு  அம்மா  பற்றி 

''சிவன் சார்   நீங்கள் அம்மா  பற்றி நிறைய, அடிக்கடி,  எழுதுகிறீர்கள், எனக்கு பிடிக்கிறது,  என்ன அதில்  அப்படி ஒரு தனி ஈடுபாடு?''

''மார்கபந்து,  நீங்கள் கேட்பது அதிசயமாக இருக்கிறது.  உலகிலேயே  மிக சிறந்ததாக , உயர்ந்ததாக, எல்லோராலும்  ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படுவது   தாய் தந்தையர்.  இவர்களை பற்றி  நினைத்துக்கொண்டே தான் இருக்கிறோம்.  உட்காரும்போதும் கூட ''அம்மாடி,  அப்பாடா''.   ஏதோ காரியம் நடந்து  முடிந்தாலும்  '' அப்பாடா  ஒருவழியாக...''   அடிபட்டாலும் வலித்தாலும் ''ஐயோ, அப்பா, அம்மா..''   
கடலுளை கும்பிட்டாலும்  ''தாயே, அம்மா, என்னப்பனே ,...''  குழந்தைகளை கொஞ்சும்போதும்  ''என்னம்மா, செல்லம்மா, செல்லப்பா, என் கண்ணப்பா, கண்ணம்மா'....'இன்னும் என்ன சார்  சொல்லவேண்டும்  இது பற்றி ? ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்:


பல வருஷங்களாக  உபன்யாசம் செய் து..... (  நாற்பது வருஷங்களாக  நடத்திய அவர் உபன்யாசத்துக்கு அதிகபட்சம்  10 பேர் வந்தால் அது மெரினா கடற்கரை கூட்டம்..)   ஒருநாள்  அடை  சாப்பிட்டுவிட்டு  மூச்சு விட்டார்.
சுப்பு சாஸ்த்ரி  மீண்டும்  பூவுலகில் மனிதப்பிறவி எடுக்கவேண்டியதாயிற்று.  
அவரோ எப்பவும் கிருஷ்ணா கிருஷ்ணா  என்று போன பிறவியில்  இருந்தவர். அதனால்  இந்த  தீர்ப்பு. வந்ததும் ரொம்பவும் வருத்தம்.  கிருஷ்ணனைக் கேட்டார்.

''நான் அவசியம்  மறுபடியும்  பூவுலகில் குழந்தையாக  பிறக்கவேண்டுமா  கிருஷ்ணா? ''
''ஆமாம்''
குழந்தை (பழைய சுப்பு சாஸ்திரி) ஒரு  வயிற்றில் வளர்ந்தது. பிறக்க வேண்டிய  நேரம் வந்தது. அது கேட்டது.
''கிருஷ்ணா,  நாளைக்கா  நான்  பிறக்கப்போகிறேன்? இவ்வளவு சின்னக்குழந்தையாக இருக்கிறேனே. எப்படி வாழ்வேன்?''
''நான் உன்னை அப்படி விட்டுவிடுவேனா?  ஒரு  நல்ல  தேவதை உன்னைப்பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறேனே?''
''நான் ஏதோ பாடிக்கொண்டும்  ஆடிக்கொண்டும்  சிரித்துக்கொண்டும் இங்கே  உன்னோடு இருந்தேனே... எதற்கு எனக்குப்போய்..மீண்டும்  பூமியில்...........''
''கவலைப் படாதே.  உனக்காக  இனிமேல் அந்த  தேவதையே  ஆடும்,  பாடும், சிரிக்கும்.  போதுமா?''

சுப்பு சாஸ்த்ரியின்  கவலை முகத்தில் தெரிய யோசித்தார்......
''எனக்கு  பூலோக பாஷை தெரியாதே  எப்படி பேசுவேன், புரிந்து கொள்வேன் ?''
''இப்படி உனக்கு  யோசனை வரும்  என்றுதான்  அந்த  தேவதை உன்னோடு  பேசி, பாடி உனக்குப்  பேச  கற்றுக்கொடுக்க  ஏற்பாடு செய்திருக்கிறேன்''
''மீதி பேரோடு பேசுவது இருக்கட்டும், கிருஷ்ணா, உன்னோடு  எப்படிப் பேசுவேன்?''
''உனது  ரெண்டு கையும் ஒன்றாக சேர்த்து வைத்துக்கொள்ள  அந்த தேவதை கற்றுக்கொடுக்கும்''
 ''பூலோகத்தில்  கொடூரமான ஆசாமிகள்  இருக்கிறார்களாமே.  நான்  எப்படி பிழைப்பேன்?''
.''அந்த  தேவதையிடம் இதைப்பற்றியும்  சொல்லியிருக்கிறேன்.  தன்  உயிரைக்கொடுத்தாவது உன்னைக் காப்பாற்றும். 'உனக்கு வீண் பயம்  ஏன்?''
''கிருஷ்ணா, எனக்கென்னமோ  இங்கிருந்து உன்னை விட்டு போக மனமே இல்லை''
''கவலை விடு. அந்த தேவதை என்னைப்பற்றி  உனக்கு  ஞாபகப்படுத்திக்கொண்டேயிருக்கும்.  எப்படி  என்னை மீண்டும் சேர்வதென்று சொல்லித்தரும்.''

இப்படி  பேச்சு நடக்கும்போது, சுப்பு சாஸ்த்ரி ஒரு குழந்தையாக பிறக்கும்  நேரம் வந்துவிட்டது.  ஏகப்பட்ட சத்தம்  பூமியில்  கேட்டது.
.
''கிருஷ்ணா  நான்  பிறக்கும்  நேரம்  வந்துவிட்டது போல் இருக்கிறது.  முக்யமாக கேட்க மறந்து விட்டேனே?   அதுசரி,  யார் அந்த  தேவதை, அதன் பெயர் என்ன?''

''அதன்  பெயர்  உனக்கு  அவசியமில்லை.  அம்மா  என்று  கூப்பிட்டாலே அது  உனக்கு  சகல  பணிவிடைகளும் செய்யும். ஏன்,   நீ  பேசி  கூப்பிடக்கற்றுக்கொள்ளும் முன்பே  தன்னை  உனக்கு  அரப்பணிக்கும். ''

சுப்பு சாஸ்திரிக்கு மட்டும்  அல்ல,  எந்த  குழந்தை பிறந்தாலும் அதற்கு அவன்  நியமித்த தேவதை தான்   ''அம்மா.'' 

கிருஷ்ணா  உனக்கு  நன்றி எப்படி சொல்வது?
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...